My page - topic 1, topic 2, topic 3

தைலமரம் வளர்ப்பு!

செய்தி வெளியான இதழ்: 2014 ஜூன்.

ரங்களை வளர்த்தால் மனமெல்லாம் மகிழ்ச்சி தான். தீமை என்னும் பேச்சுக்கே இடமில்லை. வாழும் காலம் வரை நன்மைகளைச் செய்து கொண்டே இருப்பவை மரங்கள். இங்கே பசை தரும் மரங்களைப் பற்றிப் பார்ப்போம்.

தைலமரம் எனப்படும் பசைமரம் வறண்ட சமவெளிப் பகுதிகளில் வளரும் தன்மையுடையது. இம்மரம் 230-1500 மி.மீ. மழையுள்ள பகுதிகளில் நன்கு செழித்து வளரும். குறிப்பாகத் தமிழ்நாட்டில் யூகலிப்டஸ் டெரிடிகார்னிஸ், யூகலிப்டஸ் கமால்டுலென்ஸ் ஆகிய வகைகள் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. இந்தத் தைல மரங்களில் 700க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன.

இந்த மரங்கள் வேறுபட்ட மூன்று உயரங்களில் வளர்கின்றன. சிறியது 10 மீட்டர் உயரமும், நடுத்தரமானது 10-30 மீட்டர் உயரமும், உயரமானது 30-60 மீட்டர் உயரமும் வளரும். அடுத்து மிகவும் உயரமாக வளரக்கூடிய இரகம் 60 மீட்டர் உயரம் வளரும்.

தைல மரங்களின் பயன்கள்

தைல மரங்கள் காற்றிலுள்ள கரியமில வாயுவை அதிகளவில் ஈர்க்கும் தன்மை மிக்கவை. நீரை, நிலத்தில் சேமிக்கும் தன்மை கொண்டவை. தைல மரங்களில் இருந்து பெறப்படும் யூகலிப்டஸ் தைலம், ஆஸ்த்துமா, இருமல், சுவாசம் தொடர்பான நோய்களைப் போக்கும். அனைத்து மண்ணிலும் செழித்து வளரும். விளை நிலங்களின் வேலிப் பகுதிகளில் நட்டால் காற்றுத் தடுப்பானாகப் பயன்படும்.

காகிதம், அட்டைகள் போன்ற காகிதப் பொருள்களைத் தயாரிக்கப் பயன்படுகின்றன. எரிபொருளாகவும், கரித்துண்டுகள் தயாரிக்கவும் பயன்படுகின்றன. இந்த மரங்கள், பாலங்கள், கட்டடங்கள் போன்ற கட்டுமானங்களுக்கு உதவுகின்றன. தைலமர இலைகளில் இருந்து பெறப்படும் நீர்மம், பூச்சி எதிர்ப்பு மருந்துகளைத் தயாரிக்கப் பயன்படுகிறது.

நிலத் தயாரிப்பு

மண்ணின் ஆழம் 10 மீட்டருக்குக் குறைவாக உள்ள நிலத்தைத் தவிர்க்க வேண்டும். தைலமரக் கன்றுகளை நடவு செய்யவுள்ள நிலத்தை நன்றாக உழ வேண்டும். பின்னர் 45 செ.மீ. நீள, அகல, ஆழமுள்ள குழிகளை எடுக்க வேண்டும். குழிகளின் இடைவெளி 3 மீட்டரும், வரிசைக்கு வரிசை 2 மீட்டரும் இருக்க வேண்டும்.

குழிகளில் உள்ள கரையான் தாக்குதலைக் கட்டுப்படுத்த 10 கிராம் போரேட்டை இட வேண்டும். அடியுரமாக 2 கிலோ தொழுவுரம், தலா 25 கிராம் தழை, மணி, சாம்பல் சத்துக் கலந்த கலவையை இட வேண்டும். மேலும், குழி தவறாமல் குப்பை உரத்துடன் 25 கிராம் டிரைக்கோடெர்மா விர்டி அல்லது சூடோமோனாசைக் கலந்து இட்டால் வேரழுகல், வேர் வாடல் நோய்களில் இருந்து கன்றுகளைக் காக்க முடியும்.

நடவுக் காலத்திலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு அவசியம் பாசனம் செய்ய வேண்டும். ஜூன் தொடங்கி நவம்பர் மாதம் வரையான காலம் நடவுக்கு ஏற்றது. ஆனால், பாசன வசதியுள்ள நிலங்களில் எல்லா மாதங்களிலும் நடவு செய்யலாம்.

நோய் மற்றும் பூச்சிக் கட்டுப்பாடு

பூச்சி மேலாண்மை: யூகலிப்டசைத் தாக்கும் தண்டுத் துளைப்பானைக் கட்டுப்படுத்த, கம்பியின் மூலம் புழுவை வெளியே எடுத்து விட்டு அப்பகுதியில் 10 மி.லி. மோனோகுரோட்டாபாசில் நனைத்த பஞ்சைக் கட்டிவிட வேண்டும். கரையானைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 2 மி.லி. குளோரிபைரிபாஸ் வீதம் கலந்து, நாற்றுகளின் மீது தெளிப்பதோடு வேர்ப் பகுதியிலும் ஊற்ற வேண்டும்.

நோய் மேலாண்மை: துரு நோயைக் கட்டுப்படுத்த, நனையும் கந்தகம் 0.25 சதம் தெளிக்க வேண்டும். இலைக் கருகல் நோயைக் கட்டுப்படுத்த, மாங்கோசெப் 0.25 சதம் தெளிக்க வேண்டும். நாற்றழுகல் நோயைக் கட்டுப்படுத்த, காப்பர் ஆக்ஸிகுளோரைடு கலவையை நாற்றின் வேர்ப்பாகம் நனையும்படி ஊற்ற வேண்டும்.

மகசூல்

தைல மரங்களை 4-5 ஆண்டுகளில் அறுவடை செய்யலாம். நல்ல மண்வளமும் நீர் வசதியும் உள்ள இடங்களில் ஏக்கருக்கு 40 டன் மரங்கள் மகசூலாகக் கிடைக்கும். இதன் மூலம் ரூ.75 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும். எனவே, வறண்ட மற்றும் தரிசு நிலங்களில் தைல மரங்களைச் சாகுபடி செய்தால் நாமும் பயன் பெறலாம். நாட்டுக்கும் பயன்படும்.


மு.சுகந்தி, பெ.முருகன், பா.குமாரவேல், வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks