தேசிய ஊட்டச்சத்துத் திட்டம்!

ஊட்டச்சத்து

செய்தி வெளியான இதழ்: 2019 ஆகஸ்ட்.

ந்திய அரசாங்கம், ஒருங்கிணைந்த குழந்தைகள் அபிவிருத்திச் சேவைகள் திட்டத்தின் கீழ், பலவகைத் திட்டங்களைத் தீட்டி, நாட்டில் நிலவும் சத்துப் பற்றாக் குறையைக் குறைக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது.

ஒரு குழந்தையின் சுகவீனத்துக்கு சத்தின்மை மட்டுமே காரணம் அல்ல. அதனுடன் தொடர்புள்ள, குழந்தை முதிரா நிலை, குறைவான எடையில் பிறத்தல், நிமோனியா, வயிற்றுப்போக்கு,

தொற்றற்ற நோய்கள், பிறப்பு மூச்சுத் திணறல், பிறப்பு அதிர்ச்சி, காயங்கள், பிறவி முரண்கள், கடும் பாக்டீரிய சீழ்ப் பிடிப்பு, கடும் தொற்றுகளால் திறன் குறைதல் போன்றவையும் காரணங்களாக அமைகின்றன.

போஷன் அபியான் திட்டம்

தேசிய ஊட்டச்சத்துத் திட்டம் என்னும் இத்திட்டம், இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் தலைமைத் திட்டமாகும். இதில், ஒருங்கிணைந்த திட்டங்களாக, அங்கன் வாடி சேவை மையம், பிரதம மந்திரி மற்றும் வந்தன யோஜனா,

தேசிய சுகாதாரப் பணி, தூய்மை இந்தியா திட்டம், பொது விநியோக அமைப்பு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம், உணவு மற்றும் பொது விநியோகத் திட்டம், குடிநீர் மற்றும் சுகாதாரத் திட்டம் ஆகியன உள்ளன.

தேசிய ஊட்டச்சத்து வாரம்

மனிதன் நலமாக வாழத் தேவையான ஊட்டச்சத்தின் அவசியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் முதல் வாரம் தேசிய ஊட்டச்சத்து வாரமாகக் கொண்டாடப் படுகிறது.

மக்கள் தங்களின் உடல் வளர்ச்சி மற்றும் நோயெதிர்ப்பு அமைப்புக்குத் தேவையான சத்துமிகு தானியங்கள், சிறு தானியங்கள், பயறு வகைகள், பழங்கள், காய்கறிகள், கொழுப்பில்லா உணவுகள், கீரைகள் ஆகியவற்றை, தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

முன்னே செல்வோம் ஊட்டச்சத்து உணவோடு என்பது, 2018 இன் கருப்பொருள். மக்களுக்கு ஊட்டச்சத்துக் கல்வியை வழங்கவும், உணவுத்துறை நிபுணர்களின் தொழிற்பாட்டை மேம்படுத்தவும், மார்ச் 1973-இல், அமெரிக்க உணவுக் கட்டுப்பாட்டுச் சங்க உறுப்பினர்களால் தொடங்கப்பட்டது.

1980-இல் மக்களிடம் சிறந்த வரவேற்பைப் பெற்று, வாரத்தைக் கடந்து மாதம் முழுதும் கொண்டாடும் அளவில் சிறப்பாகச் செயல்பட்டது.

1982-இல், இந்தியாவில் மத்திய அரசால், தேசிய ஊட்டச்சத்து வார விழா தொடங்கப்பட்டது. ஊட்டச்சத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த, மக்களுக்கு ஊட்டச்சத்தின் அவசியம், நலவாழ்வு போன்றவற்றைப் பற்றி ஊக்குவிக்க, பரப்புரை செய்யப்பட்டது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு, ஊட்டச்சத்துக் குறைபாடு முக்கியத் தடையாக உள்ளது. இதை நீக்குவதற்காக, ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் வாரம், தேசிய ஊட்டச்சத்து வாரமாகக் கொண்டாடப்படுகிறது.

தேசிய ஊட்டச்சத்து மாதம்

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம், செப்டம்பர்-2018 தேசிய ஊட்டச்சத்து மாதமாக அறிவித்து, நாடு முழுவதும் சத்துக் குறையை ஒழிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.

இதன் மூலம் ஒவ்வொரு வீட்டுக்கும் சத்துகளைப் பற்றிய முக்கியத்துவம் சென்றடைய வேண்டும் என்றும், ஒவ்வொரு வீட்டிலும் சத்துக் குறித்த விழிப்புணர்வைக் கொண்டாட வேண்டும் என்றும், அதற்கான முழக்கமாக, வீட்டுக்கு வீடு திருவிழா ஊட்டச்சத்துப் பெருவிழா எனப் பரப்புரை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.

நோக்கங்கள்

ஒட்டு மொத்த ஊட்டச்சத்து, குழந்தைகளுக்குக் கட்டாயத் தாய்ப்பால் உணவு, முழு உணவு, அந்தந்தக் காலத்தில் தடுப்பூசி போடுதல், குழந்தைகளின் வளர்ச்சியைக் கண்காணித்தல், உணவு வலுவூட்டுதல் மற்றும் நுண்ணூட்டம் பற்றிய விழிப்புணர்வு,

வயிற்றுப்போக்கு, சுத்தம், சுத்தமான நீர், சுகாதாரம், பருவக்கல்வி, உணவு முறை, உணவு, திருமண வயது, கர்ப்பக் காலத்தில் பெண்களின் உடல் எடை, உயரம், இரத்தழுத்தம், உணவில் கூடுதல் கால்சியம் சேர்த்தல் போன்றவற்றைச் சோதனை செய்தல், குழந்தைப் பருவப் பராமரிப்பு மற்றும் கல்வி, கர்ப்பத்தின் மூன்றாவது, ஆறாவது மாதங்களில் பெண்களை அழைத்துக் கூட்டம் நடத்துவது,

குழந்தைகளுக்கு ஆறு மாதம் முடிந்ததும் திட உணவை (பருப்புச் சோறு) அறிமுகப்படுத்துதல், கர்ப்பக் காலத்திலும் பிரசவத்துக்குப் பின்னும், பெண்களைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளும் எண்ணத்தை ஆண்களுக்கு ஏற்படுத்துதல், சரியான வயதில் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புதல், நோயுறுவதைக் குறைத்தல் மற்றும் ஊட்டச்சத்தைக் கூட்டுதல் குறித்த செய்திகளைப் பரப்புதல் போன்றவை இத்திட்டத்தின் நோக்கங்கள் ஆகும்.

தேசியளவில் இந்தச்சிறப்புத் திட்டத்தை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்துடன் இணைந்து நிதி ஆயோக், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, பஞ்சாயத்துராஜ், ஊரக வளர்ச்சித்துறை, குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை, வீடு மற்றும் நகர்ப்புறத்துறை, மனிதவள மேம்பாட்டுத் துறை, தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை,

நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத் துறை, பழங்குடி விவகாரம், சிறுபான்மை விவகாரம், ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்த மற்றும் ஹோமியோபதி ஆகிய துறைகள் நடத்துகின்றன.

இந்தியாவில் ஊட்டச்சத்துச் குறை பெருஞ் சுமையாக உள்ளது. தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பின்படி 2005-06-இல் இந்தியாவில் 5 வயதுக்குக் குறைவான குழந்தைகளில் 32 சதம் பேர் பேர்கள் வயதுக்கு ஏற்ற உயரத்தை அடையவில்லை.

மேலும், 21 சதம் குழந்தைகள் உயரத்துக்கு ஏற்ற எடையை எட்டவில்லை. 35.7 சதம் குழந்தைகள் போதுமான எடையை அடையாதவர்கள். 2005-06 முதல் 2015-16 வரை, குறைவான எடையுள்ள குழந்தைகள் 19.8 சதத்தில் இருந்து 21 சதமாகவும், மிகவும் குறைவான எடையுள்ள குழந்தைகள் 6.4 சதத்திலிருந்து 7.5 சதமாகவும் கூடியுள்ளனர்.

உலகளாவிய பட்டினிக் குறியீடு 2017-இன் படி, 119 நாடுகளில் இந்தியா 100க்கும் குறைவான இடத்தில் உள்ளது. இதற்கு முக்கியக் காரணமாக, 5 வயதுக்குக் குறைவான குழந்தைகளில் ஐந்தில் ஒருவர், உயரத்துக்கு ஏற்ற எடையை எட்டாதவர்களாக உள்ளனர்.

இந்தச் சத்துக்குறை நிலையைப் போக்குவதற்கு என, இந்திய அரசு, 2018 மார்ச்சில் போஷன் அபியான் என்னும் தேசிய ஊட்டச்சத்துத் திட்டத்தைத் தொடங்கி, 9 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.

இந்தத் திட்டத்தின் இலக்கு, குழந்தைகளின் உடல் வளர்ச்சித் தடைபடுவதைக் குறைத்தல், சத்துக்குறையைக் குறைத்தல், குழந்தைகள், பெண்கள் மற்றும் பருவப் பெண்களுக்கு இரத்தச்சோகை வராமல் தடுத்தல் மற்றும் குறைவான எடையில் குழந்தைகள் பிறப்பதைக் குறைப்பதாகும்.

2022-இல், ஆறு வயதுக்குக் கீழுள்ள குழந்தைகளின் உடல் வளர்ச்சித் தடைபடுதலை, 38.4 சதத்தில் இருந்து 25 சதமாகக் குறைப்பதே தேசிய ஊட்டச்சத்துத் திட்டத்தின் முக்கிய இலக்காகும்.


ஊட்டச்சத்து Dr. P. KARUPPASAMY e1712557215870

முனைவர் பா.கருப்பசாமி மற்றும் முனைவர் மு.ரா.லதா, வேளாண்மை அறிவியல் நிலையம், வம்பன், புதுக்கோட்டை.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading