செழிப்பைத் தரும் செல்லப் பறவைகள் வளர்ப்பு!

பறவை budgies birds budgerigar 637d8e6fb185e7548822c9bbfe24a945

மிழ்நாட்டில் தற்போது நகர்ப்புற இளைஞர்களிடம் செல்லப் பறவைகள் வளர்ப்பு பிரபலமாகி வருகிறது. வணிக நோக்கில் வளர்த்து நல்ல இலாபம் ஈட்டி வருகின்றனர்.

வீட்டில் அழகு, பொழுது போக்கு மற்றும் மகிழ்ச்சியைத் தரும் செல்லப் பறவைகள், குழந்தைகளின் அன்புக்குரிய உயிர்களாக விளங்குகின்றன.

செல்லப் பறவைகளுடன் இருக்கும் போது, மனதிலுள்ள பிரச்சனைகள் அனைத்தும் மறந்து போகும் என்கின்றனர், செல்லப் பறவைகளை வளர்ப்போர்.

இத்தகைய செல்லப் பறவைகளை முறையாக வளர்த்தால் நல்ல வருமானமும் கிடைக்கும். கிளிகள், அன்புப் பறவைகள், காக்டெயில்ஸ், பஞ்சவர்ணக் கிளி, புறா, மைனா போன்றவற்றைச் செல்லப் பறவைகளாக வளர்க்கலாம்.

பறவைகள் தேர்வு

நல்ல நிலையில் உள்ள பறவைகளைத் தேர்வு செய்ய வேண்டும். அதாவது, கண்கள் தெளிவாகவும், நீர் வடியாமலும் இருக்க வேண்டும். இறகுகள் அடர்த்தியாக, அலகுகள் சீராக இருக்க வேண்டும். ஆசனவாய்ப் பகுதியில் எச்சம் அதிகமாக இருக்கக் கூடாது.

புதிதாக வாங்கும் பறவைகளை ஒரு மாதம் வரையில் தனியாக வைத்திருந்து மற்ற பறவைகளுடன் சேர்க்க வேண்டும். ஆண் பறவைகளின் நுனியலகு நீல நிறத்திலும், பெண் பறவைகளின் நுனியலகு வெள்ளை நிறத்திலும் இருக்கும். இப்படி, ஆண் மற்றும் பெண் பறவைகளைத் தேர்வு செய்ய வேண்டும்.

கூண்டு வளர்ப்பு

இரண்டு பறவைகளுக்கு 60x40x40 செ.மீ. அளவுள்ள கூண்டு தேவைப்படும். கூண்டில் இரண்டு பானைகளைக் கட்டி வைத்தால், அவை முட்டையிட்டு அடை காக்க உதவும். செல்லப் பறவைகளை வளர்க்கத் தேவைப்படும் கூண்டும் இடமும் சரியான அளவில் இருக்க வேண்டும்.

கூண்டில் வளரும் செல்லப் பறவைகளை நல்ல காற்றோட்டம் உள்ள அறையில் வைத்துப் பராமரிக்க வேண்டும். பறவைகள் இளைப்பாறக் கூண்டுக்குள் கட்டை வைத்தல் அவசியம்.

தீவனம் மற்றும் குடிநீர்ப் பாத்திரமும் அவசியம் இருக்க வேண்டும். குடிநீர்ப் பாத்திரம் பாதுகாப்பு உள்ளதாக இருக்க வேண்டும். ஏனெனில், இதில் பறவைகள் விழுந்து வெளியேற முடியாமல் தவிப்பதற்கு வாய்ப்புண்டு.

இனவிருத்தி

இனவிருத்திக்கு ஆறு மாதப் பறவைகளைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனாலும், பத்து மாதம் கழித்து இனவிருத்தி செய்தால், பொரிக்கும் திறனுள்ள முட்டைகள் கிடைக்கும்.

இந்தப் பறவைகள் ஒவ்வொரு முறையும் 4-6 முட்டைகளை இட்டு அடை காக்கும். அடைக்காலம் 18-21 நாட்களாகும். குஞ்சுகளுக்கு ஆண் பறவையும் பெண் பறவையும் சேர்ந்து உணவூட்டிப் பாதுகாக்கும்.

ஓராண்டில் 3-4 முறை இப்பறவைகள் முட்டையிட்டு அடை காத்துக் குஞ்சுகளைப் பொரிக்கும். பெண் பறவைகளை நான்கு ஆண்டுகளும், ஆண் பறவைகளை ஆறு ஆண்டுகளும் இனவிருத்திக்குப் பயன் படுத்தலாம்.

பறவைகள் முட்டை வைக்கும் நேரத்தில் அதற்கான பானையில் மண் அல்லது மரத்தூள் அல்லது காகிதத் தூளை ஆழ்கூளமாக இட்டு வைக்க வேண்டும்.

இது, முட்டைகளை உடையாமல் காப்பதுடன், அடை காக்கும் பெண் பறவை மற்றும் குஞ்சுகளின் எச்சத்தை உறிஞ்சிக் கொள்ளும்.

தீவனம்

நேசப் பறவைகளுக்குச் சரியான தீவனமும் குடிநீரும் அளித்துப் பராமரிக்க வேண்டும். இந்தப் பறவைகள் தினையை விரும்பி உண்ணும்.

இத்துடன் கம்பு, கேழ்வரகு, சாமை, கோதுமை, குதிரைவாலி, சோளம், மற்றும் காய்கறி விதைகளையும் சேர்த்துக் கொடுக்கலாம்.

சீமைப் பொன்னாங் கண்ணி, பசலைக்கீரை, கொத்தமல்லி, முட்டைக்கோசு, விதை நீக்கிய ஆப்பிள், புருக்கோலி ஆகியவற்றையும் உணவாகத் தரலாம். கடல் நுரையைச் சுண்ணாம்புச் சத்துக்காகச் சேர்த்தல் வேண்டும். குடிநீரில், ஏ, ஈ ஆகிய வைட்டமின்களைக் கலந்து கொடுக்க வேண்டும்.

நோய்ப் பாதுகாப்பு

கூண்டுக்குள் செய்தித் தாளை விரித்து வைத்துக் கழிவை அடிக்கடி அகற்ற வேண்டும். கூண்டில் மீந்திருக்கும் உணவு மற்றும் குடிநீரைத் தினமும் மாற்ற வேண்டும்.

சரியாகச் சுத்தம் செய்யாத உணவு மற்றும் குடிநீரால் கோலிபாம் என்னும் நுண்ணுயிரி நோய் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

பறவைகள் சுறுசுறுப்பு இல்லாமல் சிறகுகளைச் சிலிர்த்திருப்பது, எச்சம் நிறமாறி இருப்பது, அவற்றின் உடல்நிலை சரியில்லை என்பதன் அறிகுறிகள் ஆகும்.

இந்நிலையில், கால்நடை மருத்துவரை உடனே அணுகித் தகுந்த சிகிச்சை யளிக்க வேண்டும். பறவைகளுக்குத் தடுப்பூசி தேவையில்லை. செல்லப் பறவைகளை முறையாக வளர்க்கும் போது, கூட்டைத் திறந்து விட்டாலும் அவை எங்கும் ஓடி விடாமல் நம்மைச் சுற்றியே நிற்கும்.

எனவே, இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் செல்லப் பறவைகளைச் சரியாக வளர்த்து, இனப்பெருக்கத் திறனை அதிகரித்து, அதிகளவில் குஞ்சுகளைப் பொரிக்கச் செய்து, அவற்றை விற்பனை செய்வதன் மூலம், அதிக வருவாயைப் பெற்று, வளமாக வாழலாம்.


PB_DEVAKI

முனைவர் க.தேவகி, முனைவர் ப.இரா.நிஷா, வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம், செங்கல்பட்டு – 603 203.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading