கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2018
கால்நடை வளர்ப்பு விவசாயத்தின் முதுகெலும்பாக விளங்குகிறது. இது இலாபந்தரும் தொழிலாக இருக்க, பசுந்தீவன உற்பத்தி மிகவும் தேவை. இப்போது, அடர் தீவன விலை கூடுதலாக இருப்பதால், பசுந்தீவன உற்பத்தியின் தேவை இன்னும் அவசியமாகிறது. பசுந்தீவனம் இருந்தால் அடர் தீவனச் செலவைக் கணிசமாகக் குறைத்து, பாலுற்பத்திச் செலவையும் குறைக்கலாம்.
வேலையாட்கள் பற்றாக்குறை இருப்பதால் பசுந்தீவன உற்பத்தியில் விவசாயிகள் கவனம் செலுத்துவதில்லை. எளிதாகப் பயன்படுத்த முடியும் என்பதால் அடர் தீவனத்தைத் தான் விரும்புகின்றனர். இதனால், உற்பத்திச் செலவு கூடுகிறது. எனவே, வேலையாட்கள் பற்றாக்குறையைச் சமாளித்துப் பசுந்தீவன உற்பத்தியைக் கூட்டி, பாலுற்பத்திச் செலவைக் குறைக்க, பண்ணைக் கருவிகளைப் பயன்படுத்தலாம்.
பசுந்தீவன உற்பத்திக்கான கருவிகள்
இரும்புக் கலப்பை, சட்டிக் கலப்பை, வாய்க்காலை அமைக்கும் கருவி, கரையை அமைக்கும் கருவி, சமப்படுத்தும் கருவி, தீவன அறுவடைக் கருவி, களையெடுக்கும் கருவி.
தீவன அறுவடைக் கருவி (Reaper)
இதை இயக்க ஒருவர் போதும். ஒரு ஏக்கர் தீவனத்தை 1.5-2 மணி நேரத்தில் அறுவடை செய்து விடலாம். இதற்கு, 0.6-0.8 லிட்டர் எரிபொருள் தேவைப்படும். அறுவடையில் வீணாகும் தீவன அளவு 0.5 சதம் மட்டுமே. மொத்தத்தில் ஒரு ஏக்கர் தீவனத்தை அறுவடை செய்ய ஆயிரம் ரூபாய் செலவாகும்.
டிராக்டர் மூலம் இயங்கும் அறுவடைக் கருவி (Tractor drawn Reaper)
இதை இயக்க ஒருவர் போதும். ஒரு ஏக்கர் தீவனத்தை 1.0-1.5 மணி நேரத்தில் அறுவடை செய்து விடலாம். இதற்கு, 0.5-0.6 லிட்டர் எரிபொருள் தேவைப்படும். அறுவடையில் வீணாகும் தீவன அளவு 0.5 சதம் மட்டுமே. மொத்தத்தில் ஒரு ஏக்கர் தீவனத்தை அறுவடை செய்ய, 750 முதல் 1,000 ரூபாய் வரையில் செலவாகும்.
இயந்திரக் களைக்கருவி (Inter cultivator)
இதன் எடை 200 கிலோ. விலை ஒரு இலட்சம் ரூபாய். இதைக் கொண்டு ஒரு மணி நேரத்தில் 0.4-0.5 ஏக்கரில் களைகளை அகற்ற முடியும். ஒரு ஏக்கர் களையெடுப்புக்கு 600 முதல் 650 ரூபாய் வரையில் செலவாகும். இது வரிசை நடவுப் பயிரில் களையெடுக்க ஏற்றது. குறைந்த நேரத்தில் மிகுதியான பரப்பில் களைகளை அகற்ற முடியும். களையெடுக்கும் ஆழத்தைக் கூட்டவும் குறைக்கவும் முடியும்.
டிராக்டர் மூலம் இயங்கும் களைக்கருவி
இதன் எடை 143 கிலோ. விலை 15,000 ரூபாய். இந்தக் கருவி மூலம் ஒரு மணி நேரத்தில் அரை ஏக்கரில் உள்ள களைகளை அகற்ற முடியும். இந்தக் கருவியைக் கொண்டு ஒரே நேரத்தில் களையெடுத்தல், மண் அணைத்தல் ஆகிய இரண்டு வேலைகளைச் செய்யலாம். டிராக்டர் மூலம் இயங்குவதால் கையாளுதல் எளிதாகும்.
எனவே, கால்நடை வளர்ப்பு இலாபமுள்ளதாக அமைவதற்குப் பசுந்தீவனம் முக்கியம். அதை உற்பத்திச் செய்வதற்கு இந்தக் கருவிகளைப் பயன்படுத்தலாம்.
முனைவர் மு.சுகந்தி,
முனைவர் பா.சுரேஷ் சுப்பிரமணியன், முனைவர் ஹ.கோபி, கால்நடை அறிவியல்
முதுகலை ஆராய்ச்சி நிலையம், காட்டுப்பாக்கம்-603203, காஞ்சிபுரம் மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!