செய்தி வெளியான இதழ்: 2018 செப்டம்பர்.
தாவர உணவுகளில் அனைத்துச் சத்துகளையும் கொண்டது முருங்கைக் கீரை. உயிர்ச் சத்துகள், தாதுப்புகள் நிறைந்த இக்கீரை, சத்துப் பற்றாக்குறை நோய்களைப் போக்க உதவுகிறது. இந்த நோய்களை உணவிலுள்ள சத்துகள் மூலம் சரிப்படுத்துவதே சிறந்த முறை. முருங்கைக் கீரை 300 வகை நோய்களைத் தடுக்கிறது. 67 வகை நோய்களைக் குணப்படுத்துகிறது.
முருங்கைக் கீரையில், 90 வகைச் சத்துகளும், 46 வகை மருத்துவத் தன்மைகளும் உள்ளன. 1-3 வயதுள்ள குழந்தைகளுக்கு, ஒரு நாளைக்குத் தேவையான உயிர்ச் சத்துகளை, 20 கிராம் முருங்கைக் கீரை தருகிறது.
பெரியவர்களுக்கு ஒரு நாளைக்குத் தேவையான கால்சியத்தில் 75 சதம், இரும்புச் சத்தில் 50 சதம் மற்றும் புரதம், பொட்டாசியம், செம்பு, உயிர்ச் சத்துகள், நூறு கிராம் கீரையிலிருந்து கிடைக்கின்றன.
நமது நாட்டில் எல்லா இடங்களிலும் கிடைக்கும் முருங்கைக் கீரையை, நிழலில் உலர்த்திப் பொடியாக்கிப் பயன்படுத்தலாம். நூறு கிராம் முருங்கைப் பொடியில், தயிரில் உள்ளதை விட 9 மடங்கு புரதமும், கேரட்டில் உள்ளதை விட 10 மடங்கு உயிர்ச்சத்து ஏ-யும், பாலில் உள்ளதை விட 15 மடங்கு கால்சியமும், ஸ்பினாக் கீரையில் உள்ளதை விட 25 மடங்கு இரும்புச் சத்தும் உள்ளன.
முருங்கைக் கீரையில் உள்ள அமினோ அமிலங்கள் உடலுக்குத் தேவையான சத்துகளை அளிக்கும். கல்லீரல் மற்றும் சிறுநீரகப் பையின் செயல்களை வேகப்படுத்தும். உடலிலுள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைக்க உதவும்.
சர்க்கரை அளவைச் சீராக்கும். செரிமானத்தில் பெரும் பங்குண்டு. கர்ப்பிணிப் பெண்களுக்கு இரத்தச்சோகை வராமல் தடுப்பதுடன், குழந்தையின் எடையைக் கூட்டும். தாய்ப்பால் நிறையச் சுரக்க உதவும்.
புற்றுநோய்க் கட்டிகளை வர விடாமல் தடுக்கும். ஆஸ்துமா, மார்புச்சளி, தலைவலி, வாய்ப்புண், மலச்சிக்கல், கண் நோய், மூட்டுவலி, மலட்டுத் தன்மை, உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு, மிகச் சிறந்த இயற்கை நிவாரணியாக முருங்கைக் கீரை செயல்படுகிறது.
முருங்கைக் கீரைப் பொடியைக் கொண்டு, சப்பாத்தி, குக்கீஸ், சூப், சாதப்பொடி போன்ற உடனடி உணவுகளைத் தயாரித்து விற்கலாம். அன்றாடம் 3-10 கிராம் பொடியைச் சாப்பிட்டால் எல்லாச் சத்துகளையும் பெறலாம்.
முனைவர் மா.விமலாராணி, முனைவர் க.வேல்முருகன், வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம் – 603 203.
சந்தேகமா? கேளுங்கள்!