இன்று மக்களுக்கு வரும் பல நோய்களுக்குக் காரணம், மாறிவரும் உணவுப் பழக்கமே ஆகும்.
காய்கறிகளைத் தவிர்ப்பது மற்றும் தேவைக்கு அதிகமாக உணவை எடுத்துக் கொள்வதால், உடல் நலம் கெடுகிறது.
மேலும், சத்துகள் கூடுவது அல்லது குறைவதாலும் நோய்களுக்கு ஆட்பட நேர்கிறது.
அதனால், நலமான வாழ்க்கைக்கு, உணவு முறையில் கவனத்தைச் செலுத்த வேண்டும்.
நோயை எதிர்கொள்ள, அதிலிருந்து மீள, மீண்டபின் பழைய நிலைக்குத் திரும்ப, முக்கியமாக இருப்பவை நம் உணவிலிருந்து கிடைக்கும் சத்துகளே. அவை, இயற்கையாக விளையும் காய்கறிகளில் உள்ளன.
நம் உடலுக்குத் தேவையான மாவுச்சத்து, புரதச்சத்து, சுண்ணாம்புச் சத்து, கொழுப்புச் சத்து, உயிர்ச் சத்துகள், தாதுப்புகள், ஆன்ட்டி ஆக்சிடன்ட்களும் காய்கறிகளில் மிகுதியாக உள்ளன.
இத்தகைய சிறப்புகளைக் கொண்ட காய்கறிகளை, இயற்கை மருந்துகள் என்று கூட அழைக்கலாம்.
இவ்வகையில், நம் அன்றாட உணவில் பயன்படும் காய்கறிகள் சிலவற்றில் அடங்கியுள்ள சத்துகளை, அவற்றின் பயன்களை இங்கே காணலாம்.
சின்ன வெங்காயம்
நூறு கிராம் சின்ன வெங்காயத்தில், 50 கிலோ கலோரி, 36 கிராம் மாவு, 1.8 கிராம் புரதம், 0.1 கிராம் கொழுப்பு, 0.6 கிராம் நார், 2 மி.கி. வைட்டமின் சி, 40 மி.கி. கால்சியம், 1.2 மி.கி. இரும்பு, 60 மி.கி. பாஸ்பரஸ் ஆகிய சத்துகள் உள்ளன.
இந்த வெங்காயம் முதன் முதலில் ஆசியாவில் தோன்றியதாக நம்பப் படுகிறது.
இதில் ஆவியாகும் தன்மையில் உள்ள சல்பர் (கந்தகம்) என்னும் பொருளே இதன் தனித்தன்மை மிக்க மணத்துக்குக் காரணம்.
வெங்காயத்தை வெட்டும் போது, கண்ணில் நீர் வருவதற்குக் காரணமாக இருப்பது இந்தப் பொருளே. சமைக்கும் போது, இந்தக் கந்தகத்தில் பாதி, அழிந்து விடும்.
முற்காலத்தில் வெங்காயம் மருத்துவப் பொருளாகவே பயன்பட்டது. இருமல் மற்றும் தொண்டைப் புண்ணுக்கு வெங்காயம் உகந்த மருந்து.
இதிலுள்ள சல்பர், புரதத்துடன் சேர்ந்து அமினோ அமிலங்களின் செயலைத் தூண்டி, மூளை, கல்லீரல் மற்றும் நரம்பு மண்டல இயக்கத்தைச் சீராக்கும்.
பீட்ரூட்
நூறு கிராம் பீட்ரூட்டில், 120 கிலோ கலோரி, 8.8 கிராம் மாவு, 1.7 கிராம் புரதம், 0.1 கிராம் கொழுப்பு, 0.9 கிராம் நார், 2 மி.கி. வைட்டமின் சி, 18.3 மி.கி. கால்சியம், 1.19 மி.கி. இரும்பு, 55 மி.கி. பாஸ்பரஸ் ஆகிய சத்துகள் உள்ளன.
பீட்ரூட்டில் அதிகளவில் ததுப்புகள் உள்ளன. இதிலிருந்து பிரிக்கப்படும் நிறமி, சுவைமிகு உணவுகளில் இயற்கை நிறமியாகப் பயன்படுகிறது.
செரிமான உறுப்புகளைத் தூண்டி, செரிமான மண்டலத்தை நன்கு இயங்க வைக்கிறது.
மேலும், நிணநீர் மண்டலத்தைத் தூண்டுவதால், உடலில் நோயெதிர்ப்பு ஆற்றல் கூடுகிறது. பீட்ரூட் இலையும் உணவாகப் பயன்படுகிறது.
கேரட்
நூறு கிராம் கேரட்டில், 130 கிலோ கலோரி, 17.6 கிராம் மாவு, 0.9 கிராம் புரதம், 0.2 கிராம் கொழுப்பு, 1.2 கிராம் நார், 3 மி.கி. வைட்டமின் சி, 4800 ஜெயு வைட்டமின் ஏ, 80 மி.கி. கால்சியம், 1.03 மி.கி. இரும்பு, 530 மி.கி. பாஸ்பரஸ் ஆகிய ஆகிய சத்துகள் உள்ளன.
இதில், அதிகமாக உள்ளள ஆன்ட்டி ஆக்சிடன்ட், புற்றுநோயைத் தடுக்கும் காரணியாக உள்ளது.
முட்டைக்கோசு
நூறு கிராம் முட்டைக் கோசில், 40 கிலோ கலோரி, 4.6 கிராம் மாவு, 1.8 கிராம் புரதம், 0.1 கிராம் கொழுப்பு, 1 கிராம் நார், 124 மி.கி. வைட்டமின் சி, 39 மி.கி. கால்சியம், 0.8 கிராம் இரும்பு, 44 மி.கி. பாஸ்பரஸ் ஆகிய சத்துகள் உள்ளன.
முட்டைக்கோசு ஆண்டு முழுவதும் கிடைக்கும் காய்கறி. காரத் தன்மையில் இருக்கும்.
இதில், செல்லுலோசு மிகுந்தும், கலோரி மிகக் குறைந்தும் இருப்பதால், இதய நோயாளிகள், நீரிழிவு மற்றும் உடல் பருமன் மிக்கோரும் இதை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
இதில், குளோரின், அயோடின், பாஸ்பரஸ், சோடியம், சல்பர் போன்ற தனிமங்கள் உள்ளன.
முட்டைக்கோசு புண்களை விரைவாக ஆற்றுவதால், வயிற்றுப் புண்ணுக்கு மிக நல்ல மருந்து. இது, மலச்சிக்கலையும் நீக்கும்.
தக்காளி
நூறு கிராம் தக்காளியில், 60 கிலோ கலோரி, 3.6 கிராம் மாவு, 0.9 கிராம் புரதம், 0.2 கிராம் கொழுப்பு, 0.8 கிராம் நார், 4082 ஐயு வைட்டமின் ஏ, 27 மி.கி. வைட்டமின் சி, 48 மி.கி. இரும்பு, 20 மி.கி. பாஸ்பரஸ் ஆகிய சத்துகள் உள்ளன.
தக்காளி நம் நாட்டில் காயாகவும் பழமாகவும் பயன்படுகிறது. இது, இரத்தத்தில் காரத் தன்மையைக் கூட்டுவதால், இரத்தத்தில் உள்ள நச்சுத் தன்மையை, அதாவது, யூரிக் அமிலத்தை நீக்க வல்லது.
மேலும், இரத்தக் குழாய்களில் இரத்தம் உறைவதைத் தடுக்கும் காரணியாக உள்ளது.
அதிகளவில் வைட்டமின் சத்துகளும் ஆன்ட்டி ஆக்சிடன்ட்களும் உள்ளதால் புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது.
எனவே, சத்துகள் மற்றும் பயன்கள் மிகுந்த காய்கறிகளை உணவில் சேர்த்து வந்தால், நோயின்றி நலமாக வாழலாம்.
முனைவர் இல.மாலதி, முனைவர் ஜெ.திரவியம், வேளாண்மை அறிவியல் நிலையம், புழுதேரி, கரூர் மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!