செய்தி வெளியான இதழ்: 2018 மார்ச்.
லெம்னா பாசிக்கு இயற்கையாகவே நிறைய மூல ஆதாரங்கள் உள்ளன. இதன் வளர்ச்சி, சரியான வெப்பநிலை, நீர்த்தரக் காரணிகள், ஒளி ஆகியவற்றைப் பொறுத்து அமைகிறது.
இது, குளங்களில் அதிகமாக வளரும். காற்றோட்டம் உள்ள கலன்களைக் கொண்டு இதைச் சேகரிக்க வேண்டும். இந்தக் கலன்களை ஏன் பயன்படுத்த வேண்டும்?
லெம்னா பாசியைச் சேகரிக்கப் பயன்படும் கலனை, சூரியவொளி படும் இடத்தில் வைக்கும் போது, அந்தக் கலனில் அதிக வெப்பநிலை உருவாகும் தன்மை தடுக்கப்படுகிறது. நீரை, தகுந்த நேரத்தில், அதாவது மாதம் ஒருமுறை மாற்ற வேண்டும்.
அப்படி மாற்றா விட்டால், நீரின் ஆவியாகும் தன்மை அதிகரித்து, அதிக உப்புத்தன்மை உருவாகி விடும். இது, லெம்னா பாசியின் வளர்ச்சியைத் தடுக்கும். எனவே, சரியான நேரத்தில் நீரை மாற்றுவது மிகவும் முக்கியம்.
செயற்கைக் கடல்நீர் மற்றும் ஊட்ட ஊடகத்தில் (ஹோக்லேன்ட் கரைசல்) இதன் வளர்ச்சி காணப்பட்டுள்ளது. ஹோக்லேன்ட் கரைசலின் கார அமிலத் தன்மையைச் சரியான அளவில் வைத்திருக்க வேண்டும்.
இயற்கையில் இருந்து சேகரித்த லெம்னா பாசியுடன், சேதம் விளைவிக்கும் பலவித நுண்ணுயிரிகளும் இருப்பதால், அதைச் சுத்தமாகப் பராமரிப்பது மிகவும் அவசியம்.
முதலில், சேதமடைந்த மற்றும் முதிர்ந்த லெம்னா பாசியை நீக்க வேண்டும். பிறகு, தேர்வு செய்த லெம்னா பாசியை, சுத்தமான நீரில் கழுவ வேண்டும். இதன் மூலம் தேவையற்ற மாசு மற்றும் நுண்ணுயிர்க் கிருமிகள் நீக்கப்படும்.
லெம்னா பாசியின் வாழ்வியல் பண்புகள்
மிதக்கும் தன்மையுள்ள லெம்னா பாசி அளவில் சிறியது. அடர்த்தியாக வளரும் பண்புள்ளது. சத்துகள் மிகுந்த நன்னீர் மற்றும் உவர்நீரில் இருக்கும். இது, லெம்னேசியா தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. லெம்னா பாசியின் வளர்ச்சிக்கு உகந்த வெப்பநிலை 6-33 டிகிரி செல்சியஸ்.
இந்தப் பாசியின் இலைகள் தட்டையாக நீள்வட்ட வடிவத்தில் இருக்கும். இது, சல்லிவேர்த் தொகுப்பைக் கொண்டது. குளிர் மற்றும் பாலைவனப் பகுதிகளிலும் இதை அவ்வப்போது காண முடியும். அதிகக் காற்று மற்றும் அலைகள் உள்ள இடத்தில் இந்தப் பாசியால் வளர முடியாது.
தொற்று நீக்கிய வளர்ப்பு முறையில் லெம்னா பாசி வளர்ப்பு
லெம்னா பாசி, சுத்தமான நிலையில் மட்டுமே வளரும். சிக்கலான நுண்ணுயிர் வளர்சிதை மாற்றம் இல்லாத போது, தொற்று நீக்கிய வளர்ப்பு முறை மூலம், லெம்னா பாசியின் கரிம, இரசாயன, வேதியியல் மற்றும் சத்துகளை அறிந்து கொள்ளலாம்.
தொற்று நீக்கிய வளர்ப்பு முறையில், காற்றுப் புகாத கலன்கள் பயன்படுவதால், நுண்ணுயிர்களால் ஏற்படும் தீய விளைவுகள் தடுக்கப்படும். 10-50 சத சோடியம் ஹைப்போ குளோரைடு கரைசலில், வாத்துப் பாசியை அதிகளவாக ஒரு நிமிடம் வரை பராமரிக்க வேண்டும். இந்நிலையில், மெதுவாகக் கரைசலில் உள்ள குளோரின் ஆவியாகும் நிலை ஏற்படும்.
ஒவ்வொரு முறையும் சுத்தமான நீரால் கழுவிய பிறகு தான் வளர்ப்புக் கலனுக்கு லெம்னா பாசியை மாற்ற வேண்டும். இப்படி, மாற்றும் போது நெருப்பு மூட்டப்பட்ட நுண்ணுயிர்க் கம்பி வலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
தொற்று நீக்கிய வளர்ப்பு முறையில், லெம்னா பாசியைத் தேர்வு செய்வதற்கு, அதை ஊடகக் கரைசலில் (சர்க்கரை, நொதி மற்றும் ட்ரிப்டோஃபேன்) பராமரிக்கும் போது தீமை செய்யும் நுண்ணுயிர்க் கிருமிகள் கண்ணுக்குப் புலப்படும்.
இந்தக் கிருமிகளை அகற்றுவது மிகவும் முக்கியமான செயலாகும். ஊடகக் கரைசலை, அழுத்த அனற் கலத்தில் வைத்துச் சுத்தம் செய்த பிறகே பயன்படுத்த வேண்டும்.
சில தாதுகள், கரைசலில் வீழ்ப்படிவமாக ஆகும் நிலை உள்ளது. இதைத் தடுப்பதற்கு, வெப்பமூட்டிய பிறகு அவற்றைக் குளிரூட்ட வேண்டும். இதனால் கரிமச் சத்துகள் மற்றும் தாதுகள் கரைசலில் வீழ்ப்படிவமாக ஆகாமல் கரைந்த நிலையிலேயே காணப்படும்.
லெம்னா பாசியின் வளர்ச்சிக்குத் தேவையான ஊடகக் கரைசலில் உள்ள பொருள்கள், 1 சத சர்க்கரை, குழம்பான இரும்பு, கடற்பாசிக் கூழ் (அகார்) ஆகும்.
லெம்னா பாசியின் வளர்ச்சிக்கு ஏற்ற வரம்புகள்
உப்புத்தன்மை: 8 பிபிடி
கார அமிலத் தன்மை: 6.5-7.5
அம்மோனியா: 0.1 மி.கி./லிட்டர்
நைட்ரஜன்: 40 சதம்
வெப்பநிலை: 6-33 டிகிரி செல்சியஸ்
லெம்னா பாசியின் வளர்ச்சிக்கு உரமிடும் முறைகள்
லெம்னா பாசியின் அதிவேக வளர்ச்சிக்கு, அழுகிய அல்லது மட்கிய கரிம உரங்கள் மிகவும் முக்கியம். லெம்னா பாசிக்கு உரமிடும் முறைகள் பின்வருமாறு:
நீரில் கலக்கும் முறை: தேவையான உரத்தைச் சரியான அளவில் எடுத்துக் கொண்டு, நீரில் நன்கு கலக்கிய பிறகு தான், லெம்னா பாசி வளர்ப்புக்குப் பயன்படுத்த வேண்டும்.
பரப்புமுறை: அம்மோனியா அயனி, லெம்னா பாசி வளர்ப்புக்கு ஏற்றதாகும். லெம்னா பாசியை உயர் வெப்ப நிலையில் பராமரிப்பதைத் தடுக்க வேண்டும். ஏனெனில், அந்நிலையில் நீரில் இருக்கும் பாஸ்பரஸ் மற்றும் நைட்ரஜன் அளவு கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும்.
யூரியா மிக எளிதாக அம்மோனியாவாக மாறும் என்பதால், அதை லெம்னா பாசி வளர்ச்சிக்குப் பயன்படுத்துவது மிகவும் நல்லது.
லெம்னா பாசி வளர்ச்சிக்குத் தேவையான உரங்கள்: நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம், யூரியா மற்றும் சூப்பர் பாஸ்பேட். ஓராண்டில் எக்டருக்கு 10-30 டன் மகசூல் கிடைக்கும்.
லெம்னா பாசி வளர்ப்பு- பாய்வு நிரல் படம்
லெம்னா பாசியைக் காற்றோட்டம் உள்ள கலனைக் கொண்டு சேகரித்தல். முதிர்ந்த லெம்னா பாசியை அகற்றுதல். தேர்ந்தெடுத்த பாசியை நன்னீரில் கழுவுதல். நுண்ணுயிர்க் கிருமிகளை அகற்றுதல்.
வளர்ச்சிக்கு ஏற்ப உரமிடுதல். ஊடகக் கரைசலில் பராமரித்தல். தேவைக்கேற்ற நீர்த்தரக் காரணிகளை மேம்படுத்தல். அறுவடைக்கு ஏற்ற முதிர்ச்சியடைதல். அறுவடை செய்தல். உணவாகப் பயன்படுத்துதல்.
லெம்னா பாசியில் உள்ள சத்துகள்
லெம்னா பாசியில் 92-94 சதம் நீர்ச்சத்து உள்ளது. நார்ச்சத்தும் சாம்பல் சத்தும் அதிகமாகவும், புரதச்சத்து குறைவாகவும் இருக்கும். நார்ச்சத்தின் அளவு 5-15 சதமாகும்.
புரதத்தின் அளவு 35-43 சதமாகும். நிறைவுறாக் கொழுப்பு 5 சதம் உள்ளது. இந்த அளவுகள் சிற்றினத்தைப் பொறுத்து வேறுபடும்.
நன்மைகள்
இன முதிர்ச்சியடைந்த கோழிகளுக்கு லெம்னா பாசி மிகச் சிறந்த உணவாகும். ஏனெனில் லெம்னா பாசியில், தாவரப் புரதமும் மாவுச்சத்தும் அதிகம். பன்றிகளுக்கும் லெம்னா பாசி மிகச் சிறந்த புரத மூல உணவாகும். இந்தப் பாசியை, அசை போடும் விலங்குகளுக்கும் உணவாகத் தரலாம்.
ஏனெனில், நுண்ணுயிர்ச் சிதைவிலிருந்து பாதுகாக்கும் தன்மையை இது வழங்குகிறது. லெம்னா பாசியில் வைட்டமின்கள் ஏ, பி அதிகமாக உள்ளதால், நமக்கும் உணவாகப் பயன்படுகிறது.
வேகமாக எடையைக் கூட்டும் தன்மையுள்ள லெம்னா பாசி, திலேப்பியா மற்றும் கெண்டை மீன்களுக்கு மிகச் சிறந்த உணவாகும். மீன் குஞ்சுகளுக்கும், அவற்றின் வாய் அளவைப் பொறுத்து, லெம்னா பாசியை உணவாக இடலாம்.
அ.தனலெட்சுமி, கி.லாய்ட் கிறிஸ்பின், க.காரல் மார்க்ஸ், மி.வசந்தராஜன், ப.வேல்முருகன், முதுகலைப் பட்டமேற்படிப்பு நிலையம், ஓ.எம்.ஆர் வளாகம், வாணியன்சாவடி.
சந்தேகமா? கேளுங்கள்!