My page - topic 1, topic 2, topic 3

அலெக்சாண்டரைக் கொன்ற கொசு!

கொசு

செய்தி வெளியான இதழ்: 2018 மே.

லகத்தையே அச்சுறுத்தும் வகையில் போர் புரிந்தவர் மகா அலெக்சாண்டர். யாராலும் அவரை வெல்லவோ கொல்லவோ முடியவில்லை. அத்தகைய அலெக்சாண்டரின் இறப்புக்குக் காரணமே கொசு தான் என்பது நம்பும்படி உள்ளதா? ஆனால், அதுதான் உண்மை.

கொசுவால் ஏற்பட்ட மலேரியா காய்ச்சலால் தான் அவருக்கு மரணம் நேர்ந்தது என்பது வரலாற்றுச் செய்தி. கொசுக்களில், கியூலக்ஸ், ஏ.டி.எஸ்., அனோஃபிலஸ் எனப் பல சிற்றினங்கள் உள்ளன.

கொசு விரட்டிகள்

இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்திலேயே கொசு விரட்டிகள் பயன்படுத்தப் பட்டுள்ளன. இவற்றில், ஓடோமாஸ் என்னும் சிட்ரோனெல்லா எண்ணெய், டைமெத்தில் ப்தாலேட், டைஎதில் டொலுயமைட், இன்டலோன் போன்றவை சிறந்து விளங்குகின்றன.

இந்த மருந்துகளைக் கொசுக் கடிக்கும் இடங்களில் பூச வேண்டும். இவற்றின் வாசனையை விரும்பாத கொசுக்கள், நம்மைக் கடிக்காமல் சென்று விடும்.

விலங்குலகில் கொசுக்கள்

புவியிலுள்ள பூச்சிகளில் கொசுக்களே பேரளவில் தொல்லை தரும் பூச்சிகளாகக் கருதப்படுகின்றன. கொசுக்கள் பறக்கும் போது ஏற்படும் இறக்கைச் சிணுங்கலே, நம் தூக்கத்தைக் கெடுத்து விடும். மேலும், கொசுக்கள் கடித்தால் கடுமையான வலியும் வீக்கமும் கூட ஏற்படும்.

குறிப்பிடத் தகுந்த செய்தி என்னவெனில், மற்ற பூச்சிகளைப் போலில்லாமல், இந்தக் கொசுக்கள் வடக்குப் பகுதியில் மிகுதியாகவும், வெப்ப மண்டலப் பகுதியில் ஓரளவு குறைந்தும் உள்ளன என்பது தான்.

கொசுக்களும் சில உண்மைகளும்

பெண் கொசுக்கள் மட்டுமே இரத்தத்தை உறிஞ்சுகின்றன. ஆண் கொசுக்கள் சைவ உயிரிகள். இவை இரத்தத்தை உறிஞ்சுவதும் இல்லை, உண்பதும் இல்லை.

பூக்களில் உள்ள தேன், பழங்கள் மற்றும் தாவரங்களில் இருக்கும் சாற்றையே உணவாகக் கொள்கின்றன. பெண் கொசுக்களும் கூடச் சைவம் தான். ஆனால், முட்டைகளை உற்பத்தி செய்ய இரத்தம் தேவை என்பதால் தான், அதை உறிஞ்சுகின்றன.

நிறம், ஒளி மற்றும் விலங்குகளால் கொசுக்கள் ஈர்க்கப்படுகின்றன. கறுப்பு, நீலம், சிவப்பு ஆகியன, ஏ.டி.எஸ். கொசுக்களை ஈர்க்கின்றன. வெள்ளை, மஞ்சள் நிறங்கள் கொசுக்களைப் பெரிதாக ஈர்ப்பதில்லை.

மனிதர்கள் மற்றும் விலங்குகளின் உடல் வெப்பம், வியர்வை, ஈரப்பதம் போன்றவை கொசுக்களை ஈர்க்கும். கார்பன் டை ஆக்ஸைடு, கொசுக்களைக் கவர்வதில்லை. ஆனால், கொசுக்களின் செயலைத் தூண்டி விடும்.

பொதுவாகக் கொசுக்கள், ஹோமியோ தெர்மல் என்னும் வெப்ப இரத்த விலங்குகள் மற்றும் மனித இரத்தத்தை உறிஞ்சுகின்றன. சில கொசுக்கள், பாக்பகிலோ தெர்மல் என்னும் குளிர் இரத்த விலங்குகளின் இரத்தத்தை உறிஞ்சுகின்றன.

இன்னும் சிலவகைக் கொசுக்கள், மனிதனைச் சார்ந்தும், சிலவகைக் கொசுக்கள் விலங்குகளைச் சார்ந்தும் உள்ளன. அனைத்து வகைக் கொசுக்களும் காற்றின் போக்கிலேயே குறைந்த உயரத்தில் பறந்து வலசை போகின்றன.

கொசுக்களின் எதிரிகள்

தகைவிலான் குருவி, வல்லூறு, இராப்பாநு போன்ற பறவைகள், வௌவால் போன்றவை கொசுக்களின் எதிரிகளாக உள்ளன. நியூட் என்னும் பல்லியினம், வண்டுகள், டேஃப்னிட் லார்வாக்கள், மே பூச்சியின் நிம்ப்கள், கம்பூசிய மீன்கள் போன்றவை, கொசு லார்வாக்கள் மற்றும் கூட்டுப் புழுக்களைக் கொன்று உண்ணுகின்றன.

கொசுக்களின் ஓசை

கொசு இறக்கைகளின் அசைவு மற்றும் அதிர்வினால் ஓசை எழுகிறது. பொதுவாக, ஆண் கொசுக்களைக் கவர்ந்திழுக்கவே பெண் கொசுக்கள் ஓசையை எழுப்புகின்றன.

வாழ்க்கைச் சுழற்சி

நிலையான, மாசடைந்த குளம் குட்டைகள், கழிவுநீர்க் கால்வாய்கள் போன்றவற்றில் கொசுக்கள் முட்டைகளை இடுகின்றன. கொசு லார்வாக்கள் மேலும் கீழுமாக அசைந்து கொண்டிருப்பதால், இவை மேல் கீழ் அசைவு உயிரிகள் எனப்படுகின்றன.

இந்த லார்வாக்கள் பெருவேட்கை உண்ணிகளாகவும், ஆல்கா, பூஞ்சை போன்றவற்றின் ஸ்போர்கள் மற்றும் பாக்டீரிய உண்ணிகளாகவும் உள்ளன. இதன் பியூபா என்னும் கூட்டுயிரி கேள்விக்குறியை ஒத்துள்ளது.

பெண் கொசுக்களை விட ஆண் கொசுக்கள் குறைந்த நாட்களே வாழும். அதாவது, ஆண் கொசுக்கள் 1-2 வாரங்களும், பெண் கொசுக்கள் ஒரு மாதம் வரையும் வாழும்.

கொசுக்கடியால் ஏற்படும் பாதிப்புகள்

பெண் கொசுக்கள் எந்த இடத்தில் கடித்தாலும் வலி ஏற்படும். கொசு கடித்ததும் இடிமா என்னும் வீக்கம், இரத்த நாள இறுக்கம், விரிவு, அவ்வப்போது இரத்த உறைவு, முகப்பரு போன்ற தோற்றம், எரிதீமா என்னும் தோல் சிவத்தல், அரிப்பு போன்றவை உண்டாகும்.

கொசுக்களின் உமிழ்நீரில் மரத்துப் போகச் செய்யும் வேதிப்பொருள் உள்ளது. இது, தோலை உணர்வற்றதாக மாற்றுகிறது. அதனால் தான் கொசு கடிக்கத் தொடங்கும் போதே, அதை நம்மால் உணர முடிவதில்லை. நாம் வலியை உணர்வதற்குள் கொசு தனது வேலையை முடித்துக் கிளம்பி விடும்.

இரத்த உறைவைத் தடுக்கும் பொருள், கொசுக்களின் உமிழ்நீரில் இருப்பதால் தான், அவற்றால் உறிஞ்சப்படும் இரத்தம், அவற்றின் புரபோசிஸில் திரவ நிலையிலேயே செல்கிறது. கொசுக்கடி வலி, அதன் உமிழ் நீரிலுள்ள பலவகை ஆன்ட்டி ஜென்களால் ஏற்படுகிறது.

மனிதர்களுக்குப் பரவும் நோய்கள்

நோய்க்கிருமிக் கடத்திகளாக, நோய்ப் பரப்பிகளாக, கொசுக்கள் செயல்படுகின்றன. மலேரியா, மஞ்சள் காமாலை, டெங்குக் காய்ச்சல், யானைக்கால் நோய், வைரஸ் தொற்றால் உண்டாகும் மூளைக் காய்ச்சல் ஆகிய ஐந்து கொடிய நோய்கள் கொசுக்கள் மூலம் பரவுகின்றன.

மேலும், பூச்சிகளால் உருவாக்கப்படும் மனித நோய்களையும் கொசுக்களே பரப்புகின்றன. எடுத்துக்காட்டு: டெர்மட்டோபியா, தென்னமெரிக்க வார்பில் பூச்சி போன்றவற்றின் முட்டைகள், கொசுக்கள் மூலமே மனிதர்கள் மற்றும் விலங்குகளின் தோலில் செலுத்தப்படுகின்றன. இந்த முட்டைகள் பிறகு பொரிந்து மையோசிஸ் நோயை உண்டாக்குகின்றன.

விலங்குகளுக்குப் பரவும் நோய்கள்

விலங்குகளிலும் கொசுக்கள் நோயைப் பரப்புகின்றன. கோழிகளில் அம்மை நோய், முயல்களில் மிக்சோமாட்டோசிஸ், செம்மறி ஆடுகளில் ஒருவிதக் காய்ச்சல், குதிரை மற்றும் பறவைகளில் மூளைத்தொற்று, நாய்களில் இதயப் புழுக்கள் போன்ற நோய்களைக் கொசுக்கள் பரப்புகின்றன.

கொசுக்களைக் கட்டுப்படுத்துதல்

கொசுக்கள் உற்பத்தியாகும் நீர்த் தேக்கங்களைக் கட்டுப்படுத்துதல், கொசு லார்வாக்களை அழித்தல், கொசுக்களை அழித்தல், கொசுக்கடிக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்தல் ஆகியவற்றின் மூலம் கொசுக்களைக் கட்டுப்படுத்தலாம்.


ம.த.கௌரி, முனைவர் பட்ட ஆய்வு மாணவி, முனைவர் ம.சி.நளின சுந்தரி, உதவிப் பேராசிரியர், விலங்கியல் துறை, இராணிமேரி கல்லூரி, சென்னை – 600 004.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks