செய்தி வெளியான இதழ்: 2018 ஆகஸ்ட்.
மூட்டு வலி, முதுகு வலி, காது வலி, கண் வலிக்கு ஆலோசனை சொல்வதைப் போல, சர்க்கரை நோய்க்கு மருந்து சொல்லக் கூடாதா எனக் கேட்பவர்கள் பலர். அவர்களிடம் நான், இந்த நோய் ஏன் வந்தது என்று புரிகிறதா என்று ஒரு கேள்வியைத் திரும்பக் கேட்பேன்.
ஏன் வந்தது, எவ்விதப் பழக்கத்தால் வந்தது என்பதை அறிந்து, அதைத் தவிர்த்து விட்டால் நோய் சரியாகி விடும். சர்க்கரை நோய்க்கு மட்டுமல்ல, எல்லா நோய்க்கும் இது பொருந்தும். இந்த விளக்கத்தை எல்லோரிடமும் சொல்லிச் சிந்திக்க வைப்பது என் அணுகுமுறை.
அவசரப்படாதே காரியம் சிதறி விடும், பதட்டப்படாதே பண்டம் சிதைந்து விடும் என்பன நம் பழமொழிகள். நம்மால் தான் எல்லாமே நடப்பதாகவும், நாம் இல்லையேல் எதுவுமே நடக்காது எனவும், ஒரு மாயையை ஏற்படுத்திக் கொண்டு, எதிலும் அவசரப்படுவது நமக்குப் பழக்கமாகி விட்டது.
எதில் அவசரப்பட்டாலும் சாப்பிடுவதில் அவசரம் காட்டினால், சர்க்கரை நோய் தான். சற்று நிதானமாகச் சிந்தித்துப் பாருங்கள். நின்று கொண்டே வாயில் போடுவதில், மெல்லுவதில், விழுங்கி விட்டு ஓடுவதில் எவ்வளவு அவசரம் காட்டுகிறோம்!
அவசரப்பட்டால் என்ன என்கிறீர்களா? அதில் தான் அத்தனை சிக்கல்களும் அடங்கியுள்ளன. விருந்துகளில் முதலில் இனிப்பை வைப்பது எதற்காக? இப்போது, உங்களுக்குப் பிடித்த இனிப்பை யாரோ கொடுப்பதாகவும், நீங்கள் அதை ருசித்து உண்பதாகவும் கற்பனை செய்து பாருங்கள். வாயில் எச்சில் ஊறுகிறதா இல்லையா?
இதற்காகத் தான் இனிப்பு வைக்கப்படுகிறது. உண்ணும் உணவுடன் இந்த உமிழ்நீர் நன்றாகக் கலக்கும் வகையில், மென்று அரைத்துச் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்குச் சர்க்கரை நோய் வருவதில்லை.
ஒருநாளில் நம் வாயில் ஒன்றரை லிட்டர் உமிழ்நீர் சுரக்கிறது. இந்த உமிழ்நீருடன் நன்கு கலந்து உள்ளே அனுப்பப்படும் உணவு மட்டுமே முழுமையாகச் செரிக்கும்.
ஊறுகாயில் உள்ள உப்பை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டு, ஊறுகாய் ஊறு செய்யும் காய் என்று சொல்லி வருகிறோம். ஊறுகாய் உமிழ்நீரை ஊற வைக்கும். அந்த உப்பு, உமிழ்நீர்ச் சுரப்பைத் தூண்டி விடும்.
விருந்தின் போது உப்பையும் சிறிது வைப்பார்கள். எந்த உணவுப் பொருளிலாவது உப்புக் குறைவாக இருந்தால், போட்டுக் கொள்வதற்காக இந்த உப்பு வைக்கப்படுவதாக நாம் நினைப்போம்.
ஆனால், இதன் முக்கிய நோக்கம் இதுவல்ல. விருந்தில் வைக்கப்படும் உப்பை, நுனி விரலில் தொட்டுச் சுவைத்து விட்டால் உமிழ்நீர் மளமளவெனச் சுரந்து வெளியேறும். இதற்காகத் தான் உப்பு வைக்கப்படுகிறது.
ஆக, இனிப்பும் உப்பும் உமிழ்நீரைச் சுரக்கச் செய்வதற்காகத் தான் வைக்கப்படுகின்றன என்பது இப்போது உங்களுக்கு நன்றாகப் புரியும். உமிழ்நீர்ச் சுரப்பு தான் இன்சுலின் சுரப்பையும், என்சைம் என்னும் நொதிநீர்ச் சுரப்பையும் தூண்டுகிறது.
உமிழ்நீரில் நன்கு கலந்து விழுங்க வேண்டும் என்பதற்காகத் தான், உணவைக் குடி என்று சொல்கிறோம். வாயில் செரிக்காததா வயிற்றில் செரிக்கப் போகிறது என்னும் பழமொழியின் பொருளும், உமிழ்நீருடன் உணவை நன்கு கலந்து விழுங்க வேண்டும் என்பது தான். நொறுங்கத் தின்றால் நூறு ஆயுசு என்னும் பழமொழியும் இந்த நோக்கத்தில் வந்தது தான்.
அள்ளி அமுக்கினால் அல்ப ஆயுசு என்னும் பழமொழி, அவசரமாக உண்பதால் ஏற்படும் கெடுதலை நேரடியாகச் சொல்வதாகும். உமிழ்நீரில் கலக்காமல் உணவை விழுங்கினால், எந்தச் சுரப்பும் நிகழாமல் செரிமானம் தடைபடும்; அல்லது சீர்கெடும். இதன் விளைவு தான் சர்க்கரை நோய்.
நம் உடலில் கண்ணீர் சுரக்கிறது; உமிழ்நீர் சுரக்கிறது; சிறுநீர் சுரக்கிறது; மாதவிடாய் சுரக்கிறது; பால் சுரக்கிறது; விந்துநீர் சுரக்கிறது; மற்ற சுரப்பிகள் சுரக்கின்றன. இந்த இன்சுலின் மட்டும் எப்படிச் சுரக்காமல் நின்று விடுகிறது? அப்படியானால் ஏதோ தவறு நம்மிடம் இருக்கிறது என்று தானே பொருள்?
சர்க்கரை நோயாளிகள் பலரின் உடலில் சூரிய ஒளி படுவதற்கு வாய்ப்பே இல்லை. சூரிய ஒளி அடிப்படைத் தேவைகளில் ஒன்று என்பது, பலருக்குப் புரியவில்லை. சூரிய ஒளி நரம்பு மண்டலத் தூண்டியாகும்.
அதிலும் நாம் போடும் பாலியஸ்டர் சட்டை, சூரிய ஒளியை உள்ளே ஊடுருவ விடாமல் தடுத்து விடும். சூரியனைப் பகைத்தால் சோம்பி விடும் வாழ்க்கை, என்று நம் முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள்?
நாம் உண்ணும் எந்த உணவும் சர்க்கரையாகச் செரித்துத் தான் இரத்தத்தில் சுற்றி வருகிறது. அது எரிந்து அவ்வப்போது சக்தியைக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அதை ஈடு செய்ய நாம் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
அப்படி நாம் சாப்பிடும் உணவு பயன்படாத போது, இருக்க இடமில்லாமல், சிறுநீரகம் வழியே சர்க்கரையாக வெளியேறி விடும். பெருந்தீனி, பசியில்லாமல் சாப்பிடுவது, உடல் உழைப்பு இல்லாமல் வாழ்வது தான், சர்க்கரை வெளியேறக் காரணங்கள்.
சின்னஞ்சிறிய யோகப் பயிற்சியைச் சர்க்கரை நோயாளிகள் செய்து வருவது நல்லது. மார்புக்கு நேராக இரு கை கூப்பி வணக்கம் போடுவதைப் போல, உள்ளங்கைகள் வெளியே தெரியும் வகையில் புறங்கைகளை ஒன்றாக இணைத்து, கண்களை மூடிச் சிறிது நேரம் தியானம் செய்ய வேண்டும். தினமும் இந்தப் பயிற்சியைச் செய்வது, சர்க்கரை நோயாளிகளுக்கு நலம் கூட்டும்.
வாழ்க்கை அனைத்தும் வாயில் இருக்கிறது என்பது தான் அடிப்படைத் தத்துவம். அவசரப்படாத சாப்பாடு; தேவையான அளவு சாப்பாடு; பசித்த பிறகான சாப்பாடு என எல்லாமே இருப்பது நம் கையில் தான்.
மருத்துவர் காசிபிச்சை, தலைவர், இயற்கை வாழ்வியல் இயக்கம், திருமானூர் – 621 715.
சந்தேகமா? கேளுங்கள்!