சுகாதாரச் சீர்கேட்டையும் பொருளாதார இழப்பையும் ஏற்படுத்துவதில் எலிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பிளேக் உள்ளிட்ட 120 நோய்கள் பரவ எலிகள் காரணமாயிருக்கின்றன. அதைப்போல, வயல்களிலும் சரி, சேமிப்புக் கிடங்குகளிலும் சரி, உணவு தானியங்களைச் சேதப்படுத்திப் பயனற்றுப் போகச் செய்கின்றன.
ஓராண்டுக்கும் மேல் ஆயுள் காலத்தைக் கொண்டிருக்கும் எலிகளால் சேதத்திற்கு உள்ளாகும் முக்கியப் பயிர் நெற்பயிராகும். ஆறு எலிகள் ஒன்று சேர்ந்தால் ஒரு மனிதனுக்குத் தேவையான உணவைக் காலிபண்ணி விடும். உண்பதைப் போல ஐந்து மடங்கு உணவை இந்த எலிகள் வீணாக்கி விடுகின்றன என்பது முக்கியச் செய்தி.
வயல்களில் உள்ள நெற்பயிர்களின் தூர்களை வெட்டியும், நெற்கதிர்களைச் சேதப்படுத்தியும், தானியங்களை வளைகளுக்குள் சேமித்து வைத்தும், விவசாயிகளுக்கு அதிக இழப்பை ஏற்படுத்துகின்றன இந்த எலிகள். எனவே, இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டியது மிகமிக அவசியம்.
இதற்கு, வயல்களிலுள்ள பெரிய வரப்புகளைச் சிறியனவாக மாற்றியமைக்கலாம். மறைவைத் தரும் களைச் செடிகளை அழிக்கலாம். கிட்டி முறையில் எலிகளைப் பிடித்து அழிக்கலாம். வயல்களில் ஒன்பதடி உயரத்தில் பறவைகள் அமரும் வகையிலான இருக்கைகளைப் பரவலாக அமைத்து வைக்கலாம். இது, இரவில் இரை தேடும் பறவைகளான ஆந்தை, கோட்டான் போன்றவை இரவு நேரங்களில் இந்த இருக்கைகளில் இருந்து கொண்டு, வயல்களில் உலாவும் எலிகளைப் பிடித்து உண்ண ஏதுவாக இருக்கும்.
இதைப்போல, பசை கலந்த அட்டைகளைப் பயன்படுத்தியும் எலிகளை அழிக்கலாம். சாணம் கலந்த தண்ணீர்ப் பானைகளை வயல்களில் புதைத்து வைத்து எலிகளைக் கவர்ந்து அழிக்கலாம். துத்தநாக பாஸ்பேட், புரோமோடைலான் விஷக்கட்டிகளைப் பயன்படுத்தியும் எலிகளை அழிக்கலாம். தேங்காய்த் துருவலுடன் குண்டு பல்பைத் தூளாக்கிக் கலந்து உணவாக வைப்பதன் மூலம் எலிகளை அழிக்கலாம். வயல் எலிகளை ஒழிப்பதற்கு ஏற்ற பருவம், சாகுபடியில்லாத கோடைக்காலமாகும்.
பல்வேறு இடையூறுகளைத் தாங்கி விவசாயத்தை மேற்கொண்டு வரும் வேளாண் பெருமக்கள், விளைச்சலில் பாதிப்பை ஏற்படுத்தும் எலிகளைக் கட்டுப்படுத்துவதிலும் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்.
பசுமை
சந்தேகமா? கேளுங்கள்!