அளவறிந்து உண்ண வேண்டும். அதுவும், பசித்த பின் புசி என்று அவ்வை சொன்னார். நடப்பில் இந்த இரண்டையும் கடைப்பிடிப்பது எளிதல்ல. பசி வருமுன்பே வெளியில் புறப்பட வேண்டியுள்ளது. போகிற இடத்தில் நல்ல உணவு கிடைப்பது எளிதல்ல.
விருந்துக்குப் போன இடத்தில் சாப்பிட்ட்டுப் போங்கள் என்னும் உபசரிப்பை மீற முடியவில்லை. வடை, பாயசம் என்னும் சொற்களே இனிக்கின்றன. முடிவில், சாப்பிட ஒரு பழம் கொடுக்கிறார்கள். பக்கத்து இலைக்காரர் மேலும் ஒரு கரண்டி பாயசம் ஊற்றும்படி பரிந்துரை செய்கிறார்.
இத்தகைய சூழ்நிலையில் நடப்பது என்ன? அளவுக்கு அதிகமாக உண்கிறோம். பசிக்கும் முன்பே உண்கிறோம். இதன் விளைவு என்ன?
இரைப்பை அமிலத்தைச் சுரந்து விடுகிறது. வயிறு முட்ட உண்ட உணவு புரள்கிறது. இடப் பற்றாக்குறை காரணமாக, நுரையீரல், இதயம் நெருக்கடிக்கு உள்ளாகி மூச்சு முட்டுகிறது.
கூழாக்கப்படும் உணவு, உணவுக் குழாயில் புகுந்து தொண்டை வரை மேலேறுகிறது. உணவுக் கூழுடன் அமிலமும் சேர்ந்து மேலேறுவதால், தொண்டையில் எரிச்சல் வருகிறது.
இதற்கு என்ன சிகிச்சை? வாய்க்குள் விரலை விட்டு வாந்தி எடுப்பதை விடவும் சிறந்த மருத்துவம் எதுவும் கிடையாது. இதனால் அறிய வேண்டியது என்ன? பசித்த பின் புசி.
விருந்து படைப்போர் அறிய வேண்டியது இதுதான்: இன்னும் கொஞ்சூண்டு என்று வற்புறுத்த வேண்டாம்.
நோயினைக் கொண்டாடுவோம் என்னும் நூலில் இருந்து…
சந்தேகமா? கேளுங்கள்!