இப்போது பெரும்பாலான மக்கள் அசைவ உணவையே விரும்புகின்றனர். இறைச்சி யுணவில் கோழிக்கறியின் பயன்பாடு ஐம்பது சதமாகும்.
இதன் விலை குறைவாக இருப்பது இதற்கு முக்கியக் காரணம் ஆகும். எனவே, கறிக்கோழிப் பண்ணைகளும் பெருகி வருகின்றன. இந்தப் பண்ணைகளில் கோழிகள் இறப்பது ஐந்து சதமாக உள்ளது.
இப்படி இறக்கும் கோழிகளை, நோய் பரவாமல் தடுக்கும் வகையில், முறையாக அகற்ற வேண்டும். இதை வருமானம் தரும் வகையிலும் செய்யலாம்.
அதாவது, தினந்தோறும் இறக்கும் கோழிகள் மற்றும் கோழிக்கறிக் கடைகள் கழிவை வைத்து, இறைச்சி எலும்புத் தூள் மற்றும் கொழுப்பு எண்ணெய்யைத் தயாரிக்க முடியும். இதற்கு, உயர் வெப்பழுத்தக் கொதிகலன் தேவைப்படும்,
அதில், இறந்த கோழிகள் மற்றும் கோழிக் கழிவை இட்டு, 100 டிகிரி செல்சியசில் வேக வைத்து, 140 டிகிரி செல்சியசில் அழுத்தம் கொடுத்து, நுண்ணுயிர்க் கிருமிகளை நீக்கி விட்டு, 100 டிகிரி செல்சியசில் உலர வைக்க வேண்டும்.
இது அனைத்தும் கொதிகலனில் நடக்கும். பிறகு வெளியில் எடுத்து அழுத்தம் கொடுத்துக் கொழுப்பைப் பிரித்தெடுக்க வேண்டும். இப்படித் தயாரிக்கப்படும் துகள், இயற்கை எருவாக, கால்நடைத் தீவனங்களில் புரத மூலமாகப் பயன்படுகிறது.
இறுதியாக, 30- 40 சதவீத அளவில் இறைச்சி எலும்புத் தூள் கிடைக்கும்.
இறந்த கோழிகளைப் பயன்மிகு பொருள்களாக மாற்றுவதால், சுற்றுப்புற மாசுக் கட்டுப்பாடு, சுகாதாரம், தொழில் வாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம் போன்ற நன்மைகள் கிடைக்கும்.
இது பற்றிய மேலும் தகவல்களுக்கு, அருகிலுள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியை அணுகலாம்.
மரு.மு.முத்துலட்சுமி, ரா.இராஜ்குமார், கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல் – 637 002.
சந்தேகமா? கேளுங்கள்!