தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கை 2024- 2025!

வேளாண் நிதிநிலை tn 2

மிழகச் சட்டப் பேரவையில் தமிழக அரசின் 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் 27.02 2024 செவ்வாய்க் கிழமை தாக்கல் செய்தார். இதில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மொத்த நிதி 42,281.88 கோடி ரூபாய். இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரங்கள்:

முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்

முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்துக்கு (CM MK MKS) ரூ.206 கோடி ஒதுக்கீடு.

2 இலட்சம் விவசாயிகள் பயனடையும் வகையில், 2 இலட்சம் ஏக்கரில் பசுந்தாள் உரங்களைப் பயிரிட, ரூ.20 கோடி ஒதுக்கீடு.

10,000 விவசாயிகளுக்கு, தலா இரண்டு மண்புழு உரப் படுக்கைகள் வீதம் வழங்கிட ரூ.6 கோடி மானியம். நிரந்தர மண்புழு உரத் தொட்டிகள், உரப்படுக்கை அமைக்க ரூ. 5 கோடி மானியம்.

37,500 ஏக்கர் களர், அமில நிலங்களைச் சீர்ப்படுத்த ரூ.22.5 கோடி ஒதுக்கீடு.

பத்து இலட்சம் ஏக்கர் பரப்பில் 5 இலட்சம் லிட்டர் திரவ உயிர் உரங்களைப் பயன்படுத்தும் வகையில், 2 இலட்சம் விவசாயிகளுக்கு வழங்க, ரூ.7.5 கோடி ஒதுக்கீடு.

2,482 கிராம ஊராட்சிகளில் 2 இலட்சம் விவசாயிகளின் நிலத்தில் மண்ணாய்வு செய்ய, ரூ.6.27 கோடி ஒதுக்கீடு.

இரசாயனப் பயன்பாட்டைக் குறைத்து மண் நலம் காக்க, வயல் சூழல் ஆய்வு அடிப்படையில், பூச்சி மேலாண்மை செய்வது குறித்து, விவசாயிகளுக்கு உரிய அறிவுரைகளும் பரிந்துரைகளும் வழங்குதல்.

அசாடிராக்டின் பயன்பாட்டுக்காக வேம்பைப் பரவலாக்கும் வகையில் 10 இலட்சம் வேப்ப மரக்கன்றுகளை இலவசமாக வழங்க, ரூ.2 கோடி ஒதுக்கீடு.

உயிரி பூச்சிக்கொல்லிப் பண்புகளுள்ள 50 இலட்சம் ஆடாதொடா, நொச்சிச் செடிகளை, தரிசு நிலங்கள் மற்றும் வயல் பரப்புகளில் நடவு செய்ய, ரூ.1 கோடி ஒதுக்கீடு.

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் சீவன் சம்பா போன்ற மருத்துவக் குணமுள்ள பாரம்பரிய நெல் இரகங்களை, 1,000 ஏக்கரில் சாகுபடி செய்திட விதை விநியோகம்.

200 மெட்ரிக் டன் பாரம்பரிய நெல் இரக விதைகளை உற்பத்தி செய்து, 10,000 ஏக்கரில் பயிரிடுவதற்கான விதைகளை வழங்க, ரூ.50 இலட்சம் ஒதுக்கீடு.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, பாரம்பரியச் சிறு தானியங்கள், பயறு வகைகளின் புதிய இரகங்கள், அரசு மாநில விதைப் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும். தற்போது பயனிலுள்ள இரகங்கள் மேம்படுத்தப்படும்.

உயிர்ம வேளாண்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, வட்டாரத்துக்கு ஒரு கிராமம் வீதம் தேர்ந்தெடுத்து, உயிர்ம வேளாண் மாதிரிப் பண்ணையை உருவாக்க, ரூ.38 இலட்சம் ஒதுக்கீடு.

முழுமையான உயிர்மச் சான்றுடன் கூடிய உயிர்ம வேளாண்மையை உறுதி செய்து, விதைப்பு முதல் நேரடி விற்பனை வரையில் வாய்ப்புகளை உருவாக்கி, விவசாயிகள் கூடுதல் இலாபம் பெற்றிட வகை செய்யும், 725 உயிர்ம வேளாண் தொகுப்புகளுக்கு ரூ.27 கோடி ஒதுக்கீடு.

உயிர்ம வேளாண்மைக்குத் தேவையான இயற்கை இடுபொருள் தயாரித்தல் மையம் அமைக்க, 100 குழுக்களுக்கு ரூ.1 கோடி ஒதுக்கீடு.

வேளாண் காடுகள் திட்டத்தில், தரமான மரக்கன்று நாற்றங்கால்களை அமைக்க மற்றும் வலுப்படுத்த, ரூ.13 கோடி ஒதுக்கீடு.

பயிர் சாகுபடியுடன் கூடிய கறவை மாடுகள், ஆடுகள் வளர்த்தல், பழ மரங்கள், தேனீ வளர்ப்பு, மண்புழு உரம் தயாரிப்பு போன்ற வேளாண் சார்ந்த பணிகளை மேற்கொள்ளும் வகையில், 14,000 ஒருங்கிணைந்த பண்ணையத் தொகுப்புகளை அமைக்க, ரூ.42 கோடி ஒதுக்கீடு.

மானாவாரி நிலங்களில் விவசாயிகள் இலாபகரமான பயிர் சாகுபடியை மேற்கொள்ளும் வகையில், மூன்று இலட்சம் ஏக்கரில் உழவு செய்யவும், சிறு தானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகளைப் பயிரிடவும் என, விதைகள் உள்ளிட்ட இடுபொருள்களுக்கு ரூ.36 கோடி ஒதுக்கீடு.

வீட்டுத் தோட்டத்தில் சத்துமிக்க பழங்கள், காய்கறிகள் வளர்ப்பை ஊக்குவிக்கும் பொருட்டு, வாழை, பப்பாளி, முருங்கை, கறிவேப்பிலை போன்ற செடிகளை வழங்க ரூ.4 கோடி ஒதுக்கீடு.

மக்கள் உடல் நலம் பேணும் தேன் பொருள்களுக்கு கன்னியாகுமரியில் பரிசோதனை, பதப்படுத்தும் கூடங்களை அமைத்து, தேனீ வளர்ப்புப் பயிற்சியை அளிக்க, ரூ.3.60 கோடி ஒதுக்கீடு.

சிறப்பு வேளாண் கிராமங்களை உருவாக்கி, காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைக் குறைக்கும் நுட்பங்களைக் கண்டறிந்து, விரிவாக்க அலுவலர்கள், விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி பரவலாக்கம் செய்திட, ரூ.1.48 கோடி ஒதுக்கீடு.

பயிர்க் கழிவுகள் உள்ளிட்ட கரிமப் பொருள்களை வேகமாகச் சிதைத்து, கரிமச் சத்தின் அளவை உயர்த்தி, கிடைக்காத நிலையிலுள்ள சத்துகள் கிடைக்கச் செய்ய, பயனுள்ள நுண்ணுயிர்க் கலவையை உருவாக்க மற்றும் அதன் செயல்திறனை மதிப்பிட, ரூ.1.39 கோடி ஒதுக்கீடு.

வேளாண் விளை பொருள்கள், மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் எளிதில் நகர்ப்புற மக்களைச் சென்றடையும் வகையில், விவசாயிகளிடம் இருந்து நேரடியாகக் கொள்முதல் செய்து, தரம் பிரித்து, சிப்பம் கட்டி, முத்திரையிட்டு விற்பனை செய்ய, 100 உழவர் அங்காடிகளுக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு.

ஒவ்வொரு சிற்றூரும் தன்னிறைவைப் பெற்றிட, கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2482 கிராம ஊராட்சிகளில், அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்துடன் இணைந்து தொடர்ந்து செயல்படுத்த, ரூ.200 கோடி ஒதுக்கீடு.

தேவைக்கேற்ற உற்பத்தியை எட்டும் வகையில் சாகுபடிப் பரப்பை விரிவுப்படுத்த ரூ.108 கோடி ஒதுக்கீடு.

பயறு பெருக்குத் திட்டத்தை, 4.75 இலட்சம் ஏக்கர் பரப்பில் செயல்படுத்த, ரூ.40.27 கோடி ஒதுக்கீடு.

துவரை சாகுபடிப் பரப்புக் குறைந்து வரும் மாவட்டங்களில், துவரை சாகுபடிப் பரப்பைக் கூட்டும் வகையில், 50,000 ஏக்கரில் துவரை சாகுபடிப் பரப்பு விரிவாக்க இயக்கத்தைச் செயல்படுத்த, ரூ.17.50 கோடி ஒதுக்கீடு.

உணவு எண்ணெய் உற்பத்தியை உயர்த்த, எண்ணெய்ப் பயிர்களின் சாகுபடியை 2.50 இலட்சம் ஏக்கரில் பரவலாக்கம் செய்ய, ரூ.45 கோடி ஒதுக்கீடு.

எள் சாகுபடிப் பரப்பு மற்றும் மகசூலைக் கூட்டும் வகையில், எள் சாகுபடிப் பரப்பு விரிவாக்கத் திட்டத்தை, 25,000 ஏக்கரில் செயல்படுத்த, ரூ.3 கோடி ஒதுக்கீடு.

சூரியகாந்தி சாகுபடிப் பரப்பைக் கூட்டும் வகையில், சூரியகாந்தி சாகுபடிப் பரப்பு விரிவாக்கத் திட்டத்தை, 12,500 ஏக்கரில் செயல்படுத்த, ரூ.2 கோடி ஒதுக்கீடு.

1,500 ஏக்கர் பரப்பில், வீரிய ஒட்டு ஆமணக்கு சாகுபடியை ஊக்குவிக்கும் ஆமணக்கு சாகுபடிப் பரப்பு விரிவாக்கத் திட்டத்துக்கு ரூ.18 இலட்சம் ஒதுக்கீடு.

பயிர் உற்பத்தித் திறனை உயர்த்தும் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.48 கோடி ஒதுக்கீடு

விதைக் கிராமத் திட்டத்தின் கீழ், 15,810 மெட்ரிக் டன் நெல், சிறு தானியங்கள், பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்து விதைகளை 50 முதல் 60 சதவீத மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்க, ரூ.35 கோடி ஒதுக்கீடு.

பிற மாநில உயர் விளைச்சல் நெல், சிறு தானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகளின் சான்று பெற்ற விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

50,000 விவசாயிகள் பயன்பெறும் வகையில், நிலக்கடலை போன்ற பயிர்களில், 50,000 ஏக்கர் பரப்புக்கு ஜிப்சம் வழங்க, ரூ.1 கோடி ஒதுக்கீடு.

4 இலட்சம் ஏக்கர் நெல் சாகுபடிக்கு, துத்தநாக சல்பேட், ஜிப்சம் வழங்க, ரூ.9 கோடி மானியம்.

2 இலட்சம் ஏக்கர் நெல் சாகுபடிக்கு, நுண்ணுரக் கலவை வழங்க, ரூ.3 கோடி ஒதுக்கீடு.

ஒரு கிராமத்துக்கு ஒரு பயிர்: விதைப்பு முதல் அறுவடை வரை அனைத்துத் தொழில் நுட்பங்கள் குறித்த செயல் விளக்கங்கள், நிரந்தரப் பூச்சிக் கண்காணிப்புத் திடல்களை அமைத்து விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த, ஒரு கிராமம் ஒரு பயிர்த் திட்டம் 15,280 வருவாய் கிராமங்களில் செயல் படுத்தப்படும்.

சத்துமிகு சிறுதானிய சாகுபடிப் பரப்பு, உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனைப் பெருக்க, தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்துக்கு ரூ.65.30 கோடி ஒதுக்கீடு

மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம்

விவசாயிகளுக்குப் பரிசு: மாநில அளவில் சிறு தானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள், கரும்பு ஆகிய பயிர்களில் அதிக உற்பத்தியைப் பெறும், முதல் மூன்று விவசாயிகளுக்குப் பரிசளிக்க ரூ.55 இலட்சம் ஒதுக்கீடு.

நெற்பயிருக்கு மாற்றாக, குறைந்த நீரில் விளையும் மாற்றுப் பயிர்களை ஒரு இலட்சம் ஏக்கரில் பயிரிட, ரூ.12 கோடி மானியம்.

நூறு பட்டதாரி இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்கும் வகையில், ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் வீதம், 100 பேருக்கு மானியம் வழங்க ரூ.1 கோடி ஒதுக்கீடு.

சாகுபடியில் அதிக உற்பத்தியும் அதிக வருமானமும் பெறும் வகையில், விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்கும் வகையில், 2,482 கிராம ஊராட்சிகளில் கிராம வேளாண் முன்னேற்றக் குழுக்களை உருவாக்க, ரூ.2.48 கோடி ஒதுக்கீடு.

உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு, நம்மாழ்வார் விருது வழங்க, ரூ.5 இலட்சம் ஒதுக்கீடு.

ஆதிதிராவிட, பழங்குடியினச் சிறு, குறு விவசாயிகளுக்கு உயர் மதிப்புள்ள திட்டங்களுக்கு வழங்கப்படும் மானியத்துடன் கூடுதலாக 20 சதவீத மானியம் வழங்க, ரூ.18 கோடி ஒதுக்கீடு.

பருத்தி சாகுபடி விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க, பலன் தரும் பருத்தி சாகுபடிக்கு ரூ.14.20 கோடி ஒதுக்கீடு.

இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் வருவாய் இழப்பிலிருந்து விவசாயிகளை மீட்கும் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் ரூ.1,775 கோடியில் செயல்படுத்தப்படும்.

வேளாண் மேம்பாட்டுப் பயிற்சிகள்: பணித்திறனை, தொழில் நுட்ப அறிவை மேம்படுத்தி, வேளாண் மேம்பாட்டை எய்தும் வகையில், விவசாயிகள், படித்த இளைஞர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்குப் பல்வேறு பயிற்சிகளை வழங்க, ரூ.50 இலட்சம் ஒதுக்கீடு.

சர்க்கரைத் துறை

2023-2024 அரவைப் பருவத்துக்குக் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்குச் சிறப்பு ஊக்கத் தொகை: மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நியாயமான மற்றும் ஆதாய விலைக்கு மேல், முன் எப்போதும் இல்லாத அளவில், ஒரு டன் கரும்புக்கு ரூ.215 வீதம் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு.

கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டம்: கரும்பு விவசாயிகளின் நலனுக்காக, சாகுபடிப் பரப்பை அதிகரிக்க, பூச்சி, நோய்த் தாக்குதலுக்கு எதிர்ப்பும், அதிக சர்க்கரைத் திறனுமுள்ள புதிய கரும்பு இரகங்களை வழங்க, ரூ.7.92 கோடி நிதி ஒதுக்கீடு.

சர்க்கரை ஆலைகளின் செயல் திறனை மேம்படுத்துதல்: கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் நவீனக் கரும்பு எடை மேடைகள், சுழல் கவிழ்ப்பான், சிமெண்ட் கான்கிரீட் கரும்புத் தளங்கள், கழிவு மண்ணை மட்க வைக்கும் களங்கள் அமைத்தல் போன்ற பணிகளுக்காக, ரூ.12.51 கோடி நிதி ஒதுக்கீடு.

சர்க்கரை ஆலைகளின் செயல் திறனை உயர்த்த ரூ.12.40 கோடி நிதி

பெரம்பலூர், செய்யாறு, வேலூர், சேலம், மதுராந்தகம், சுப்பிரமணிய சிவா ஆகிய சர்க்கரை ஆலைகளில், ஆலை அரவைப் பகுதியைத் தானியங்கி மயமாக்க, ரூ.3.6 கோடி ஒதுக்கீடு.

செங்கல்வராயன் கூட்டுறவுச் சர்க்கரை ஆலையில், அரவை நிறுத்தம் ஏற்படுவதைத் தவிர்க்க, புதிய டர்பைன் ரோட்டர் அசெம்பிளி அமைக்க ரூ.6.31 கோடி ஒதுக்கீடு.

எம்.ஆர்.கே, செய்யாறு ஆகிய கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகளில், கரும்பு அரவை இயந்திரத்தின் மின் மோட்டாரைக் கட்டுப்படுத்தும் கருவிகளை வாங்க, ரூ.1.10 கோடி.

செங்கல்வராயன், வேலூர், செய்யாறு, அறிஞர் அண்ணா, பெரம்பலூர், தர்மபுரி, எம்.ஆர்.கே ஆகிய சர்க்கரை ஆலைகளில், நீர்ச் சுத்திகரிப்பு நிலைய அயனி மற்றும் எதிர் அயனியைப் பரிமாற்றி நிறுவிட, ரூ.1.39 கோடி ஒதுக்கீடு.

தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறை

நுண்ணீர்ப் பாசனம்: பாசனநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, சாகுபடிப் பரப்பைக் கூட்டவும், பயிர் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், 2.22 இலட்சம் ஏக்கரில் நுண்ணீர்ப் பாசனம் அமைக்கவும், ரூ.773.23 கோடி ஒதுக்கீடு. நிலத்தடி நீர் அதிகமாகக் குறைந்து வரும் குறு வட்டங்களுக்கு முக்கியத்துவம்.

ஒருங்கிணைந்த தென்னை வளர்ச்சித் திட்டம்: தென்னங் கன்றுகள் வழங்க, ஊடுப்பயிர் சாகுபடி செய்ய, தென்னை நாற்றங்கால் அமைக்க, பழைய தோட்டங்களைப் புதுப்பிக்க, மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வகையில்:

செயல் விளக்கத் திடல், பரப்பு விரிவாக்கம், கேரள வாடல் நோய், வெள்ளை ஈக்கள் கட்டுப்பாடு, மதிப்புக் கூட்டுதல் பயிற்சி போன்றவற்றுக்கு ரூ.36.15 கோடி ஒதுக்கீடு.

குறைந்த நீரில், வறட்சியைத் தாங்கி வளரும் பயிர்களை வளர்க்க, ரூ.3.64 கோடியில், வறண்ட நிலங்களில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.

பகுதிசார் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், விவசாயிகளுக்கு நடவுச் செடிகள், ரூ.2.70 கோடி மானியத்தில் வழங்கப்படும்.

தானியங்கி மின்னணு நீர்ப்பாசன அமைப்புகளை விவசாய நிலங்களில் அமைக்கும் வகையில், 12 ஆயிரம் விவசாயிகளுக்கு மானியம் வழங்கவும், அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் செயல் விளக்கத் திடல்களை அமைக்கவும் ரூ.27.5 கோடி ஒதுக்கீடு.

தோட்டக்கலைப் பண்ணை இயந்திரக் கண்காட்சி: தோட்டக்கலைப் பயிர்களில் நிலம் சீர் செய்தல் முதல் அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை வரை, அனைத்து நிலைகளிலும் பயன்படும் இயந்திரங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் கண்காட்சியை நடத்த ரூ.10 கோடி ஒதுக்கீடு.

முக்கனி மேம்பாட்டுச் சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.41.35 கோடி ஒதுக்கீடு

மா: தென்னாட்டு மா இரகங்கள், ஏற்றுமதிக்கு உகந்த மா இரகங்கள் பரப்பைப் பெருக்க, உற்பத்தித் திறனை அதிகரிக்க மற்றும் பழைய தோட்டங்களுக்குப் புதுப்பிப்பு மானியம் வழங்க, கிளை மேலாண்மை பயிற்சியளிக்க, உற்பத்தித் திறனைக் கூட்டும் செயல் விளக்கத் திடல்களை அமைக்க, ரூ.27.48 கோடி ஒதுக்கீடு.

வாழை: வாழைப் பரப்பு விரிவாக்கம், முட்டுக் கொடுத்தல் மானியம் மற்றும் வாழைத்தார் உறைகள் வழங்க, ரூ.12.73 கோடி மானியம்.

பலா: பலாவில் உள்ளூர், புதிய இரகங்கள் சாகுபடி, சாகுபடி நுட்பங்கள் குறித்த பயிற்சி, பலா பதப்படுத்தும் கூடங்களை அமைக்க, ரூ.1.14 கோடி ஒதுக்கீடு.

குளிர் மண்டலப் பழப் பயிர்களான பிளம்ஸ், பேரிக்காய் தோட்டங்களைப் புதுப்பித்தல், உற்பத்தி, உற்பத்தித் திறனை அதிகரிக்க, ரூ.30 இலட்சம் ஒதுக்கீடு.

ஐந்திணை நிலங்களின் வாழ்வியலைப் பெருமைப்படுத்தும் வகையில், முல்லை, மருத நிலப் பூங்காக்கள், கன்னியாகுமரியில் சூரியத் தோட்டம், செங்கல்பட்டில் செம்பருத்தி நடவுச் செடிகள் உற்பத்தி மையம்,

தென்காசி நடுவக் குறிச்சியில் புதிய அரசு தோட்டக்கலைப் பண்ணை அமைக்க மற்றும் உதகை ரோஜா பூங்காவில் புதிய ரோஜா இரகங்களை அறிமுகம் செய்ய ரூ.8 கோடி ஒதுக்கீடு.

செங்காந்தள், மருந்துக் கூர்க்கன், சென்னா, நித்திய கல்யாணி போன்ற மூலிகைப் பயிர்கள் சாகுபடியை ஊக்குவிக்க, ரூ.5 கோடி ஒதுக்கீடு.

முந்திரி சாகுபடிப் பரப்பையும் மகசூலையும் உயர்த்தும் வகையில், இயற்கை இடுபொருள் செயல் விளக்கம் அமைக்க, ரூ.3.36 கோடி ஒதுக்கீடு.

மிளகாய் சாகுபடி ஊக்குவிப்புத் திட்டம்: தரிசு நிலங்களிலுள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றியும், தானிய அறுவடைக்குப் பின்னும் மிளகாய் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் 200 பண்ணைக் குட்டைகளை அமைக்க, ரூ.3.67 கோடி ஒதுக்கீடு.

மரவள்ளியில் மாவுப்பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்த ரூ.1 கோடி ஒதுக்கீடு.

பேரீச்சைப் பரப்பை விரிவாக்கம் செய்ய, ரூ.30 இலட்சம் ஒதுக்கீடு.

கொய்யாவில் பழ ஈ பூச்சியைக் கட்டுப்படுத்த, ரூ. 50 இலட்சம் ஒதுக்கீடு.

நிரந்தரப் பந்தலை அமைத்துப் பாகல், புடல், பீர்க்கன், சுரை போன்ற கொடிவகைக் காய்கறிகள் சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்ள, ரூ.9.40 கோடி மானியம்.

பாரம்பரியக் காய்கறி இரகங்களை மீட்டெடுத்து, அவற்றின் சாகுபடிப் பரப்பை விரிவாக்கம் செய்ய, ரூ.2 கோடி ஒதுக்கீடு.

முக்கியச் சாலைகளை ஒட்டி அமைந்துள்ள பத்து அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில், நேரடி விற்பனை மையங்களை அமைக்க, ரூ.1 கோடி ஒதுக்கீடு.

தோட்டக்கலைப் பயிர்களில், விவசாயிகளின் தொழில் நுட்பச் செயல் திறனை மேம்படுத்த, அனைத்துத் திட்ட ஒருங்கிணைந்த செயல் விளக்கம், வட்டாரந் தோறும் அமைக்கப்படும்.

தொகுப்பு முறை சாகுபடி: மல்லிகை, பலா, மிளகாய், கறிவேப்பிலை போன்ற தோட்டக்கலைப் பயிர்களில் தொகுப்பு முறை சாகுபடியை ஊக்குவிக்க, தோட்டக்கலை வல்லுநர்களால் தொழில் நுட்ப ஆலோசனைகள் வழங்கப்படும்.

அனைத்து வட்டார அலுவலகங்களிலும் தோட்டக்கலைப் பயிர்களுக்கான திட்டங்கள், சாகுபடி நுட்பங்கள் போன்ற தகவல்களை, விவசாயிகள் எளிதில் அறியும் வகையில் தகவல் மையம் அமைக்கப்படும்.

பருவமில்லாக் காலத்திலும் முருங்கை உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், முதற் கட்டமாக அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில், நெகிழி விரிப்பான் மூலம் முருங்கை மரங்களை மூடும் தொழில் நுட்பம் சோதனை முறையில் செயல்படுத்தப்படும்.

வேளாண்மைப் பொறியியல் துறை

இயந்திரமயமாக்குதல்: வேளாண்மையில் இயந்திரமயாக்குதலின் அவசியத்தை உணர்ந்து, சிறு, குறு விவசாயிகள் பெரிதும் பயன்பெறும் வகையில், 26,179 விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மானியத்தில் வழங்க, ரூ.170 கோடி ஒதுக்கீடு.

எளியோர்க்கென இயந்திர வாடகை மையங்கள்: விவசாயிகளின் வேளாண் இயந்திரத் தேவையைச் சரி செய்து, உயர் மதிப்பு வேளாண் இயந்திரங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், 207 தனியார் வேளாண் இயந்திர வாடகை மையங்களை அமைக்க, ரூ.32.9 கோடி ஒதுக்கீடு.

தனியார் வேளாண் இயந்திரங்கள் வாடகை சேவை கைப்பேசிச் செயலியை உருவாக்க, ரூ.50 இலட்சம் ஒதுக்கீடு.

வேளாண்மைப் பொறியியல் துறையின் இயந்திர வாடகைத் திட்டத்தை வலுப்படுத்தும் வகையில், புதிய வேளாண் இயந்திரங்களை வாங்க, ரூ.28.82 கோடி ஒதுக்கீடு.

சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் வாங்கிடக் கூடுதல் மானியம்: வேளாண் பணிகளில் சிறு, குறு விவசாயிகளுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைக்கும் வகையில், நெல் நாற்று நடவு இயந்திரங்கள் உள்ளிட்ட வேளாண் இயந்திரங்களை வாங்கும் வகையில், கூடுதலாக 10 சதவீத மானியம் வழங்க, ரூ.5 கோடி ஒதுக்கீடு.

நடமாடும் நெல் உலர்த்து இயந்திரங்கள்: குறித்த காலத்தில் நெல்லை உலர வைத்து, நெல் சேமிப்புக் காலத்தை அதிகரிக்கும் வகையில், 10 நடமாடும் நெல் உலர்த்து இயந்திரங்களை மானியத்தில் வழங்க, ரூ.90 இலட்சம் ஒதுக்கீடு.

வேளாண் இயந்திரங்களைப் பரவலாக்கும் நடவடிக்கைகள்: விவசாயிகளுக்கு உதவிடும் வகையில், டிராக்டர்கள் பராமரிப்புக் குறித்த முகாம்கள், மாவட்ட அளவில் நடத்தப்படும்.

வேளாண் இயந்திரங்கள், கருவிகளை இயக்குதல், பராமரித்தல் தொடர்பான, தொழில் நுட்பக் கையேடுகளைத் தயாரித்து, அனைத்து கள அலுவலர்களுக்கும் விவசாயிகளுக்கும் பகிரப்படும்.

நவீன வேளாண் இயந்திரங்கள், கருவிகள் செயல் விளக்கம்: நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை, அரசு இயந்திரக் கலப்பைப் பணிமனைகளில் தயாரித்து, விவசாயிகளுக்குச் செயல் விளக்கம் செய்து காண்பிக்க, ரூ.30 இலட்சம் ஒதுக்கீடு.

சூரியசக்தி மின் வேலிகள்: விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் ஆபத்தின்றிப் பயிர்களைக் காத்திடும் நோக்கில், விவசாயிகள் 75 ஆயிரம் மீட்டர் நீளத்தில் சூரிய மின்வேலியை அமைக்க, ரூ.2 கோடி ஒதுக்கீடு.

நீர்ச் சேகரிப்புக் கட்டமைப்புகளை அமைத்தல், பராமரித்தல்: பல்வேறு நீர்வடிப் பகுதிகளில் 100 புதிய நீர்ச் சேகரிப்புக் கட்டமைப்புகளை அமைக்க, 500 நீர்ச் சேகரிப்புக் கட்டமைப்புகளில் பராமரிப்புப் பணிகளைச் செய்ய, ரூ.2.75 கோடி ஒதுக்கீடு.

டெல்டா மாவட்டங்களில் சி, டி பிரிவு வாய்க்கால்களைத் தூர் வாருதல்: தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், திருச்சி ஆகிய ஏழு மாவட்டங்களில், சி, டி பிரிவு வாய்க்கால்களைத் தூர் வார ரூ.10 கோடி ஒதுக்கீடு.

விவசாயிகளுக்கு மழைநீர்ச் சேகரிப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல்: ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண்மைப் பொறியியல் துறை மற்றும் வேளாண் அறிவியல் நிலையம் மூலம், விவசாயிகளுக்கு மழைநீர்ச் சேகரிப்பு முறைகள், மழைநீர்ச் சேகரிப்பு அமைப்புகளைப் பராமரித்தல் போன்றவை குறித்த விழிப்புணர்வு தரப்படும்.

வேளாண்மை விற்பனை – வேளாண் வணிகத் துறை

திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம், கடலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், தேனி ஆகிய 10 மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில், நடமாடும் உலர்த்திகளை வாங்க, ரூ.2.50 கோடி ஒதுக்கீடு.

ஈரோடு, கள்ளக்குறிச்சி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில், மஞ்சளை மெருகூட்டும் இயந்திரங்கள் ஐந்து மற்றும் மஞ்சளை வேக வைக்கும் எட்டு இயந்திரங்களை அமைக்க, ரூ.2.12 கோடி ஒதுக்கீடு.

சென்னையிலும், கோவையிலும், விவசாயிகள் விளை பொருள்களைத் திறம்படச் சந்தைப்படுத்தி, அதிக வருவாய் பெறும் வகையில், மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களுக்குப் பொது முத்திரை, சிப்பமிடல் வசதிகளை அமைக்க ரூ.4.10 கோடி ஒதுக்கீடு.

பலாவில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களைத் தயாரித்து ஏற்றுமதி செய்ய ஏதுவாக, ரூ.16.13 கோடியில் பலா மதிப்புக்கூட்டு மையம் அமைக்கப்படும்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மக்காச்சோளம் மற்றும் சிறுதானிய சாகுபடி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலான, தொழில் நுட்ப வணிக மேம்பாட்டு மையம், ரூ.4 கோடியில் அமைக்கப்படும்.

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கட்டமைப்பு வசதிகளைப் புதுப்பித்தல்: 100 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் கட்டமைப்பு வசதிகளைப் புதுப்பிக்க ரூ.50 ஒதுக்கீடு.

நமது மாநிலத்தின் தனித்த அடையாளங்களாக விளங்கும், சத்தியமங்கலம் செவ்வாழை, கொல்லிமலை மிளகு, மீனம்பூர் சீரக சம்பா, ஐயம்பாளையம் நெட்டைத் தென்னை, உரிகம்புளி,

புவனகிரி மிதி பாகற்காய், செஞ்சோளம், திருநெல்வேலி அவுரி, ஓடைப்பட்டி விதையில்லாத் திராட்சை, செங்காந்தள் விதை ஆகிய 10 பொருள்களுக்குப் புவிசார் குறியீடு பெற, ரூ.30 இலட்சம் ஒதுக்கீடு.

அப்பீடா (APEDA) பயிற்சி பெற்ற நூறு விவசாயிகளை ஏற்றுமதியாளர்களாக மாற்றும் சான்றிதழ்களைப் பெற்றுத் தருவதற்கு, ரூ.15 இலட்சம் ஒதுக்கீடு.

இணையவழி வர்த்தக நிறுவனங்களுடன், விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் இணைப்பை ஏற்படுத்தி, விளை பொருள்களை விற்பனை செய்யும் வகையில், புதிய சந்தை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

வேளாண் வணிக மேம்பாட்டுக்காக சமூக வலைத்தளக் குழுக்கள் உருவாக்கப்படும், வட்டாரத்துக்கு இரண்டு கிராமங்கள் வீதம், மாதந்தோறும் 770 தீவிர விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும்.

பண்ணை வழி வர்த்தகம்: விவசாயிகளின் விளை பொருள்களுக்குச் சிறந்த விலை கிடைக்கும் வகையில், ரூ.60 கோடி மதிப்பிலான பொருள்கள், பண்ணை வழி வர்த்தகம் மூலம் விற்க வழிவகை செய்யப்படும்.

பொருளீட்டுக் கடன் வரம்பு உயர்வு: விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில், பொருள்களை இருப்பு வைத்துப் பெறும் பொருளீட்டுக் கடன் வரம்பு, ரூ.3 இலட்சத்தில் இருந்து ரூ.5 இலட்சமாக உயர்வு.

நூறு சேமிப்புக் கிடங்குகளுக்கு, கிடங்கு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை ஆணைய அங்கீகாரத்தைப் பெற்று, தேசிய வங்கிகளில் கடன் பெற வழிவகை செய்யப்படும்.

புத்தாக்க நிறுவனங்களை (Start-up) ஊக்குவித்தல்: வேளாண் சார்ந்த தொழில்களைத் தொடங்கும் தகுதியுள்ள புத்தாக்க நிறுவனங்களுக்கு, மானியம் வழங்க ரூ.10 கோடி ஒதுக்கீடு.

வேளாண் கண்காட்சிகள்: விவசாயிகள், பொது மக்கள் பயன்பெறும் வகையில், ரூ.9 கோடி செலவில், மூன்று இடங்களில் வேளாண் கண்காட்சிகள் நடத்தப்படும்.

விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றுத்துறை

விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றுத் துறை, இனி, விதைச் சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்புத் துறை எனப் பெயர் மாற்றம் செய்யப்படும். விதைச் சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்புத் துறைக்கான அறிவிப்புகள்:

கரூர், திருவள்ளூர் மாவட்டங்களில் ஒருங்கிணைந்த விதைச் சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்பு வளாகம்.

கோயம்புத்தூரில் விதை மரபணுத் தூய்மையை உறுதி செய்யும் ஆய்வகம்.

தேசிய உயிர்ம உற்பத்தித் திட்டத்தில் பதிவு செய்து உயிர்ம நிலையை அடைந்த விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை.

தருமபுரி, காஞ்சிபுரம், மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருச்சி ஆகிய ஆறு விதைப் பரிசோதனை நிலையங்களுக்கு NABL தரச்சான்று.

எஞ்சிய நச்சு மதிப்பீடு பரிசோதனைக் கட்டண மானிய ஒதுக்கீடு ரூ.9 கோடி.

விவசாயிகளுக்குத் தரமான விதைகள் கிடைக்கச் செய்யும் வகையில், புதிய பதிவு முறை நடைமுறை அறிமுகம்.

தரமான பழமரக் கன்றுகள், காய்கறிப் பயிர் நாற்றுகள் கிடைப்பதை, விதைச் சட்டத்தின்படி உறுதி செய்தல்.

விவசாயிகளுக்குத் தரமான வீரிய ஒட்டு மக்காச்சோள விதைகள் கிடைப்பதை, சான்றளிப்பு, விதை ஆய்வு, விதைப் பரிசோதனை போன்ற நடவடிக்கைகளுடன் உறுதி செய்தல்.

தமிழ்நாடு நீர்வடிப் பகுதி மேம்பாட்டு முகமை: பெரம்பலூர், தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, இராமநாதபுரம், தருமபுரி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில், இயற்கை வள மேம்பாட்டுப் பணிகளுக்கு, ரூ.43 கோடி ஒதுக்கீடு.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்

கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில், தோட்டக்கலைப் பயிர்களில் வேளாண் இடுபொருள்களைத் துல்லியமாகத் தெளிக்கும் தொழில் நுட்பம், பயிற்சி, செயல் விளக்கத் திடல்களை ஏற்படுத்துதல்,

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற, சத்துமிகு நெல் இரகங்களைத் துரித இனப்பெருக்கம் மூலம் உருவாக்கும் ஆராய்ச்சிப் பணிகள்,

மஞ்சள், மரவள்ளிக் கிழங்கு, வெங்காய சாகுபடியை இயந்திரமயமாக்கும் சாத்தியக்கூறு சோதனை,

நிலச்சம்பங்கி, செவ்வந்தி, ரோஜாவில் புதிய இரகங்களுக்கான ஆராய்ச்சிப் பணிகள் ஆகியன, ரூ.5 கோடியே 44 இலட்சம் செலவில் மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாடு வேளாண் பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் (TNAPEX) என்னும் தனி அமைப்பின் மூலம், தருமபுரி, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில், முதன்மைப் பதப்படுத்தும் மையங்களின் பயன்பாட்டை அதிகரிக்க, மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருள்கள் தயாரிப்புத் தொழில் கூடங்கள் அமைக்கப்படும்.

வேளாண் தொழில் பெருந்தடமான தஞ்சாவூரில் வேளாண் விளை பொருள்கள், கழிவுகளில் இருந்து, ஏற்றுமதி சந்தை வாய்ப்புள்ள மூலக்கூறுகளைப் பிரித்தெடுக்கும் கட்டமைப்புகள்,

கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, வேலூர் ஆகிய இடங்களில், ஏற்றுமதி தரப் பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கும், உணவுப் பரிசோதனை ஆய்வகங்கள்,

அரிசி, மா, வாழை, கொய்யா, தக்காளி, மிளகாய் போன்ற வேளாண் விளை பொருள்களுக்கும், கடல்சார் மீன் பொருள்களுக்கும், பல்வேறு செயல்களை உள்ளடக்கிய மதிப்புச் சங்கிலிகளை உருவாக்குதல் என, TNAPEX இன் திட்டங்கள் மொத்தம் ரூ.72 கோடியில் செயல்படுத்தப்படும்.

கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத்துறை

கூட்டுறவுப் பயிர்க்கடன் வழங்க ரூ.16,500 கோடி இலக்கு, பயிர்க்கடன் வட்டி மானியம் வழங்க, ரூ.700 கோடி ஒதுக்கீடு.

ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்போருக்கு, நடைமுறை முதலீட்டுக் கடனுக்கான வட்டி மானியம் வழங்க, ரூ.200 கோடி ஒதுக்கீடு.

கடன் ஒப்பளிப்பு வழங்கும் நேரத்தைக் குறைத்து, வெளிப்படைத் தன்மையுடன் செயல்படும் வகையில், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள், ரூ.141 கோடி செலவில் கணினி மயமாக்கப்படும்.

2,609 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், பல்நோக்கு சேவைச் சங்கங்களாகச் செயல்பட, இதுவரை ரூ.341 கோடி விடுவிப்பு.

1,380 வேளாண் இயந்திரங்கள் இ-வாடகை (உழவன் செயலி) மூலம் குறைந்த வாடகைக்கு வழங்கப் படுகின்றன.

நாட்டிலேயே முதன் முறையாகக் கூட்டுறவு வங்கிகளில், ஒருங்கிணைந்த பணப் பரிமாற்ற அமைப்பை (UPI) அறிமுகம் செய்ததன் மூலம், UPI, NEFT உள்ளிட்ட மின்னணு வங்கியியல் சேவைகளை, மாதந்தோறும் ஒரு கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் பெறுகின்றனர்.

ஆறு புதிய நவீன அரிசி ஆலைகள் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட உள்ளன.

250 மெட்ரிக் டன் கொள்ளவிலான நேரடிக் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் உணவு மானியத்துக்கு, ரூ.10,500 கோடி ஒதுக்கீடு.

தமிழ்நாடு அரசின் நெல் கொள்முதல் ஊக்கத் தொகையை வழங்க, ரூ.500 கோடி ஒதுக்கீடு.

நீர்வளத்துறை

தென்மேற்குப் பருவமழை தொடங்கும் முன், காவிரி டெல்டா பகுதிகளில், 5,338 கி.மீ. நீளமுள்ள ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்களைத் தூர் வார, ரூ.110 கோடி ஒதுக்கீடு.

கால்நடைப் பராமரிப்புத்துறை

5000 ஏக்கரில் ஊடுபயிராகப் பசுந்தீவனப் பயிர்களைப் பயிரிட, ரூ.2 கோடி மானியம்.

மீன்வளத்துறை

மீன் வளர்ப்போரின் வருவாய் உயர்வதுடன், உள்நாட்டு மீன் உற்பத்தியும் அதிகரிகும் வகையில், புதிய நன்னீர் மீன் வளர்ப்புக் குளங்களை அமைத்தல், இடுபொருள் மானியம் வழங்குதல், மீன் தீவன ஆலை போன்ற திட்டங்களுக்கு, ரூ.4.60 கோடி ஒதுக்கீடு.

ஊரக வளர்ச்சித்துறை

இயற்கைவள மேம்பாட்டுப் பணிகள்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், பண்ணைக் குட்டைகள், நீர்ச் செறிவூட்டுத் தண்டுகள், அமிழ்நீர்க் குட்டை, கசிவுநீர்க் குட்டை, செறிவூட்டுக் கிணறுகள், புதிய குளங்கள், மண் வரப்பு, கல் வரப்பு போன்ற இயற்கைவள மேம்பாட்டுப் பணிகளைச் செய்ய, ரூ.7,000 கோடி ஒதுக்கீடு.

தென்னை நாற்றுப் பண்ணைகள்: தோட்டக்கலைத் துறையின் ஒருங்கிணைப்பில், ஆர்வமுள்ள, பயிற்சி பெற்ற பண்ணை மகளிர் சுய உதவிக் குழுக்கள், தென்னை நாற்றுப் பண்ணைகளை அமைக்க, ரூ.2.40 கோடி ஒதுக்கீடு.

விதை உற்பத்தித் தொகுப்புகள்: பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துகளில், 100 விதை உற்பத்தித் தொகுப்புகளை அமைத்து, பயிற்சியுடன் விதை உற்பத்தியைச் செய்திட, பண்ணை மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, ரூ.2 கோடி மானியம்.

எரிசக்தித் துறை

23.51 இலட்சம் வேளாண் பாசன இலவச மின் இணைப்புகளுக்கு, மும்முனை மின்சாரக் கட்டணத் தொகையாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு ரூ.7,280 கோடி ஒதுக்கீடு.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை

தருமபுரி, திருப்பூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களின் வறட்சித் தணிப்புச் சிறப்பு உதவித் திட்டத்துக்கு ரூ.110.59 கோடி ஒதுக்கீடு.

மின்னணு முறையில் பயிராய்வு செய்து, விவசாயிகளுக்கு இணைய வழியில் அடங்கல்.

பனைப்பொருள் வளர்ச்சி: பனை சாகுபடியை ஊக்குவிக்க, 10 இலட்சம் பனை விதைகள் தோட்டக்கலைத் துறை மூலம் நடப்படும்.

200 பனைத் தொழிலாளர்களுக்கு, மதிப்புக் கூட்டுப் பொருள்கள் பயிற்சிகளும், 100 மகளிருக்கு பனை ஓலைப் பொருள்கள் பயிற்சியும், உரிய கருவிகளும் ரூ.1.14 கோடி ஒதுக்கீட்டில் வழங்கப்படும்.


மு.உமாபதி

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading