மக்களுக்கு உதவும் மண் புழுக்கள்!

மண் புழு

செய்தி வெளியான இதழ்: 2018 ஜனவரி.

லகில் வாழும் கோடிக்கணக்கான உயிரினங்களில், உழவனின் நண்பன் எனச் சிறப்பாக அழைக்கப்படும் மண் புழுக்களும் அடங்கும். ரெனால்டஸ் (1994) கூற்றின்படி, உலகெங்கிலும் 3,627 மண்புழு வகைகள் உள்ளன. இந்தியாவில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட சிற்றினங்களும், 67 பேரினங்களும் 10 குடும்பங்களின் கீழ் உள்ளன.

ஆல்கா (2001) கூற்றின்படி, இந்திய மண்புழு வகைகளில் 464 வகைகள் உள்நாட்டில் (என்டமிக் வகைகள்) தோன்றியவை; 45 வகைகள் வெளிநாடுகளில் இருந்து (எக்சோட்டிக் வகைகள்) நம் நாட்டுக்குக் கொண்டுவரப் பட்டவை.

வகைப்பாடு

வளைத்தசை, உருளைப் புழுக்களின் தொகுதியைச் சார்ந்த மண் புழுக்கள், கீட்டோபோடோ வகுப்பையும், ஆலிகோ கீட்டா என்னும் வரிசையையும் சேர்ந்தவை. இந்த வரிசையில் அடங்கும் 50 சத புழுக்கள், மெகாஸ் கோலிசிடே என்னும் குடும்பத்தைச் சார்ந்தவை. இவை தென்னிந்திய மண் புழுக்கள்.

வாழ்க்கை முறை

பொதுவாக, மண்புழு ஈரமான மேல் மண்ணில், வளைகளை ஏற்படுத்தி வாழ்கிறது. கோடையில் மேல்மண் காய்ந்து விடுவதால், பூமியின் அடியில் சென்று வாழும். இரவு நேரத்தில் மட்டும் வளையிலிருந்து வெளிப்படும். மழைக் காலத்தில் வளைக்குள் நீர் நிரம்பி விடுவதால், வளையை விட்டு வெளியே வந்து ஊர்ந்து திரியும். மட்கிய பொருள்களை உணவாகக் கொள்ளும்.

புறத்தோற்றம்

உடல், உருளையைப் போல இருக்கும். இந்த உடல், வளைய வடிவக் கண்டங்களால் ஆனது. இனத்துக்கு இனம் இந்தக் கண்டங்களின் அமைப்பும், எண்ணிக்கையும் வேறுபடும். உடலின் முதல் கண்டம் பெரிஸ்டோமியம் எனப்படும்.

இதில், வாய்ப்பகுதி உள்ளதால், வாய்க் கண்டம் எனவும் அழைக்கப்படும். பெரிஸ் டோமியத்தின் முன்னும் மேலேயும் புரோஸ் டோமியம் என்னும் சிறிய வளைவான கண்டமும், கடைசிக் கண்டத்தில் மலப்புழையும் இருக்கும்.

மண் புழுவின் முன்பகுதியில் இருக்கும் 14-17 கண்டங்கள், மோதிரம் போலச் சற்றுத் தடித்து, மற்ற உடல் பகுதிகளை விட, சற்று வெளிர் நிறத்தில் இருக்கும். இப்பகுதி கிளைட்டெல்லம் எனப்படும்.

ஒவ்வொரு கண்டத்திலும் உடல் சீட்டாக்கள் உள்ளன. இவை, இடப்பெயர்ச்சி உறுப்புகள். நெப்டீசியன்கள் கழிவு நீக்க உறுப்பாகும். ஒரே உயிரியில் ஆண் பெண் இன உறுப்புகள் இருப்பதால், மண்புழு, இருபால் உயிரி எனப்படுகிறது. மண் புழுவின் வளர்ச்சி, கக்கூனில் இருந்து தொடங்கும். மண் புழுவின் வளர்ச்சியில் லார்வா பருவம் கிடையாது.

மண்புழு வகைகள்

நிலத்தை மேம்படுத்தும் வகையில் விவசாயிகளுக்கு உதவும் மண் புழுக்களில் சிற்றினங்கள் பல உள்ளன. அவையாவன: லாம்பிட்டோ மாருதி. பெரியோனிக்ஸ் எக்ஸ்கவேட்டஸ். திராவிடா வீல்சி. யூரிடிலஸ் யூஜினியோ. ஈசீனியா போடிடா.

மேலும், மண் புழுக்களை உரப்புழுக்கள், சிவப்புப் புழுக்கள், இரவுப் புழுக்கள், தோட்டப் புழுக்கள் எனவும் வகைப்படுத்தி உள்ளனர். இவற்றின் வாழ்க்கை முறைகளைக் கொண்டு மேலும் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

எபிஜியிக் இனங்கள்: மண்ணின் மேற்பரப்பில் தாதுகள் நிறைந்த பகுதியில் வாழும் மேல்நிலைப் புழுக்கள்.

அனீசிக் இனங்கள்: மண்ணுக்குச் சற்றுக் கீழே, மேலிருந்து கீழ் நோக்கிச் செல்லும் சிறு வளைகளில் வாழும் இடைநிலைப் புழுக்கள்.

என்டோஜியிக் இனங்கள்: மண்ணுக்குள் பல மீட்டர் ஆழத்தில் கிடை மட்டமாகச் சிறு வளைகளை உண்டாக்கி, அவற்றில் வாழும் அடிநிலைப் புழுக்கள்.

மேலும், மண் புழுக்கள், அவற்றின் உணவுப் பழக்க அடிப்படையில், இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படும். அவையாவன: கழிவு உண்ணிகள் அல்லது மட்கு உண்ணிகள். மண் உண்ணிகள் அல்லது மட்கு உண்ணிகள். மேல் நிலையிலும், இடை நிலையிலும் வாழும் புழுக்கள் கழிவுண்ணிகள் ஆகும். அடியில் வாழும் புழுக்கள் மட்குண்ணிகள் ஆகும்.

மண்புழு வளர்ப்பு

கழிவுகளை மறுசுழற்சி செய்து, சத்துள்ள இயற்கை உரமாக மாற்றும் நோக்கில், தகுந்த தட்ப வெப்பம், உணவு மற்றும் வாழிடச் சூழலை ஏற்படுத்தி, சிலவகை மண் புழுக்களை அறிவியல் அடிப்படையில் வளர்ப்பது, மண்புழு வளர்ப்பு எனப்படுகிறது.

மண்புழு உரம்

மண்புழு உரம் தயாரித்தல் (வெர்மி கம்போஸ்டிங்) என்னும் சொல்லை 1979-இல், நியுகாசர் என்னும் அறிஞர் முதன் முதலில் பயன்படுத்தினார். மண்புழு உரம் என்பது, மண் புழுக்கள் மூலம், மட்கிய தொழுவுரம் மற்றும் கழிவுப் பொருள்களை ஊட்டமிகுந்த உரமாக மாற்றுவது ஆகும்.

அங்ககப் பொருள்களை உண்ணும் மண் புழுக்கள், அவற்றைத் தங்களின் குடலிலுள்ள நொதிகள் மற்றும் நுண்ணுயிர்கள் மூலம் செரிக்கச் செய்து வெளியேற்றும். நாங்கூழ் கட்டிகள் எனப்படும் இக்கழிவு, நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷ், துத்தநாகம், இரும்பு, மாங்கனீசு, தாமிரம், ஹார்மோன்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த தரமான உரமாகும். இதுவே, மண்புழு உரமாகும்.

உரத் தயாரிப்புக்கு ஏற்ற பொருள்கள்

கால்நடைக் கழிவுகள், பண்ணைக் கழிவுகள், களைச் செடிகள், இலை தழை, வீட்டுக் கழிவுகள், தென்னை நார்க்கழிவு மற்றும் மட்கும் தன்மையுள்ள கழிவுப் பொருள்கள், மண்புழு உரத்தைத் தயாரிக்க ஏற்றவை.

மண்புழு உரத்தயாரிப்பு நுட்பம்

மண்புழு உரத்தயாரிப்பில் பயன்படும் கழிவுப் பொருள்களில் இருக்கும், கல், கண்ணாடி, ஓடு, பிளாஸ்டிக் போன்ற மட்கா பொருள்களை அகற்றி விட வேண்டும். உரத்தயாரிப்புப் படுக்கையைத் தயாரித்து, மண் புழுக்களை அந்தப் படுக்கையில் விட வேண்டும்.

தயாரான மண்புழு உரத்தை எடுத்துச் சலித்து, புழுக்களையும் முட்டைகளையும் நீக்க வேண்டும். இந்த உரத்தை, உயிர் உரங்களுடன் கலந்து இட்டால் மிகவும் பயனுள்ளதாக அமையும்.

மண்புழுக்கள் தேர்வு

விரைவாக இனப்பெருக்கம் செய்து, காலச் சூழலைத் தாங்கி வளர்ந்து பொருளாதார நன்மை பயக்கும், இனங்களை மட்டுமே தேர்வு செய்து வளர்க்க வேண்டும். இல்லையெனில் மிகவும் சிரமப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் வளர்க்க ஏற்ற மண்புழு இனங்கள், பெரியோனிக்ஸ் எக்ஸ்க வேட்டஸ், லாம்பிட்டோ மாருதி, திராவிடா வில்சி மற்றும் நமது சூழலில் வளரும் வெளிநாட்டு இனங்களான, ஈசீனியா போடிடா, யூரிடிலஸ் யூஜினியா ஆகியன.

மிகச் சிறியளவில் மண்புழு உரம் தயாரித்தல்

சொந்தப் பயனுக்காக, வீட்டுத் தோட்டத்தில், ஆய்வுக் கூடத்தில், பிளாஸ்டிக், சிமெண்ட், மண் தொட்டிகளில், மரப்பெட்டிகளில், நைலான் சாக்குப் பைகளில் சிறியளவில் மண்புழு உரத்தைத் தயாரிக்கலாம்.

சிறியளவில் மண்புழு உரம் தயாரித்தல்

எட்டுக்கு நான்கு மீட்டர் அளவில், சிறிய கொட்டகையை அமைத்து, ஆண்டுக்குப் பத்து டன் மண்புழு உரத்தைத் தயாரிக்கலாம். வீட்டுத் தோட்டம், மரம், செடி, கொடிகளுக்கு இட்டது போக, மீதமுள்ளதை வெளியில் விற்றுப் பொருளீட்டலாம்.

வணிக நோக்கில் தயாரித்தல்

தனிப்பட்ட மனிதர்கள் மட்டுமின்றி, நிறுவனங்கள், வனத்துறை போன்ற அரசு துறைகள், வணிக நோக்கில் பெரியளவில் மண்புழு உரத் தயாரிப்பில் ஈடுபட்டு நல்ல பயனை அடைந்து வருகின்றன.

இதற்காக, மத்திய மாநில அரசுகள் கடன், மானியம், தொழில் நுட்பம் ஆகியவற்றைக் கொடுத்து, மண்புழு உரத் தயாரிப்பை ஊக்கப்படுத்தி வருகின்றன. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் மண்புழு உரத் தயாரிப்பைப் பிரபலப்படுத்தி வருகின்றன.

தற்போது தமிழ்நாடு முழுவதும் மகளிர் சுய உதவிக் குழுக்கள், மண்புழு உரத் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குழிமுறை, குவிமுறை, பெட்டிமுறை மற்றும் படுக்கை முறை அல்லது வரிசை முறையில், மண்புழு உரத்தைத் தயாரிக்கலாம்.

உரத்தைப் பிரித்தெடுத்தல்

மண்புழு உரம் 45-60 நாட்களில் தயாராகி விடும். இதன் கறுப்பு நிறத்தைக் கொண்டு, மண்புழு உரம் தயாராகி விட்டதை அறியலாம். இது, பொலபொலப்பாக, கனமின்றி லேசாக இருக்கும். மண்புழு உரத்தை எடுப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே நீர்த் தெளிப்பை நிறுத்திவிட வேண்டும்.

இதனால், மேலே ஈரப்பதம் குறைய, ஈரமுள்ள அடிப்பகுதிக்குப் புழுக்கள் சென்று விடும். இது, உரத்தை எளிதாகச் சேகரிக்க உதவும். கீழே 20 செ.மீ. அளவு உரத்தை விட்டுவிட வேண்டும். இப்படிச் செய்வது, அடுத்துக் கழிவுப் பொருள்களை இட்டு உரத் தயாரிப்பை மேற்கொள்ள உதவியாக இருக்கும்.

சேகரித்த உரத்தை 2-3 மி.மீ. சல்லடையில் சலித்து, புழுக்களையும், முட்டைகளையும் பிரித்து எடுக்கலாம். புழுக்களை மீண்டும் உரத் தயாரிப்பில் பயன்படுத்தலாம். இந்த உரத்தை நிலத்துக்கு இட்டு அல்லது விற்றுப் பயனடையலாம்.

மண்புழு உரத்தின் நன்மைகள்

மட்கும் கழிவுகள் அனைத்தும் உரமாக மாற்றப்படுவதால், பயிர்களுக்குப் பயன்படுவதுடன், சுற்றுச்சூழல் பாதிப்பும் தவிர்க்கப்படுகிறது. மிகக் குறைந்த செலவில், கழிவுகளில் உள்ள சத்துகள் காக்கப்படுகின்றன.

மண்புழு உர உற்பத்தியால், உர இறக்குமதி மற்றும் அதனால் உண்டாகும் அந்நியச் செலாவணி இழப்பைத் தவிர்க்கலாம். கனிம உரங்களைத் தவிர்க்கலாம். இதனால், உரச்செலவு மற்றும் இரசாயன உரங்களால் விளையும் தீமைகளைத் தவிர்க்கலாம்.

மண்ணில் காற்றோட்டம், நீர்ப்பிடிப்புத் தன்மை, நிலைப்புத் தன்மை ஆகியன அதிகமாதல், மண்ணரிப்பு, மண் இறுக்கம் குறைதல், மண்ணின் இழையமைவுத் தன்மை, மண்ணின் அமைப்பு சிறப்பாக அமைதல்,

வெப்பம், காற்று, அயனிகளின் பரிமாற்றுத் தன்மை சீராக அமைதல் போன்ற நன்மைகள், மண்புழு உரத்தால் கிடைப்பதால், மண்வளத்தைக் காக்கலாம்.

மண்புழு உரத்தில் சத்துகள், நுண்ணுயிரிகள் மற்றும் நொதிகள் அதிகமாக உள்ளன. பயிர்களின் வளர்ச்சி மற்றும் உற்பத்தியை மேம்படுத்தி, பொருள்களின் சுவை, நிறம், மணம் மற்றும் தரம் அதிகமாகும்.

நிலத்தின் ஈரப்பதத்தைக் காத்து, நீரின் தேவையைக் குறைக்கிறது. பயிர்களைத் தாக்கும் நோய்களை, பூச்சிகளைக் கட்டுப்படுத்தும். கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பாக அமைந்து, பொருளாதாரம் மற்றும் சமூகத் தகுதியை அளிக்கிறது.


மண் புழு Dr S Santhi 1

முனைவர் சு.சாந்தி, உதவிப் பேராசிரியர், விலங்கியல் துறை, இராணிமேரி கல்லூரி, சென்னை – 600 004.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading