My page - topic 1, topic 2, topic 3

மருத்துவக் குணமிக்க நாகலிங்க மரம்!

நாகலிங்க மரம்

செய்தி வெளியான இதழ்: 2018 பிப்ரவரி.

நாகலிங்க மரம் (Couroupita guianensis) தென்னமெரிக்க வடபகுதி, வெப்ப வளைய அமெரிக்கா மற்றும் தென் கரிபியன் பகுதியைத் தாயகமாகக் கொண்டது. இந்த மர, லீசித்டைசே குடும்பத்தின் அங்கமாக உள்ளது. பிரேசில் நாட்டு மரத்துடன் தொடர்புடையது. இது, 30-35 மீட்ட உயரம் வரை வளரும்.

இலங்கையின் சில பகுதிகளில், தாய்லாந்து, இந்தியா, கொலம்பியா, பொலிவியா, கோஸ்டா ரிக்கா, ஹோன்டுராஸ், யுனைடெட் ஸ்டேட்ஸ், பனாமா, பெரு, ஈக்வடார், வெனிசுலா போன்ற நாடுகளில் உள்ளது. பூங்கா மற்றும் சாலைகளில் அழகு மரங்களாக வளர்க்கப் படுகின்றன.

நாகலிங்க மரத்தில் கொத்துக் கொத்தாய்ப் பூக்கும் பூக்களில் வியத்தகு மருத்துவக் குணங்கள் உள்ளன. ஆன்மிகத் தொடர்புள்ள இந்தப் பூக்கள் மரத்தண்டில் பூக்கும். அதுவும் வேர்ப்பகுதிக்கு மேலே, கிளைகள் இருக்கும் பகுதிக்குக் கீழே, தனியாகக் கிளைவிட்டு அதில் பூக்கும்.

உலக முழுவதும், சிவ வடிவமாக இந்தப் பூக்கள் போற்றப்படுகின்றன. மென்மையாக, கவர்ச்சியாக இருக்கும் இந்தப் பூக்களில் காய்க்கும் காய்கள், பந்தைப் போல இருப்பதால், Cannon ball எனப்படுகின்றன.

பூவின் தோற்றம் சிவாலயத்தை நினைவூட்டும் வகையில் இருக்கும். நடுவில் சிவலிங்கம், அதைச் சுற்றி முனிவர்கள் இருப்பதைப் போன்ற, அழகிய வடிவில் காணப்படும்.

நாகலிங்க மரங்கள் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில சிவ ஆலயங்களில், மேற்குத் தொடர்ச்சி மலையின் சில இடங்களில் உள்ளன. நாகலிங்கப் பூவும், மரமும் மருத்துவ உலகில் பெரிதும் உதவுகின்றன.

இந்த மரம், தளவாடப் பொருள்கள், சமையல் பாத்திரங்கள் மற்றும் வீட்டு அலங்கார பொருள்களைச் செய்யப் பயன்படுகிறது. உலர்ந்த நாகலிங்கப் பழம் நச்சுத் தன்மை மிக்கது. சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்படும்.

செயல்திறன் மிக்க வேதிப் பொருள்கள் இதில் உள்ளன. டைஹைட்ரோ டையாக்சின்டோலோ குயினாசோலோன், டிரிப்டான்ரின், இன்டிகோ இன்டுருபின், ஐசாடின் போன்றவை உள்ளன. இவை, எதிர் உயிரியாகச் செயல்பட்டு, தோல், உடலின் மென்மையான பகுதிகளில் வளரும் பூஞ்சை, பாக்டீரியாக்களை அழிக்கின்றன.

வைரத்தை வைரத்தால் அறுப்பதைப் போல, விஷக் காய்ச்சலுக்கு நாகலிங்கப் பட்டையும், காயும் மருந்தாகப் பயன்படுகின்றன. நாகலிங்கப் பட்டை, மலேரியா காய்ச்சலைப் போக்கப் பயன்படுகிறது. குளிர் காலத்தில் ஏற்படும் வயிற்றுத் தொல்லைக்குச் சிறந்த மருந்தாகும்.

பற்களைப் பாதுகாக்கும் இந்த இலைகளை மையாக அரைத்து, பூஞ்சை, கிருமியால் தோன்றும் சொறி, சிரங்கு, படர் தாமரை, படை உள்ள இடங்களில் தடவினால் குணமாகும்.

பூவின் லிங்கம் போன்ற பகுதியை அரைத்துத் தடவினால் புண்கள் ஆறும். நுண்ணிய கிருமிகளை அழிக்கும் ஆற்றலுள்ள நாகலிங்க இலைகளை மென்று சாப்பிட்டால், பல் மற்றும் ஈறு இடைவெளியில் தங்கியுள்ள கிருமிகள் வெளியேற, பல்வலி குறையும். பற்சொத்தை தடுக்கப்படும்.


ரா.கல்பனா தேவி, சு.வசந்தா, வீரய்யா வாண்டையார் நினைவு திருபுட்பம் கல்லூரி, பூண்டி, தஞ்சாவூர் – 613 503, ந.வ.இராஜேஷ், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், இராமநாதபுரம் – 623 503.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks