பார்ப்பதற்கு அழகு, அடர்ந்த உரோமம், விளையாடி மகிழ்விக்கும் தன்மை மற்றும் தூய்மையாக இருப்பதால், வீடுகளில் செல்லப் பிராணியாக பூனைகள் வளர்க்கப் படுகின்றன.
பூனைகள் நல்ல எலி வேட்டையாடிகள். எனவே, வீடுகளில் எலித் தொல்லையைத் தவிர்க்கவும் பூனைகளை வளர்க்கிறார்கள்.
இந்தப் பூனைகளுக்கு என்ன உணவு, எவ்வளவு அளிக்க வேண்டும் என்னும் கேள்வி, புதிதாகப் பூனையை வளர்ப்போருக்கும், பல ஆண்டுகள் வளர்த்து வருவோர்க்கும் வரலாம். அந்தச் சந்தேகத்தைப் போக்கும் சில குறிப்புகளை இங்கே காணலாம்.
பூனையின் உணவுப் பழக்கம் நாயிடமிருந்து வேறுபடும். அது, அசைவம் மட்டுமே உண்ணும். பூனை சிறு விலங்குகளை வேட்டையாடி உண்ணும் விலங்காகும்.
அதிகப் புரதம், மிதமான கொழுப்பு மற்றும் மாவுச்சத்துக் குறைவாக உள்ள இரையைச் செரிப்பதற்கு ஏற்ற வகையிலேயே இதன் உடலமைப்பு உள்ளது.
மேலும், தாவர உணவுகளைச் செரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் அமைலேஸ் போன்ற, முன் செரிமான நொதி, உமிழ்நீரில் இல்லாததால், கடினமான மாவுச்சத்தை வாயில் நொதிக்க இயலாது.
எனவே, குடலில் செரிக்க அதிக நேரம் எடுக்கும். மேலும், முற்றிலும் செரிக்காத மலம் நாற்றத்துடன் வெளிப்படும்.
சிறந்த கண் பார்வைக்கு, இதயத்தசை இயக்கம் மற்றும் இனப்பெருக்கம் ஆகியவற்றுக்கு, டயூரின் சல்பர் சத்து நிறைந்த அமைனோ அமிலம் அவசியம்.
டயூரினைப் பூனையால் உற்பத்தி செய்ய இயலாது. எனவே, பூனைக்கு இறைச்சியைக் கொடுப்பதன் மூலம், டயூரின் தேவையைச் சரி செய்யலாம்.
கால்சியம் என்னும் சுண்ணாம்புச் சத்தும், மற்றொரு முக்கியத் தாதுப்பு வகையைச் சேர்ந்த சத்தாகும்.
ஒருவேளை, உங்கள் பூனை, இறைச்சியில் உள்ள எலும்புத் துண்டுகள் மற்றும் இறைச்சி உறுப்புகளை உண்ணத் தவறினால், அதன் உணவைச் சத்துள்ளதாக மாற்றிட, எழும்பு மசால் மற்றும் டயூரின் பொடியை, அதன் அன்றாட உணவில் கலந்து தரலாம்.
நல்ல உடல் நலத்துக்குத் தேவை சத்தான உணவுப் பழக்கம் என்பது, மனிதன் மற்றும் கால்நடைகளுக்கு மட்டுமல்ல, பூனைகளுக்கும் பொருந்தும்.
சத்தானது என்றால், அது அதிக இறைச்சியை மூலமாகக் கொண்ட புரதமாகவே இருக்கும்.
அதாவது, ஆட்டிறைச்சி, மீன், கோழி மற்றும் குறைந்த தாவரப் புரதம் உடையதாகும். தாவரப் புரதம்10 சதமே இருக்க வேண்டும்.
3‐4 கிலோ எடையுள்ள பூனைக்கு, 240 கலோரி சக்தி, தினமும் தேவை. பூனையின் முதன்மை உணவில் 80 சதம் தசைக்கறி, 10 சதம் உறுப்புக் கறி (பாதி கல்லீரல்), 10 சதம் எலும்பு இருக்க வேண்டும்.
உணவு முறை
சராசரியாக ஒரு பூனைக்குத் தர வேண்டிய அடிப்படை உணவு, அதன் உடல் எடையில் 2‐4 சதமாகும்.
ஆனால், பூனையின் உணவு, அதன் எடையில் மட்டுமின்றி, அதன் வயது, செயல் திறன், வளர்சிதை மாற்றம், சினைப் பருவம், பசி ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபடும்.
பெரிய பூனைகளுக்கு ஒருநாளில் 1-2 முறை உணவளிக்க வேண்டும். குட்டிகள் சுறுசுறுப்பாக விளையாடுவது மற்றும் வேகமாக வளர்வதால், அவை அடிக்கடி உண்ணும்.
3‐4 மாதக் குட்டிகள் ஒருநாளில் நான்கு முறை உண்ணும். வளர்ந்த பூனைகள் அவற்றின் வயிற்றில் அதிக உணவைச் சேமிக்க முடியும். ஆதலால், பெரிய பூனைகளுக்கு அடிக்கடி உணவளிக்கத் தேவையில்லை.
உடல் பருமன் என்பது, பூனைகளில் பொதுவாக இருக்கும் சிக்கலாகும். அதிக எடையுள்ள பூனைகளுக்கு, நீரிழிவு நோய், சுவாசக் கோளாறு, இதயம் மற்றும் தசைக் கோளாறு ஏற்படும்.
அதிக உடல் எடைக்குக் காரணம்
சரிவிகித உணவில்லாமல், அதிக சக்தியைத் தரும் உணவை, பூனைகள் உண்பதே உடல் பருமனுக்கு முக்கியக் காரணம்.
அத்தகைய உணவுகள் குடலில் சரிவரச் செரிப்பதில்லை. மேலும், இது நீரிழிவு நோயையும், உடல் எடையையும் அதிகரிக்கும்.
இந்த நிலையில், நல்ல கால்நடை மருத்துவர் அறிவுரைப்படி, பூனையின் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியை எடுக்க வேண்டும்.
செல்லப் பிராணிகளின் உலர் உணவில், விலங்குப் புரதம் மற்றும் தாவரப் புரதமும் இருக்கும். எனவே, இந்த உலர் உணவு, பூனைகளுக்கு ஏற்றது அல்ல.
உலர் உணவை உண்பதால், பூனைகளுக்குச் சர்க்கரை நோய், சிறுநீரகச் சிக்கல், அதாவது, சிறுநீரகக் குழாயில் அடைப்பு, கல் உருவதால் மற்றும் நுண்ணுயிரிகள் தாக்கம், வயிற்று எரிச்சல், உடல் பெருத்தல், பல்நோய், ஆஸ்துமா மற்றும் பல நோய்கள் ஏற்படும்.
மேலும், சில சமயம் பூனைகளைப், பருப்பு, பட்டாணி போன்ற தாவரப் புரதம் உள்ள உணவைத் தருகின்றனர். இதைத் தவிர்ப்பது நல்லது.
கிண்ணத்தில் உள்ள நீரைக் குடிக்கும் வகையில் பூனைகளைப் பழக்க வேண்டும். முறையான நீரேற்றம் மிகவும் முக்கியம்.
அது, உணவிலுள்ள சத்துகளைச் செரிமானப் பகுதியில் இருந்து உறிஞ்சி, தேவைப்படும் பகுதிக்கு எடுத்துச் செல்ல அவசியம்.
மேலும், சிறுநீரக மண்டலம் நன்கு இயங்கவும், சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்றைக் குறைக்கவும் உதவும்.
பொதுவாகப் பூனைகள் நீரை அதிகமாக அருந்துவது இல்லை. உணவிலுள்ள நீரிலிருந்தே சரி செய்து கொள்ளும்.
வன விலங்காக உள்ள காட்டுப் பூனைகள், தமது நீர்த் தேவையை, தமது உணவுக்காக வேட்டையாடும் சிறு விலங்குகள், பறவைகள், தவளைகள் மற்றும் பூச்சிகளில் இருந்து எடுத்துக் கொள்ளும்.
இத்தகைய வேட்டை மாமிச உணவில் 70‐75 சதம் நீர் இருக்கும்.
வீட்டுப் பூனைகளின் உணவில் 7‐10 சதம் நீர் மட்டுமே இருக்கும். மேலும், இவ்வுணவு பச்சை அல்லது வேக வைக்காத உணவாகும்.
எனவே, பூனையின் நீர்த்தேவை உண்ணும் உணவைப் பொறுத்து வேறுபடும். ஒரு கிலோ எடையுள்ள பூனைக்குத் தினமும் 60 மி.லி. நீர் மட்டுமே தேவை.
குடிக்க வலியுறுத்தினால் மட்டுமே நீரை அருந்தும். இல்லையெனில், நாள் முழுக்கக் கூட நீரைத் தொடாது.
ஆனால், சில பூனைகள் கிண்ணத்தில் உள்ள நீரைக் குடிக்கும். சில பூனைகள், நீரைத் தெளித்து விளையாடும் நோக்கில், தரையில் உள்ள நீரையே குடிக்க விரும்பும்.
காட்டுப் பூனைகள் ஓடும் அல்லது நகரும் நீரை மட்டுமே குடிக்கும். எனவே, ஏதாவது முறையில், பூனையை நல்ல நீரேற்ற நிலையில் வைத்திருக்க வேண்டும்.
கிண்ணத்தில் உள்ள நீரைக் குடிக்கப் பூனைகளைப் பழக்கும் போது கவனிக்க வேண்டியவை:
நீர்க் கிண்ணத்தை உணவுக்குப் பக்கத்தில் வைக்காமல் மறைவான இடத்தில் வைக்க வேண்டும்.
பூனைகள் குளிர்ந்த நீரையே விரும்பும். ஒருவேளை நீர் வெதுவெதுப்பாக இருந்தால், அந்த நீரில் ஐஸ் கட்டிகளைச் சேர்த்துத் தரலாம்.
நீர்ப் பாத்திரம், நெகிழி, உலோகம், பீங்கான் மற்றும் ரப்பராக இருக்கலாம். பூனைகள் அசையும் நீரைக் குடிக்க விரும்புவதால், நீரைத் தொடர்ந்து சுழற்றும் நீரூற்றை அமைக்கலாம். இத்தகைய நீரூற்றுகள் உள்ளன.
பூனைக்கு உணவளிக்கும் போது கவனிக்க வேண்டியவை
உலர்ந்த மற்றும் அரைத்த உணவை விடப் பச்சை இறைச்சியே நல்லது. வேக வைக்காத பச்சை மாமிசம், எழும்பு, தசையைப் பூனைக்குக் கொடுத்தால், அதன் பற்கள் சுத்தமாக, வலுவாக, நலமாக இருக்கும்.
அரைத்த உணவைக் கொடுத்தால் பூனைகள் வேகமாக உண்ணும். அதனால், உணவு இரைப்பையை விரைவில் சென்றடையும்.
போதிய நேரம் இல்லாததால் செரிமான அமிலங்கள் சுரக்காது. எனவே, உணவு சரிவரச் செரிக்காமல், வாந்தி மற்றும் பேதியை ஏற்படுத்தும்.
மனித உணவைப் பூனைக்குக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். பூனை விரும்பினாலும் அது, பூனைக்குப் பாதுகாப்பானது இல்லை.
குறிப்பாக, வெங்காயம், பூண்டு, திராட்சை, இனிப்பு பண்டம், சாக்கலேட், காபி போன்றவை கூடவே கூடாது.
மரு.மு.மலர்மதி, கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல், மரு.அ.யசோதா, கால்நடை மருத்துவக் கல்லூரி, உடுமலை. மரு. வ.செ.வடிவு, கால்நடைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், ஈரோடு.
சந்தேகமா? கேளுங்கள்!