செய்தி வெளியான இதழ்: 2019 ஜூன்.
விவசாயத்தில் அதிகச் சேதத்தை உண்டாக்கி வரும் படைப் புழுக்களைக் கட்டுப்படுத்தும் திட்டம் ஏதும் அரசின் வசம் உள்ளதா என, வேளாண்மைத் துறை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தியிடம் கேட்டோம். அதற்கு அவர் கூறியதாவது:
“தமிழகத்தில் சுமார் 3.5 இலட்சம் எக்டரில் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. கடந்தாண்டில் இப்பயிரை அமெரிக்கன் படைப் புழுக்கள் தாக்கிச் சேதத்தை ஏற்படுத்தின. இந்தியாவில் 2018 மே மாதம் கர்நாடக மாநிலம் சிமோகா பகுதியில் காணப்பட்ட இப்புழுக்கள்,
குறுகிய காலத்தில் கரூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கோவை, திருப்பூர், நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் வேகமாகப் பரவின. இதன் தாய் அந்துப்பூச்சி ஓர் இரவில் 100 கி.மீ. வரையில் பறக்கும்; தன் வாழ்நாளில் 1,500- 2,000 முட்டைகளை இடும்.
கோடையில் 14 நாட்களும், குளிர் காலத்தில் 30 நாட்களும் இதன் புழுப்பருவம் இருக்கும். கூட்டுப்புழுப் பருவம் 8-9 நாட்களாகும். இதன் வாழ்க்கைச் சுழற்சி 26-37 நாட்கள்.
அதனால், ஒருமுறை மக்காச்சோள சாகுபடியை முடிப்பதற்குள், இந்தப் புழுக்கள் மூன்று வாழ்க்கைச் சுழற்சியை முடித்து விடும். இதனால், பல்வேறு கட்டுப்பாட்டு முறைகளை மேற்கொண்ட போதும், கடந்தாண்டில் இப்புழுக்கள் மக்காச் சோளத்தில் அதிகளவில் சேதத்தை ஏற்படுத்தி விட்டன.
அதைப் போன்ற பாதிப்பு நடப்பாண்டில் நிகழாமல் இருக்க, ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகள் மூலம் படைப் புழுக்களைக் கட்டுப்படுத்த அரசு திட்டமிட்டு உள்ளது.
இவ்வகையில், திருச்சி நாவலூர் குட்டப்பட்டில் உள்ள வேளாண்மைக் கல்லூரியில் மே 15, 16 தேதிகளில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் மத்திய ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு மையத்துடன் சேர்ந்து, தமிழக வேளாண்மைத் துறை, காரிப் 2019 முன்பருவ மக்காச் சோளத்தில் படைப் புழுக்களைக் கட்டுப்படுத்துவது பற்றிய கலந்துரையாடல் மற்றும் பயிற்சிப் பட்டறையை நடத்தியது.
இதில், தேசியளவில் தென் மாநிலங்களில் உள்ள மத்திய ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு மைய விஞ்ஞானிகள், தமிழக வேளாண்மை இணை இயக்குநர்கள், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக மற்றும் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர். இதன் மூலம், படைப் புழுக்களைக் கட்டுப்படுத்த உதவும் உத்திகளை வல்லுநர்கள் விளக்கிக் கூறினார்கள்.
உத்திகள்
நிலத்தை ஆழமாக உழுது மண்ணிலுள்ள கூட்டுப் புழுக்களை வெளியேற்றி, அவற்றை வெய்யில் மற்றும் பறவைகள் மூலம் அழிக்க வேண்டும். இதனால், படைப் புழுக்கள் உருவாகக் காரணமாக இருக்கும் அந்துப் பூச்சிகள் உருவாவதைத் தடுக்கலாம்.
விவசாயிகள் அனைவரும் ஒரே சமயத்தில் விதைத்தால், படைப் புழுக்களின் பாதிப்பைத் தவிர்க்க முடியும். ஏக்கருக்கு 250 கிலோ வேப்பம் புண்ணாக்கை இட்டு உழுது, கூட்டுப் புழுக்களைக் கட்டுப்படுத்தி, அந்துப் பூச்சிகள் உற்பத்தியைத் தடுக்க வேண்டும்.
மக்காச் சோளத்தை விதைத்து 15 நாளில் வேப்ப எண்ணெய்க் கரைசலைத் தெளித்து, இலைகளின் மேல் அந்துப் பூச்சிகள் முட்டை இடுவதைத் தடுக்க வேண்டும்.
ஒரு கிலோ மக்காச்சோள விதைக்கு, நுண்ணுயிர்ப் பூச்சிக் கொல்லியான பிவேரியா பேசியானா 10 கிராம் அல்லது 10 கிராம் இமிடா குளோபிரிட் 70 WS அல்லது 10 கிராம் தயோமீதாக்சம் 30 WS அல்லது சையன்டி ரானில்ப்ரோல் 19.8% + தயோமீதாக்சம் 19.8% வீதம் எடுத்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
குறைந்த பயிர் இடைவெளியில் படைப் புழுக்கள் வேகமாகப் பரவுவதால், இறவை மக்காச் சோளத்தை 60×25 செ.மீ. இடைவெளியில், மானாவாரி மக்காச்சோளத்தை 45×20 செ.மீ. இடைவெளியில் பயிரிட வேண்டும்.
மேலும், பத்து வரிசைக்கு ஒரு வரிசையின் இடைவெளி 75 செ.மீ. இருக்க வேண்டும். இது, கதிர்களைத் தாக்கவல்ல படைப் புழுக்களைக் கட்டுப்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளிக்க ஏதுவாக இருக்கும்.
தாய் அந்துப் பூச்சிகளைக் கவனிக்க மற்றும் கட்டுப்படுத்த, எக்டருக்கு ஒரு விளக்குப்பொறி அல்லது சாதாரண மின்விளக்குக்குக் கீழே, அகலமான பாத்திரத்தில் நீர், மண் எண்ணெய்யைக் கலந்து வைக்க வேண்டும். இதை அடிக்கடி இடமாற்றி வைக்க வேண்டும்.
பூச்சிகளின் தாக்கத்தைக் கண்காணிக்க, எக்டருக்கு 12 வீதமும், அவற்றைக் கட்டுப்படுத்த, எக்டருக்கு 50 வீதமும் இனக்கவர்ச்சிப் பொறிகளை, விதைத்து 15-20 நாளில் வைக்க வேண்டும்.
இயற்கை ஒட்டுண்ணி மற்றும் இரை விழுங்கிகளை ஊக்குவிக்க, குறுகிய காலப் பயிர்களான தட்டை, சூரியகாந்தி, எள், சோளம், சாமந்தியை, அந்தந்தப் பகுதிக்கு ஏற்பப் பயிரிட வேண்டும்.
மக்காச் சோளத்தை விதைப்பதற்கு 15 நாள் முன்னதாக, படைப் புழுக்களைக் கவர்ந்து இழுக்கும் வகையில், வரப்பைச் சுற்றி 2-4 வரிசைகளில் கம்பு நேப்பியர் புல் அல்லது ஏதாவது ஒரு சோளத்தை விதைத்து, இந்தப் பயிர்களில் படைப் புழுக்கள் தெரிந்ததும், அசாடிராக்டின் 1,500 பி.பி.எம். என்னும் இயற்கைப் பூச்சிக் கொல்லியைத் தெளிக்க வேண்டும்.
மக்காச் சோளத்தில் டெஸ்மோடியம் என்னும் சிறுபுலாட்டின் பயிரை ஊடுபயிராக இட்டால், அந்துப் பூச்சிகளைத் தடுக்கலாம். அந்துப்பூச்சி முட்டைகளைச் சேகரித்து அழிக்க வேண்டும். தொடர்ந்து மக்காச் சோளத்தைப் பயிரிடக் கூடாது. பயிர்ச் சுழற்சி முறையின் மூலம் இந்தப் புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.
நுண்ணுயிர்ப் பூச்சிக் கொல்லியான மெட்டரைசியம் அனிசோபிலேயை எக்டருக்கு 4 கிலோ அல்லது 3 லிட்டர் வீதம் தெளிக்க வேண்டும். இயற்கையாக இருக்கும் இரை விழுங்கிகளைக் காப்பதற்கு, பரிந்துரை செய்யப்படாத பூச்சி மருந்துகளைப் பயன்படுத்தல், தவறான முறையில் மற்றும் மிகுதியாகப் பூச்சி மருந்துகளைத் தெளித்தல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். டிரைக்கோ கிரம்மா கைலோனிஸ் ஒட்டுண்ணியை ஏக்கருக்கு 2 சிசி வீதம் தெளித்து இப்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.
பரிந்துரைக்கப்படும் மருந்துகள்
விதைத்து 15-20 நாள் அதாவது, இளம் குருத்துப் பருவத்தில், ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி வீதம் அசாடிராக்டின் 10,000 பி.பி.எம். மருந்து அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 1.5 மில்லி வீதம் நவல்யூரான் 10 இ.சி. மருந்து அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 0.4 கிராம் வீதம் எமாமெக்டின் பென்சோயேட் 5 எஸ்.ஸி. மருந்தைத் தெளிக்கலாம்.
விதைத்து 40-45 நாள் அதாவது, பிந்தைய குருத்துப் பருவத்தில், ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் வீதம் தையோடிக்கார்ப் 75 WP மருந்து அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 0.5 மில்லி வீதம் ஸ்பைனிடோரம் 12 SC மருந்து அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 8 கிராம் வீதம் மெட்டாரைசியம் அனிசோபிலே மருந்தைத் தெளிக்கலாம்.
விதைத்து 60-65 நாள் அதாவது, முதிர்ந்த பருவத்தில், ஒரு லிட்டர் நீருக்கு 0.4 மில்லி வீதம் புளுபெண்டாமைடு 480 SC மருந்து அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 0.5 மில்லி வீதம் குளோரா டிரினிபிரோல் 18.5 SC மருந்தைத் தெளிக்கலாம். விசைத் தெளிப்பானில் தான் தெளிக்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்திய மருந்தை மீண்டும் தெளிக்கக் கூடாது. குருத்துப் பகுதியை நோக்கி மருந்தைத் தெளிக்க வேண்டும்’’ என்றார்.
மு.உமாபதி
சந்தேகமா? கேளுங்கள்!