My page - topic 1, topic 2, topic 3

நாய்களைத் தாக்கும் இரத்தக் கழிச்சல்!

நாய் இரத்தக் கழிச்சல்

செய்தி வெளியான இதழ்: 2019 நவம்பர்.

செல்லப் பிராணிகளில் சி.வி.பி.2.பி என்னும் பார்வோ நச்சுயிரியால் இரத்தக் கழிச்சல் நோய் ஏற்படுகிறது. இதனால், நாய்களில் இருவகைப் பாதிப்பு உண்டாகிறது. ஒருவகை, குடல் பகுதியை மட்டும் அதிகளவில் பாதிக்கும். அடுத்தது, இதயத்தை குறைந்தளவில் பாதிக்கும். பார்வோ நோய், 3-6 மாத நாய்க் குட்டிகளில் அதிகளவில் இருக்கும்.

இரத்தக் கழிச்சல் பரவும் விதம்

நோயெதிர்ப்பு சக்தி குறைந்துள்ள நாய்களை இந்நோய் தாக்கும். மற்ற நாய்களில், தொடுதல் அல்லது மலத்தை உண்பதால் இந்த நச்சுயிரி பரவும். இது, மண்ணில் பல ஆண்டுகள் வாழும். நாய்களுக்குத் தடுப்பூசி போடாத நிலையில், இந்நோய் எளிதில் பரவும்.

மலம் மூலமே அதிகளவில் நச்சுயரி வெளியேறும். எனவே, அதை உடனே அகற்றி விட்டால், மற்ற நாய்களுக்குப் பரவாமல் தடுக்கலாம். மேலும், நோயுற்ற நாய்களைக் கையாளும் மருத்துவர்கள், வேலையாட்கள் மூலமூம் இந்த நச்சுயிரி பரவும்.

இரத்தக் கழிச்சல் நோய் அறிகுறிகள்

உடல் சோர்வு. பசியின்மை. வயிற்றுவலி, வயிற்று உப்புசம். முதலில் உடலின் வெப்பம் உயர்ந்து பிறகு குறைதல். வாந்தி எடுத்தல். இரத்தம் கலந்த வயிற்றுப்போக்குத் துர்நாற்றத்துடன் இருத்தல். இதனால், உடலில் நீர்ச்சத்துக் குறைந்து, நாய்கள் மெலிதல். கடும் குடல் பாதிப்பு மற்றும் நோயெதிர்ப்பு சக்திக் குறைவதால் இறத்தல்.

சிகிச்சை

இது, நச்சுயிரியால் ஏற்படுவதால், நோய் அறிகுறிக்குத் தகுந்து, இரண்டாம் தர நுண்ணுயிரித் தாக்கத்தைத் தடுக்கும், சிகிச்சையை அளிக்க வேண்டும். இதனால் 70 சத நாய்கள் பிழைக்க வாய்ப்பு உள்ளது. ஒருசில நேரங்களில் கடும் நீரிழப்பால் இறக்கவும் நேரிடும். சிகிச்சை செய்யாத நாய்கள் இறந்து விடும்.

மக்களுக்குப் பாதிப்பு

இந்த நச்சுயிரியால் பாதிப்பில்லை. ஆனால், பார்வோ பி19 என்னும் நச்சுயிரியால் மக்களுக்கு பார்வோ நோய் ஏற்படும். இது, நாய்களைத் தாக்காது. குழந்தைகளுக்குத் தொண்டை எரிச்சல், காய்ச்சல், வயிற்றுக் கோளாறு, தலைவலி, சோர்வு, அரிப்பு ஏற்படும்.

இந்த அறிகுறிகள் தெரிந்த சில நாட்களில் கன்னத்தில் சிவந்த தடிப்புகள் ஏற்படும். பிறகு இவை, கை, கால்கள், பின்புறம் எனப் பரவும். குழந்தைகள் வெய்யிலில் நெடுநேரம் விளையாடினால், இந்தத் தடிப்புகள் மூன்று வாரங்களுக்கு ஒருமுறை வந்து வந்து போகும்.

கட்டுப்படுத்துதல்

இந்த நச்சுயுரி மண்ணில் நிலைக்காமல் தடுக்க, நோயுற்ற நாய்கள் வெளியேற்றும் வாந்தி, மலத்தை உடனே அகற்ற வேண்டும். வீட்டில் நாய்கள் இருப்பிடத்தை, பினாயில் அல்லது பிற கிருமி நாசினியால் நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.

நோயுற்ற நாய்களை மீண்டும் பார்வோ தாக்கலாம். இதனால், இரண்டு மாதம் வரை மற்ற நாய்களுக்கும் நோய் பரவலாம். எனவே, அத்தகைய நாய்களுக்கு மீண்டும் சிகிச்சை தர வேண்டும்.

நாய்களுக்கு உரிய வயதில் தடுப்பூசி அளிப்பதே சிறந்தது. குட்டி பிறந்த 45 ஆம் நாளில் முதல் தடுப்பூசியும், பின்பு, 21-30 நாட்கள் இடைவெளியில் 2 ஊசிகளையும் போட வேண்டும்.

அடுத்து, ஆண்டுக்கு ஒருமுறை பூஸ்டர் தடுப்பூசியைப் போட வேண்டும். அடுத்த வீட்டு நாய்க்கு முறையாகத் தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே, அதை உங்கள் நாயுடன் விளையாட விட வேண்டும்.

நாய்கள் அதிகளவில் கூடும் மருத்துவமனை, கண்காட்சித் திடல், செல்லப் பிராணிக் கடைகள், பூங்கா போன்ற இடங்களுக்கு நாய்களை அழைத்துச் சென்றால், அவை மண் மற்றும் நாய்களின் மலத்தை உண்ணாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நண்பர்கள், உறவினர்களுக்கு இந்நோயின் தன்மை மற்றும் தடுக்கும் முறைகளை எடுத்துரைக்க வேண்டும்.


PB_VENKATESAN

மா.வெங்கடேசன், சோ.யோகேஷ் பிரியா, நா.பிரேமலதா, கால்நடை மருத்துவக் கல்லூரி, ஒரத்தநாடு, தஞ்சாவூர்- 614 625.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks