My page - topic 1, topic 2, topic 3

முருங்கை மரத்தின் பயன்கள்!

செய்தி வெளியான இதழ்: 2017 மே.

மூலிகை மரங்கள் பலவுண்டு-அவற்றில்
முருங்கை மரத்துக்குத் தனிச் சிறப்புண்டு!

முருங்கை மரத்தைக் கற்பகத்தரு என்று சித்தர்கள் அழைக்கின்றனர். முருங்கையின் பயன்களை நம் முன்னோர்கள் ஆண்டாண்டுக் காலமாக நன்கு அனுபவித்து வந்துள்ளனர். அவர்களின் தொடர்ச்சியாக இன்று நாம் பயன்பெற்று வருகிறோம். வீட்டுக்கு ஒரு முருங்கை மரம் இருந்தால், குடும்பத்தில் நலத்துக்குக் குறைவே இருக்காது.

வீட்டுக் கொல்லையில் இருக்கும் முருங்கை மரத்தைப் பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில், முருங்கை மரத்தின் இலை, வேர், பட்டை, காய், விதை என, அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணங்களைக் கொண்டவை. இவை அனைத்தும் எண்ணற்ற நோய்களுக்கு மருந்துகளாக உள்ளன. எனவே, முருங்கை மரத்தைப் பற்றி இங்கே விரிவாகக் காணலாம்.

முருங்கையின் பிறப்பிடம்

மொரிங்கா ஒலிப்பெரா எனப்படும் முருங்கை மரம் மொரிங்கேசியே என்னும் குடும்பத்தைச் சார்ந்தது. இது, உலகம் முழுவதும் பரவலாக இருந்தாலும், இதன் பிறப்பிடம் இந்தியா தான். வறண்ட நிலத்திலும் செழித்து வளரும் தன்மை மிக்கது முருங்கை. பத்து மீட்டர் உயரம் வரையில் வளர்ந்து குடையைப் போலக் காட்சியளிக்கும்.

முறுக்கிய வடிவத்தைப் பெற்றுள்ளதால், முருங்கை என்று அழைக்கப்படுகிறது. இது, அதிசய மரம், குதிரை முள்ளங்கி மரம், பென் எண்ணெய் மரம் என்றும் கூறப்படுகிறது. நமக்கு உணவாக, கால்நடைகளுக்குத் தீவனமாக, நோய்களுக்கு மருந்தாக, முருங்கை மரம் முக்கியப் பங்காற்றுகிறது. ஆப்பிரிக்காவில் முருங்கையை அன்னையின் தோழன் என அழைக்கின்றனர்.

முருங்கையில் உள்ள சத்துகள்

முருங்கையில் வைட்டமின்கள், அமினோ அமிலங்கள் மற்றும் தாதுப்புகள் உள்ளன. முருங்கைக் கீரையில் வைட்டமின்கள் ஏ, பி, சி, சுண்ணாம்பு மற்றும் இரும்புச் சத்து, புரதச்சத்து ஆகியன அடங்கியுள்ளன. முருங்கை இலைகளைக் கீரையாக, சூப்பாக, வடையாக, சாலட்டாக, ஊறுகாயாகச் செய்து உண்ணலாம். சுவையூட்டியாகவும் உணவில் சேர்க்கப்படுகிறது.

பாலில் உள்ளதைப் போல, நான்கு மடங்கு சுண்ணச்சத்து முருங்கைக் கீரையில் உள்ளது. தயிரில் உள்ளதைப் போல, இரண்டு மடங்கு புரதம் உள்ளது. ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைப் போல, ஏழு மடங்கு வைட்டமின் சி உள்ளது. வாழைப் பழத்தில் உள்ளதைப் போல, மூன்று மடங்கு பொட்டாசியம் உள்ளது.

மேலும், அசைவ உணவிலுள்ள வைட்டமின் பி, பி2, பி3, தாதுப்புகளான குரோமியம், காப்பர், இரும்பு, மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம், நார்ச்சத்து ஆகியனவும் முருங்கையில் உள்ளன. மிகவும் தேவையான ஒன்பது வகை அமினோ அமிலங்களும் உள்ளன.

பயன்கள்

முருங்கைக் கீரை: சத்தின்மை மற்றும் பார்வைக் குறையைப் போக்க, முருங்கைக் கீரை பயன்படுகிறது. உடலை வலுப்படுத்துகிறது. இரத்தத்தைச் சுத்தம் செய்ய உதவுகிறது. இதிலுள்ள இரும்புச் சத்தால் இரத்தச்சோகை நீங்கும். சர்க்கரையை நீக்கும் ஆற்றல் முருங்கைக் கீரைக்கு உண்டு.

பெண்களுக்கு உண்டாகும் உதிர இழப்பைப் போக்கும் சிறந்த நிவாரணி. எனவே, முருங்கைக் கீரையை வாரம் ஒருமுறையாவது பெண்கள் உணவில் சேர்த்து வர வேண்டும். முருங்கைக் கீரைக்கு நோயெதிர்ப்பு சக்தி உள்ளதால், காயங்கள் மற்றும் பூச்சிக்கடிக்கு நிவாரணியாகச் செயல்படுகிறது. முருங்கைக் கீரையை உரமாக இட்டால், மண்ணின் மலட்டுத் தன்மை அகலும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

முருங்கைப் பூ: முருங்கைப் பூவிலும் அதிகளவில் மருத்துவக் குணங்கள் உள்ளன. நாற்பது வயதைக் கடந்தவர்கள் கண்ணாடி இல்லாமல் படிக்க முடியாது. இதை வெள்ளெழுத்து என்பார்கள். இந்தக் குறை நீங்கிப் பார்வை தெளிவாக, முருங்கைப் பூவை உலர்த்திப் பொடியாக்கிச் சாப்பிட வேண்டும்.

சிறியோர் முதல் பெரியோர் வரையில் ஞாபக மறதியால் அவதிப்படுவோர் அதிகளவில் உள்ளனர். இது, கொடிய நோய்க்கு ஒப்பாகும். இந்த ஞாபக மறதியைப் போக்கி, நினைவாற்றலைத் தூண்டும் வல்லமை முருங்கைப் பூவுக்கு உண்டு.

இது, நீரிழிவு நோய்க்கும் சிறந்த மருந்தாகும். அதிக வேலைப்பளு, மன அழுத்தம் காரணமாகச் சிலருக்கு நரம்புத் தளர்ச்சி உண்டாகும். இந்த நரம்புத் தளர்ச்சியைப் போக்கும் அருமருந்தாக முருங்கைப்பூ செயல்படுகிறது.

முருங்கைக் காய்: முருங்கைப் பிஞ்சு இரத்தம் தொடர்பான அனைத்து நோய்களுக்கும் சிறந்த மருந்தாகும். இது, இரத்தச் சிவப்பணுக்களைப் பெருக்கும். இதிலுள்ள சுண்ணாம்புச் சத்து, எலும்புகளுக்கு ஊட்டமளிக்கும். எலும்பு மஜ்ஜையைப் பலப்படுத்தி இரத்தத்தை அதிகமாக உற்பத்தி செய்யும். மேலும், முருங்கைக் காயில் நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனீசு ஆகிய சத்துகள் மிகுதியாக உள்ளன.

முருங்கை விதை: முருங்கை விதைகளை வறுத்துச் சாப்பிடலாம். முருங்கை விதையில் சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ் ஆகியன அதிகமாக உள்ளன. விதையிலிருந்து கிடைக்கும் எண்ணெய், பென் எண்ணெய் எனப்படுகிறது. இது தெளிவாக, மணமற்றதாக, ஆலிவ் எண்ணெய்யைப் போலவும் இருக்கும்.

இதில், கொழுப்பு அமிலங்களான, பால்மிடிக் (palmetic), ஸ்டியரிக் (stearic), பெமிக் (behmic), ஒலியிக் (oleic) ஆகியன உள்ளன. முருங்கை எண்ணெய், உணவிலும், அழகுப் பொருளான சோப்புத் தயாரிப்பிலும் பயன்படுகிறது. இந்தப் புண்ணாக்கு, உரமாகவும், நீரைச் சுத்திகரிக்கவும் பயன்படுகிறது.

முருங்கைப் பட்டை, வேர்: முருங்கைப் பட்டைப் பொடியானது, வீக்கத்தை, வலியைக் குறைக்கும். இது பாம்புக்கடிக்கு மருந்தாகும். பார்வை சார்ந்த நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. முருங்கை வேரைப் பாலில் காய்ச்சிக் குடித்தால் விக்கல் உடனே நிற்கும்.

இன்றுள்ள மக்களுக்கு வரும் பல நோய்களுக்குக் காரணமாக அமைவன, செயற்கை உணவுகளில் சேர்க்கப்படும் வேதிப் பொருள்களே. எனவே, உணவே மருந்து என்னும் நிலை மாறி, மருந்தே உணவு என்னும் நிலை உருவாகி உள்ளது.

நோய்களுக்காக மருந்துகளைத் தேடி அலையும் நாம், இனிமேலாவது பாரம்பரியம் மிகுந்த மூலிகைகளைப் போற்றுவோம்; நமது பிள்ளைகளும் இவற்றைப் பற்றி அறிய வாய்ப்புக் கொடுப்போம்.


கா.பிரசன்னா, க.சு.ஞானலெட்சுமி, த.பாஸ்கரன், உணவு மற்றும் பால்வளத் தொழில் நுட்பக் கல்லூரி, சென்னை – 600 052.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks