காடுகள் பல்வேறு வளங்களைக் கொண்டுள்ளன. இவற்றில் பெரியளவில் அறியப்படாதவை காளான்கள். காளான்கள் உயர் பூசண வகையைச் சார்ந்தவை.
பிளியூரோட்டஸ், டிரமடிஸ், கார்டிசெப்ஸ், கேனோடெர்மா, டிராமட்டோ மைஸிஸ், அகாரிகஸ் வகைக் காளான்கள் காடுகளில் அதிகமாக உள்ளன. அவற்றில், பல்வேறு சத்துகள் மற்றும் மருத்துவக் குணங்கள் உள்ளன.
இவற்றைத் தவிர, அண்மைக் காலமாக, காளான்கள் நிறமிப் பொருள்கள் மற்றும் தோல் பொருள்களுக்கு மாற்றுப் பொருள்கள் தயாரிப்பிலும் பயன்பட்டு வருகின்றன.
காளான்களின் சத்துகள் மற்றும் மருத்துவக் குணங்கள்
காளானை உண்பதன் மூலம் சத்துப் பற்றாக் குறையைப் போக்க முடியும். காளானில் புரதச்சத்து 15-29%, நார்ச்சத்து 6-8%, மாவுச்சத்து 32-48%, கொழுப்புச் சத்து 2-4.8% உள்ளன.
மேலும், பல்வேறு அமினோ அமிலங்கள், கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய சத்துகளும் உள்ளன. எனவே, இவற்றைச் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் உண்ணலாம்.
காளானை உண்பதன் மூலம், இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தலாம்.
பண்டைய இந்திய மற்றும் சீன மருத்துவ நூல்களில், காளான்களின் மருத்துவக் குணங்களைப் பற்றிய குறிப்புகள் இடம் பெற்று உள்ளன.
சீன மக்கள், உயிர் காக்கும் மருந்தாகக் காளான்களைத் தான் பயன்படுத்தி வந்தனர்.
காளான்களில் புற்று நோய்ச் செல்களை அழிக்கும் தன்மை உள்ளது. காளான்கள் இரத்தச் சோகையைப் போக்கும். இரத்த நாளங்களின் உட்பரப்பில் கொழுப்புப் படிவதைத் தடுக்கும்.
காளான்களில் உள்ள லென்ட்டைசின், எரிட்டினைன் போன்ற வேதிப் பொருள்கள், இரத்தத்தில் கலந்துள்ள டிரை கிளிசரைடின் அளவை வெகுவாகக் குறைக்கும்.
எர்கோத்தியோனின் என்னும் மூலப்பொருள் காளான்களில் அதிகமாக உள்ளது. இது, இரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்தும்.
அனைத்துக் காளான்களிலும் மிகுந்துள்ள பொட்டாசியச் சத்தானது, நரம்புகள் மற்றும் இரத்த நாளங்களில் ஏற்படும் இறுக்கத்தைத் தளர்த்தி, இரத்தழுத்தம் உயராமல் தடுக்கும்.
சாயப் பொருள்கள்
இயற்கைச் சாயப் பொருள்கள் உற்பத்தியிலும் காளான்கள் பெருமளவில் பயன்படுகின்றன.
காளான்களில் இருந்து நீலம், சிவப்பு, அடர் சிவப்பு, அடர் பழுப்பு, மஞ்சள், சாம்பல் கலந்த பச்சை ஆகிய நிறமிகள் கிடைக்கின்றன.
இத்தகைய நிறமிகளைத் தரும் காளான்கள் காடுகளில் அதிகளவில் உள்ளன. காளான்களில் இருந்து நிறமிப் பொருள்களைத் தனியாகப் பிரித்தெடுத்தும், மூலப் பொருள்களில் காளான்களை நேரடியாகக் கலந்தும் சாயம் ஏற்றலாம்.
காளான் சாயப் பொருள்கள் நச்சுத்தன்மை அற்றவை. மேலும், சாயப் பொருள்களைப் பிரிப்பதற்கு, நஞ்சற்ற பொருள்களையே பயன்படுத்துவதால், சுற்றுப்புறச் சூழலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை.
எனவே, இத்தகைய காளான் நிறமிப் பொருள்கள், பருத்தித் துணிகள், கம்பளி, பட்டு வகைகளை நிறமிடவும், அலங்காரப் பொருள்கள் தயாரிப்பிலும் அதிகமாகப் பயன்படுகின்றன.
காளான்கள் மூலம் நிறமூட்டப்பட்ட அலங்காரப் பொருள்கள் மற்றும் துணி வகைகள், வெளிநாட்டுச் சந்தைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்யப் படுகின்றன.
இவற்றைத் தவிர, வண்ணப் பென்சில்களும் காளான் நிறமியைக் கொண்டு தயாரிக்கப் படுகின்றன.
காளான் தோல் பொருள்கள்
தோல் பொருள்கள் உற்பத்தியில் விலங்குகளின் தோலே பெருமளவில் பயன்பட்டு வந்த நிலையில், சமீப காலமாகக் காளான் தோல் இதற்கு மாற்றுப் பொருளாகப் பயன்பட்டு வருகிறது.
இந்தப் பொருள்களைத் தயாரிக்க, குறைந்தளவு நீரே போதும். மேலும், சுற்றுச்சூழலைப் பாதிக்காத இரசாயனப் பொருள்கள் பயன்படுத்தப் படுகின்றன.
தோல் உற்பத்தியில் காளான்கள் பயன்படுவதன் மூலம், தோலுக்காக விலங்குகள் வதை தடைபடுகிறது.
இதனால், சமூக ஆர்வலர்கள் மற்றும் விலங்கு ஆர்வலர்களிடம், காளான் தோல் பொருள்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
காளான் தோலிலிருந்து, காலணிகள், பைகள், பர்சுகள் போன்றவற்றைத் தயாரிக்கலாம்.
ஒளிரும் காளான்கள்
இவற்றைத் தவிர, இரவில் ஒளிரும் காளான்கள் காடுகளில் உள்ளன. இவ்வகைக் காளான்களை மேகாலய மலைகளில் காணலாம். இவை, இரவில் சிறிய மின் விளக்குகளைப் போலத் தெரியும்.
இப்படி, பல்வேறு தன்மைகளைக் கொண்ட காளான்களை நன்றாக அறிந்து, தகுந்த முறையில் பயன்படுத்தினால் நம் நாடும், நம் வாழ்வும் செழிக்கும்.
முனைவர் சி.உஷாமாலினி, க.த.பார்த்திபன், வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையம் – 641 301.
சந்தேகமா? கேளுங்கள்!