செய்தி வெளியான இதழ்: 2018 அக்டோபர்.
தமிழக வேளாண்மைத் துறை செயல்படுத்தும் ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தைப் பற்றி, இத்துறையின் இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தி கூறியதாவது:
“விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்குவதும், அவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பதும் ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் ஆகும். பண்ணை உற்பத்தித் திறனை மேம்படுத்தி நீடித்த, நிலையான வளத்தைப் பெறும் வகையில், தட்பவெப்ப மண்டலங்களுக்கு ஏற்ற வகையில், ஒருங்கிணைந்த பண்ணைய முறைகள் செயல்படுத்தப்படும்.
இவற்றுக்கான தொழில் நுட்ப ஆலோசனைகள், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் மற்றும் வேளாண்மை அறிவியல் நிலையங்கள் மூலம் அளிக்கப்படும். இந்த ஒருங்கிணைந்த பண்ணைய முறைகள், விவசாயிகளுக்கு நிலையான வருமானத்தை உறுதி செய்யும் முன்மாதிரி திட்டமாகச் செயல்படுத்தப்படும்.
முதல் கட்டமாக, திருநெல்வேலி, மதுரை, தஞ்சாவூர், விழுப்புரம், ஈரோடு ஆகிய ஐந்து மாவட்டங்களில், நான்கு வெவ்வேறு தட்பவெப்ப மண்டலங்களில் செயல்படுத்தப்படும். 2,500 ஒருங்கிணைந்த பண்ணைய மாதிரிகள், இந்த மாவட்டங்களில், மாவட்டத்துக்கு ஒரு வட்டாரத்தில் 500 மாதிரிகள் வீதம் செயல்படுத்தப்படும்.
நஞ்சை, புஞ்சை, மானாவாரி சார்ந்த ஒருங்கிணைந்த பண்ணைய முறை மாதிரிகளில் ஏதாவது ஒன்று 50 சத மானியத்தில், அதிகளவாக ரூ.1 இலட்சம் வீதம் வழங்கப்படும்.
இந்தத் தொகை, கறவை மாடுகள், ஆடுகள், நாட்டுக் கோழிகள், வாத்துகள் வளர்ப்பு, வீட்டுத் தோட்டம், பழச்செடிகள், தீவனப்பயிர்கள், சாண எரிவாயுக் கலன், பண்ணைக் குட்டைகள், தேனீ வளர்ப்பு, வேளாண் காடுகள், வான்கோழி, காடை, முயல் வளர்ப்பு, தீவன மரங்கள் மற்றும் தீவனப்புல் கரணைகள், நிரந்தர மண்புழு உற்பத்திக் கூடம் மற்றும் இதர இனங்கள் என, 2,500 மாதிரிகளுக்கு வழங்கப்பட உள்ளது. ஒருங்கிணைந்த பண்ணையத் திட்ட நிதியாக, ரூ.2,577.20 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
திட்டச் செயலாக்க விவரம்
பயிர்கள்: விவசாயிகளுக்குச் சொந்தமான நிலப்பரப்பில் 80 சத அளவில், உணவு, எண்ணெய் வித்துகள், பணப்பயிர்கள், தோட்டப் பயிர்கள் ஆகியவற்றைப் பயிரிடலாம். இதற்கான தொழில் நுட்பங்கள், வட்டார வேளாண்மை அலுவலர், தோட்டக்கலை அலுவலர் மூலம் அளிக்கப்படும். மேலும், வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் இதர திட்டங்களில் முன்னுரிமை அளிக்கப்படும்.
பழமரக் கன்றுகள்: இப்பிரிவில், ஒரு விவசாயிக்கு 100-300 பழக்கன்றுகள் விவசாயிகளின் நிலத்தின் வகையைப் பொறுத்து, தோட்டக்கலைத் துறை மூலம் அளிக்கப்படும். இதற்கான தொழில் நுட்பங்களைத் தோட்டக்கலை அலுவலர் அளிப்பார். ஒட்டுப் பழக்கன்று ஒன்றின் விலை ரூ.75. இதர வகைக் கன்று ஒன்றின் விலை ரூ.50. இந்தக் கன்றுகளை நன்செய் நிலத்தில் நட்டால், ரூ.2,500, புன்செய்யில் நட்டால் ரூ.7,500 மானியமாக வழங்கப்படும்.
வீட்டுத்தோட்டம்: இத்திட்டத்தில், வீட்டின் பின்புறமுள்ள காலியிடத்தில் 3×3 மீட்டர் பந்தல் மூலம் வீட்டுத் தோட்டம் அமைக்க, ரூ.2,500 பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். இதற்கான ஆலோசனைகளை, தோட்டக்கலை அலுவலர் வழங்குவார்.
தேனீ வளர்ப்பு: தேனீ வளர்ப்புத் திட்டத்தில் ரூ.1,600 மதிப்புள்ள தேனீப் பெட்டியுடன், ஒரு காலனி தேனீக்கள், தோட்டக்கலை அலுவலர் மூலம் வழங்கப்படும். புன்செய்ப் பிரிவில் மூன்று பெட்டிகள் மானிய விலையில் வழங்கப்படும்.
தீவனப் புல்: குறைந்தது 5-10 சென்ட் நிலத்தில் தீவனப் பயிர்களைப் பயிரிட வேண்டும். இதற்கான விதைகள் மற்றும் செடிகள், கால்நடைப் பராமரிப்புத் துறை அல்லது தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம் மூலம் வழங்கப்படும்.
கறவை மாடுகள்: ஒருங்கிணைந்த பண்ணையத்தில் கறவை மாடுகள் முக்கிய அங்கமாகும். இவை பாலைத் தருவதுடன், சாண எரிவாயு அமைப்பை இயக்கவும் துணை செய்கின்றன. எனவே, ஒவ்வொரு விவசாயியும் 2 கறவை மாடுகளை வாங்குவதற்கு ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதாவது, ஒரு கறவை மாட்டுக்கு ரூ.17,500 அல்லது அதன் மொத்த விலையில் 50 சதம், இவற்றில் எது குறைவோ, அது நிதியுதவியாக அளிக்கப்படும். இத்திட்டத்தில் விவசாயிகள் வெளிச்சந்தையில் மாடுகளை வாங்கிக் கொள்ளலாம்.
ஆடுகள்: ஐந்து பெட்டை ஆடுகளையும் ஒரு கிடாவையும், வெளிச்சந்தையில் வாங்குவதற்கு, கால்நடை மருத்துவரின் வழிகாட்டுதலில் நிதியுதவி தரப்படும். இதற்கு ரூ.10,000 அல்லது 50 சதம், இவற்றில் எது குறைவோ அது நிதியுதவியாக அளிக்கப்படும். ஆடுகள் வாங்குவதற்கான முறைகளைப் பின்பற்றி ஆடுகளை வெளிச்சந்தையில் விவசாயிகள் வாங்கிக் கொள்ளலாம்.
நாட்டுக்கோழி வளர்ப்பு: பத்து நாட்டுக் கோழிகளை வாங்கவும், அவற்றைப் புறக்கடையில் வளர்ப்பதற்கான கூண்டு மற்றும் அறையை அமைக்கவும், ரூ.2,500 அல்லது மொத்த விலையில் 50 சதம் நிதியுதவி அளிக்கப்படும்.
வாத்து வளர்ப்பு: நஞ்சை நிலத்தில் வாத்துகளை வளர்க்க, கால்நடைப் பராமரிப்புத் துறையின் ஆலோசனைப்படி, பத்து வாத்துகளை வாங்குவதற்கு ரூ.2,500 நிதியுதவியாக வழங்கப்படும்.
வான்கோழி, காடை, முயல் வளர்ப்பு: புஞ்சையில் வான்கோழி, காடை, முயலை வளர்ப்பதற்கு, ரூ.2,500 பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். இவற்றை வாங்குவதற்கு, கால்நடைப் பராமரிப்புத் துறை வழங்கும் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலைப் பின்பற்ற வேண்டும்.
இடுபொருள்கள்: மீன் மற்றும் கால்நடை வளர்ப்புக்குத் தேவையான தீவனங்களை வாங்குவதற்கு, கால்நடை உதவி மருத்துவர், மீன்வளத்துறை ஆய்வாளர் ஆகியோர் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில், ரூ.7,500 அல்லது 50 சதம் மானியம் பின்னேற்பு மானியமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
பண்ணைக் குட்டைகள்: பண்ணைக் குட்டைக்கு ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில் முக்கியப் பங்குண்டு. இதில் சேமிக்கப்படும் மழைநீர், விவசாயம் மற்றும் கால்நடைகளின் குடிநீருக்கும், மீன் வளர்ப்புக்கும் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.
எனவே, இத்தகைய பண்ணைக் குட்டைகளை 200-300 சதுர மீட்டர் பரப்பில் அமைக்க, ரூ.27,500 முதல் ரூ.30,000 வரை நிதியுதவி வழங்கப்படும். பண்ணைக் குட்டையை வெட்டுவதற்கான தொழில் நுட்பம், வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் அளிக்கப்படும். இதில் மீன்களை வளர்ப்பதற்கான தொழில் நுட்ப ஆலோசனை, மீன்வளத்துறை மூலம் அளிக்கப்படும்.
சாண எரிவாயுக் கலன்: இதை அமைப்பதற்கு ரூ.10,000 அல்லது 50 சத மானியம், இவற்றில் எது குறைவோ அது நிதியுதவியாக அளிக்கப்படும். எரிவாயு அமைப்பால் ஒரு குடும்பத்தின் சமையல் மற்றும் விளக்குகளை எரிப்பதற்குத் தேவையான எரிபொருள் கிடைக்கும். மேலும், சிறந்த சாண உரம் கிடைக்கும்.
மண்புழு உரத் தொட்டிகள்: பயிர்க் கழிவுகளை மட்கச் செய்து மண்புழு உரமாக மாற்றுவதற்குத் தேவையான தொட்டிகளை அமைப்பதற்கு, ரூ.12,500 அல்லது 50 சதம் மானியம் வழங்கப்படும்.
வேளாண் காடுகள் வளர்ப்பு: இந்தத் திட்டத்தில் செஸ்பேனியா, சூபாபுல் மரங்களை வளர்ப்பதற்கு ரூ.5,000 அல்லது 50 சத மானியம் வழங்கப்படும்.
எருக்குழி: எருக்குழி மற்றும் மாட்டுக் கொட்டிலை அமைப்பது, ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தின் முக்கிய இலக்காகும். இவற்றை விவசாயிகள் தங்களின் சொந்த இடத்தில், வேளாண் துறை மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறையின் ஆலோசனைப்படி அமைக்க வேண்டும்.
ஒரு இலட்சம் ரூபாய் மானியம்: இதுவரை கூறப்பட்ட திட்ட இனங்கள் மூலம், ஒரு விவசாயிக்கு அதிகளவாக ரூ.1,00,000 வரை மானியம் வழங்கப்படும். இதைச் சரியாகப் பயன்படுத்தி, விவசாயிகள் தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும்.
ஒருங்கிணைந்த பண்ணையத்தின் பயன்கள்
பண்ணை உற்பத்தி வருவாய் கூடும். பண்ணைக் கழிவுகளைச் சிறந்த முறையில் மறுசுழற்சி செய்வதால், உற்பத்தித் திறனும் மண்வளமும் கூடும். உற்பத்திச் செலவு குறையும்.
முட்டை, பால், மீன், காய்கறி உற்பத்தியால் நிலையான தொடர் வருமானம் கிடைக்கும். தீவனப் பயிர் சாகுபடியால், கால்நடைகளுக்குச் சத்தான தீவனம் கிடைக்கும். சிறு குறு விவசாயக் குடும்பங்களுக்குத் தொடர் வேலை வாய்ப்புக் கிடைக்கும்’’ என்றார்.
மு.உமாபதி
சந்தேகமா? கேளுங்கள்!