மீனவர்க்கு உதவும் தகவல் தொழில் நுட்பம்!

மீனவர்

செய்தி வெளியான இதழ்: 2018 பிப்ரவரி.

கவல் தொழில் நுட்பம் நமது அன்றாட வாழ்வில் மிக முக்கியத் தேவையாக இருந்து வருகிறது. காலையில் எழுவது முதல் இரவு உறங்குவது வரை, நமது ஒவ்வொரு செயலிலும் இதன் பங்கு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இது, நமது வாழ்க்கை முறையை எளிதாக மாற்றியதுடன், நேரத்தையும் மனித சக்தியின் அவசியத்தையும் குறைத்துள்ளது.

தமிழகத்தில் 13 கடற்கரை மாவட்டங்கள் உள்ளன. இந்தக் கடற்கரையின் மொத்த நீளம் 1,076 கி.மீ. இந்தியக் கடல் மீன் உற்பத்தியில் தமிழகம் பெரும் பங்காற்றி வருகிறது.

தமிழ்நாடு அரசு மீன் வளத்துறையின், 2015-16 ஆம் ஆண்டின் அறிக்கைப்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 4.57 இலட்சம் டன் மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 7.8 இலட்சம் மக்கள், கடல் மற்றும் கடல் சார்ந்த தொழில்களை நம்பி வாழ்கின்றனர்.

உலகில் மிகவும் ஆபத்தான தொழில்கள் பட்டியலில், மீன்பிடித் தொழில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இத்தகைய தொழிலை, பழங்காலத்தில் இருந்து மீனவர்கள், காற்று, நட்சத்திரம், நிலா, சூரியன், நீரோட்டம் ஆகிய இயற்கை ஆற்றல்களின் உதவியுடன் செய்து வந்தனர்.

காலம் செல்லச் செல்ல, அனைத்துத் துறைகளிலும் வளர்ந்து வரும், தகவல் தொழில் நுட்பம், மீன்வளத் துறையிலும் நல்ல முன்னேற்றத்தைத் தந்துள்ளது. இதன் மூலம், கடல்மீன் உற்பத்திப் பெருகுவதுடன், மீனவர்கள் தங்கள் தொழிலைப் பாதுகாப்புடன் செய்யவும் முடிகிறது.

கடலுக்குச் செல்லும் மீனவர்கள் பயன்படுத்தும், தகவல் தொழில் நுட்பச் சாதனங்கள் மற்றும் அவற்றின் பயன்களை இங்கே காணலாம்.

உலகளாவிய இடமறிதல் களன் (Gold Positioning System)

இந்தக் களன், யுத்தத்தின் போது, தங்கள் இராணுவத்தினர் இருக்கும் இடத்தைக் கண்டறியும் நோக்கில், அமெரிக்கப் பாதுகாப்புத் துறை, 1970ஆம் ஆண்டு உருவாக்கியது.

இதற்காக, 20,200 கி.மீ. உயரத்தில், உலகைச் சுற்றி 6 பாதைகளை அமைத்தார்கள். ஒவ்வொரு பாதையிலும் 4 செய்திகள் வீதம் 24 செய்திகள் சுற்றி வரும் வகையில், 1993 இல், விண்வெளிக்குச் செய்திகளை அனுப்பி முடித்தார்கள்.

இக்கருவி, பூமியில் நாம் இருக்கும் இடத்தை மற்றும் பூமியிலிருந்தான இருப்பிடத்தின் உயரத்தை மிகத் துல்லியமாக அறிய உதவுகிறது. மீனவர்கள் தடையின்றி மீன்களைப் பிடித்து வர, கடலில், மீன்கள் அதிகமாகக் கிடைக்கும் இடத்தை அறிய இக்கருவி உதவுகிறது.

இக்கருவியில், மீன்கள் அதிகளவில் கிடைக்கும் இடத்தை, தீர்க்கரேகை மற்றும் அட்சரேகைத் தரவுகளைக் கொண்டு பதிவு செய்து, அத்தகவலை மீண்டும் பயன்படுத்தி, அதே இடத்தை அடைவதற்குரிய வசதியும் உள்ளது.

இதனால், மீனவர்கள் மீன்களைத் தேடி அலையும் நேரத்தை, எரிபொருள் செலவைக் குறைக்க முடிகிறது. மேலும், இத்தொழில் நுட்பம், ஆழ்கடல் அளவியல், நீர்ப் போக்குவரத்து ஆபத்துகள் (Navigational hazards) மற்றும் (Under water mapping) ஒருங்கிணைந்த வரைபடம் (Integrated mapping) போன்ற விவரங்களை அறிந்து கொள்ளவும் பயன்படுகிறது.

எதிரொலி ஆழமானி (Echo-sounder)

இது, SONAR-இன் அடிப்படைக் கொள்கையைப் பயன்படுத்தி, நீரில் ஒலியலைகளைப் பரப்பி, அவற்றின் மூலம் கடலின் ஆழத்தை அறிய உதவுகிறது. எதிரொலி ஆழமானி, அலைப்பரப்பி (Transmitter), அலைவாங்கி (Receiver), ஆற்றல் மாற்றி (Transducer) மற்றும் திரையகம் (Moniter) போன்ற நான்கு கூறுகளைக் கொண்டு செயல்படும்.

அலைப் பரப்பியும் அலை வாங்கியும் கப்பலின் அடியில் பொருத்தப் பட்டிருக்கும். அலைப்பரப்பி, முதலில் கேளா ஒலியலைகளை நீரில் பாய்ச்சும். இந்தக் கேளா ஒலியலைகள், தடைப்பொருளை அடைந்து மீண்டும் பிரதிபலிக்கும் நேரத்தைக் கொண்டு, கடலின் ஆழம் அறியப்படுகிறது.

இவ்வொலி, ஆற்றல் மாற்றியை அடைந்து, மின்சார சிக்னலுக்கு மாற்றப்பட்டு, கணினித் திரையில் படமாகக் காட்சியளிக்கிறது. இக்கருவியின் உதவியால், கடலில் மீன்கள் இருக்கும் இடத்தை, அவற்றின் அளவை அறிந்து, அதற்கேற்ற வகையில் விசைப்படகைச் செலுத்துவதால், மீன்களைத் தேடும் கால விரயம் குறைகிறது.

மேலும், கடலின் அடியில் உள்ள எந்தவொரு தடையையும், உடனுக்குடன் திரையில் காட்டுகிறது. இதைத் தவிர, கடலின் ஆழத்தை, கடலின் கீழுள்ள இடத்தின் இயல்பைத் (Bottom Topography) தெரிந்து கொள்வதால், ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் விசைப் படகுகளைப் பெரிய ஆபத்துகளில் இருந்து தடுக்க முடிகிறது.

இந்திய தேசியப் பெருங்கடல் தகவல் பணி மையம் (Indian National Centre for Ocean Information Studies)

இது, 1999 ஆம் ஆண்டு, புவி அறிவியல் அமைச்சக நிர்வாகத்தின் கீழ் (Ministry of Earth Sciences) நிறுவப்பட்டு, புவி அறிவியல் அமைப்பின் (Earth System Science Organisation) அங்கமாகச் செயல்பட்டு வருகிறது.

இவ்வமைப்பு, கடல் மற்றும் கடல் சார்ந்த தகவல்களை, தொழிற் சாலைகள், மீனவர்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் அறிவியல் சமூகத்திற்கு, முறையான வழிமுறைகளைப் பயன்படுத்தி, மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் உடனுக்குடன் அறிவித்து வருகிறது.

கடற்புறங்களில், மீன் இறங்கு தளங்களில், மின்னணுத் தகவல் பலகைகள் நிறுவப்பட்டு, செயற்கைக் கோள்கள் எடுத்த புகைப்படங்கள், செயல் விளக்கப் படங்கள், குறும் படங்கள் மற்றும் கடலின் நிலை பற்றிய தகவல்கள் உடனுக்குடன் ஒளிபரப்பப் படுகின்றன.

மேலும், காற்றின் வேகம், அலையின் உயரம், நீரோட்டம் தட்பவெட்ப நிலை போன்ற பேரிடர் எச்சரிக்கைகள் இப்பலகைகள் மூலம் தெரிவிக்கப்படும்.

மாற்றம் மட்டுமே மாறாதது என்னும் கூற்றுக்கு இணங்க, தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி, தடையில்லா ஒன்றாக மாறி வருகிறது. இந்தத் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, மீனவர்களும், தகவல் தொழில் நுட்பச் சாதனங்களின் பயன்களை நன்கு அறிகின்றனர்.

மீன் கணிப்பு வசதிகள் மூலம், மீன்பிடிப்பைப் பெருக்கி, எரிபொருள் செலவைக் குறைக்கலாம். கடற் சூழலைப் பாதிக்கும் கரியமில வாயு, கடலில் கலப்பதைத் தடுக்கலாம். இதனால், இந்தப் பூமியானது, மாசடைவதை, வெப்பமாவதைத் தவிர்க்கலாம்.


மீனவர் Hino fernando

ஹினோ பர்னான்டோ, முனைவர் சுக.பெலிக்ஸ், மதிவாணன், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக் கழகம், நாகப்பட்டினம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading