உயிர்க் கூழ்மத் தொழில் நுட்பம், நிலையான உணவு உற்பத்தியைப் பெருக்கும் முறையாகும்.
பாசிகள், பாக்டீரியாக்கள், புரோட்டோ சோவன்கள் மற்றும் பிறவகைத் துகள்கள், கழிவுகள், உண்ணாத தீவனம் முதலிய கரிமப் பொருள்களின் கலவை ஆகும்.
இது, கார்பன் மற்றும் நைட்ரஜன் செறிவைச் சமநிலைப் படுத்துவதன் மூலம், நீரை மேம்படுத்தும்.
இந்த அமைப்பில் கார்போ ஹைட்ரேட்டைச் சேர்ப்பதன் மூலம், ஹெட்ரோட்ரோபிக் பாக்டீரிய வளர்ச்சியைத் தூண்டி,
நுண்ணுயிர்ப் புரத உற்பத்தியைப் பெருக்கி, மொத்த நைட்ரஜன், நச்சு தன்மையற்ற வடிவமாக மாற்றப்படுகிறது.
உயிர்க் கூழ்மத் தொழில் நுட்பச் சத்து மதிப்பு
உயிர்க் கூழ்மக் கூட்டுப் பொருள்களில் சத்துகள் அதிகளவில் உள்ளன. குறிப்பாக, உலர் எடைப் புரதம் 25-50 சதம், கொழுப்பு 0.5-5 சதம் மற்றும் வைட்டமின்கள், தாதுகள், பாஸ்பரஸ் அதிகளவில் உள்ளன.
மேலும், இது புரோ பயோட்டிக்கைப் போல, நன்மை பயக்கும் விளைவைத் தருகிறது.
இத்தகைய சத்துகளுடன் இருப்பதால், மீன் தீவனத் தயாரிப்பில் இவை, மீன் தூள் மற்றும் சோயா மொச்சை மாவுக்கு மாற்றாகப் பயன்பட்டு வருகின்றன.
உயிர்க்கூழ்ம முறை மீன் வளர்ப்பில் பின்பற்ற வேண்டியவை
தொட்டி அல்லது குளம் அமைத்தல்: உயிர்க் கூழ்மத் தொழில் நுட்ப முறையைப் புதிதாகத் தொடங்குவோர், தொட்டிகளில் தொடங்குவது மிகவும் எளிதாக அமையும்.
ஏனெனில், இடவசதி மற்றும் கையாளுதல் எளிதாக இருக்கும்.
உற்பத்தியைத் தொடங்குவதற்கு முன் தொட்டிகளை, பொட்டாசியம் பெர்மாங்கனேட் என்னும் கிருமி நாசினியால் சுத்தம் செய்த வேண்டும்.
இதன் மூலம், பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கலாம்.
பிறகு, தொட்டிகளில் லைனரைப் பொருத்தி அல்லது நேரடியாக உயிர்க்கூழ்ம உற்பத்திக்குப் பயன்படுத்தலாம்.
பாரம்பரிய மீன் குளங்களை லைனர் இல்லாமல், உயிர்க்கூழ்ம முறைக்கு மாற்ற முடியும் என்றாலும், அது ஒரு சவாலான பணியாகும்.
ஏனெனில், நுண்ணுயிரிகள், கனிமங்கள் மற்றும் கன உலோகங்கள் இயல்பாகவே மண்ணில் எளிதில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை.
மேலும், இவை குளத்தின் நீர் அளவுரு மற்றும் உயிர்க் கூழ்ம அமைப்பின் இயல்பான செயல் முறைகளைப் பாதிக்கச் செய்யலாம்.
எனவே, உயிர்க் கூழ்மத் தொழில் நுட்பத்தைப் புதிதாகத் தொடங்குவோர், தொட்டிகளில் அல்லது எச்.டி.பி.இ லைனிங் செய்யப்பட்ட குளங்களில் தொடங்குவது சிறந்தது.
மேலும், அந்தக் குளங்களில் உருவாகும் கசடுகளை அகற்ற, குளத்தின் மத்தியில் வடிகால்களை அமைக்க வேண்டும்.
இதனால், மண்ணுக்கும் உயிர்க் கூழ்ம உற்பத்திக்கும் எவ்விதத் தொடர்பும் ஏற்படப் போவதில்லை.
பெரும்பாலான வெப்ப மண்டல நாடுகளில் உட்புற அமைப்புகள் மீன் வளர்ப்புக்குப் பெரியளவில் நன்மை பயக்கின்றன.
ஏனெனில், இவை மழையால் நீரின் கார அமிலத் தன்மையில் ஏற்படும் மாற்றத்தையும், சூரியவொளி புகாததால் ஏற்படும் பாசிகளின் வளர்ச்சியையும் குறைக்கும்.
எனவே, உட்புற அமைப்புகளில் பாக்டீரியாவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு உயிர்க் கூழ்மம் உருவாக்கப் படுவதால், இதைப் பழுப்பு பயோஃப்ளாக் / உயிர்க் கூழ்மம் என்று அழைக்கின்றனர்.
காற்று உட்புகுத்தி: சரியான குளம் அல்லது தொட்டியைத் தேர்ந்தெடுத்த பிறகு காற்றோட்ட அமைப்பை நிறுவ வேண்டும்.
உயிர்க் கூழ்ம அமைப்பில் அதிகமான ஆக்ஸிஜன் கரைதிறன் அளவைப் பராமரிப்பதன் மூலம், தொட்டியின் அடியில் திடப்பொருள்கள் படிவதைத் தடுக்கலாம்.
மேலும், காற்றோட்டம் இல்லாத பகுதிகளில் இருந்து வெளியாகும் அம்மோனியா, மீத்தேன் போன்ற வாயுக்கள் உருவாவதைத் தடுக்கலாம்.
எனவே, குளம், தொட்டி அல்லது தொடர் சூழல் நீர்த் தொட்டிகளில் நன்கு திட்டமிட்டு, காற்று உட்புகுத்திகளைப் பொருத்த வேண்டும்.
குளங்களில் பொதுவாகச் சக்கர வடிவத் துடுப்புக் காற்றேற்றிகளைப் பயன்படுத்து கின்றனர்.
உயிர்க் கூழ்ம அமைப்பில் மீன் நீருயிரி வளர்ப்புக்கு ஒரு மணி நேரத்துக்கு 6 பிபிஎம் ஆக்ஸிஜன் தேவை.
எனவே, 30 எச்.பி. திறனுள்ள காற்று உட்புகுத்திகள் குளங்களுக்குப் பரிந்துரை செய்யப்படுகிறது.
உயிர்க் கூழ்ம முறையில் வளர்க்க ஏற்ற மீனினங்கள்
உயிர்க் கூழ்மத்தில் இருந்து நேரடியாகச் சத்துகளைப் பெறக்கூடிய நீருயிரி சிறப்பாக இயங்கும்.
மேலும், உயிர்க் கூழ்மத்தால் நீரில் ஏற்படும் மாசை ஈடு செய்து வாழும் நீருயிரிக்கு இம்முறை ஏற்றது.
இவ்வகையில், உயிர்க் கூழ்மத் தொழில் நுட்பத்தில் வளர்ப்பதற்கு ஏற்ற மீன் இனங்கள்:
காற்றைச் சுவாசிக்கும் மீன்கள்: singhi (Heteropneustas fossilis), Magur (Clarias batrachus), Pabda (Ompok pabda), Anabas/koi (Anabas testudineius) and Pangasius (Pangasianodon hypophthalus)
காற்றைச் சுவாசிக்கா மீன்கள்: Commoncarp (Cyprinus carpio), Rohu (Labeo rohita), Tilapia (Oreochromis nilotuis) and Milk fish(Chanos chanos)
உயிர்க் கூழ்ம உற்பத்தி முறைகள்
உயிர்க் கூழ்மம் என்பது, குளத்தில் உள்ள பொதுவான நுண்ணுயிர்ப் பெருக்கத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டது.
HDPE லைனின் செய்யப்பட்ட அரை எக்டர் குளத்தில், முதல் நாளில், யூரியா 48 கிலோ, டிரிபிள் சூப்பர் பாஸ்பேட் 1 கிலோ, அரைத்த மீன் தூள் அல்லது இறால் தீவனம் 30 கிலோ, டோலமைட் 50 கிலோ இட வேண்டும்.
இரண்டாம் நாள், யூரியா 4 கிலோ, டிரிபிள் சூப்பர் பாஸ்பேட் 1 கிலோ இட வேண்டும்.
மூன்றாம் நாள், அரைத்த மீன் தூள் அல்லது இறால் தீவனம் 30 கிலோ, டோலமைட் 50 கிலோ இட வேண்டும்.
நான்காம் நாள், அரைத்த மீன் தூள் அல்லது இறால் தீவனம் 30 கிலோ, டோலமைட் 50 கிலோ இட வேண்டும்.
ஆறாம் நாள், அரைத்த மீன் தூள் அல்லது இறால் தீவனம் 30 கிலோ, டோலமைட் 50 கிலோ இட வேண்டும்.
எட்டாம் நாள், அரைத்த மீன் தூள் அல்லது இறால் தீவனம் 50 கிலோ, டோலமைட் 8 கிலோ, கயோலின் 50 கிலோ இட வேண்டும்.
பத்தாம் நாள், அரைத்த மீன்தூள் அல்லது இறால் தீவனம் 50 கிலோ இட வேண்டும்.
பதினோராம் நாள், மண் கலந்த வேதிப் பொருளான கயோலினை 50 கிலோ இட வேண்டும்.
இப்படி, குளத்தில் இட்டு வேதி மாற்றங்களின் மூலம் உயிர்க் கூழ்மத்தை உற்பத்தி செய்யலாம்.
உயிர்க் கூழ்ம வளர்ச்சியில், ஆக்ஸிஜன், சூரிய ஒளி, கார்பன் ஆகிய பொருள்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றன.
மேலும், இக்கூழ்மம், நீரின் வெப்ப நிலை, கார அமிலத் தன்மை ஆகிய காரணிகளுக்கு ஏற்ப,
ஒரு வாரத்தில், ஒரு மில்லி லிட்டருக்கு 0 முதல் 4-5 யூனிட் அளவில் உற்பத்தியைப் பெருக்குகிறது.
உயிர்க் கூழ்மம், பச்சைப் பாசிகள் மற்றும் பழுப்பு நிற பாக்டீரியாவை உள்ளடக்கி உள்ளது.
இவற்றில், பச்சைப் பாசிகள், வெய்யில் மூலமும், பழுப்பு நிற பாக்டீரியாக்கள், எஞ்சிய உணவு மற்றும் துணைத் தயாரிப்புகள் மூலமும் உருவாகின்றன.
பாசிகள் வேகமாகப் பெருகும் என்பதால், குளத்து நீர் முதலில் பச்சை நிறமாக, பிறகு, பாக்டீரிய ஆதிக்கம் கூடும் வாரங்களில் பழுப்பு நிறமாக மாறும்.
இருவகை உயிர்க் கூழ்ம முறைகள்
இன்-சிட்டு (In-situ) முறை: தொட்டி அல்லது குளத்தில் உயிர்க் கூழ்மத் தொழில் நுட்பத்துடன் கூடிய மீன் வளர்ப்பு.
இம்முறையில், அம்மோனியா, நுண்ணுயிர்ப் புரதங்களுடன் சேர்ந்து, நைட்ரேட் பெருக்கத்தைக் குறைக்கும்.
மீன்களுக்கான சத்துகள் நேரடியாகக் கிடைக்கும். மீன்களுக்கும் உயிர்க் கூழ்மத்துக்கும் ஆக்ஸிஜன் தேவைப் படுவதால், அதிகளவில் காற்றைச் செலுத்த வேண்டும்.
எக்ஸ்-சிட்டு (Ex-situ) முறை: உயிர்க் கூழ்மத்தைத் தனியாகத் தொட்டியில் உற்பத்தி செய்து மீன்களுக்கு உணவாக பயன்படுத்துதல்.
இம்முறையில் சத்து விவரங்களை எளிதாக அறியலாம். மேலும், தனித்தனி உற்பத்தி மூலம் ஆக்ஸிஜன் தேவையைச் செலுத்த முடியும்.
உயிர்க் கூழ்ம வளர்ச்சிக் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு
உயிர்க் கூழ்ம அமைப்பில் அம்மோனியச் செறிவைக் கட்டுக்குள் வைப்பதில், கரிமமும் நைட்ரஜனும் 9:1/ 10:1 விகிதத்தில் முக்கியப் பங்காற்று கின்றன.
உயிர்க் கூழ்ம உற்பத்தியைச் சீராகப் பராமரிக்க, 30-38 சதப் புரதச்சத்து நிறைந்த ஒரு கிலோ மீன் தீவனத்தில், 0.5-1 கிலோ கார்போ ஹைட்ரேட் சேர்க்கப்பட வேண்டும்.
எளிதாகக் கூறுவதெனில், புரதம் அதிகமாக இருக்கும் போது, மாவுச்சத்து நிறைந்த பொருள்களை அதனுடன் சேர்க்க வேண்டும்.
இதன் மூலம் புரதம் மட்கி அம்மோனியா வாயுவைக் கட்டுப்படுத்தும்.
எனவே, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மி.கி. வீதம் அம்மோனிய வாயு இருந்தால்,
ஒரு லிட்டர் நீருக்கு 15-20 மி.கி. வீதம் கார்போ ஹைட்ரேட் பொருளைச் சேர்த்து, அதன் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த வேண்டும்.
குளத்தில் உற்பத்தி செய்யப்படும் உயிர்க் கூழ்மக் கூட்டை அளக்க, அதற்கென உருவாக்கப்பட்ட இம்காஃப் கூம்பைப் பயன்படுத்த வேண்டும்.
இம்காஃப் கூம்பு என்பது, கண்ணாடி அளவுமானி ஆகும். இதில், கொள்ளளவைக் கணக்கிட ஏதுவாக அளவுகள் குறிக்கப்பட்டு இருக்கும்.
ஒரு லிட்டர் உயிர்க் கூழ்மத்தைக் கண்காணிக்க, கூம்பில் நீரை நிரப்ப வேண்டும்.
பிறகு கூம்பை, அதற்கென அமைக்கப்பட்ட பலகையில் 10-15 நிமிடம் நிறுவ வேண்டும்.
அப்போது, உயிர்க் கூழ்மமும், பிற பொருள்களும் நீரிலிருந்து பிரிந்து கூம்பின் அடியில் படியும்.
இந்தப் படிவைக் கூம்பில் குறிக்கப் பட்டுள்ள அளவு மி.லி./லி. கொண்டு அளவிட வேண்டும்.
இதன் மூலம் குளத்தில் அல்லது தொட்டியில் நிகழும் உயிர்க் கூழ்ம உற்பத்தியைக் கணக்கிடலாம்.
ஒரு லிட்டர் நீருக்கு 20-25 மி.லி. உயிர்க் கூழ்மம் வீதம் உற்பத்திப் பெருகியதும், தொட்டியில் அல்லது குளத்தில் மீன்களை இருப்பு வைக்கலாம்.
உயிர்க் கூழ்ம அமைப்பில் இருக்க வேண்டிய பொருள்கள்
கரைந்த ஆக்ஸிஜன்: > 5.0 (மி.லி./லி.),
வெப்பநிலை: 28-30 டிகிரி செல்சியஸ்,
பி.எச்: 6.8-8.0,
மொத்த அம்மோனியா நைட்ரஜன்: 100
மொத்த இடை நிறுத்தப்பட்ட திடப் பொருள்கள்: < 500 (மி.லி./லி.)
நன்மைகள்
உயிர்க் கூழ்மம், மீன் மற்றும் இறால்களுக்கு உணவாக, நீரின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது.
அம்மோனியா என்னும் நச்சைக் குறைத்து, மீன்களுக்கு ஊட்டத்தை அளிக்கிறது. நீர்ப் பரிமாற்றத்தைக் குறைக்கிறது.
தீவனமாற்று விகிதம் மற்றும் மீன் உணவின் மீதான செலவுகளைக் குறைக்கிறது.
சத்துகளை மறுசுழற்சி செய்து உயிர்க் கூழ்மமாக மாற்றுவதால், மீண்டும் அவை மீன்களுக்கு உணவாகப் பயன்படுகின்றன.
நீருயிரிகளைத் தாக்கும் நோய்களைக் கட்டுப்படுத்தும் உயிரியல் செயல்களை மேற்கொள்கிறது.
இப்படி நன்மைகள் பல இருந்தாலும், இதைச் செயல்படுத்த மின்சாரம் அவசியம்.
நவீன மீன் வளர்ப்பு முறைகள் மற்றும் தொழில் நுட்பங்கள், மீன் உற்பத்தியைப் பெருக்க, முதலீடு மற்றும் விற்பனையை மேம்படுத்த உதவுகின்றன.
இப்படி, சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாமல், மீன்கள் நலமாக, விரைவாக வளர, உயிர்க் கூழ்ம மீன் வளர்ப்பு முறை பயன்படுகிறது.
வெ.எழிலரசி, நா.ரம்யா, ஜாக்குலின்வினோ, செரில் ஆண்டனி, ப.அகிலன், டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பொன்னேரி.
சந்தேகமா? கேளுங்கள்!