செய்தி வெளியான இதழ்: 2018 செப்டம்பர்.
உணவுப் பாதுகாப்பு, ஊரகப் பொருளாதாரம் மற்றும் விவசாயிகளின் நிலையான சமூகப் பொருளாதார மேம்பாட்டின் முக்கிய அங்கமாகத் திகழ்வது விவசாயம். இது, வறுமையை அகற்ற வழி வகுப்பதோடு, பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் துறைகள் செயல்படுவதற்கும் உறுதுணையாக விளங்குகிறது.
வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்களை மேம்படுத்தி, நுகர்வோர் விரும்பும் உணவு உற்பத்தியைக் கூட்ட, கிராமங்களில் வேலை வாய்ப்புகளை உருவாக்கி, அங்கிருக்கும் மக்கள் நகரங்களை நோக்கி இடம் பெயர்வதைத் தடுக்க, விளைபொருள் ஏற்றுமதியைப் பெருக்க, சிறந்த தொழில் நுட்பங்களைக் கொண்ட வேளாண்மையால் மட்டுமே முடியும்.
“எனது அரசு, விரிவான பல்வேறு புதிய திட்டங்கள் மூலம் வேளாண்மைக்குப் புத்துயிர் அளித்து வருகிறது. தமிழக மக்களுக்கு அர்ப்பணிக்கும் விதமாக, விரைவு இயக்க அணுகுமுறையில் இரண்டாம் பசுமைப் புரட்சியை ஏற்படுத்த, எனது அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது’’ என்றார், முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
அவர் வழியில் ஆட்சி செய்யும் தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் தலைமையிலான அரசு, மக்கள் நலனுக்காகப் பல்வேறு சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. விவசாயத்தில் உள்ள பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு, 2023 க்குள் உணவு மற்றும் ஊட்டச்சத்து உற்பத்தியில் சாதிக்கும் வகையில், குறுகிய மற்றும் நீண்ட கால இலக்குகளை நிர்ணயித்து உள்ளது.
இவ்வகையில், வேளாண் உற்பத்தியில் முதன்மை மாநிலமாகத் தமிழகம் திகழ்ந்து வருகிறது. நெல், சிறு தானியங்கள், பயறு வகைகள் உள்ளிட்ட உணவு தானிய உற்பத்தியில் சாதனை புரிந்தமைக்காக, 2011-12, 2013-14, 2014-15, 2017-18 ஆகிய நான்கு ஆண்டுகள், மத்திய அரசின் கிருஷி கர்மான் விருதை, தமிழக அரசு பெற்றுச் சாதனை படைத்துள்ளது.
இப்படி வேளாண் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் ரோஹிணி ரா.பாஜிபாகரே கூறியதாவது:
“தமிழ்நாடு முதலமைச்சர் விவசாய மேம்பாட்டுக்காக, பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். 2017-18 ஆம் ஆண்டில் தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், 50 எக்டரில் மலைவாழையைப் பயிரிட, ரூ.15 இலட்சம் மானியமாக வழங்கப்பட்டு உள்ளது.
பிரதமரின் நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தில், 300 எக்டரில் மஞ்சள் மற்றும் வாழை விவசாயிகளுக்கு ரூ.3 கோடி மானியமாக வழங்கப்பட உள்ளது.
தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம், ஒரு பரு கரணை நடவுள்ள கரும்புத் தோட்டங்களில் பயறுவகை ஊடுபயிர் செயல் விளக்கத்துக்கு, எக்டருக்கு ரூ.8,000 வீதம், 70 எக்டருக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
நீடித்த நிலையான கரும்பு சாகுபடித் திட்டத்தின் மூலம், ஒரு பரு கரணைகளை உற்பத்தி செய்ய, இரண்டு கரணை வெட்டும் கருவிகள் மற்றும் நிழல்வலை நாற்றங்காலை அமைக்க, ரூ.75,000 மானியம் வழங்கப்படுகிறது.
தேசிய எண்ணெய் வித்து மற்றும் எண்ணெய்ப் பனை இயக்கத் திட்டத்தில், எண்ணெய் வித்துகள் சாகுபடிக்கான ஆதார விதை மற்றும் சான்று விதைகளை உற்பத்தி செய்ய, கிலோவுக்கு ரூ.10, சான்று விதைகளை விநியோகிக்க கிலோவுக்கு, ரூ.25, நிலக்கடலை செயல்விளக்கத் திடல்களை அமைக்க எக்டருக்கு ரூ. 7,500 மானியம் வழங்கப்படுகிறது.
எண்ணெய்ப் பனைப் பரப்பு விரிவாக்கத் திட்டத்தில், எண்ணெய்ப் பனைக் கன்றுகளை நடுவதற்கு, எக்டருக்கு ரூ.12,000, அவற்றைப் பராமரிக்க மற்றும் ஊடுபயிர் சாகுபடிக்காக, எக்டருக்கு ரூ.10,000 மானியம் வழங்கப்படுகிறது.
நுண்ணீர்ப் பாசனத்தை, குறுகிய இடைவெளிப் பயிர்களில் அமைக்க, எக்டருக்கு ரூ.85,400 முதல் 1 இலட்சம் வரையும், அதிக இடைவெளிப் பயிர்களில் அமைக்க, எக்டருக்கு ரூ.23,500 முதல் ரூ.58,400 வரையும் செலவாகும்.
இதில், சிறு குறு விவசாயிகளுக்கு 100 சத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சத மானியமும் வழங்கப்படுகிறது. ஒரு எக்டரில் நுண் தெளிப்பானை அமைக்க ரூ.58,900, சிறு தெளிப்பானை அமைக்க ரூ.85,200, சாதா தெளிப்பானை அமைக்க ரூ.36,600, மழைத்தூவானை அமைக்க ரூ.31,600 செலவாகும்.
இவற்றை அமைக்க, சிறு குறு விவசாயிகளுக்கு 100 சத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சத மானியமும் வழங்கப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் 2016-17 ஆம் ஆண்டில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சத மானியத்தில் ரூ.24.79 கோடி, இதர விவசாயிகளுக்கு 75 சத மானியத்தில் ரூ.5.43 கோடி, சொட்டுநீர்ப் பாசன மானியமாக வழங்கப்பட்டு உள்ளது.
2017-18 மற்றும் 2018-19 ஆம் ஆண்டுகளில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சத மானியத்தில் ரூ.10.85 கோடி, இதர விவசாயிகளுக்கு 75 சத மானியத்தில் ரூ.2.08 கோடி சொட்டுநீர்ப் பாசன மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்பான திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்தி வளம்பெற வேண்டும்’’ என்றார்.
வேளாண்மைத் துறையின் நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தில் பயனடைந்து வரும் சங்ககிரி வட்டாரம், ஆலத்தூர் ரெட்டிப்பாளைய விவசாயி வேலப்பக் கவுண்டர் கூறியதாவது:
“எனக்கு 4.5 ஏக்கர் நிலம் உள்ளது. கிணற்றில் போதியளவு நீர் இல்லாததால் நிலம் முழுவதும் சாகுபடி செய்வது சிரமமாக இருந்தது. இரண்டு ஆண்டுக்கு முன் வாய்க்கால் பாசனத்தின் மூலம் ஒரு ஏக்கரில் மஞ்சளைப் பயிரிட்டேன். 90 குவிண்டால் மஞ்சள் கிடைத்தது.
இதனை வேக வைத்து, காய வைத்துச் சுத்தப்படுத்தியதில் 21 குவிண்டால் மஞ்சள் கிடைத்தது. இதை, குவிண்டால் ரூ.8,500 வீதம் ரூ.1,78,500க்கு விற்றேன். மொத்தச் செலவு ரூ.64,000 போக, நிகர வருமானமாக ரூ.1,14,500 கிடைத்தது.
நான் சிறு குறு விவசாயி என்பதால் எனக்கு 100 சத மானியத்தில் சொட்டுநீர்ப் பாசனக் கருவிகள், தோட்டக்கலைத் துறை மூலம் வழங்கப்பட்டன. அதனால், அடுத்த ஆண்டு சொட்டுநீர்ப் பாசனம் மூலம் ஒரு ஏக்கரில் மஞ்சளைப் பயிரிட்டேன். போதிய உரங்கள், பூச்சி, நோய்ப் பராமரிப்பு முறைகளைக் கையாண்டேன்.
பயிர் வளர்ச்சி விரைவாக இருந்ததால் களைகள் அவ்வளவாக இல்லை. சொட்டுநீர்ப் பாசனம் என்பதால், நீர் அதிகமாகச் செலவாகவில்லை. ஒரு ஏக்கர் அறுவடையில் 15 டன் பச்சை மஞ்சள் கிடைத்தது.
இதை வேக வைத்து, காய வைத்துச் சுத்தம் செய்ததில் 30 குவிண்டால் கிடைத்தது. மொத்தச் செலவு ரூ.40,000 ஆனது. நிகர வருமானமாக ரூ.2,17,500 கிடைத்தது. ஊடுபயிர் வெங்காயம் மூலம் ரூ.2,000 கிடைத்தது.
சொட்டுநீர்ப் பாசனத்தால் 4.5 ஏக்கரிலும் மஞ்சள் மற்றும் வாழையைப் பயிரிட்டதால், இரண்டு ஆழ்துளைக் கிணறுகளை அமைப்பதற்காக வாங்கிய ரூ.4.5 இலட்சத்தை ஒரே ஆண்டில் திருப்பிக் கொடுத்து விட்டேன்.
நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தால், 30-40 சதவீத நீர் மிச்சமாகிறது. வருமானம் கூடுதலாகக் கிடைக்கிறது. இப்படியொரு அருமையான திட்டத்தைத் தந்த தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு முதலமைச்சருக்கும் கோடான கோடி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.
தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் மூலம் சொட்டுநீர்ப் பாசனத்தை அமைத்துள்ள, சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன் பாளையம் ஒன்றியம், ஏத்தாப்பூர் விவசாயி எம்.குப்புசாமி கூறியதாவது:
“விவசாயம் தான் எனது வாழ்வாதாரம். மழை சரியாகப் பெய்யாததால் விவசாயத்தின் மூலம் கிடைக்கும் வருமானமும் வெகுவாகக் குறைந்தது. இதனால் பிள்ளைகளின் படிப்புச் செலவு மற்றும் அடிப்படைத் தேவைகளைச் சமாளிக்க முடியாமல் தவித்தேன்.
இந்நிலையில், தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் மூலம் சொட்டுநீர்ப் பாசனத்தை அமைக்க, தமிழக அரசு 100 சத மானிய உதவியைச் செய்தது. இப்போது கொய்யா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
சொட்டுநீர்ப் பாசனத்தால் குறைந்த நீரைக் கொண்டு அதிகப் பரப்பில் பயிரிட்டு நல்ல இலாபமும் பெற முடிகிறது. இத்திட்டத்தின் எனக்கு உதவி செய்த, தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு முதலமைச்சருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.
தமிழ்நாடு முதலமைச்சர், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில், வேளாண்மைத் துறையை மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழச் செய்யும் வகையில், அனைத்து விவசாயிகளும் பயனடையும் வகையில், திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறார் என்றால் அது மிகையாகாது.
மு.அண்ணாதுரை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், சேலம் மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!