My page - topic 1, topic 2, topic 3

இறால்களைத் தாக்கும் வெண்புள்ளி நோய்!

இறால்

செய்தி வெளியான இதழ்: 2018 ஆகஸ்ட்.

வெண்புள்ளி நோய், பண்ணை இறால்களைத் தாக்கும் கொடிய நோயாகும். இது, 1992 இல் முதல் முறையாகத் தாய்வான், சீனாவில் அறியப்பட்டது. பிறகு, கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தெற்கு ஆசியா, வட, தென், மத்திய அமெரிக்காவில் பரவியது.

இந்த வெண்புள்ளி நோய் வைரஸ், பினேயஸ் மோனொடான், பினேயஸ் இண்டிகஸ், லித்தோபினேயஸ் வனாமி மற்றும் லித்தோபினேயஸ் ஸ்டைலோ சிட்ரிஸ் மற்றும் இதர இறால்களின் அனைத்து வாழ்க்கை நிலைகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்நோய், சினை இறால்கள் மூலம் லார்வாக்களுக்கும், நோயினால் தாக்கப்பட்ட உயிரினங்களை உண்பதால் பரவுகிறது. வெண்புள்ளி நோய் வைரஸ் நிமாவிரிடே குடும்பத்தைச் சார்ந்தது. இது, அடர்த்தியான, கம்பி வடிவ, தடித்த இரட்டை இழை டி.என்.ஏ வைரசாகும்.

இறால் – நோய் அறிகுறிகள்

இதனால் பாதிக்கப்பட்ட இறால்கள், மந்தமாக, உண்ணாமல், சிவந்த நிறத்தில் இருக்கும். இறால்களின் மேல், வட்டமான வெண் புள்ளிகள் நிறைய இருக்கும். நோயுற்ற இறாலின் தலையோட்டில் வெண்புள்ளி காணப்படும். இதனால் தாக்கப்பட்ட இறால்கள் 2-3 நாட்களில் இறந்து விடும். 5-7 நாட்களில் 80-90 சத இழப்பை ஏற்படுத்தும்.

பரவும் விதம்

உணவு, வளர்ப்பு நீர், மண், பறவைகள் மூலம் இந்நோய் பரவும். கடலிலுள்ள ஓட்டு மீன்களான நண்டுகள், மோட்டிறால், கடல் முகட்டுப் பூச்சிகள் மூலமும் இந்நோய் பரவும்.

ஆற்று நண்டுகள், நன்னீர் இறால்கள் ஆகியனவும் இந்நோயால் பாதிக்கப்படும். இந்த வெண்புள்ளி நோய் வைரஸ், நீரிலும் மண்ணிலும் எந்தவொரு ஓம்புரியிரி இல்லாமல் நீண்ட நாட்களுக்கு வாழும்.

குளங்களில் லார்வாக்களை விட்ட பிறகு, இந்நோய், நீர் அல்லது நோயுற்ற உயிரினம் மூலம் பரவும். குளங்கள் நன்றாக உலராத நிலையில், இறால் வளர்ப்பின் தொடக்கத்திலேயே இந்நோய்த் தொற்று ஏற்படலாம்.

இந்நோய் தாக்கினால் எப்போது வேண்டுமனாலும் இறப்பு ஏற்படும். இந்நோய், நோயுற்ற சினை இறால்களிடம் இருந்தும் இறால் குஞ்சுகளுக்குப் பரவலாம். எனவே, பி.சி.ஆர் சோதனை செய்யப்பட்ட இறால் குஞ்சுகளைக் குளங்களில் விடுவது நல்லது.

நோய்த்தடுப்பு

ஈர மண்ணில் இந்த வைரஸ் தொடர்ந்து இருக்கும். எனவே, குளத்தை நன்கு உலர்த்துதல் மற்றும் சுண்ணாம்பைப் பயன்படுத்துவதைச் சரியாகச் செய்ய வேண்டும். நல்ல 15 நாள் இறால் குஞ்சுகளைக் குளங்களில் விட வேண்டும்.

இவை, வெண்புள்ளி வைரஸ் நோயால் பாதிக்கப்படவில்லை என்பதை, பாலிமரேஸ் சங்கிலித் தொடர் சோதனை மூலம் உறுதி செய்யப்பட வேண்டும்.

உயிரி பாதுகாப்பு முறைகளான, பறவைகள் மற்றும் நண்டு வேலிகள், பண்ணைப் பொருள்கள், இயந்திரங்கள் மற்றும் வேலையாட்கள் முறையான சுகாதார முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

நீரின் தரத்தைப் பராமரித்தல், முறையாகத் தீவனமிடுதல் மற்றும் இறால்களின் நலத்தைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். புரோபயாடிக்ஸ் மற்றும் நோய் எதிர்ப்பு மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்.

இருப்பினும், இரசாயன அல்லது ஏற்கப்படாத பொருள்களை, அவற்றின் விளைவுகளைப் பற்றித் தெரியாத நிலையில் பயன்படுத்தக் கூடாது.

இறால்களில் வெண்புள்ளி நோய்த் தாக்கம் உள்ளதா இல்லையா என்பதை, அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் பி.சி.ஆர். சோதனை மூலம் அறிய முடியும்.

உயிருள்ள மற்றும் இறந்த இறால் மாதிரிகளைச் சேகரித்து ஆல்கஹாலில் இட்டு ஆய்வகத்துக்கு அனுப்பிச் சோதிக்கலாம். இந்த நோய்க்கு என, தனிச் சிகிச்சை கிடையாது. வருமுன் தடுப்பதே ஒரே வழி.

எனவே முறையான பயிற்சிகளை மேற்கொண்டு இந்நோயின் தாக்குதலில் இருந்து இறால்களைப் பாதுகாக்கலாம்.


க.அருள்ஜோதி, அ.ஏஞ்சலாமெர்ஸி, மீன்வள முதுகலைப் பட்ட மேற்படிப்பு நிலையம், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகம், ஓ.எம்.ஆர்.வளாகம், வாணியஞ்சாவடி, சென்னை – 603103.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks