நெல் சாகுபடி வேலைகளைப் பெரும்பாலும் மனிதர்களே செய்து வருகிறார்கள். ஆனால், ஆள் பற்றாக்குறை, அதிகக் கூலியால், உற்பத்திப் பாதிப்பு மற்றும் குறைந்த வருவாயை அடையும் நிலையில், விவசாயிகள் உள்ளனர். இந்நிலையில், நெல் சாகுபடியில் கருவிகளைப் பயன்படுத்துவது அவசியமாகிறது.
நன்செய் நெல் சாகுபடியில் நேரடி விதைப்பு மற்றும் நாற்று நடவு என இரு முறைகள் உள்ளன. இதில், பருவத்தைத் தவற விடாமல் சாகுபடியை மேற்கொள்ள, நேரடி விதைப்பு முறை விவசாயிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
நேரடி நெல் விதைப்புக் கருவியைப் பயன்படுத்தினால், நாற்றங்கால் செலவு, நாற்றுப் பறிப்புக்கூலி போன்றவை அறவே இருக்காது. குறைந்தளவில் விதைப்புச் செலவு மட்டுமே ஆகும். மேலும், 7-10 நாட்களுக்கு முன்பே அறுவடைக்கும் வந்து விடும்.
கோடையுழவு மிகவும் முக்கியம். அடுத்து, சேற்றுழவைச் செய்து, மேடு பள்ளம் இல்லாமல் வயலைச் சமப்படுத்த வேண்டும். இல்லையேல், பள்ளத்தில் நீர்த் தேங்கியும், மேட்டில் நீர் இல்லாமலும் போகும். இதனால், பயிர்கள் சரிவர வளர முடியாத சூழ்நிலை உருவாகி, மகசூல் பாதிக்கும்.
நேரடி நெல் விதைப்புக் கருவியை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் உருவாக்கி உள்ளது. இதில் உருளை வடிவத்தில் நான்கு விதைப் பெட்டிகள் உள்ளன. 10 மி.மீ. அளவில் துளைகள் உள்ளன. இவற்றின் மூலம் 200 மி.மீ. இடைவெளியில் விதைகள் வரிசையாக விழும்.
விதைப்புக் கருவி வயலில் புதையாமல் இருக்க, இரண்டு மிதவைகள் உள்ளன. இதனால், இதை எளிதாக இயக்க முடியும். ஒருவர் இழுத்துச் செல்ல ஏதுவாகக் கைப்பிடி ஒன்றும் உள்ளது.
ஒருநாளில் இரண்டு பேர் சேர்ந்து 2.5 ஏக்கரில் விதைக்கலாம். விதைப்புச் செலவு எக்டருக்கு ரூ.1,000 மட்டுமே ஆகும். ஆனால், ஒரு எக்டரில் நடவு செய்ய ரூ.4,000 முதல் 5,000 வரையாகும். இங்கே வரிசையாக விதைப்பதால் களையெடுப்பது எளிது. இதனால், ஆள் மற்றும் கூலி மிச்சமாகும். 25-30 சதம் விதை மிச்சமாகும்.
நேரடி நெல் விதைப்பில், காய்ச்சலும் பாய்ச்சலுமாகப் பாசனம் இருக்க வேண்டும். இதனால், 15-30 சதம் நீர் மிச்சமாகும். ஆனாலும், விளைச்சலில் எந்தக் குறையும் இருக்காது. பயிர்கள் முளைத்து 15-21 நாட்கள் மற்றும் 35-40 நாட்களில் களையெடுக்க வேண்டும்.
உருளைக் களையெடுப்பான் மூலம் களையெடுத்தால் காற்று மண்ணுக்குள் புகும். இதனால், வேர் வளர்ச்சி, பயிர் வளர்ச்சி, சிறப்பாக இருக்கும். பயிர் முளைத்து 10-15 நாட்களில் தொடங்கி 10 நாட்கள் இடைவெளியில் தொடர்ந்து களைக்கருவி மூலம் களைகளை அகற்றலாம்.
நேரடி நெல் விதைப்புக் கருவியைப் பயன்படுத்துவதில் சில சிக்கல்கள் உள்ளன. எனவே, இவற்றைக் குறைக்க, கோடையுழவு செய்ய வேண்டும். இதனால், தேவையற்ற களைகள், பூச்சிகள், பூச்சிக் கூடுகள் மற்றும் பூச்சி முட்டைகளை அழிக்கலாம். எனவே, நேரடி நெல் விதைப்புக் கருவியைப் பயன்படுத்தி விவசாயிகள் பயனடைய வேண்டுகிறோம்.
முனைவர் பெ.வீரமணி, முனைவர் க.ஆனந்த், வேளாண்மை அறிவியல் நிலையம், விரிஞ்சிபுரம், வேலூர் மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!