பால் எந்தளவுக்குச் சத்துள்ள உணவாக, முழு உணவாக உள்ளதோ, அந்தளவுக்குக் கெட்டு விடும் ஆபத்தும் உள்ளது. சுத்தமான பால் என்பது, நலமான பசுவிடமிருந்து பெறப்படும், நல்ல மணம், மாசுபடாத, சுகாதாரமான மற்றும் நுண்ணுயிரிகள் கட்டுக்குள் உள்ள பாலாகும். இதைத் தான் சுத்தமான பாலுக்கான வரையறை என, இதுவரை கருதி வருகிறோம்.
ஆனால், இதுவரை நாம் கண்டு கொள்ளாத அல்லது நாம் அறியாத ஒரு பகுதி உள்ளது. அது, மாடுகளின் நலன் கருதி நாம் அவற்றுக்கு ஏற்கெனவே கொடுத்த நோயெதிர்ப்பு மருந்துகள் பாலில் கலந்து வருவதாகும். இவ்வகைக் கலப்படம், மடியை விட்டுப் பால் வெளிவரும் முன்பே நிகழ்வதால், இதைப் பற்றி நாம் கண்டு கொள்வதே இல்லை.
கால்நடை மருத்துவத்தில் நோயெதிர்ப்பு மருந்துகள்
நோய்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள, மருத்துவம் மருந்துகள் தேவைப்படுவதைப் போல, கால்நடைகள் நலமாக இருக்கவும் இவை தேவையாக உள்ளன. இன்று கால்நடை மருத்துவத்திலும் நோயெதிர்ப்பு மருந்துகள் அவசியமாக உள்ளன.
பெனிசிலின், சல்பா மருந்துகள், டெட்ரா சைக்லின், என்ரோபி லாக்சசின் எனப் பலவகை மருந்துகள், சுவாச நோய், குடல் நோய் மற்றும் தொற்று நோய்களைத் தடுக்க உதவுகின்றன.
இரட்டை முனைக் கத்தி
நோயெதிர்ப்பு மருந்து என்பது, இரட்டை முனைக் கத்தியைப் போன்றது. இதன் அளவு குறைந்தாலும் ஆபத்து, கூடினாலும் ஆபத்து. நம் நாட்டில் சாதாரணச் சளி மற்றும் குடல் நோய்களுக்குப் பயன்படும் அமாக்ஸிசிலின், என்ரோபி லாக்சசின், டெட்ரா சைக்லின் போன்ற மருந்துகளை அதிகமாக அல்லது குறைவாகப் பயன்படுத்துவதால், இவை, பலன் தரும் திறனை இழந்து விட்டன.
மேலும், இந்த மருந்துகளின் எஞ்சிய பொருள்கள், பாலின் வழியே வெளியேறுகின்றன. எனவே, அந்தப் பாலைக் குடிக்கும் மக்களும் இந்தப் பொருள்களால் பாதிப்பு அடைகின்றனர்.
மூலிகை மருத்துவம்
இதை நன்குணர்ந்த தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம், மரபுசார் மூலிகை மருத்துவம் என்னும் பாரம்பரிய முறையில், விலங்குகளின் நோய்களைத் தீர்க்கும் முறைகளை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.
கோமாரி நோய், கழிச்சல், அம்மை, மடிநோய் போன்ற முக்கிய நோய்களை, மூலிகைகள் மூலம் குணமாக்கும் மருத்துவ முறைகள், பல்கலைக் கழகத்தால் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, தமிழக அரசின் மாநிலப் புதுமைத் திட்டத்தின், இனவழிக் கால்நடை மூலிகைப் பொருள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம், ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரியில் இயங்கி வருகிறது.
மடிநோய்
மடிநோய்க்கான முதலுதவி மூலிகை மருத்துவம் செய்வதற்கு, ஒரு மாட்டுக்கு, 200 கிராம் சோற்றுக் கற்றாழை, 50 கிராம் மஞ்சள் பொடி, 3-5 கிராம் சுண்ணாம்பு தேவை.
சிகிச்சை முறை: இந்த மூன்றையும் ஆட்டுக் கல்லில் இட்டு நன்றாக அரைத்து, கால்நடையின் மடிப்பகுதி முழுவதும் நன்றாகத் தடவிவிட வேண்டும். மடிவீக்கம் குறையும் வரை, தினமும் 8-10 முறை தடவ வேண்டும். தினமும் இந்த மருந்தைப் புதிதாகத் தயாரிக்க வேண்டும்.
கோமாரி நோய்
கோமாரி நோய் தாக்கினால் கால்நடைகளின் வாயிலும், கால்களிலும் புண்கள் உண்டாகும். வாய்ப்புண்ணை ஆற்ற, ஒரு மாட்டுக்கு, முழுத் தேங்காய்த் துருவல், சீரகம் 50 கிராம், வெங்காயம் 30 கிராம், மஞ்சள் பொடி 10 கிராம், பனை வெல்லம் 200 கிராம் எடுத்து, அனைத்தையும் ஒன்றாக அரைத்து, தினமும் இருவேளை கொடுக்க வேண்டும்.
கால் புண்ணை ஆற்ற, முதலில் மஞ்சள் தூளையும் உப்பையும் கலந்து தடவி, புண்ணைச் சுத்தப்படுத்த வேண்டும். பிறகு, சிறிது மஞ்சள் தூளை வேப்ப எண்ணெய்யில் கலந்து சுட வைத்துப் புண்ணில் தடவ வேண்டும்.
இதில் குணமாகா விட்டால், குப்பைமேனி இலை இரண்டு கைப்பிடி, பூண்டு 10 பல், மஞ்சள் 100 கிராம் எடுத்து, இவற்றை இடித்து, கால் லிட்டர் இலுப்பை எண்ணெய்யில் சேர்த்துக் காய்ச்சி, ஆற வைத்துத் தடவினால் நிச்சயம் குணமாகும்.
கழிச்சல்
கழிச்சலைக் குணப்படுத்த, ஒரு மாட்டுக்கு, சீரகம் 15 கிராம், கசகசா 15 கிராம், வெந்தயம் 15 கிராம், மிளகு 5, மஞ்சள் 5 கிராம், பெருங்காயம் 5 கிராம் எடுத்து, நன்கு கருகும் வரை வறுத்து இடித்துக் கொள்ள வேண்டும்.
பிறகு, சிறிய உருண்டைகளாக உருட்டி, கல்லுப்பில் தோய்த்து நாக்கின் சொரசொரப்பான பகுதியில் மெதுவாகத் தேய்த்து உள்ளே செலுத்தலாம்.
அல்லது வெங்காயம் 10 கிராம், பூண்டு 6 பல், புளி 200 கிராம், பனை வெல்லம் 250 கிராம் எடுத்து, நன்கு அரைத்து, ஏற்கெனவே கூறியுள்ளபடி வாய்க்குள் கொடுக்கலாம்.
காய்ச்சல்
காய்ச்சலைக் குணப்படுத்த, ஒரு மாட்டுக்கு, நிலவேம்பு இலை 2 கைப்பிடி, சின்ன வெங்காயம் 50 கிராம், சீரகம் 20 கிராம், மிளகு 20, மஞ்சள் ஒரு தேக்கரண்டி, வெற்றிலை 10, பிரண்டை 10 கொழுந்து தேவை.
இவற்றில், மிளகு மற்றும் சீரகத்தை இடித்த பிறகு, மற்ற பொருள்களையும் அரைத்து, ஒரு நாளைக்கு இருவேளை வீதம், வாய்வழியாக மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து கொடுக்க வேண்டும்.
விஷக்கடி
விஷக்கடியைக் குணப்படுத்த, ஒரு மாட்டுக்கு, 15 தும்பை இலை, 15 நிலவேம்பு இலை, 10 மிளகு, 15 கிராம் சீரகம், 10 பல் வெங்காயம், 5 வெற்றிலை, 50 மில்லி வாழைத் தண்டுச் சாறு 15 கிராம் உப்பு வேண்டும்.
இவற்றில், சீரகம் மற்றும் மிளகை இடித்த பிறகு, மற்ற பொருள்களை அரைத்து, இந்தக் கலவையுடன் 100 கிராம் பனை வெல்லத்தைச் சேர்த்து வாய்வழியே கொடுக்க வேண்டும்.
இப்படி, கால்நடைகளின் முக்கிய நோய்களை மூலிகை மருத்துவம் மூலம் குணப்படுத்தினால், நோயெதிர்ப்பு மருந்துகளின் பயன்பாட்டை, அவற்றால் பால் வழியே அவற்றின் எஞ்சிய பொருள்கள் வெளியேறுவதைத் தடுத்து, கலப்படமற்ற பாலைப் பெறலாம்.
மேலும், மூலிகை மருத்துவப் பொருள்கள் எளிதாக, விலை குறைவாகக் கிடைக்கும். ஆங்கில மருத்துவத்தில் ஏற்படும் அதிகச் செலவு, பக்கவிளைவு, மருத்துவ வசதியின்மை போன்றவையும் ஏற்படுவதில்லை.
எனவே, விவசாயிகள் அனைவரும் கறவை மாடுகளுக்கு முதலுதவி மூலிகை மருத்துவத்தைப் பயன்படுத்தி, மருந்துக் கலப்படமற்ற, சுத்தமான பால் உற்பத்திக்கு ஆவன செய்து, மாடுகள் மற்றும் மக்கள் நலனைக் காக்க வேண்டும்.
மருத்துவர் அ.இளமாறன், கால்நடை மருந்தியல் மற்றும் நச்சியல் துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி, ஒரத்தநாடு, தஞ்சாவூர்.
சந்தேகமா? கேளுங்கள்!