நுண்சத்துக் குறைபாடு, பல உடல் நலச் சிக்கல்களுக்குக் காரணமாக இருக்கிறது. குறிப்பாக, வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள குழந்தைகளும் பெண்களும் அதிகளவில் பாதிக்கப் படுகின்றனர்.
நுண்சத்துக் குறையைச் சரி செய்ய, உணவைப் பல்வகைப் படுத்துதல், சத்துகளை மாத்திரைகளாகக் கொடுத்தல்,
செறிவூட்டிய பயிர் வகைகளைப் பயன்படுத்துதல் ஆகிய முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன.
இவற்றுள் செறிவூட்டிய பயிர் இரகங்களை உருவாக்குதல் மற்றும் பயிர் செய்தல் நீண்டகாலப் பயனைக் கொடுக்கிறது.
உலக மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் முக்கிய உணவாக எடுத்துக் கொள்ளும் அரிசி, கோதுமை, மக்காச் சோளம் ஆகிய பயிர்களின் சத்தைக் கூட்டுவதன் மூலம்,
மக்களின் சத்துக் குறைபாட்டைப் பெருமளவில் சரி செய்ய முடியும். நுண்சத்தைச் செறிவூட்டுதல் என்பது, சில சத்துகளை முன்னிறுத்தியே செய்யப் படுகிறது.
அவை, இரும்பு, துத்தநாகம், வைட்டமின் ஏ மற்றும் புரதம் ஆகும்.
நெல்
உலகின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு நெல்லே முதன்மை உணவாக உள்ளது.
இத்தகைய முக்கியப் பயிரில் சத்தைச் செறிவூட்டுதல், மக்களின் நலனைப் பெருமளவில் மேம்படுத்தும்.
வைட்டமின் ஏ செறிவூட்டப்பட்ட நெல், கோல்டன் ரைஸ் எனப்படுகிறது.
வைட்டமின் ஏ-யை அதிகமாக உருவாக்கும் மரபணு டாஃபடில் மலர்களில் இருந்து, நெல் இரகங்களில் செலுத்தப்பட்டது.
வைட்டமின் ஏ செறிவூட்டப்பட்ட நெல் தொடர்பான ஆய்வுகள் பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கின.
IR 64, IR 36, BRRI dhan 29, PSB RC 82, OS 6561, செக்கியாங், ஸ்வைனா ஆகிய, வைட்டமின் ஏ செறிவூட்டப்பட்ட நெல் இரகங்கள் உலகளவில் பயிரிடப் படுகின்றன.
முதன் முதலில் உருவாக்கப்பட்ட கோல்டன் ரைஸ்-1 இரகத்தின் பீட்டா கரோட்டின் அளவு 5-7µg/g ஆகும்.
அதன் பிறகு உருவாக்கப்பட்ட கோல்டன் ரைஸ்-2 இரகத்தில் 315-7µg/g பீட்டா கரோட்டின் உள்ளது.
முதலில் இரும்புச்சத்து செறிவூட்டப்பட்ட நெல் இரகம் IR68144 ஆகும். இது, தீட்டிய பிறகும் கூட 80 சதவீத இரும்புச் சத்தை வைத்துக் கொள்ளக் கூடியது.
இரும்புச் சத்தை மேம்படுத்தும் போது, ஃபைட்டிக் அமில அளவு குறைவாக இருக்கும் படியும் கவனிக்கப் படுகிறது.
இரும்புச் சத்தைச் செறிவூட்டுவதைப் போல, துத்தநாகச் சத்தும் செறிவூட்டம் செய்யப் படுகிறது.
BRRI Dhan 62, BRRI Dhan 64, BRRI Dhan 72, BRRI Dhan 74, BRRI Dhan 84, DRR Dhan 45, NSICRC 460,
சட்டீஸ்கர் ஜீங்க் ரைஸ் 1, இனாப்பாரி நூற்றி ஜீங்க் ஆகிய, துத்தநாகச் சத்துச் செறிவுள்ள நெல் இரகங்கள் பயிரிடப் படுகின்றன.
மக்காச்சோளம்
சத்துச் செறிவூட்டல் முதன் முதலில் மக்காச் சோளத்தில் செய்யப்பட்டது.
லைசின் மற்றும் டிரிப்டோஃபேன் அமிலோ அமிலங்களைச் செறிவூட்டிய மக்காச்சோள இரகங்கள் முதலில் அறிமுகம் செய்யப்பட்டன.
ஆதிக லைசின் மற்றும் டிரிப்டோஃபேன் அமிலோ அமிலங்கள் உருவாகக் காரணமான ஒபேக்2 மரபணுவை, மக்காச்சோள இரகங்களில் ஏற்றி,
புரோட்டீனா சக்தி, ரட்டன் போன்ற இரகங்களை உருவாக்கிப் பயிரிட்டு வருகின்றனர்.
இந்த அமினோ அமிலங்களைத் தாண்டி, வைட்டமின் ஏ-யைச் செறிவூட்டிய, சம்மாஸ் 38, சம்மாஸ் 39 ஆகிய மக்காச்சோள இரகங்கள் சாகுபடியில் உள்ளன.
நெற்பயிரில் வைட்டமின் ஏ அதிகமாக உருவாகக் காரணமான மரபணு, டாஃபடில் பூக்களில் இருந்து எடுக்கப்பட்டது.
ஆனால், மக்காச் சோளத்தில் வைட்டமின் ஏ அதிகமாக உருவாகக் காரணமான மரபணுக்கள், பிற மக்காச்சோள இரகங்களில் இருந்தே எடுக்கப் படுகின்றன.
சோளம்
இதில், மாவுச்சத்து, புரதம், நுண் சத்துகள் மற்றும் நார்ச்சத்து அதிகமாக, கொழுப்புச் சத்துக் குறைவாக உள்ளன.
ஆகவே. இரும்பும் துத்தநாகமும் மேம்படுத்தப்பட்ட சோளம் முழு உணவாகும்.
நெடுநேர செரிமானத் தன்மையால், சோளம், சர்க்கரை நோயாளிக்கு ஏற்ற உணவாகிறது.
ஆயினும், சோளத்தில் உள்ள டானின்ஸ் மற்றும் ஃபைட்டேட் உடல் நலனுக்கு ஏற்றதல்ல.
இரும்பு மற்றும் துத்தநாக அளவுகள் ஃபைட்டேட் அளவுகளுடன் நேரடியாகத் தொடர்பில் இல்லாததால்,
இரும்பு மற்றும் துத்தநாகம் அதிகமாகி, ஃபைட்டேட் குறைக்கப்பட்ட சோள இரகங்களை உருவாக்கும் ஆய்வுகள் சிறந்த முடிவுகளைத் தந்து வருகின்றன.
அதிக மகசூலைத் தரும் சோள வகைகளில், இரும்பும் துத்தநாகமும் குறைவாக உள்ளன.
ஆனால், மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க சோள வகைகளில் இரும்பும் துத்தநாகமும் அதிகமாக உள்ளன.
அதிக மகசூலைத் தரும் வகைகளையும், இந்த ஆப்பிரிக்க வகைகளையும் இணைத்து, புதிய சோள இரகங்கள் உருவாக்கப் படுகின்றன.
ICSH 14001, ICSH 14002 ஆகிய கலப்பினச் சோள வகைகள், இந்தியாவில் இறுதிக்கட்ட ஆய்வில் உள்ளன. விரைவில் கலப்பின இரகங்களாக வெளியிடப்படும்.
கம்பு
கம்பு பெரும்பாலும் வறண்ட, நீர்ப் பற்றாக்குறை உள்ள களர் மண்ணில் பயிரிடப் படுகிறது.
இரகங்களுக்கு இடையே இரும்பும் துத்தநாகமும் கூடுதலாக அல்லது குறைவாக உள்ளன.
இரும்புச் சத்து நிறைந்த ICTP 82037E-10-2 என்னும் கம்பு இரகம் 2014 ஆம் அறிமுகம் செய்யப்பட்டது.
இது மராட்டிய மாநிலத்தில் பெருமளவில் பயிர் செய்யப் படுகிறது. அதிக இரும்புச் சத்தை, அதிக மகசூலைத் தரும் ICTP-8203-7E-10-2 இரகம் அதிகளவில் பயிரிடப் படுகிறது.
நுகர்வோர், இந்தக் கம்புக்கு, சாதாரணக் கம்புக்குத் தருவதை விட அதிக விலை கொடுக்க முன்வருவது, செறிவூட்டக் கம்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தைத் தருவதாக உள்ளது.
ஆனாலும், கம்பில் உள்ள ஃபைட்டேட் மற்றும் பாலிபீனால், செரிமான மண்டலம் இரும்புச் சத்தைக் கிரிகித்துக் கொள்வதைக் குறைக்கிறது.
இரும்புச் சத்து மற்றும் துத்தநாகச் சத்து மிகுந்தும், ஃபைட்டேட் மற்றும் பாலிபீனால் குறைந்தும் உள்ள புதிய கம்பு வகைகள் உருவாக்கப் படுகிறன.
அரிசி, கோதுமை, கம்பு, சோளம் ஆகிய பயிர்களில் ஒரே மாதிரியான மரபணுக்களே, இரும்பு மற்றும் துத்தநாகச் சத்தின் அளவுகளைத் தீர்மானிக்கின்றன.
நுண் சத்துகளைச் செறிவூட்டிய இரகங்கள் பயிர் செய்யப்பட்டாலும், அவற்றின் அறுவடைக்குப் பிந்தைய கையாளுதல் முறைகள் மற்றும் சமையல் முறைகள் தான்,
இரும்பு மற்றும் துத்தநாகச் சத்தை, செரிமான மண்டலம் ஏற்றுக் கொள்ளும் அளவுகளைத் தீர்மானிக்கின்றன.
சத்துகளைச் செறிவூட்டிய உணவுப் பயிர்கள் பல இருந்தாலும், சில பயிர்கள் மட்டுமே மக்களால் ஏற்கப்பட்டுள்ளன.
வைட்டமின் ஏ-யைச் செறிவூட்டிய சக்கரைவள்ளிக் கிழங்கு, பின்தங்கிய ஆப்பிரிக்க நாடுகளின் மக்கள் அன்றாட உணவில் சேர்க்கின்றனர். இதனால், வைட்டமின் ஏ குறைபாடு மக்களிடம் பெருமளவில் குறைந்துள்ளது.
நுண் சத்துகள் நிறைந்த கம்பு, சோளம், நெல், கோதுமை இரகங்களை உருவாக்கும் முயற்சியில் வேளாண் விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர்.
பொது விநியோகம் மூலம், செறிவூட்டிய உணவு தானியங்களை வழங்கினால், மக்களிடம் உள்ள சத்துக் குறைபாடு பெருமளவில் குறையும்.
சிம்மிட், இக்கிரிசாட் இர்ரி போன்ற பன்னாட்டு ஆராய்ச்சி நிறுவனங்கள் இந்த ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளன.
இராம.நாகலெட்சுமி, சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி, இரா.சங்கீதா விஸ்ணுபிரபா, புஸ்கரம் வேளாண்மைக் கல்லூரி, க.ஸாமினி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோவை.
சந்தேகமா? கேளுங்கள்!