பனை, மனிதனுக்கு இயற்கை அளித்த வரம். இது, தமிழ்நாட்டின் மாநில மரமாக 1978 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதன் அனைத்துப் பகுதிகளும் பயன்படுவதால் கற்பக விருட்சம் எனப்படுகிறது.
உலகளவில் தென்னைக்கு அடுத்த இடத்தில் பனைமரம் உள்ளது. இதிலிருந்து நுங்கு, பதனீர் ஆகிய நேரடிப் பொருள்களும், பனை வெல்லம், கற்கண்டு, பனைத் தேன், மிட்டாய், அல்வா, லட்டு, கேசரி, பக்கோடா, பனிக்கூழ் போன்ற மதிப்புக் கூட்டுப் பொருள்களும் கிடைக்கின்றன.
பனைப் பதநீர்
பதநீர் மருத்துவக் குணமுள்ள பானம். இதை, 45 நாட்கள் தொடர்ந்து பருகினால் உடல் எடை கூடும். செரித்தல் மேம்படும்; உடற்சூடு தணியும்; வயிற்றுப் புண் ஆறும்; வைட்டமின் குறையால் ஏற்படும் பெரிபெரி, ஸ்கர்வி போன்றவை மாறும்; சிவப்பு அணுக்கள் பெருகும்.
பனம் நுங்கு
எளிதில் செரிக்கும். தோலில் தடவினால் வியர்க்குரு மறையும். துவர்க்கும் மேல் தோலை அரைத்துப் பிள்ளைகளுக்குக் கொடுத்தால் வயிற்றுச் சிக்கல் குணமாகும்.
பனம் பழம்
இது, சத்துகள் நிறைந்தது. நூறு கிராம் பனம் பழத்தில், 77.2 சதம் ஈரப்பதம், 13.5 கிராம் நார்ச்சத்து, 0.09 கிராம் கால்சியம், 27 கிராம் வைட்டமின் ஆகிய சத்துகள் உள்ளன.
பனை வெல்லம்
இதைக் கரைத்து வடிகட்டிய நீர், டைபாய்டு நோயாளிகளின் உடல் வலுவைக் கூட்டும்; குழந்தைகளின் மலச்சிக்கலை நீக்கும்; உடல் எடையைக் கூட்டும்.
பனங்கற்கண்டு
இதைப் பாலில் கலந்து குடித்தால் சுறுசுறுப்பு மிகும். தொண்டைப் புண் ஆறும். உடற்சூடு தணியும். மிளகுத் தூளுடன் கலந்து சாப்பிட்டால், வறட்டு இருமல், தொண்டை எரிச்சல் குறையும். குளிர்ந்த நீரில் கலந்து குடித்து வந்தால், கண் எரிச்சல், கண் சிவத்தல் குறையும். குரல்வளம் மேம்படும்.
வேர்
தொழுநோயைக் குணமாக்க, வயிற்றுச் சிக்கலைச் சரி செய்ய உதவுகிறது. பனைவேர்ப் பொடி, தேங்காய்ப் பால், மீனுடன் கலந்தால் கிடைக்கும் புண்ணாக்குப் போன்ற பொருளை, தினமும் உண்டு வந்தால், உடல் வலிமை பெறும்.
ஓலை
வறட்சியில் கால்நடைத் தீவனமாக, கூரையமைக்க, கொட்டான்கள், பெட்டிகள் செய்யப் பயன்படுகிறது. பனை மட்டையில் கிடைக்கும் நார், கட்டில், பெட்டிகள் செய்யப் பயன்படுகிறது.
பருப்பு
கொட்டை முளைக்க, அதனுள் இருக்கும் தேங்காய் போன்ற பருப்பு உதவுகிறது. இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், எலும்பு முறிவைக் குணப்படுத்த உதவுகிறது.
பதநீர் உற்பத்தி்
பனையிலிருந்து கிடைக்கும் முக்கியப் பொருள் பதநீர். சுவை மிகுந்த இந்நீர் கொஞ்சம் அமிலத் தன்மை மற்றும் இனிய மணத்துடன் இருக்கும். பதநீர் விளைச்சல் மரபியல் காரணிகளைச் சார்ந்தது.
பதநீர் உற்பத்தியின் போது மழை பெய்தால், அதன் தரம் குறையும். மேலும், மண் வகை, பாசனம், உரம், பனையில் மஞ்சரிகளின் அமைவிடம், காற்றின் தன்மை போன்றவற்றைப் பொறுத்தும், பதநீரின் தரம் வேறுபடும்.
பானைகளில் பதநீரைப் பெற ஏதுவாக, சில ஓலைகளை வெட்டிவிட வேண்டும். ஒரு பனையில் 30 சத ஓலைகளை வெட்டினால் பதநீர் சுரப்புக் காலம் அதிகமாகும். பனை பருவம் சார்ந்து பூப்பதால், ஏப்ரல்- ஜூலை காலத்தில், 90-130 நாட்கள் பதநீர் கிடைக்கும்.
தொடக்கத்தில் பதநீர்ச் சுரப்புக் குறைவாகவும், மே, ஜூனில் அதிகமாகவும் இருக்கும். ஜூலையில் குறைந்து விடும். ஒரு மரம் 12-ஆம் ஆண்டில் 50 லிட்டர், 13-ஆம் ஆண்டில் 70 லிட்டர், 14-ஆம் ஆண்டில் 80 லிட்டர், 15-ஆம் ஆண்டில் 100 லிட்டர் பதநீரைக் கொடுக்கும்.
இப்படி, மருத்துவக் குணமுள்ள சுவையான உணவுப் பொருள்களைத் தரும் பனை மரங்களைப் போற்றி வளர்த்துப் பயனடைவோம்.
முனைவர் மு.சுகந்தி, முனைவர் அ.இளங்கோ, முனைவர் ச.த.செல்வன், கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலையம், காட்டுப்பாக்கம் 603 203, காஞ்சிபுரம் மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!