My page - topic 1, topic 2, topic 3

மீன்களில் உள்ள சத்துகள்!

மீன்களில் புரதத்தைப் போலவே கொழுப்புச் சத்தும் மீனுக்கு மீன் மாறுபடும். ஈகோசா பென்டானோயிக் அமிலம், டோகாசா ஹெக்ஸனோயிக் அமிலம் ஆகியன மீன்களிலுள்ள மிக முக்கியக் கொழுப்பு அமிலங்கள் ஆகும்.

செய்தி வெளியான இதழ்: 2018 செப்டம்பர்.

மது உணவில் ஏற்படும் சத்துக் குறையைப் போக்குவது மீன். ஜப்பான், சீனா, கனடா போன்ற கடற்கரை நாடுகளைச் சேர்ந்த மக்கள், மீனை மிகுதியாக உண்கின்றனர். ஆனால், 8,118 கி.மீ. என, மிக நீளக் கடற்கரையுடன் அமைந்துள்ள இந்தியாவில், ஆண்டுக்கு 11,34,948 மெ.டன் கடல் உணவை ஏற்றுமதி செய்யும் இந்தியாவில், மீனை உணவாகக் கொள்வது குறைவாகவே உள்ளது. இதற்குக் காரணம், மீனிலுள்ள சத்துகள் மற்றும் பயன்களைப் பற்றித் தெரியாமல் இருப்பது தான்.

பதப்படுத்தல் மற்றும் பாதுகாக்கும் முறைகளால், மீனிலுள்ள புரதமும் கொழுப்பும் மாறிச் சிதைகின்றன. எல்லா வகை மீன்களிலும் ஒரே அளவில் சத்துகள் இருப்பதில்லை. எனவே, அவற்றிலுள்ள சத்துகளின் அளவை அறிந்து, அவரவர்க்குத் தேவையான மீனை உண்ண வேண்டும்.
மீன்களில், நீர், புரதம், கொழுப்பு, தாதுகள் என நான்கு சத்துகள் உள்ளன. இவை மீனினங்களில் வெவ்வேறு அளவுகளில் உள்ளன. பொதுவாக மீன்களில், புரதம் 6-28 சதம், கொழுப்பு 0.2-64 சதம், ஈரப்பதம் 28-90 சதம், தாதுகள் 0.4-1.5 சதம் உள்ளன.

அதைப்போல, இந்திய மக்கள் பெரும்பாலும் உண்ணும் மீன்களில், நீர் 65-90 சதம், புரதம் 10-22 சதம், கொழுப்பு 1-20 சதம், தாதுகள் 0.5-5 சதம் உள்ளன.

இந்திய மீன்களில் உள்ள சத்துகள்

ரோகு: நீர் 76.9 சதம், புரதம் 19.10 சதம், கொழுப்பு 0.20 சதம், தாது 0.90 சதம்.

பால் மீன்: நீர் 70.90 சதம், புரதம் 23.50 சதம், கொழுப்பு 3.60 சதம், தாது 1.40 சதம்.

மிர்கால்: நீர் 77.10 சதம், புரதம் 19.00 சதம், கொழுப்பு 1.10 சதம், தாது 1.40 சதம்.

மல்லட்: நீர் 65.16 சதம், புரதம் 18.00 சதம், கொழுப்பு 2.13 சதம், தாது 1.38 சதம்.

சாலை: நீர் 67.01 சதம், புரதம் 19.38 சதம், கொழுப்பு 11.70 சதம், தாது 1.73 சதம்.

கட்லா: நீர் 76.30 சதம், புரதம் 19.60 சதம், கொழுப்பு 1.30 சதம், தாது 0.90 சதம்.

அயிலை, கானாங் கெளுத்தி: நீர் 71.19 சதம், புரதம் 21.21 சதம், கொழுப்பு 7.51 சதம், தாது 1.33 சதம்.

கரிமீன்: நீர் 75.30 சதம், புரதம் 22.50 சதம், கொழுப்பு 2.40 சதம், தாது 0.90 சதம்.

குணவா: நீர் 83.00 சதம், புரதம் 14.50 சதம், கொழுப்பு 0.80 சதம், தாது 0.50 சதம்.

திலேப்பியா: நீர் 77.30 சதம், புரதம் 20.47 சதம், கொழுப்பு 0.58 சதம், தாது 0.90 சதம்.

சூரை: நீர் 74.30 சதம், புரதம் 18.90 சதம், கொழுப்பு 4.50 சதம், தாது 1.30 சதம்.

சாதாக்கெண்டை: நீர் 78.84 சதம், புரதம் 20.84 சதம், கொழுப்பு 3.15 சதம், தாது 1.17 சதம்.

சிங்கிஇறால்: நீர் 73.60 சதம், புரதம் 21.60 சதம், கொழுப்பு 0.35 சதம், தாது 2.30 சதம்.

விரால்: நீர் 77.50 சதம், புரதம் 20.47 சதம், கொழுப்பு 0.58 சதம், தாது 1.45 சதம்.

முசெல்: நீர் 76.69 சதம், புரதம் 12.55 சதம், கொழுப்பு 2.57 சதம், தாது 2.06 சதம்.

காரல்: நீர் 74.70 சதம், புரதம் 18.70 சதம், கொழுப்பு 0.88 சதம், தாது 1.97 சதம்.

அமினோ அமிலங்கள்

மீன்களில் இருபது வகை அமினோ அமிலங்கள் உள்ளன. அவற்றில் தேவையற்றவை 12. தேவையானவை 8. இவற்றின் அளவு மீன் வகைகளைப் பொறுத்து மாறும்.

இவற்றில், சின் என்னும் அமினோ அமிலம் மிகுந்தும், ட்ரிப்டோபேன் என்னும் அமினோ அமிலம் மிகக் குறைந்தும் உள்ளன.

கொழுப்பு

புரதத்தைப் போலவே கொழுப்புச் சத்தும் மீனுக்கு மீன் மாறுபடும். ஈகோசா பென்டானோயிக் அமிலம், டோகாசா ஹெக்ஸனோயிக் அமிலம் ஆகியன மீன்களிலுள்ள மிக முக்கியக் கொழுப்பு அமிலங்கள் ஆகும்.

இவற்றிலுள்ள சேர்மங்களின் இணைப்புகளைப் பொறுத்து, நிறைவுற்ற மற்றும் நிறைவுறாத கொழுப்பு அமிலங்கள் இருக்கும்.

நிறைவுறாத கொழுப்பு அமிலங்களில், ஒமேகா 3, ஒமேகா 6 போன்றவை மிக முக்கியமானவை. ஒமேகா 3-இல் ஈகோசா பென்டானோயிக் அமிலம், டோகாசா ஹெக்ஸனோயிக் அமிலம், லினோலெனிக் அமிலம், லினோலெயிக் அமிலம் போன்றவை உள்ளன.

தாதுகள்

இயற்கையாகவே கடல் நீரில் தாதுகள் இருப்பதால், கடல் மீன் சதையில் இவை நிறைந்து உள்ளன. சோடியம், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், மக்னிசியம் போன்ற தாதுப்புகள் கூடுதலாக உள்ளன.

இவற்றில், ஐயோடின், புளுராய்டு போன்ற தனிமங்கள் மீன்களில் மட்டுமே மிகுந்து உள்ளன.

வைட்டமின்கள்

கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் ஏ, டி, ஈ ஆகியன மீன்களில் கூடுதலாக உள்ளன. குறிப்பாக, சுறா மீனின் கல்லீரலில் இருந்து எடுக்கும் எண்ணெய்யில், வைட்டமின் ஏ-யும் டி-யும் மிகுதியாக உள்ளன.

மீன் உணவின் நன்மைகள்

மீனில், ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளதால், வாரம் இருமுறை உண்ணலாம். இது, இதயக் கோளாறு, மாரடைப்பு, பக்கவாதம், இரத்தம் உறைவு போன்ற கொடிய நோய்களில் இருந்து பாதுகாக்கும்.

ஒமேகா 3 அமிலத்தில் உள்ள டி.எச்.ஏ., மனித மூளை வளர்ச்சி, கண் பார்வை மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் தேவை. நரம்பு சார்ந்த சிக்கல்கள் தீர, மன அழுத்தம் குறைய, இவ்வகைச் சத்துகள் உதவுகின்றன. குழந்தைகளின் ஆஸ்துமாவைத் தடுக்கும், அல்ஸிமியர் நோய்ப் பாதிப்பைக் குறைக்கும்.

கெட்ட கொழுப்பைப் படிய விடாமல் தடுத்து, நல்ல கொழுப்பை மனித உடம்பில் சேர வைக்கும். இரத்த அழுத்தம் சீராக இருக்க, கல்லீரல் நோயைக் குணமாக்க உதவும். மீனில் உள்ள கால்சியம், மனித உடல் எலும்புகளை உறுதியாக்கும்.

ஓமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த, அயிலை, சாலை, சூரை போன்ற மீன்களை அதிகமாக உண்ணலாம்.

இதனால் குறிப்பாக, இதயத்தைத் தாக்கும் தசை நோய், மூளை இரத்தக்குழாய் நோய் போன்றவை வராமல் தடுக்கப்படும். ஓமேகா 3 கொழுப்பில் உள்ள ஈ.பி.ஏ. மற்றும் டி.எச்.ஏ. அமிலங்கள், இரத்த மண்டல நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.

எனவே, தினசரி உணவில் இவை இரண்டும் 500 மி.கி.க்குக் குறையாமல் இருக்க வேண்டும் என்று கூறும் உலகச் சுகாதார நிறுவனம், ஆண்டுக்கு, ஒருவர் குறைந்தது 20 கிலோ மீனை உண்ண வேண்டும் என்று சொல்கிறது. இந்திய மருத்துவக் கழகம் 12 கிலோ மீனை உண்ணச் சொல்கிறது.


க.மாசிலன், ம.வசந்தராஜன், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக் கழகம், நாகப்பட்டினம் – 611 001.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks