டிரோன் என்பது, சிறிய ரிமோட் மூலம் இயக்கப்படும் வான்வழி வாகனம் ஆகும். அதாவது, ஆளில்லா விமானம். இது, ஹெலிகாப்டர் அல்லது உளவு விமானத்தைப் போல இருக்கும்.
இந்தியா மற்றும் அண்டை நாடுகள் இன்று இந்த ஆளில்லா விமானத்தை, பல்வேறு நிலைகளில் பயன்படுத்தி வருகின்றன. அதாவது, திருமண நிகழ்ச்சிகள், பத்திரிகை மற்றும் திரைப்படத்தின் வான்வழி புகைப்படம்,
விரைவாகப் பொருள்களைக் கொண்டு சேர்க்க, பேரிடர் மேலாண்மைத் தகவல்களைச் சேகரிக்க, அல்லது வழங்க, தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில், அணுக முடியாத நிலப்பரப்பு மற்றும் இடங்களின் புவியியல் வரைபடங்களை எடுக்க,
கட்டடப் பாதுகாப்பு ஆய்வுகள், துல்லியப் பயிர்க் கண்காணிப்பு, புயல் கண்காணிப்பு, சூறாவளி முன்னறிவிப்பு, எல்லைக் கட்டுப்பாடு கண்காணிப்பு போன்றவற்றில் இந்த ஆளில்லா விமானம் பயன்படுகிறது.
பயிர்க் கண்காணிப்பு
பயிரை விதைப்பது முதல் அறுவடை வரை, ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்தலாம்.
தகுந்த நேரத்தில் உரங்களை இடுதல், வானிலையின் தாக்கத்தைக் கண்காணித்தல் மற்றும் பூச்சித் தாக்குதலை ஆய்வு செய்தல் ஆகியன இதிலடங்கும்.
சரியான முறையில் கவனிக்காத பயிர்களில், சிறிய தவறினால் விளைச்சல் இழப்பு ஏற்படலாம்.
எனவே, பயிர்களைக் கண்காணித்து, சரியான நேரத்தில் பாதுகாத்தால், அதிக மகசூலை ஈட்டலாம்.
பயிர்க் கண்காணிப்பு, அடுத்த பயிர்ப் பருவத்தைப் புரிந்து கொள்ள, திட்டமிடப் பெரிதும் உதவும்.
நடவு
நடவு மற்றும் இதர விவசாய வேலைகளைச் செய்ய ஆட்கள் தேவை. ஆனால், ஆட்கள் பற்றாக்குறையைச் சமாளிக்க, ஆளில்லா விமானம் உதவும்.
இதன் மூலம் மரங்கள் மற்றும் பயிர்களை நடலாம். இந்தத் தொழில் நுட்பம், விவசாயிகளின் உழைப்பை, எரிபொருளைச் சேமிக்க உதவும்.
கால்நடை மேலாண்மை
ஆளில்லா விமானம், பெரியளவு விலங்குகளைக் கண்காணிக்க மற்றும் நிர்வகிக்கப் பயன்படும்.
ஏனெனில், அதன் சென்சார்கள் உயர் தெளிவுத் திறனுள்ள அகச்சிவப்பு புகைப்படக் கருவிகளைக் கொண்டுள்ளன.
அவை நோயுற்ற விலங்குகளைக் கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்கப் பெரிதும் பயன்படும்.
இதன் அடிப்படையில், பெரிய பால் பண்ணைகளில் ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்துவது மிகச் சிறந்த பலனைத் தரும்.
பயிர் நலம்
விவசாயம் என்பது, பல்லாயிரம் ஏக்கர் பரப்பில் நடக்கும் பெரிய இயக்கம். இதில், மண்வளம் மற்றும் பயிர்களைக் கண்காணிக்க, பல நாட்கள் தேவைப்படும்.
இதை, ஆளில்லா விமானங்கள் மூலம் ஒருசில மணி நேரங்களில் முடிக்க முடியும்.
அகச்சிவப்பு வரைபடம் மூலம், மண்வளம் மற்றும் பயிர்களைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்கலாம்.
இரசாயனப் பயன்பாட்டைக் குறைக்க
ஆளில்லா விமானங்கள் மூலம் தெளிக்கப்படும் களைக் கொல்லிகள், பூச்சிக் கொல்லிகள் மற்றும் பிற இரசாயன மருந்துகள், கை மற்றும் விசைத் தெளிப்பானைக் காட்டிலும் மிகத் துல்லியமாக, சமமாக இருக்கும்.
ஆளில்லா விமானம் மூலம் மிகச்சிறிய பூச்சித் தாக்குதலைக் கூடக் கண்டறிய முடியும். இதன் மூலம் தாக்குதலின் தீவிரம் மற்றும் சேத விளைவுகளைத் துல்லியமாக அறியலாம்.
மண் வளத்தைக் கண்காணித்து, தேவைப்படும் அளவில் மட்டும் இரசாயன உரங்களை இடலாம்.
பாசனக் கண்காணிப்பு
ஹைப்பர் ஸ்பெக்ட்ரல், தெர்மல் அல்லது மல்டிஸ்பெக்ட்ரல் சென்சார்களைக் கொண்ட ஆளில்லா விமானம் மிகவும் வறண்ட அல்லது விவசாயிகளுக்கு உகந்த பகுதிகளைக் கண்டறிய உதவும்.
மேலும், பாசனக் கண்காணிப்பின் மூலம், நீரின் பயன்பாட்டை மேம்படுத்த, பாசனத்தில் ஏற்படும் கசிவுகளைக் கண்டறிய, ஆளில்லா விமானம் உதவும்.
ஜியோஃபென்சிங்
அகச்சிவப்பு புகைப்படக் கருவிகள் பொருத்தப்பட்ட ஆளில்லா விமானம் மூலம், விலங்குகள் அல்லது மக்கள் நடமாட்டத்தை எளிதில் கண்டறிய முடியும்.
இரவு நேரத்தில் விலங்குகளின், சேதத்திலிருந்து பயிர்களைப் பாதுகாக்க ஆளில்லா விமானம் பயன்படும்.
வானிலை முன்னறிவிப்பு
வானிலை மாற்றங்கள், விவசாயிகளுக்குப் பெரிய உதவியாக மற்றும் தொல்லையாக இருக்கும். இந்த வானிலை மாற்றங்களை அறிய ஆளில்லா விமானம் மிகவும் உதவியாக இருக்கும்.
வானிலை முன்னறிவிப்பு, விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இயற்கைச் சீற்றங்களை விவசாயிகள் எதிர்கொள்ள, இந்தத் தகவலைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
புயல் அல்லது மழையின்மை பற்றிய முன்னறிவிப்பு மூலம், சூழலுக்கு ஏற்ற பயிர்களைத் திட்டமிட முடியும். சாகுபடியில் உள்ள பயிர்களைப் பராமரிக்கத் தேவையான தகவல்களை விவசாயிகளுக்கு வழங்க இயலும்.
மண் மற்றும் வயல் பகுப்பாய்வு
ஆளில்லா விமானத்தில் உள்ள சென்சார்கள் மூலம், மண்ணின் ஈரப்பதம், மண்வளம், நிலத்தின் தன்மை மற்றும் மண்ணரிப்பைக் கண்டறிந்து, மண் மற்றும் வயல் பகுப்பாய்வுக் களத்தைத் திட்டமிடலாம்.
பயிர்களுக்கு மருந்து தெளித்தல்
ஆளில்லா விமானம் மூலம், தானியப் பயிர், காய்கறி மற்றும் பழப் பயிர்களில் இரசாயன மருந்துகளைத் தெளிக்கலாம்.
ஏனெனில், பாரம்பரிய முறைகளுடன் ஒப்பிடும் போது, உரம், பூஞ்சை மற்றும் பூச்சிக் கொல்லியை, மிகக் குறுகிய காலத்தில் பயிர்களுக்குத் தெளிக்கும் திறனை ஆளில்லா விமானம் கொண்டுள்ளது.
எனவே, துல்லிய விவசாயத்தின் புதிய வரலாற்றை உருவாக்கும் திறன், ஆளில்லா வானூர்தித் தொழில் நுட்பத்தில் உள்ளது.
ஆளில்லா விமானத்தின் நன்மைகள்
ஐந்து நிமிடத்தில் ஒரு ஏக்கரில் மருந்தைத் தெளித்து விடலாம். விசை மற்றும் கைத்தெளிப்பானைக் காட்டிலும், குறைந்தளவு நீரே, அதாவது, ஏக்கருக்கு 20-30 லிட்டர் நீரே போதும்.
அயல் நாட்டுப் பூச்சிகள் திடீரென்று பயிர்களைத் தாக்கும் போது, அவற்றைக் குறுகிய காலத்தில் கண்காணிக்க மற்றும் கட்டுப்படுத்த, ஆளில்லா விமானப் பயன்பாடு அவசியம்.
மருந்துத் தெளிப்புச் செலவுகள், விசை மற்றும் கைத்தெளிப்பானைக் காட்டிலும் மிகவும் குறைவு.
மேலும், பூச்சி மருந்துத் தெளிப்பில் ஏற்படும் உடல் சார்ந்த சிக்கல்களைத் தவிர்க்க இயலும். மருந்தைத் தெளிப்பவரின் உழைப்பும் நேரமும் மிகவும் குறையும். மருந்துகளைத் துல்லியமாக, சீராகத் தெளிக்க முடியும்.
கோ.அருள்குமார், வீ.செ.அனுஷா, து.சீனிவாசன், பூச்சியியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் கோயம்புத்தூர் – 641 003.
சந்தேகமா? கேளுங்கள்!