வேளாண்மைப் பொறியியல் துறையும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் இணைந்து நடத்தும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி விவரம்.
நோக்கம்
திறம்பட வாழ, திறமை அவசியம். ஊரகப் பகுதிகளில் இயந்திரங்களைப் பயன்படுத்தினால் மட்டும் போதாது. அவற்றை இயக்கவும், பழுது பார்க்கவும் தெரிய வேண்டும். எனவே, உரிய நேரத்தில் வேளாண் இயந்திரங்களை இயக்கும், திறமை வாய்ந்த ஓட்டுநர்களை உருவாக்குவது அவசியம்.
டிராக்டர், அறுவடை இயந்திரங்களை இயக்குதல், பராமரித்தல், கையாளுதல், வேலை வாய்ப்பற்ற 500 கிராமப்புற இளைஞர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தல், வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் தங்கள் நிலங்களிலேயே பழுது நீக்கிப் பராமரித்தல் ஆகியன இந்தத் திட்டத்தின் நோக்கங்கள் ஆகும்.
இதற்காக, வேளாண்மைப் பொறியியல் துறையும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் இணைந்து, வேலை வாய்ப்பற்ற கிராமப்புற இளைஞர்கள் பயன் பெறும் வகையில்,
வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தி பம்பு செட்டுகள் பழுது பார்த்தல் மற்றும் பராமரித்தல் குறித்த பயிற்சியை, வேலூர், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, திருவாரூர், திருநெல்வேலி ஆகிய, ஆறு இயந்திரப் பணிமனைகளில் அளித்து வருகிறது.
தகுதி வரம்பு
பத்தாம் வகுப்பு அல்லது தொழில் முறை பயிற்சியில் (ITI) தேர்ச்சி பெற்ற, 18 முதல் 45 வயது வரையுள்ள இளைஞர்கள், இந்தப் பயிற்சியில் இணைந்து பயன் பெறலாம்.
திட்டப் பகுதி
சென்னை நீங்கலாக, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்கள்.
பயிற்சி விவரம்
பயிற்சி 1: டிராக்டர் ஓட்டுநர்
குறைந்தளவு கல்வித் தகுதி மற்றும் அனுபவம்: 12 ஆம் வகுப்புத் தேர்ச்சி அல்லது அங்கீகாரம் உள்ள நிறுவனத்தில் இருந்து பெற்ற, தொழில் பயிற்சி (I.T.I) அல்லது பட்டயப் படிப்புடன் (டிப்ளமோ) தொடர்புடைய துறையில் 6 மாத அனுபவம்.
அல்லது, 10 ஆம் வகுப்புத் தேர்ச்சியுடன், தொடர்புடைய துறையில் ஓராண்டு அனுபவம்.
அல்லது, 8 ஆம் வகுப்புடன், தொடர்புடைய துறையில் மூன்று ஆண்டு அனுபவம்.
வழங்கப்படும் பயிற்சி விவரம்: டிராக்டர் மற்றும் அறுவடை இயந்திரங்களை இயக்குதல் மற்றும் பராமரித்தல்.
வயது வரம்பு: 18 முதல் 45 வயது வரை.
பயிற்சி எண்ணிக்கை: 20.
பயிற்சி மையங்கள்: வேலூர், கோயம்புத்தூர், திருச்சி, திருவாரூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் அமைந்துள்ள, ஆறு அரசு இயந்திரப் பணி மனைகள்.
பயிற்சி பெறுவோர்: 25 பேர்.
பயிற்சிக் காலம்: தினமும் 8 மணி நேரம் வீதம் 48 நாட்கள்.
பயிற்சி 2: வேளாண் இயந்திரங்கள் விளக்கம் அளிப்பவர்
குறைந்தளவு கல்வித் தகுதி மற்றும் அனுபவம்: 12 ஆம் வகுப்புத் தேர்ச்சியுடன், நான்கு ஆண்டு அனுபவம்.
அல்லது, 10 ஆம் வகுப்புத் தேர்ச்சியுடன், அங்கீகாரம் உள்ள நிறுவனத்தில் இருந்து பெற்ற தொழில் பயிற்சி (I.T.I) அல்லது பட்டயப் படிப்புடன் (டிப்ளமோ) தொடர்புடைய துறையில் 2 ஆண்டு அனுபவம்.
வழங்கப்படும் பயிற்சி விவரம்: வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தி பம்பு செட் பழுது பார்க்கும் பயிற்சி.
வயது வரம்பு: 18 முதல் 45 வயது வரை.
பயிற்சியின் எண்ணிக்கை: 12.
பயிற்சி மையங்கள்: வேலூர், கோயம்புத்தூர், திருச்சி, திருவாரூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் அமைந்துள்ள, ஆறு அரசு இயந்திரப் பணி மனைகள்
பயிற்சி பெறுவோர்: 16-17 பேர்
பயிற்சிக் காலம்: தினமும் 8 மணி நேரம் வீதம் 60 நாட்கள்.
அணுக வேண்டிய இடம்
கோயம்புத்தூர், வேலூர், திருவாரூர், திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலியில் உள்ள, வேளாண்மைப் பொறியியல் துறையின் பணிமனைகளில் அல்லது அருகிலுள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவி செயற் பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பத்தை அளிக்கலாம்.
இணையதளத்தில் விண்ணப்பிக்க: https://docs.google.com/forms/
தமிழக வேளாண்மைப் பொறியியல் துறை.
சந்தேகமா? கேளுங்கள்!