My page - topic 1, topic 2, topic 3

டிராக்டரைத் திறம்பட இயக்கும் வழிமுறைகள்!

மது நாட்டில் ஆண்டுதோறும் பத்து இலட்சம் டிராக்டர்கள் உற்பத்தி செய்யப் படுகின்றன. மற்ற நாடுகளைக் காட்டிலும் நம் நாட்டில் டிராக்டர் பயன்பாடு அதிகமாகும்.

இன்று இந்தியாவில் சுமார் 43 இலட்சம் டிராக்டர்கள் புழக்கத்தில் உள்ளன. ஆனால், இவற்றை முறையாக இயக்குவதில்லை என்பதால். பராமரிப்புச் செலவு அதிகமாகிறது.

டிராக்டரைச் சரியான முறையில் இயக்குவது, நிறுத்துவது மற்றும் பிரேக் பெடல், கிளட்ச் பெடல், லாக், கை பிரேக், கால் ஆக்சிலேட்டர், கை ஆக்சிலேட்டர், பி.டி.ஓ. நெம்பி ஆகியவற்றை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

டிராக்டரை இயக்குமுன் கவனிக்க வேண்டியவை

டீசல் கலனில் டீசலும், ஆயில் கலனில் ஆயிலும், ரேடியேட்டரில் நீரும் போதியளவில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். டயர்களில் காற்றழுத்தம் சரியாக இருக்க வேண்டும்.

காற்று வடிப்பான் சுத்தமாக இருக்க வேண்டும். ஃபேன் பெல்ட்டின் டென்சன் 15-20 மி.மீ. இருக்க வேண்டும். முக்கிய கியர் லீவர் நடுநிலையில் இருக்க வேண்டும்.

டிராக்டரை நிறுத்துமுன் செய்ய வேண்டியவை

ஆக்சிலேட்டரைக் குறைக்க வேண்டும். முக்கிய கியர் லீவரை நடுநிலைக்குக் கொண்டு வர வேண்டும்.

பிரேக் பெடல் மூலம் டிராக்டரின் இயக்கத்தைத் நிறுத்த வேண்டும். கட் ஆப் லீவரை இழுத்து, என்ஜினை நிறுத்திய பின், கட் ஆப் லீவரை பழைய நிலையில் வைக்க வேண்டும்.

பிரேக் பெடல்

பிரேக் பெடல்கள் இரண்டும் தடங்கலின்றி இயங்க ஏதுவாக, அவற்றின் தடையற்ற இயக்கம் 4.5-5.5 செ.மீ. இருக்க வேண்டும். வயலில் வேலை செய்யும் போது டிராக்டர் பெடலை விடுவித்து வைக்க வேண்டும்.

சாலையில் செல்லும் போது, பெடலை இணைத்து வைத்திருக்க வேண்டும். இல்லா விட்டால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கிளச் பெடல்

கிளட்சின் இயக்கம் அதிகமாகக் கிடைப்பதற்கு அதன் தடையற்ற இயக்கம் 2.0-2.6 செ.மீ. இருக்க வேண்டும். கிளட்ச் பெடலின் இயக்கம் அதிகமாக இருந்தாலோ, குறைவாக இருந்தாலோ கிளட்ச் வழுக்கும் வாய்ப்புக் கூடும்.

லாக்

இது, வயலில் ஒரு பின் சக்கரம் மட்டும் வழுக்கிச் சுழல்வதைக் கட்டுப்படுத்தும் சாதனம் ஆகும்.

இறுகலற்ற மண்ணில் அல்லது சேற்றில் ஒரு சக்கரம் மட்டும் சுழலும் போது, லாக்கை இணைத்து, இரண்டு சக்கரங்களையும் இயங்க வைக்கலாம். இதனால், டயர்கள் வெகு நாட்களுக்கு உழைக்கும்.

கை பிரேக்

சாய்வான பகுதியில் டிராக்டரை நிறுத்தி வைப்பதற்கு, இதைக் கண்டிப்பாகப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில், டிராக்டர் தானாக இயங்க நேர்வதை இதன் மூலம் தடுக்க முடியும்.

ஆக்சிலேட்டர்

டிராக்டரைச் சாலையில் ஓட்டும் போது கால்மிதி ஆக்சிலேட்டரைப் பயன்படுத்த வேண்டும். வயலில் வேலை செய்யும் போது இதைப் பயன்படுத்தினால் வேகம் ஒரே சீராக இருக்காது; திடீரெனக் கூடும் அல்லது குறையும்.

கைப்பிடி ஆக்சிலேட்டர்

வயலில் ஓட்டும் போது டிராக்டரின் வேகத்தைத் தொடர்ச்சியாகப் பராமரிக்க, கைப்பிடி ஆக்சிலேட்டரைப் பயன்படுத்த வேண்டும்.

