செய்தி வெளியான இதழ்: 2018 ஆகஸ்ட்.
கடைகளில் எளிதாக, விலை மலிவாகக் கிடைக்கும் கீரைகளின் நன்மைகளைச் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. அதனால் தான் தினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று, உணவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். இப்படி நமக்கு நலம் பயக்கும் மூன்று கீரைகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
கொத்தமல்லிக் கீரை
கொத்தமல்லிக் கீரை சாதாரணமாகக் கிடைக்கக் கூடியது. இதைத் தனிக் கீரையாக வாங்காமல் காய்கறிகளுடன் சேர்த்துக் கொஞ்சம் கொசுறாக வாங்குவர். மற்ற காய்களைச் சமைக்கும் போது இதையும் போடுவர். சிறிது தனியாவை எடுத்து ஈர மண்ணில் தூவி விட்டாலே, துளிர்த்துக் கீரையாக வளர்ந்து விடும்.
இந்தக் கீரை சத்தானது என்பதாகக் கூட யாரும் நினைப்பதில்லை. வாசம் மற்றும் ருசிக்காக, சாம்பார், இரசம் போன்றவற்றில் போடுவார்கள். இதைத் தவிர, சட்னியாக அரைத்துச் சாப்பிடுவார்கள். இதில் வைட்டமின்கள் ஏ, பி, சி, சுண்ணாம்பு, இரும்பு ஆகிய சத்துகள் உள்ளன.
இது, உடலுக்குக் குளிர்ச்சி மற்றும் வலுவைத் தரும். இரத்தத்தைச் சுத்தம் செய்யும். பற்களுக்கு உறுதியை அளிக்கும். பற்கள் சார்ந்த நோய்கள் வராமல் காக்கும்.
வாய்ப்புண், வயிற்றுப் புண்ணை ஆற்றும். மூக்கு சார்ந்த தொல்லைகளை நீக்கும். கண் எரிச்சல், கண் நோயைத் தடுக்கும். பார்வையைத் தெளிவாக்கும். தவளைச் சொறி, சிரங்கு, புண் ஆகியவற்றை ஆற்றி, சருமத்தைப் பளபளப்பாக வைக்கும்.
நரம்புகளுக்கும் வலிமையைத் தரும். பித்த நோய்கள், காய்ச்சல் குணமாகும். செரிக்கும் திறனைக் கூட்டிப் பசியைத் தூண்டும். நல்ல உறக்கத்தைத் தரும். ஆண்மையைக் கூட்டும்.
இதை, வேக வைத்தோ, வதக்கியோ பயன்படுத்தக் கூடாது. அப்படிச் செய்தால் இதிலுள்ள சத்துகள் போய் விடும். பச்சையாகவே சாப்பிட வேண்டும். சட்னியாக அரைத்துச் சாப்பிடலாம். சாம்பார், இரசம் போன்ற குழம்பு வகைகளை, அடுப்பில் இருந்து இறக்கிய பிறகே போட வேண்டும்.
கறிவேப்பிலை
சமையலில் பெரிதும் பயன்படுவது கறிவேப்பிலை. இதில் வைட்டமின் ஏ நிறைய உள்ளது. அத்துடன், புரதம், இரும்பு, சுண்ணாம்பு ஆகிய சத்துகளும் உள்ளன. இதை வதக்காமல், வேக வைக்காமல் பச்சையாகச் சாப்பிடுவதே நல்லது.
இதனால் இதிலுள்ள சத்துகளை முழுமையாகப் பெறலாம். இதைச் சட்னியாக அரைத்துச் சாப்பிட்டால் முழுச் சத்தையும் பெற வாய்ப்புண்டு. இது, உடலுக்கு சிறிது வெப்பத்தைத் தரும்.
உடலுக்கும் எலும்புகளுக்கும் வலுவைத் தரும். நரம்புத் தளர்ச்சியை நீக்கும். பித்தம் மிகுவதால் ஏற்படும் நோய்களை நீக்கும். பித்தக் காய்ச்சல், வாந்தி, கிறுகிறுப்பு, வயிற்றுவலி, வயிற்று இரைச்சல் போன்றவற்றைப் போக்கும்.
தாங்க முடியாத வயிற்று வலியின் போது, சிறிதளவு கறிவேப்பிலையை அரைத்து மோருடன் கலந்து சாப்பிட்டால் வலி போய்விடும்.
குடல், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சீரண மண்டல உறுப்புகளுக்கு வலுவைத் தரும். உணவு எளிதில் செரிக்க உதவும். மலச்சிக்கலைப் போக்கும். சீதபேதியை நிறுத்தும். கண் கோளாறுகளை நீக்கிப் பார்வையைத் தெளிவடையச் செய்யும். ஆண்மையைப் பெருக்கும். சாதாரணக் காய்ச்சலும் குணமாகும்.
இதை ஒதுக்கிக் கீழே போட்டு விடாமல், உணவுடன் சேர்த்துச் சாப்பிட வேண்டும். அடிக்கடி கறிவேப்பிலைச் சட்னியை உணவில் சேர்த்து வரலாம். இத்துடன் கொத்தமல்லி, புதினா, இஞ்சி, பூண்டு மற்றும் பெருங்காயத்தைச் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது.
கறிவேப்பிலையை அரைத்து வடையாகத் தட்டி, தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி, அதில் சிறிது பச்சைக் கற்பூரத்தையும் சேர்த்துத் தைலமாகத் தயாரித்து, தலையில் தேய்த்து வந்தால், பித்த மயக்கம் காணாமல் போகும். முடியும் நரைக்காது.
நமது உணவில் கறிவேப்பிலை இல்லாமல் இருக்காது. இலை, காய், பட்டை, வேர் ஆகிய அனைத்தும் நமக்குத் தேவையான சத்துகளைத் தருகின்றன. கறிவேப்பிலையை நிழலில் உலர்த்தி, மிளகு, உப்பு, சீரகம், சுக்கைச் சேர்த்துப் பொடியாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இதை அவ்வப்போது நெய் சேர்த்துச் சோற்றில் பிசைந்து சாப்பிட்டால், அக்கினி மாந்தம், பேதி, மலக்கட்டு, பிரமேகம், வாயு முதலியன நீங்கும்.
கறிவேப்பிலை, சுட்ட புளி, வறுத்த உப்பு ஆகியவற்றைச் சேர்த்துத் துவையலாக அரைத்துச் சாப்பிட்டால், பித்த வாந்தி, செரியாமை, மந்தம், புளியேப்பம் ஆகியன குணமாகும்.
கறிவேப்பிலை ஈர்க்குடன் இடித்துச் சாறெடுத்து, கிராம்பு, திப்பிலியைச் சேர்த்துக் குழந்தைகளுக்குக் கொடுத்தால், வாந்தி உடனே நிற்கும்; பசியும் எடுக்கும்.
கறிவேப்பிலை ஈர்க்கு, வேப்பிலை ஈர்க்கு, நெல்லி ஈர்க்கு, முருங்கை ஈர்க்கு, வசம்பு, மஞ்சள் ஆகியவற்றைச் சமமாக எடுத்துச் சட்டியில் போட்டுக் கருக்கி, 1.3 லிட்டர் நீர் விட்டுக் கால்படியாக வற்ற வைத்து வடித்து, தேன் சேர்த்துச் சாப்பிட்டால், பேதி, வாயு, பொருமல், செரியாமை ஆகியன குணமாகும்.
புதினாக் கீரை
எளிதாகக் கிடைக்கும் கீரைகளில் ஒன்று புதினா. இதில், வைட்டமின்கள் ஏ, பி, இரும்பு, சுண்ணாம்பு ஆகிய சத்துகள் ஏராளமாய் உள்ளன. புதினாவில் இருந்து தான் மென்தால் என்னும் மருந்துப் பொருளை எடுக்கின்றனர்.
இதைப் பச்சையாகச் சாப்பிட்டால் தான், இதிலுள்ள சத்துகளை முழுமையாகப் பெற முடியும். இதிலுள்ள சுவையும் மணமும், பசியைத் தூண்டி, சாப்பிடுவதில் ஆர்வத்தை உண்டாக்கும்.
தரையில் படரும் செடி வகையைச் சேர்ந்த இதில், ஒருவிதக் காரத்தன்மை இருக்கும். இந்தச் செடியில் கீரையைத் தவிர பூ, காய் போன்ற எதுவும் இருக்காது. இது இரத்தத்தைச் சுத்தம் செய்வதுடன், புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும்.
அதனால் உடலுக்குச் சக்தியை அளிக்கும். வயிற்றுக்கும் குடலுக்கும் வலிமையைத் தரும். வாந்தியை நிறுத்தும். பேதியைக் குணமாக்கும். மாந்தத்தை நீக்கும்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் குமட்டல் மற்றும் வாந்தியை நிறுத்தும். எலும்புகளுக்கும், பற்களுக்கும் சக்தியை அளிக்கும். பற்கள் சார்ந்த நோய்களை நீக்கும். வாய் நாற்றத்தைப் போக்கும். அதனால் இந்தக் கீரை பற்பொடித் தயாரிப்பிலும் பயன்படுகிறது.
பெரியவர் முதல் குழந்தைகள் வரை, அனைவருக்கும் ஏற்படும் வயிற்றுப் போக்கையும் நீக்கும். சட்னியாகப் பயன்படும் புதினா, சைவ, அசைவ உணவுகளில் வாசம் மற்றும் ருசிக்காகச் சேர்க்கப்படுகிறது.
முனைவர் கோ.சதீஷ், முனைவர் இரா.மணிமேகலை, முனைவர் செ.தமிழ்ச்செல்வி, வேளாண்மை அறிவியல் நிலையம், திரூர், திருவள்ளூர் -602 025.
சந்தேகமா? கேளுங்கள்!