“ஏண்ணே.. பஞ்சகவ்யா பஞ்சகவ்யான்னு சொல்றாகளே.. அதைப் பத்தி எனக்குச் சொல்லுண்ணே..’’
“தம்பி.. இயற்கை விவசாயத்தின் கொடை பஞ்சகவ்யா. இது ஐந்து பொருள்களால் ஆன கலவை. ஆனால், இதன் ஆற்றலைக் கூட்டுவதற்காக, மேலும் சில பொருள்கள் இந்தக் கலவையில் சேர்க்கப்படுகின்றன. பஞ்சகவ்யா, பயிர் வளர்ச்சி ஊக்கியாக, பூச்சி விரட்டியாக, கால்நடைகளுக்கு மருந்தாக, மனிதர்களுக்கும் மாமருந்தாகப் பயன்படுகிறது. இது, ஈரோடு மாவட்டம், கொடுமுடியைச் சேர்ந்த மருத்துவர் கே.நடராஜன் அவர்களால் இந்த மனித குலத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.’’
“சரிண்ணே.. இதைத் தயாரிக்க என்னென்னா வேணும்?..’’
“ஒரு இருபது லிட்டர் பஞ்சகவ்யாவைத் தயாரிக்க.. பசுவின் காயாத சாணம் 5 கிலோ, பசுவின் கோமியம் 3 லிட்டர், பசுவின் பால் 2 லிட்டர், புளித்த தயிர் 2 லிட்டர், நெய் ½ லிட்டர், வெல்லம் ½ கிலோ + 3லிட்டர் நீர், இளநீர் 3 லிட்டர், வாழைப்பழங்கள் 12 வேணும் தம்பி..’’
“அப்புறம் இதைத் தயாரிக்கிறது எப்பிடிண்ணே?..’’
“சாணத்துடன் நெய்யைக் கலந்து பிசைந்து ஒரு பிளாஸ்டிக் வாளியில் மூன்று நாட்கள் வைக்க வேண்டும். இதைத் தினமும் ஒருமுறை பிசைந்துவிட வேண்டும். நான்காம் நாள் இந்தக் கலவையுடன் மற்ற பொருள்களையும் சேர்த்து, வாயகன்ற மண்பானை அல்லது சிமெண்ட் தொட்டி அல்லது பிளாஸ்டிக் வாளியில் இட்டு, கையால் நன்கு கரைத்துக் கலக்கி விட்டு, வலையால் வாயை மூடி நிழலில் வைக்க வேண்டும்.’’
“சரிண்ணே.. அப்புறம்ண்ணே?..’’
“இந்தக் கலவையைத் தினமும் இரண்டு முறை அல்லது வாய்ப்பிருந்தால் பல தடவைகள் கூட நன்கு கலக்கி விடலாம். இப்படிச் செய்தால் கலவையில் நல்ல காற்றோட்டம் உண்டாகி நுண்ணுயிரிகள் பல்கிப் பெருகும். இதனால், பஞ்சகவ்யாவின் பயன் அதிகமாகக் கிடைக்கும். இப்படிப் பதினைந்து நாட்கள் செய்து வந்தால், பஞ்சகவ்யா தயாராகி விடும். இதை ஆறு மாதம் வரையில் தினமும் கலக்கி விட்டுப் பயன்படுத்தலாம். நீர் குறைந்து கலவை கெட்டியானால் மீண்டும் நீரைச் சேர்த்துக் கொள்ளலாம். நாட்கள் அதிகமான பஞ்சகவ்யாவில் ஆற்றல் மிகுதியாக இருக்கும்.’’
“சரிண்ணே.. அப்புறம்ண்ணே?..’’
“சாணத்தில், பாக்டீரியா, பூசணம், நுண் சத்துகள் உள்ளன. கோமியத்தில், பயிர் வளர்ச்சிக்குத் தேவையான நைட்ரஜன் என்னும் தழைச்சத்து உள்ளது. பாலில், புரதம், கொழுப்பு, மாவு, அமினோ அமிலம், கால்சியம் ஆகிய சத்துகள் உள்ளன. தயிரில், செரிக்கச் செய்யும் லேக்டோபேசில்லஸ் என்னும் நுண்ணுயிர்கள் உள்ளன. நெய்யில், வைட்டமின்கள் ஏ, பி, கால்சியம், கொழுப்பு ஆகிய சத்துகள் உள்ளன. இளநீரில், சைட்டோகைனின் என்னும் பயிர் வளர்ச்சி ஊக்கி, அனைத்துத் தாதுப்புகள் உள்ளன. வெல்லத்தில் குளுக்கோஸ் உள்ளது. இது நுண்ணுயிர்கள் வளர உதவுகிறது. வாழைப்பழம் கலவையை நன்கு நொதிக்கச் செய்யும்.’’
“சரிண்ணே.. இந்தப் பஞ்சகவ்யாவை எப்பிடிப் பயன்படுத்துறதுண்ணே?..’’
“ஒரு லிட்டர் நீருக்கு 30 மில்லி வீதம் பஞ்சகவ்யாவைக் கலந்து, காலையில் அல்லது மாலையில் பயிர்களில் தெளிக்கலாம். மாதம் ஒருமுறை, ஏக்கருக்கு 20 லிட்டர் பஞ்சகவ்யாவைப் பாசனநீரில் கலந்து விட்டு, நிலவள ஊக்கியாகப் பயன்படுத்தலாம். ஒரு லிட்டர் நீருக்கு 30 மில்லி வீதம் கலந்து விதைநேர்த்தி செய்யலாம்.
கடுகு, இராகி, எள், கம்பு, தக்காளி, கத்தரி போன்ற சிறிய விதைகளை, பஞ்சகவ்யக் கரைசலில் 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். வெண்டை, வெள்ளரி போன்ற நடுத்தர விதைகளை, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பூசணி, பாகல், புடல், பீர்க்கு, சுரை, நெல் போன்ற பெரிய விதைகளை, 45 நிமிடம் ஊற வைக்க வேண்டும். மஞ்சள், இஞ்சி, கரும்பு போன்ற கிழங்கு, தண்டு வகைகளை, ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். இப்படி ஊற வைத்த விதைகளை நிழலில் உலர்த்தி நடலாம். நாற்றுகளை, வேரை நனைத்துச் சிறிது நேரம் கழித்து நடலாம்.
விதைக்காகப் பயன்படுத்தும் பொருள்கள் மீது, ஒரு லிட்டர் நீருக்கு 30 மில்லி வீதம் கலந்த பஞ்சகவ்யக் கலவையை மிதமாகத் தெளித்து, நன்கு உலர்ந்த பிறகு சேமித்து வைக்கலாம். பயிர்களுக்குத் தொடக்கத்தில் வாரம் ஒரு தடவையும், அடுத்து 15 நாட்களுக்கு ஒரு தடவையும், நன்கு வளர்ந்த பிறகு மாதம் ஒரு தடவையும் தெளிக்கலாம். வசதி வாய்ப்பைப் பொறுத்து, தெளிக்கும் கால அளவில் முன்பின் இருக்கலாம்.
மா, கொய்யா, சப்போட்டா, மாதுளை, சீத்தா, புளி, பப்பாளி, எலுமிச்சை போன்ற பழ மரங்கள் பூக்கும் ஒரு மாதத்துக்கு முன், வாரம் அல்லது இரு வாரத்துக்கு ஒருமுறை தெளிக்கலாம். அடுத்து, பூக்கள் வந்த பின், பிஞ்சுகள் வந்த பின், அறுவடைக்குப் பிறகு மரங்களின் வளத்தைக் காக்க என, திட்டமிட்டுப் பஞ்சகவ்யாவைத் தெளிக்கலாம்.’’
“இப்பிடியெல்லாம் செய்றதுனால என்னண்ணே நன்மை?..’’
“குறைந்த செலவில் கிடைப்பது. பக்கவிளைவைத் தராதது. வேர்களின் வளர்ச்சி, பயிர்களின் வளர்ச்சி மிகும். விளைபொருள்களின் எடையும் தரமும் கூடும். காய்கறிகள் பல நாட்களுக்குக் கெடாமல் இருக்கும். அதனால், சந்தையில் நல்ல விலை கிடைக்கும். மலர்ப் பயிர்கள், கரும்பு, வாழை, மஞ்சள், தேயிலை, காபி, மிளகு, ஏலம், கிராம்பு, காய்கறிப் பயிர்கள், தானியப் பயிர்கள், எள், நிலக்கடலை, சூரியகாந்தி என அனைத்துக்கும் பஞ்சகவ்யா சிறந்தது.
பன்றிகளுக்கு, வயது எடையைப் பொறுத்து அன்றாடம் நீர் அல்லது தீவனத்தில் 20-100 மில்லி வரையில் கொடுக்கலாம். இதனால், குறைந்த காலத்தில் அதிக வளர்ச்சி, நோயற்ற நிலை உண்டாகிப் பண்ணை இலாபம் பெருகும். ஆட்டுக்கு அதன் எடை, வயதைப் பொறுத்து, தினமும் 50 மில்லி வரையில் கொடுக்கலாம். பால் மாட்டுக்குத் தினமும் 100 மில்லி வரையில் கொடுக்கலாம். இதனால், பாலின் தரம், சத்துகளின் அளவு, சினைப்பிடிக்கும் தன்மை, நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகி, கோமாரி, மடிவீக்கம், காய்ச்சல் ஆகியன தடுக்கப்படும். கோழிக்குத் தினமும் 5 மில்லி பஞ்சகவ்யாவைக் கொடுக்கலாம்.
பஞ்சகவ்யாவை இன்னும் தரமுயர்த்தித் தயாரிக்கப்படும் அமிர்த சஞ்சீவியைக் காலை மாலையில் 15 மில்லி வீதம் 10 மில்லி தேனைச் சேர்த்து, சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் பருக வேண்டும். இதனால், சோரியாசிஸ், தோல் நோய்கள், ஊறல், அரிப்பு, நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக் குறைவு, மூட்டுவலி, செரியாமை, மலச்சிக்கல் போன்ற எண்ணற்ற நோய்கள் குணமாகும். பொதுவாக, அன்றாடம் 50 மில்லி குடித்து வந்தால், சர்க்கரை நோய் குறையும். எந்த வகையிலும் பக்கவிளைவு இல்லாத பஞ்சகவ்யாவை அனுபவத்தின் அடைப்படையில் பயன்படுத்த பயன்படுத்த, நிறைய நன்மைகளைப் பெற முடியும் தம்பி..’’
“அண்ணே.. நிய்யி சொன்ன விவரங்கள் எல்லாம் அப்பிடியே மனசுல பதிஞ்சு போச்சுண்ணே..’’
பசுமை
சந்தேகமா? கேளுங்கள்!