நமது உணவில் காய்கறிகளின் பங்கு 50 சதமாகும். இவற்றில் இருந்து முக்கிய வைட்டமின்கள் ஏ, பி, சி, டி, இ, கே மற்றும் பொட்டாசியம், இரும்பு, கந்தகம், மக்னீசியம், மாங்கனீசு, சோடியம், குளோரைடு, அயோடின், துத்தநாகம், தாமிரம் போன்ற சத்துகள் நமக்குக் கிடைக்கின்றன.
காய்கறிகளின் அளவு
இந்திய தேசிய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் பரிந்துரைப்படி, தினமும் ஒவ்வொருவரும் 200 கிராம் பழங்கள்; 120 கிராம் கீரை வகைகள், 75 கிராம் கிழங்கு வகைகள், 125 கிராம் இதர காய்கறிகள் என 300 கிராம் காய்கறிகளை நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஆனால், 80 கிராம் பழம், 120 கிராம் காய்கறிகளைத் தான் சாப்பிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
விவசாயப் பொருள்களின் விலையேற்றம், நிலத்திலிருந்து சந்தைக்குக் கொண்டு வருவதற்கான போக்குவரத்துச் செலவு, தரகு போன்றவற்றால், நடுத்தர மக்களால், போதிய அளவில் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள முடிவதில்லை.
எனவே, வீடுகளில் உள்ள காலியிடங்களில் வீட்டுக் கழிவுநீர் மூலம், காய்கறிகளை உற்பத்தி செய்தால், காய்கறிப் பற்றாக் குறையை ஓரளவு சமாளிப்பதுடன், நாம் உற்பத்தி செய்த பொருள்கள் என்பதால், மகிழ்ச்சியும் ஏற்படும்.
பயன்கள்
வீட்டுத் தோட்டத்தை அமைத்து, நமக்குத் தேவையான காய்கறிகளை நாமே உற்பத்தி செய்து கொள்ளலாம். சந்தையை நம்பி இருக்க வேண்டியது இல்லை. குறைந்த செலவில் உற்பத்தி செய்யலாம்.
சிறிய இடத்தில் காய்கறிகளைப் பயிரிடும் போது, பயிர்களைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த, இரசாயனப் பொருள்களை நாடாமல், இயற்கை முறையில் விளைய வைக்கலாம். வீட்டுக்கு அழகு சேர்க்கலாம்.
வீட்டிலுள்ள குழந்தைகள், பெரியவர்கள் என, எல்லோருக்கும் பயன்மிகு பொழுது போக்காக அமையும். தேவையின் போது பறித்துச் சமைப்பதால், சத்துகள் குறையாமலும், சுவை மிகுந்தும் இருக்கும்.
அமைக்கும் முறை
காய்கறித் தோட்டம் அமைக்க, வீட்டின் பின்புறம், இடப்புறம், வலப்புறம் உள்ள காலியிடங்களைத் தேர்வு செய்யலாம். வீட்டின் முன்புறம் இடம் அதிகமாக இருந்தால், சிறியளவில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒரு சென்ட் இடமே போதும். நான்கு ஆட்கள் தேவைப்படும். தோட்டம் அமைவிடம் சதுரம் அல்லது செவ்வக வடிவில் இருப்பது நல்லது.
முதலில் நிலத்தை மண்வெட்டி மூலம் 30-40 செ.மீ. ஆழத்தில் வெட்டி நன்கு பண்படுத்த வேண்டும். கற்கள், முட்செடிகள், களைச் செடிகள் போன்றவற்றை அகற்ற வேண்டும்.
பிறகு நன்கு மட்கிய நூறு கிலோ தொழுவுரத்தை மண்ணில் கலந்து விட வேண்டும். வரப்புகள் மற்றும் பாத்திகளை, 45 அல்லது 60 செ.மீ. இடைவெளியில் அமைக்கலாம்.
இதில், 6×3 மீட்டர் பரப்பைப் பல்லாண்டுப் பயிர்களான முருங்கை, கறிவேப்பிலை, வாழை, பப்பாளி, எலுமிச்சை போன்றவற்றைப் பயிரிடலாம்.
இவற்றை, இரண்டு மீட்டர் இடைவெளியில், 45 செ.மீ. நீள, அகல, ஆழத்தில் குழிகளை எடுத்து நட வேண்டும்.
ஒவ்வொரு குழிக்கும் 10 கிலோ தொழுவுரம், 50 கிராம் யூரியா, 100 கிராம் சூப்பர் பாஸ்பேட், 50 கிராம் பொட்டாஷ் இட வேண்டும்.
மீதியுள்ள இடத்தை 1.25×1 மீட்டர் அளவுள்ள ஆறு பாத்திகளாகப் பிரித்து, பருவத்துக்கு ஏற்றவாறு காய்கறிப் பயிர்களைப் பயிரிடலாம். தோட்டத்தில் பாதை இருப்பது அவசியம்.
இதன் ஓரத்தில் கீரை வகைகளை வளர்க்கலாம். தோட்டத்தின் ஒரு மூலையில் காய்ந்த இலைதழைகளை மட்க வைக்கும் வகையில் குழி இருக்க வேண்டும்.
விரைவாக வளர்ந்து பயன் தரும் பப்பாளி, வாழை, எலுமிச்சை, மாதுளை போன்றவற்றை வடப்புறம் வளர்த்தால், அவற்றின் நிழலால் மற்ற பயிர்கள் பாதிப்பு இல்லாமல் இருக்கும்.
தோட்டத்தைச் சுற்றி வேலியை அமைத்து, பாகல், கோவைக்கொடி, பீர்க்கன் போன்ற படரும் கொடிவகைக் காய்கறிகளை வளர்க்கலாம். அல்லது இடமிருந்தால் பந்தல் அமைத்தும் வளர்க்கலாம்.
ஓரம் மற்றும் உட்பகுதியின் உயரப் பாத்திகளில் வேர்வகைக் காய்கறிகளான மரவள்ளிக் கிழங்கு, கேரட், முள்ளங்கி, பீட்ரூட் போன்றவற்றை வளர்க்கலாம். காலத்துக்கு ஏற்ற காய்கறிகள், பழ வகைகள் மற்றும் பூக்களைப் பயிரிட வேண்டும்.
இடம் இருந்தால் உயர் மகசூலைத் தரவல்ல இரண்டு தென்னைகளை வளர்க்கலாம். சின்ன வெங்காயம், புதினா, கொத்தமல்லி, வெந்தயக்கீரை போன்றவற்றை வரப்புகளில் வளர்க்கலாம்.
விதையாக நடக்கூடிய வெண்டை, செடியவரை, கொத்தவரை, தட்டைப்பயறு போன்றவற்றை, வரப்பின் ஒரு பக்கத்தில் 30 செ.மீ. இடைவெளியில் நட வேண்டும். 1:20 விகிதப்படி, கீரை விதைகளை இருபது பங்கு மணலில் கலந்து தூவ வேண்டும்.
பூசணி, பரங்கி, சுரை போன்ற தரையில் படரும் கொடிவகை விதைகளைக் குழிக்கு 2-3 வீதம் ஊன்ற வேண்டும்.
அசோஸ் பயிரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியாவில் நேர்த்தி செய்த தக்காளி, கத்தரி, மிளகாய் விதைகளை, மேட்டுப்பாத்தி நாற்றங்காலில் 5 செ.மீ. இடைவெளியில் கோடுகளைக் கிழித்துத் தூவி மண்ணால் மூடி நீரைத் தெளிக்க வேண்டும்.
விதைத்து 30 நாளில் தக்காளி நாற்றுகளை, 40-45 நாட்களில் கத்தரி நாற்றுகளைப் பறித்து, 30-45 செ.மீ. இடைவெளியில் நட்டு நீர் விட வேண்டும்.
அடுத்து மூன்று நாட்களில் நீர் விட வேண்டும். பிறகு, இளம் பருவத்தில் இரு நாட்களுக்கு ஒரு முறையும், வளர்ந்த நிலையில் நான்கு நாட்களுக்கு ஒரு முறையும் நீர் விட வேண்டும். மண்வாகுக்கு ஏற்ப நீர் விடுதல் நல்லது.
பயிர்களும் பருவங்களும்
தக்காளி: மே, ஜூன், நவம்பர், டிசம்பர். இரகங்கள்: பி.கே.எம்.1, கே.டி.எச்.1. மகசூல் காலம்: 90-100 நாட்கள்.
கத்தரி: டிசம்பர், ஜனவரி, மே, ஜூன். இரகங்கள்: பி.எல்.ஆர்.1, பி.எல்.ஆர்.பி. மகசூல் காலம்: 90-100 நாட்கள்.
வெந்தயம்: ஜூன், ஜூலை, அக்டோபர், நவம்பர். இரகங்கள்: கோ.1, கோ.2. மகசூல் காலம்: 30-50 நாட்கள்.
பொன்னாங்கண்ணி: ஆண்டு முழுதும். இரகம்: உள்ளூர் இரகம். மகசூல் காலம்: 50-60 நாட்கள்.
வெள்ளரி: ஆண்டு முழுவதும். இரகம்: கோ.1. மகசூல் காலம்: 90-100 நாட்கள்.
பீர்க்கன்: ஆண்டு முழுவதும். இரகங்கள்: கோ.1, கோ.2 . மகசூல் காலம்: 150-160 நாட்கள்.
மிளகாய்: ஜனவரி, பிப்ரவரி, ஜூன், ஜூலை, செப்டம்பர், அக்டோபர். இரகங்கள்: கோ.4, கோ.1, கோ.2. மகசூல் காலம்: 150-160 நாட்கள்.
வெண்டை: ஜூன்- ஆகஸ்ட். இரகங்கள்; கோபி.எச்.எச்.1, கோ.3. மகசூல் காலம்: 80-90 நாட்கள்.
செடியவரை: ஆண்டு முழுவதும். இரகம்: கோ(ஜிபி)14. மகசூல் காலம்: 85-90 நாட்கள்.
முருங்கை: ஜூலை- அக்டோபர். இரகம்: பி.கே.எம்.1. மகசூல் காலம்: 1-2 ஆண்டு.
கொத்தவரை: ஜூன், ஜூலை, அக்டோபர், நவம்பர். இரகம்: பூசா நவ்பகார். மகசூல் காலம்: 80-90 நாட்கள்.
கறிவேப்பிலை: ஜூலை, ஆகஸ்ட். இரகம்: செங்காம்பு. மகசூல் காலம்: 5-8 ஆண்டுகள்.
பசலைக்கீரை: ஆண்டு முழுவதும். இரகம்: ஊட்டி 1. மகசூல் காலம்: 2 ஆண்டுகள்.
புதினா: ஆண்டு முழுவதும். இரகம்: உள்ளூர் இரகம். மகசூல் காலம்: 2 ஆண்டுகள்.
முள்ளங்கி: ஜூன், ஜூலை. இரகம்: கோ.1. மகசூல் காலம்: 45-50 நாட்கள்.
ச.கோகிலவாணி, தொழில் நுட்ப வல்லுநர், வேளாண்மை அறிவியல் நிலையம், வாலிகண்டபுரம், பெரம்பலூர்.
சந்தேகமா? கேளுங்கள்!