கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021
நாய்க்குட்டியைத் தாயிடம் இருந்து பிரித்து எடுத்து வருவதால், நம் வீட்டுக்கு வந்ததும் நாம் உண்ணும் உணவை அதற்கு உடனே கொடுக்கக் கூடாது. அதுவும் எடுத்துக் கொள்ளாது. நாம் உண்ணும் உணவை நாய்க்குட்டி உண்ணும் வகையில் கொஞ்சம் கொஞ்சமாகப் பழக்கப்படுத்த வேண்டும். முந்தைய கட்டுரையில் குட்டிகளுக்கு எவ்வகை உணவளித்தல் வேண்டும் என்பதைச் சுருக்கமாகப் பார்த்தோம்.
நம் வீட்டுக்குப் புதிதாக வந்த செல்லப் பிராணிக்கு, நாம் உண்ணும் உணவை, எப்படி, எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.
நாய்க்குட்டி நன்றாகச் சாப்பிட வேண்டுமெனில், அதன் உணவுப் பாத்திரத்தை ஒரே இடத்திலேயே வைக்க வேண்டும். குட்டியின் வயதுக் ஏற்ப, ஒருநாளில் அதற்கு 3-5 தடவை, குறிப்பிட்ட நேரங்களில் கொடுக்க வேண்டும். உணவை அதிகமாகத் தரக்கூடாது. ஏனெனில், அது குட்டிக்குக் கெடுதலாக அமைந்து விடும். அதற்குத் தேவையான குடிநீரைத் தனிப் பாத்திரத்தில் வைக்க வேண்டும். மேலும், குடிநீரை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.
நாய்க்குட்டிக்கு நாம் அளிக்கும் உணவு சிறந்ததாக உள்ளது அல்லது அதை அது ஏற்றுக் கொண்டுள்ளது என்பதை எப்படி உறுதி செய்வது? அதாவது, உணவானது சுவையாகவும், எளிதில் செரிக்கும் வகையிலும் இருக்க வேண்டும். உடல் எடைக்கு ஏற்ப இருக்க வேண்டும். தோல் மற்றும் உரோம வளர்ச்சி சீராக இருக்க வேண்டும். நல்ல உடல் நிலையுடன் சுறுசுறுப்பாக இயங்க வேண்டும்.
நாயின் வகையும், உணவளிக்கும் முறையும்
குட்டி நாய்: இதன் உடல் எடை 8 கிலோ. பெரிய நாய்களைக் காட்டிலும் சுமார் 15 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழும். இவ்வகை நாய்க்கு உடல் வளர்சிதை மாற்றம் அதிகமாக இருக்கும். மூன்று மாதத்தில் பெரிய நாயின் எடையில் 15% எடையைப் பெற்று விடும். உடல் அளவு சிறிதாக இருப்பதால் அடுக்குமாடி குடியிருப்புகளில் வளர்க்க ஏற்றது. இதற்கு, அதன் பற்களில் அரைபடும் அளவில், உணவைச் சிறிய துண்டுகளாகக் கொடுக்க வேண்டும்.
குட்டிக்கு நான்கு மாதம் ஆகும் வரையில், ஒரு நாளைக்கு மூன்று தடவை உணவிட வேண்டும். அதற்கு மேல் பத்து மாதம் வரையில், ஒரு நாளைக்கு இருமுறை உணவிட வேண்டும்.
குறுகிய உடல் வாகுள்ள நாய்: இவ்வகையில், 18 கிலோ முதல், வயதாகும் போது 44 கிலோ எடையை அடையும் நாய்கள் வரும். இவை 14-16 ஆண்டுகள் வரையில் வாழும். இத்தகைய நாய்களும் விரும்பி வளர்க்கப்படுகின்றன. பெரிய உடலைக் கொண்ட நாய்களைக் காட்டிலும் இவ்வகை நாய்களுக்குப் புரதமும் எரி சக்தியும் அதிகமாகத் தேவைப்படும்.
நான்கு மாதம் வரையில் ஒரு நாளைக்கு மூன்று தடவை உணவிட வேண்டும். அதற்கு மேல் பத்து மாதம் வரையில் இருமுறை உணவிட வேண்டும்.
நடுத்தர உடல் வாகுள்ள நாய்: இவ்வகையில், 23 கிலோ முதல், வயதாகும் போது 55 கிலோ எடையை அடையும் நாய்கள் வரும். இவை 10-12 ஆண்டுகள் உயிர் வாழும். இந்நாய்கள் வீட்டில் செல்லப் பிராணியாக மட்டும் இல்லாமல் தோட்ட வேலைகளிலும் ஈடுபடுவதால், எரிசக்தி நிறைந்த உணவைத் தர வேண்டும். இந்நாய்களின் வளர்ச்சிக் காலத்தில் இவற்றின் எலும்பு வளர்ச்சிக்கு, கால்சியமும் பாஸ்பரசும் தேவைப்படும். இவற்றின் செரிமான உறுப்புகள் சீராக இயங்க, நன்கு செரிக்கும் உணவைத் தர வேண்டும்.
ஆறு மாதம் வரையில் ஒரு நாளைக்கு மூன்று முறை உணவிட வேண்டும். அதற்கு மேல் 12 மாதம் வரையில் இருமுறை உணவிட வேண்டும்.
பெரிய உடல் வாகுள்ள நாய்: இவ்வகையில் 56 கிலோ முதல், வயதாகும் போது 100 கிலோ எடையை அடையும் நாய்கள் வரும். இவை 12 ஆண்டுகள் உயிர் வாழும். தோட்ட வேலை, கால்நடைப் பாதுகாப்பு, பனிப்பகுதி வேலைகளில் ஈடுபடுவதால், எரிசக்தி மிக்க உணவைத் தர வேண்டும்.
இவ்வகைக் குட்டிகளின் எடை ஓராண்டில் 80-100 மடங்கு வளர்வதால், இவற்றின் எலும்பு மற்றும் மூட்டுகளின் வளர்ச்சியை நன்கு கவனிக்க வேண்டும். இவற்றின் வேலைகள் காரணமாக மூட்டுகளில் தேய்மானம் ஏற்படும் என்பதால், வைட்டமின் இ மற்றும் சி நிறைந்த உணவைத் தர வேண்டும்.
ஆறு மாதம் வரையில் ஒரு நாளைக்கு மூன்று தடவை உணவிட வேண்டும். அதற்கு மேல் 15 மாதம் வரையில் இருமுறை உணவிட வேண்டும்.
உணவு மாற்றத்தில் கவனிக்க வேண்டியவை
குட்டிகளின் வளர்ச்சிக்கு ஏற்பவும், அவற்றின் வயதுக்கு ஏற்பவும் உணவளிக்க வேண்டும். உணவில் மாற்றம் ஏதும் செய்ய வேண்டுமெனில், அதைப் படிப்படியாக மேற்கொள்ள வேண்டும். ஏழு நாட்கள் இடைவெளியில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். புதிய வகை உணவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொடுப்பது நல்லது. இப்படிச் செய்தால், குடலில் செரிமானச் சிக்கல்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.
அருகில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகி நாய்க் குட்டிகளின் உடல் எடை அறிதல் மற்றும் உடல் வளர்ச்சி பற்றி பரிசோதித்து கேட்டறிதல் நாய்க் குட்டிகளை பேணி காப்பதில் நன்மையாக அமையும்.
மரு.மா.வெங்கடேசன்,
மரு.மு.வீரசெல்வம், கால்நடை சிகிச்சைத்துறை,
கால்நடை மருத்துவக் கல்லூரி, ஒரத்தநாடு-614625.
சந்தேகமா? கேளுங்கள்!