இந்தியாவில், தேன் மற்றும் மெழுகு உற்பத்தி உயிரினமாகவே தேனீக்கள் கருதப் படுகின்றன. ஆனால், இவற்றைத் தவிர, தேன் கூட்டிலிருந்து மகரந்தம், அரசகூழ், தேனீ நஞ்சு, பிசின் போன்ற மதிப்புமிகு பொருள்களும் கிடைக்கின்றன. இவற்றைப் பற்றி விரிவாகக் காணலாம்.
தேன்
தேனீக்கள் மதுரத்தில் இருந்து தேனை உருவாக்கும். பூக்களின் மதுரத்தைப் போல, தத்துப் பூச்சிகளின் கழிவுப் பொருளான தேன் துளியையும் தேனீக்கள் சேகரிக்கும்.
சில செடிகளில் பூக்களைத் தவிர மதுரச் சுரப்பிகளும் இருக்கும். இவற்றில் இருந்தும் தேன் கசியும். இந்த மதுரத்தையும் தேனீக்கள் பெற்றுக் கொள்ளும்.
இவற்றைத் தவிர, இனிப்பு பானங்களான, பழச்சாறு, கரும்புச்சாறு போன்றவற்றையும் சேகரிக்கும்.
மதுரம் பெறப்படும் பொருள் மற்றும் செடி வகைகளுக்கு ஏற்ப தேனின் தரம் வேறுபடும்.
இந்த அடிப்படையில் தேனை, பூவினத் தேன் அல்லது தேனினத் தேன் எனப் பிரிக்கலாம். தேனின் நிறத்தைப் பொறுத்தும் அதற்குப் பெயர் வைக்கலாம்.
தேனின் வகைகள்
தேனீப் பண்ணைகளில் இருந்து கிடைப்பது, Apiary Honey. இது, இயந்திரம் மூலம் பிரித்து எடுக்கப்படும். அடுத்து, வனங்களில், காடுகளில் இருந்து கிடைப்பது, Forest Honey. இது, பிழிந்தும், அழுத்தியும் எடுக்கப்படும்.
தேனீப் பண்ணைத் தேன்
இந்திய தேனீக்களாகிய அடுக்குத் தேனீக்கள் மற்றும் ஐரோப்பிய தேனீக்களை, தேனீப் பண்ணைகளில் வைத்துச் சேகரித்து, இயந்திரம் மூலம் பிரித்தெடுக்கும் தேனுக்குப் பண்ணைத் தேன் என்று பெயர்.
இந்தத் தேன், தெளிவாகவும், மெழுகு, மகரந்தம், தேனீப் புழுக்கள், தேனீ இறகுகள், கால்கள் போன்றவை இல்லாமல் இருக்கும்.
வனங்களில், காடுகளில் இருந்து கிடைக்கும் தேன்
காடுகளில் அல்லது வனங்களில் அல்லது மலைகளில், மலைத் தேனீக்கள் அல்லது கொம்புத் தேனீக்கள் அல்லது அடுக்குத் தேனீக்கள் சேர்த்த தேனை, அடைகளில் இருந்து பிழிதல் அல்லது அழுத்தல் என்னும் மிகப் பழைய முறைப்படி சேகரிக்கும் தேன் வனத்தேனாகும்.
இந்தத் தேனில், மெழுகு, மகரந்தம், தேனீப் புழுக்கள், இறகுகள், கால்கள் கலந்து இருப்பதால், அது, தெளிவின்றி இருக்கும்.
ஒரே பூத்திரள் தேன்
ஒரே விதமான தாவரங்களின் பூக்களில் இருந்து சுரக்கும் மதுரத்தைச் சேகரித்துத் தேனாக மாற்றி வைப்பது, ஒரே பூத்திரள் தேன் எனப்படும்.
எடுத்துக்காட்டு: ரப்பர் தேன், புளியந்தேன், நாவல் தேன், வேப்பந்தேன், சூரியகாந்தி தேன், கடுகுத் தேன்.
பலவகைப் பூத்திரள் தேன்
பலவிதமான தாவரங்களின் பூக்களில் இருந்து சுரக்கும் மதுரத்தைச் சேகரித்துத் தேனாக மாற்றி வைப்பது, பலவகைப் பூத்திரள் தேன் எனப்படும். எடுத்துக்காட்டு: பல மரங்களின் கலப்புத் தேன், வனங்களில் இருந்து கிடைக்கும் தேன்.
தேனில் அடங்கியுள்ள பொருள்கள்
நீர்: 20%
கரும்புச் சர்க்கரை: 5%
பழச் சர்க்கரை: 37%
திராட்சைச் சர்க்கரை: 34%
தாதுப்புகள்: 0.2%
அங்கக அமிலங்கள்: 0.2%
புரதம், அமினோ அமிலங்கள்: 1.5%
பிற பொருள்கள்: 2%
தேனிலுள்ள நீரின் அளவைப் பொறுத்து, அதை மூன்று நிலைகளாகப் பிரிக்கலாம். முதல் நிலைத் தேனில், நீரின் அளவு 18 சதம் இருக்கும். இரண்டாம் நிலைத் தேனில், 20-22 சதம் நீர் இருக்கும். மூன்றாம் நிலையிலுள்ள தேனில், நீரின் அளவு 22-24 சதம் இருக்கும்.
பயிர்களும் தேனின் நிறங்களும்
ரப்பர்: தெளிவான வைக்கோல் நிறம்.
புளி: தங்கம் போன்ற மஞ்சள் நிறம்.
பருத்தி: வெள்ளை நிறம்.
சூரியகாந்தி: மஞ்சள் நிறம்.
எள்: இள நிறம்.
நாவல்: இளஞ்சிவப்புக் கலந்த பழுப்பு நிறம்.
தைல மரம்: அடர்ந்த நிறம்.
ஈட்டி: அடர்ந்த நிறம்.
கடுகு: மஞ்சள் நிறம்.
தேனின் மருத்துவக் குணங்கள்
தேன் ஓர் அமிர்தமாகும். அமெரிக்கா மேற்கொண்ட ஆய்வின்படி, ஒரு மனிதன் மூன்று மாதம் வரையில், தேனையும், ஆரஞ்சு பழச் சாற்றையும் மட்டுமே பருகி வாழ முடியும்.
இதன் சிறப்பு யாதெனில், அந்தக் காலக் கட்டத்தில், அந்த மனிதரின் உடல் சிதை மாற்றங்களில் பெரியளவில் எந்த வேறுபாடும் நிகழவில்லை.
இத்தகைய சிறப்பான உணவை, பச்சிளம் குழந்தைகளுக்குக் கொடுக்கும் பழக்கம், நம் நாட்டில் தொன்று தொட்டு இருந்து வருவதில் வியப்பேதும் இல்லை.
எலுமிச்சைச் சாற்றையும் தேனையும், தலா ஒரு தேக்கரண்டி எடுத்து, ஒரு தம்ளர் சுடுநீரில் கலந்து, காலை எழுந்ததும் ஒருமுறையும், இரவு தூங்குமுன் ஒருமுறையும் பருகி வந்தால், உடல் இளைக்கும், ஈரல் நோய்களும், மலச்சிக்கலும் தீரும்.
இரவு உறங்குமுன் பாலில் ஒரு தேக்கரண்டி தேனைக் கலந்து அருந்தி வந்தால், நரம்புத் தளர்ச்சி, இரத்தழுத்தம் குணமாகும்.
செரிமானச் சிக்கல்கள், வயிற்றுப் புண், சளி, இருமல், வாய் மற்றும் நாக்குப் புண் ஆகியன தேனால் குணமாகும்.
இரத்தத்தைச் சுத்திகரிக்க, இரத்தச் சிவப்பு அணுக்களை உறுதிப்படுத்த, தேன் உதவும். இதய மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு, தேன் சிறந்த மருந்தாகும்.
பற்கள், எலும்புகள், தசைகள் மற்றும் தோலை, தேன் வலுப்பெறச் செய்யும். குணமாகாத, நாள்பட்ட காயங்கள், கட்டிகள், புண்கள் ஆகியவற்றில் தேனைத் தொடர்ந்து தடவி வந்தால் விரைவில் குணமாகும்.
ஆயுர்வேத மருத்துவ லேகியங்கள் தயாரிப்பில், தேன் முக்கியப் பங்கு வகிக்கிறது. ரொட்டி, கேக், மிட்டாய்த் தயாரிப்பிலும், மது மற்றும் அழகுப் பொருள்கள் தயாரிப்பிலும், தேனின் பங்கு முக்கிய இடத்தில் உள்ளது.
ரோமானியர்களும், கிரேக்கர்களும் தேனை, மயக்க மருந்தாகப் பயன்படுத்தி உள்ளனர்.
எகிப்திய பிரமிடுகளில் இறந்தவர்களின் உடலைப் பதப்படுத்துவதில் தேன் பயன்பட்டுள்ளது.
பிரான்ஸ் மக்களிடம், திருமணமான முதல், முப்பது நாட்களுக்கு மணமக்களுக்குத் தேனை உண்ணத் தரும் பழக்கம் இருந்தது.
ஒரு தேக்கரண்டி தேனைச் சேகரிக்க, ஒரு தேனீ சுமார் 154 முறை மலருக்கும், தேன் கூட்டுக்கும் இடையே பயணம் செய்யும்.
எனவே, தேனின் மருத்துவக் குணங்களுக்குப் பிறகுள்ள உழைப்பு, கருத்தில் கொள்ளப்பட வேண்டியது ஆகும்.
ஏற்றுமதிக்கு உகந்த தேன்
தேனிலுள்ள நீரின் அளவு 19%க்கு மிகாமல் இருக்க வேண்டும். இல்லையேல், தேனின் மணமும் சுவையும் மாறி விடும்.
தேனைச் சூடாக்கும் போது, ஹைட்ராக்ஸி மெத்தைல் பர்பியூரைல் என்னும் வேதிப் பொருள் உருவாகும். இதன் அளவு, ஒரு கிலோவுக்கு 10-15 மில்லி கிராமுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தேனில் மகரந்தம் அதிகமாகக் கலந்திருந்தால் அல்லது மெழுகு, தேனீக்களின் உறுப்புகள், செடிகளின் பகுதிகள், தூசு முதலியன கலந்திருந்தால், அவற்றை வடிகட்டி நீக்க வேண்டும்.
தேன், வெளிர் மஞ்சள், பழுப்பு அல்லது அடர் நிறத்தில் தெரிவது இயற்கையே. அடர் நிறத்திலுள்ள தேன், அதிக நுண்சத்து, வாசனை, மணம் உள்ளதாக இருக்கும்.
தேன் விற்பனை
உற்பத்தி செய்த தேனை வணிக நோக்கில் விற்பனை செய்யக் கூட்டுறவுச் சங்கத்தை அமைக்கலாம். அல்லது மார்த்தாண்டம் தேனீ வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கம் தேனைக் கொள்முதல் செய்கிறது.
ஆண்டுதோறும் தேனின் விலையை, சென்னை கதர் மற்றும் கிராமத் தொழில் முனையம் முடிவு செய்கிறது.
தேனீ மெழுகு
தேன் மெழுகு, தேனைவிட விலை மதிப்புள்ள பொருள். 14-18 நாள் வயதுள்ள வேலைக்கார தேனீக்களில் மெழுகு சுரக்கும்.
இது, நீரைப் போல இருக்கும். ஆனால், காற்றுப் படுவதாலும், செதில்கள் உருவாகும் போதும், கெட்டியாகி விடும்.
கூட்டிலுள்ள தேனீக்கள், செதில்களைப் பிரித்து அடை கட்டப் பயன்படுத்தும். சுரக்கும் போது வெள்ளையாக இருக்கும் மெழுகு, மகரந்தத்தின் நிறத்தைப் பொறுத்து நிறமாறி விடும். தேனீ வகைகளுக்கு ஏற்ப, மெழுகுத் தன்மையில் சிறிய மாற்றங்கள் இருக்கும்.
மெழுகைப் பதப்படுத்துதல்
தேனைப் பிரித்தெடுக்கும் போது மெழுகுக் கால் மூடுதலில் இருந்து தேன் மெழுகு கிடைக்கும். சில அடைகள் தேனை எடுக்கும் போது சேதமடையும்.
பழைய அடைகளில் இருந்து கிடைக்கும் மெழுகு பயன்படுத்த உகந்ததல்ல. மெழுகுக் கால் மூடுதலில் இருந்து கிடைக்கும் மெழுகே தரமானது.
இந்தியாவில் மலைத்தேனீ அடைகளில் இருந்து, அதிகளவில் மெழுகு கிடைக்கிறது.
மெழுகு பல முறைகளில் சேகரிக்கப்படும். அடை அல்லது கழுவிய மெழுகுக் கால் மூடுதல் நீர், தொட்டிகளில் வேக வைத்து வடிகட்டப்படும். அப்போது கெட்டியான மெழுகுத் துண்டு கிடைக்கும்.
தேன் மெழுகு பெரும்பாலும் மெழுகுவர்த்தி ஆலை மற்றும் தேனீ சார்ந்த ஆலைகளில் அடை அஸ்திவாரத் தாள் செய்யப் பயன்படுகிறது.
அழகுப் பொருள்கள் தயாரிப்பிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஏனெனில், இது தோலுடன் நன்கு ஒட்டிக் கொள்ளும் தன்மை மிக்கது.
மருந்து, மாத்திரை, களிம்பு மற்றும் வாசனைத் திரவியங்கள் உற்பத்தியிலும் தேன் மெழுகு பயன்படுகிறது.
மரப் பொருள்கள் மற்றும் காலணிகளை மெருகேற்ற உதவுகிறது. பசை, மிட்டாய், மை மற்றும் பல் மருத்துவத்தில், மாதிரிப் பற்கள் தயாரிப்பிலும் பயன்படுகிறது.
தேனீ நஞ்சு
வேலைக்கார தேனீக்களின் கொடுக்கிலுள்ள ஒரு பையில் நஞ்சு இருக்கும். இரண்டு வாரத் தேனீக்களில் அதிகளவில் நஞ்சு இருக்கும். ஆனால், இதற்கு மேல் கூடாது.
இந்நஞ்சில் பல பொருள்கள் உண்டு. தேனீக்களில் 12 வோல்ட் பாட்டரி உதவியுடன் மின்சார அதிர்வைக் கொடுத்து, மெல்லிய நைலான் துணியில் நஞ்சைக் கொட்ட வைக்க முடியும்.
அப்போது வெளிப்படும் விஷம், அதற்குக் கீழே வைக்கப்பட்டு உள்ள கண்ணாடித் தகட்டில் சேகரிக்கப்படும். ஒரு இத்தாலிய தேனீக் கூட்டத்தில் இருந்து 50 மி.கி. நஞ்சு கிடைக்கும்.
தேனீ இறக்கையை விரல்களால் பிடித்துக் கொண்டு, நோயாளியைக் கொட்டச் செய்தல் தேனீ சிகிச்சையாகும். இரண்டு மூன்று வாரங்களில், ஒரு நேரத்தில் கொட்டுவதை, ஒன்று முதல் மூன்றாக உயர்த்தலாம்.
தேனீ விஷத்தை ஊசி மூலமும் செலுத்தலாம். பாதிக்கப்பட்ட இடங்களில் பசை வடிவிலுள்ள தேனீ நஞ்சைத் தேய்க்கலாம்.
இது பல நோய்களுக்கு நிவாரணி. மூட்டுவலி, தசைப்பிடிப்பு மற்றும் முடக்குவாதம் குணமாகும். கொழுப்பு, இரத்தழுத்தம் குறையும்.
தேன் பிசின்
தேன் பிசினை, மொட்டுகளில் இருந்தும், மரப் பட்டைகளில் இருந்தும் தேனீக்கள் சேகரிக்கும்.
தேனீக் கூட்டிலுள்ள சட்டங்களை ஒட்டவும், வெடிப்பு, துளைகளை அடைக்கவும், தேனீக்கள் பிசினைப் பயன்படுத்தும்.
ஆனால், இதனால் சட்டங்களைக் கையாளுவதில் இடையூறும், அடை மெழுகில் கலப்படமும் ஏற்படும்.
பிசினில், 55 சதம் ரெசின் மற்றும் பால்சம், 10 சதம் எத்தனால், 5 சதம் மணமுள்ள எண்ணெய் மற்றும் மகரந்தம் இருக்கும்.
சட்டங்களில் இருந்து பிசின் சுரண்டி எடுக்கப்படும். இது, புண்ணுக்கு மருந்தாகும். பிசினையும் வாசலினையும் கலந்து பூசினால் தீப்புண்கள் குணமாகும்.
ஒரு இத்தாலிய தேனீப் பெட்டியில் இருந்து ஆண்டுக்கு 300 கிராம் தேன் பிசின் கிடைக்கும்.
அரச கூழ்
ஆறு முதல் பன்னிரண்டு நாட்களான பணித் தேனீக்களின் சுரப்பிகளில் இருந்து அரச கூழ் சுரக்கும். இது, மிகவும் சத்தான உணவாகும்.
இது, பணித்தேனீ மற்றும் இராணித் தேனீயின் புழுக்களுக்கும், வளர்ந்த தேனீக்களுக்கும் வழங்கப்படும்.
அரச கூழானது, பாலைப் போல அல்லது இள நிறத்தில் இருக்கும். இதில், 15-18 சதம் புரதம், 2.6 சதம் கொழுப்பு, 9-18 சதம் கார்போ ஹைட்ரேட், 0.7-1.2 சதம் சாம்பல் சத்து, 65-70 சதம் நீர் ஆகியன இருக்கும்.
குழந்தைகள் விரைவாக வளர, இளமையாக இருக்க, சுறுசுறுப்பைப் பெற அரச கூழ் உதவும். குறைந்த இரத்தழுத்த நோயைச் சரி செய்யும்.
ஒரு இத்தாலிய தேனீப் பெட்டியில் இருந்து ஆண்டுக்கு 50 கிராம் அரச கூழ் கிடைக்கும்.
மகரந்தம்
இது, தேனீப் புழுக்களின் முக்கிய உணவாகும். வயல்வெளித் தேனீக்களின் உடல், மகரந்தத்தால் மூடியிருக்கும்.
முன்னங்காலில் இருந்து நடுக்காலுக்கு வந்து, பின்னங்காலில் உள்ள மகரந்தக் கூடைக்குச் செல்வதற்கு முன், மகரந்தம் உமிழ் நீருடன் கலந்து பசையைப் போல மாறும்.
இப்படி, கூட்டுக்குத் திரும்பியதும் கூட்டிலுள்ள அறையில் மகரந்தத்தைச் சேர்த்து வைக்கும். வயல்வெளித் தேனீக்கள் காலை 9-11 மணிக்குள், அதிகளவில் மகரந்தத்தைச் சேகரிக்கும்.
ஒரு இத்தாலிய தேனீக் கூட்டிலிருந்து ஆண்டுக்கு 3-5 கிலோ மகரந்தம் கிடைக்கும்.
மகரந்தம் மிகவும் சத்துள்ள உணவாகும். இது, குடல் சார்ந்த சிக்கல்களைச் சரி செய்யும். முடி உதிர்தல் மற்றும் நகங்கள் முறிவதைத் தடுக்கும்.
இரத்தக்குழாய் வலுப்பெற, நரம்பு நோய்கள் குணமாக, கண் பார்வை சிறக்க மகரந்தம் உதவும்.
ஆண்மைக் குறைவைப் போக்க, பாலியல் உணர்வைக் கூட்ட, மகரந்தக் கலவையை உண்ணலாம்.
களைப்பும் மன உளைச்சலும் அகலும். இதைத் தினமும் ஒரு தேக்கரண்டி எடுத்து, நீரில், பாலில் அல்லது தேனில் கலந்து உண்டு வந்தால் நல்ல பலனை அடையலாம். காலை உணவுக்கு முன் இதை உண்ணுதல் சிறந்தது.
முனைவர் ஜே.இராஜாங்கம், முனைவர் சே.சரஸ்வதி, முனைவர் செ.சுகன்யா கண்ணா, முனைவர் சு.முத்துராமலிங்கம், முனைவர் மு.உமா மகேஸ்வரி, தோட்டக்கலைக் கல்லூரி, பெரியகுளம், தேனி மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!