பிடிஓ

இது, சுழல் தண்டை இயக்கப் பயன்படுகிறது. தேவையில்லாத போது இதை விடுவித்த நிலையில் வைத்திருக்க வேண்டும். பிடிஓ லீவரை இணைக்கக் கூடாது.

பிரேக் ஸ்விட்ச் மற்றும் பிரேக் விளக்கு

டிராக்டரின் பின்னால் இரண்டு மட்கார்டுகளில் இருக்கும் சிவப்பு விளக்குகள், பிரேக் பெடலால் இயங்கும்.

பிரேக் பெடலை அழுத்தும் போதும், விடுவிக்கும் போதும் பிரேக் ஸ்விட்ச் இயங்கும். பிரேக் ஸ்விட்ச் வலது ஃபுட்போர்டுக்குக் கீழே இருக்கும். பின்னால் வரும் வாகன ஓட்டிகளை எச்சரிக்க, பிரேக் விளக்குகள் பயன்படும்.

பார்க்கிங் டெயில் லைட் ஸ்விட்ச்

பின்புற பார்க்கிங் விளக்குகள் சிவப்பு நிறத்தில் இருக்கும். டேஷ் போர்டில் உள்ள ஒரு பக்க அசைவு ஸ்விட்ச்சை இயக்கினால், இந்த விளக்குகள் எரியும். இது, பார்க்கிங் ஸ்விட்ச் எனப்படும்.

பார்க்கிங் ஸ்விட்ச் இயக்க நிலையில் இருக்கும் போது, முன்புறம் உள்ள ஆரஞ்சு நிற விளக்குகளும், பின்புறம் உள்ள சிவப்பு நிற விளக்குகளும் எரியத் தொடங்கும்.

சுட்டு விளக்குகள்

இன்டிகேட்டர் என்னும் ஆரஞ்சு நிறச் சுட்டு விளக்குகள், டிராக்டரின் முன்னும் பின்னும் உள்ள மட்கார்டுகளில் இருக்கும். டேஷ் போர்டில் இரு பக்கமும் அசையும் நிலையில் உள்ள ஸ்விட்ச் மூலம் இந்த விளக்குகள் இயங்கும்.

– என்னும் அம்புக்குறியுடன், டேஷ் போர்டில் உள்ள பச்சை நிற இன்டிகேட்டர் மூலம், டிராக்டர் எந்தப் பக்கம் திரும்புகிறது எனத் தெரிந்து கொள்ளலாம்.

டிராக்டரை இடப்பக்கம் திருப்பினால், ஸ்விட்ச்சை இடப்புறம் நகர்த்த வேண்டும். உடனே டிராக்டரில் உள்ள ஆரஞ்சு விளக்குகள் எரியும்; டேஷ் போர்டில் உள்ள இடப்பக்கம் திரும்பும் அம்புக்குறியும் எரியும்.

ஆபத்துக்கால ஸ்விட்ச்

இதுவும், அசையும் ஸ்விட்ச் தான். இதை இயக்கும் போது, முன்னும் பின்னும் மட்கார்டுகளில் உள்ள திரும்பும் விளக்குகள் பளிச் பளிச்சென அணைந்து அணைந்து எரியத் தொடங்கும்.

சாலையில் வாகனம் பழுதாகி நின்று விட்டால், ஆபத்துக்கால ஸ்விட்ச்சைப் பயன்படுத்த வேண்டும்.

டயர்களின் காற்றழுத்தம்

டிராக்டர் நிறுவனம் கூறியுள்ளபடி, டயர்களின் காற்றழுத்தத்தைப் பராமரித்தால், டயர்கள் வெகுநாட்கள் உழைப்பதுடன், இழுவை சக்தியும் அதிகமாகும்.

அளவுக்கு அதிகமாகவோ, குறைவாகவோ டயர்களில் காற்றழுத்தம் இருந்தால், டயர்களின் பயன்படு காலம் குறைந்து விடும்.

காற்றுக் குறைவாக இருந்தால், அளவுக்கு அதிகமாகத் தொய்வு ஏற்பட்டு, டயரின் பக்கவாட்டுச் சுவர், கயிறு கட்டுமானம் பலவீனம் ஆகும். இதனால், கயிறு விலகிப் பக்கச் சுவரில் கீறல் விழும்.

அதைப் போல, காற்று அதிகமாக இருந்தால், டயரின் ட்ரெட் மிகுதியாகும்; வேகமாகத் தேய்ந்தும் போகும்.


PB_Kamaraj

முனைவர் ப.காமராஜ், முனைவர் மா.சரவணக்குமார், பண்ணை இயந்திரவியல்,

வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், குமுளூர், திருச்சி – 621 712.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks