நன்னீர் இறால் வளர்ப்பு!

இறால்

செய்தி வெளியான இதழ்: 2018 ஜூன்.

யற்கையிலேயே அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நன்னீர்க் குளங்களில், நன்னீர் இறால் இனங்களை வளர்ப்பது, நன்னீர் இறால் வளர்ப்பு எனப்படும். இந்த இறால் இனங்கள், மிகுந்த சுவையும், உன்னதப் புரதமும் கொண்ட மாமிச உணவாக விளங்குவதால், உலகச் சந்தைகளில், தனிச் சிறப்பைப் பெறுகின்றன.

இவற்றில் நிறைய வகைகள் இருந்தாலும், குறுகிய காலத்தில் மேம்பட்ட வளர்ச்சி, மிகுந்த எடையை அடைதல் போன்றவற்றால், நீலக்கால் இறால் அல்லது இராட்சத நன்னீர் இறால் (மேக்ரோ பிராக்கியம் ரோசன் பெர்கி) மற்றும் மோட்டு இறால் (மேக்ரோ பிராக்கியம் மால்கம் சோனி) ஆகிய இரு இனங்கள், தனியாக அல்லது கெண்டை மீன் இனங்களுடன் சேர்த்து வளர்க்கப்படுகின்றன. இவை, இயற்கையில் 250 கிராம், அதாவது, 30-35 செ.மீ. நீளம் வரையில் வளரும்.உவர்நீர் இறால் இனங்களைப் போலவே இந்த இனங்களும் அனைத்து உண்ணிகள் ஆகும். இருந்தாலும், இவை பெருமளவு மாமிச உண்ணிகளாக இருப்பதால், இந்த இனங்களில் வலுவாக இருக்கும் இறால்கள், வலுவிழந்த இறால்களை உணவாகக் கொள்ளும்.

ஆனால், தேவையான உணவை வழங்கினால், ஒன்றையொன்று அடித்துச் சாப்பிடும் நிலை இருக்காது. உவர்நீர் இறால்களைப் போன்றே இந்த இனங்களும் ஏற்றுமதியாகி, மிகுந்த அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும். இந்த இனங்கள் ஸ்கேம்பி என்னும் வணிகப் பெயரில், வெளிநாடுகளில் மிகுதியாக விற்கப்படுகின்றன.

இடத்தேர்வும் குள அமைப்பும்

நீர் நிலைகளுக்கு அருகிலுள்ள வண்டல் மற்றும் களிமண் கலந்த இடம், இறால் வளர்ப்புக் குளம் அமைக்க ஏற்றதாகும். குளத்தின் ஆழம் கரையுடன் சேர்த்து ஆறடி இருக்க வேண்டும். இதில், 3.5-4 அடி வரை, நீரைத் தேக்கி வைக்க வேண்டும்.

குளம், 0.1-0.5 எக்டர் பரப்பில், செவ்வக வடிவில் இருக்க வேண்டும். குளத்தில் நீர்ப்புகும் மடையும், நீர்வடி மடையும் இருக்க வேண்டும். குளக்கரை 1:1.5 வீதம் சரிவாக இருக்க வேண்டும்.

வளர்ந்த இறால்களை எளிதாக அறுவடை செய்ய ஏதுவாக, நீர்வடி மடைக்கு அருகில் 2 மீட்டர் விட்டம், ஒரு அடி ஆழத்தில், இறால் அறுவடைக் குழி என்னும், இறால் பிடி குழியைத் தயார் செய்ய வேண்டும்.

குளத்தைத் தயார் செய்தல்

நிலத்தை நன்கு காய வைத்து உழ வேண்டும். ஒரு எக்டர் குளத்துக்கு 250 கிலோ சுண்ணாம்பை இட்டு, நிலத்தின் கார அமிலத் தன்மையை 7.5-8.5 வரை உயர்த்த வேண்டும்.

எக்டருக்கு 1-1.5 டன் மட்கிய சாணம் அல்லது 0.75-1.25 டன் மட்கிய கோழியெருவை இட்டு, குளத்தில் 30 செ.மீ. அளவுக்கு நீரை நிறுத்த வேண்டும். எக்டருக்கு 50 கிலோ யூரியா, 60 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரங்களை இட வேண்டும்.

இறால்களின் இயற்கை உயிர் உணவுகளான மிதவைத் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் உற்பத்தியைக் கூட்ட, இந்த உரங்கள் உதவும். சில நாட்களில் நீரின் நிறம் பசுமையாக மாறியதும், நீர் மட்டத்தை ஒரு மீட்டராக உயர்த்தி, உரமிட்டு, இதை, அறுவடைக் காலம் வரை பராமரிக்க வேண்டும்.

இறால் குஞ்சுகளை இருப்பு வைத்தல்

தரமான இறால் குஞ்சுகளைத் தேர்வு செய்து நாற்றங்கால் குளத்தில் ஒரு மாதம் வைத்திருந்து, பின்னர் வளர்ப்புக் குளத்தில் விட்டால், இறால்களின் பிழைப்புத் திறன் கூடுதலாக இருக்கும்.

நாற்றங்கால் குளத்தில் ஒரு சதுர மீட்டருக்கு 100 குஞ்சுகள் வீதம் இருப்பு வைக்கலாம். வளர்ப்புக் குளத்தில் எக்டருக்கு 30,000 முதல் 60,000 குஞ்சுகளை இருப்பு வைக்கலாம்.

இருப்புக்குப் பின் பராமரிப்பு

வளர்ப்புக் குளத்தில் இறால்களை விட்ட பிறகு, குளத்து நீரின் தன்மையை நன்கு பேண வேண்டும். ஏனெனில், இறால்களின் வளர்ச்சியும், பிழைப்புத் திறனும் இந்த நீரின் தன்மையைப் பொறுத்தே அமையும்.

எனவே, நீரில் கரைந்துள்ள பிராண வாயு, கார அமிலத் தன்மை, மிதக்கும் உயிரினங்களின் உற்பத்தியைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும்.

நீரின் வெப்பநிலை 26-32 செல்சியஸ், பிராண வாயு ஒரு லிட்டர் நீருக்கு 5 மி.கி., நீரின் ஒளிபுகாத் தன்மை 30-40 செ.மீ., நீரின் உப்புத் தன்மை ஒரு பி.பி.டி.க்குக் குறைவாக இருக்க வேண்டும். நீரில் பிராண வாயுவின் அளவைச் சரியாக வைக்க, ஏரேட்டர் என்னும் காற்றூட்டியைப் பயன்படுத்தலாம்.

உணவு முறை

குளத்தில் கிடைக்கும் இயற்கை உணவுகளுடன் மேலுணவாக, 28-32 சத புரதமுள்ள உணவை இறால்களுக்கு வழங்க வேண்டும். இந்த உணவின் அளவானது,

இறால்களின் மொத்த எடையில் அவற்றின் வளர்ச்சிக்குத் தகுந்து 1 முதல் 3 சதம் வரை இருக்கலாம்.

இந்த உணவை, மீன்தூள், கடலைப் புண்ணாக்கு, அரிசிக் குருணை, கோதுமைத் தவிடு மற்றும் மரவள்ளிக் கிழங்கு மாவு மூலம் தயாரிக்கலாம்.

மேலும், சந்தைகளில் கிடைக்கும் உலர் தீவனங்களை, இறால்களின் தொடக்க நிலை, வளர்ச்சி நிலை, இறுதி நிலைத் தீவனமாகக் கொடுக்கலாம். பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை இறால்களின் எடையை மாதிரிப் பிடிப்பு மூலம் கணக்கிட்டு, அவற்றின் வளர்ச்சிக்கு ஏற்றபடி, தேவையான உணவை வழங்க வேண்டும்.

அறுவடை

இறால்களின் எடை ஐந்து மாதங்களில் சராசரியாக 50 கிராம் அளவை எட்டி விடும். இந்த நேரத்தில் குளத்தில் நீரைக் குறைத்து விட்டு, இரு வலை அல்லது வீச்சு வலை மூலம் இறால்களைப் பிடிக்கலாம். மேலும், குளத்து நீரை முழுதாக வெளியேற்றிய பிறகு, கைத்தடவல் முறையில் மீதமுள்ள இறால்களைப் பிடிக்கலாம்.

ஒரு எக்டர் குளத்தின் பொருளாதாரக் கணக்கு: நிரந்தரச் செலவினம்

குளம் அமைக்க: ரூ.1,25,000.00

நீர் இறைக்கும் இயந்திரம்: ரூ. 30,000.00

காற்றூட்டி, மின்சாரம் வகையில்: ரூ. 50,000.00

தங்கும்/பண்டக அறை/இதரம்: ரூ. 50,000.00

மொத்தச் செலவு: ரூ.2,55,000.00

நடைமுறைச் செலவினம்

1,000 குஞ்சுகள் ரூ.850 விலையில் 60,000க்கு: ரூ. 51,000.00

தீவனம் கிலோ ரூ.35 வீதம் 3,000 கிலோவுக்கு: ரூ.1,05000.00

சுண்ணாம்பு, உரம், பராமரிப்பு, அறுவடை: ரூ. 44,000.00

மொத்தச் செலவு: ரூ.2,00,000.00

ஒட்டுமொத்தச் செலவு: ரூ.2,55,000 + 2,00,000 = 4,55,000.00

வருவாய்

ஐந்து மாதங்களில் அறுவடை செய்யலாம். 1,500 கிலோ இறால்கள் கிடைக்கும். ஒரு கிலோ இறால்களின் விலை ரூ.300 வீதம் 1,500 கிலோ இறால்களின் விலை நான்கு இலட்சத்து ஐம்பதாயிரம் ஆகும். இதில், நடைமுறைச் செலவான இரண்டு இலட்சம் போக, நிகர வருமானமாக இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் கிடைக்கும்.

இதைப் போல, இரண்டாவதாக இறால்களை இருப்பு வைத்து வளர்க்கும் போதும், நடைமுறைச் செலவினம் போக, இதேயளவில் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் இலாபமாகக் கிடைக்கும்.

ஆக, ஓராண்டில் ஒரு எக்டர் குளத்தில் இரண்டு தடவை இறால்களை வளர்ப்பதன் மூலம், ஐந்து இலட்ச ரூபாயை வருமானமாகப் பெற முடியும்.


இறால் Dr.K.Sivakumar e1628865572936

முனைவர் கி.சிவக்குமார், முனைவர் க.வேல்முருகன், வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம் – 603 203.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading