செய்தி வெளியான இதழ்: 2018 டிசம்பர்.
அலங்கார மீன் வளர்ப்பு இலாபந்தரும் தொழிலாகும். இதில் வெற்றியடைதல், தரமான மீன்களை உற்பத்தி செய்வதில் இருக்கிறது. இது, மீன்களுக்கு இடப்படும் உணவைப் பொறுத்தது. செயற்கை உணவை இடுவது எளிதெனினும், இனவிருத்தி, குஞ்சு உற்பத்திக்குச் சிறந்தது உயிருணவு ஆகும்.
மீன் குஞ்சுகளைத் தரமாக வளர்ப்பதில் உயிருணவின் பங்கு முக்கியமானது. எல்லா மீன்களும் நல்ல வளர்ச்சி, சீரான இனவிருத்தி, அதிகப் பிழைப்புத் திறனை அடைய, புரதம் நிறைந்த உணவு அவசியம். இவ்வகையில் உயிருணவின் பங்கு குறிப்பிடத்தக்கது.
நன்னீர் அலங்கார மீன் வளர்ப்பில், டியுபிபெக்ஸ், டாஃப்னியா, இன்பொசோரியா, வெள்ளைப் புழுக்கள், நுண் பாசிகள், மண் புழுக்கள் ஆகியன முக்கிய உயிருணவுகள். இவை தொடர்ந்து கிடைக்க, இவற்றின் இனவிருத்தி மற்றும் வளர்ப்பு முறைகளை அறிந்து கொள்ள வேண்டும்.
டுயுபிபெக்ஸ் வளர்ப்பு
டுயுபிபெக்ஸ் என்னும் கழிவுநீர்ப் புழு, சுவாசக்காற்று நன்கு கிடைக்கும், ஏரிகள் மற்றும் ஆறுகளில் உள்ள வண்டலில் வாழ்கிறது. இதன் உடலில் ஹீமோகுளோபின் உள்ளது. தோல் மூலம் சுவாசிப்பதால் குறைந்த நீரிலும் வாழ்கிறது. கரிமப் பொருள்கள் மற்றும் பெருமளவில் மாசுள்ள இடங்களில் டுயுபிபெக்ஸ் வாழ்கிறது.
மண்ணை உண்ணும் இப்புழு, அதில் குறிப்பிட்ட பாக்டீரிய இனங்களை மட்டும் உணவாக்கி, தோல் மூலமாகச் சத்துகளை எடுத்துக் கொள்கிறது. இப்புழுவில் பல இனங்கள் உள்ளன. சாதகமான சூழ்நிலை இல்லாத போது இப்புழு, நீர்க்கட்டியாக மாறியும், உடல் வளர்சிதை மாற்றத்தைக் குறைத்தும், பிழைத்துக் கொள்ளும்.
வளர்ப்புத் தொட்டி: புழுக்கள் வளர நீரோட்டம் அவசியம். அதனால் தொட்டியானது, இரு அடுக்கு முறையில் அமைக்கப்படுகிறது. அதாவது, கீழே நீரைச் சேகரிக்கும் தொட்டியும், அதன் மேலே புழுக்கள் வளரும் தொட்டியும் இருக்கும். கீழேயுள்ள தொட்டியில் இருந்து மேலேயுள்ள தொட்டிக்கு நீர் அனுப்பப்படும்.
இந்தத் தொட்டியில் நிரம்பி வழியும் நீர், மீண்டும் கீழேயுள்ள தொட்டிக்கு வரும். இப்படிச் செய்யப்படும் நீர்ச் சுழற்சியில் கிடைக்கும் காற்றைக் கொண்டு, புழுக்கள் நன்கு வளரும். நீரை இறைக்க, சிறிய இறைப்பான் ஒன்று தேவை.
வளர்ப்புப் பொருள்கள்: புழு வளர்ப்புத் தொட்டியில் ஒரு அங்குல உயரத்துக்குக் கூழாங் கற்களையும் மணலையும் இட வேண்டும். புழுக்களின் வளர்ச்சிக்கும் இனப்பெருக்கம் நிகழவும் இந்தப் பொருள்கள் பயன்படும்.
புழுக்களின் உணவு: இப்புழுக்கள், இயற்கைச் சூழலில் இறந்த மற்றும் பாதி மட்கிய பொருள்களை உண்ணும். 75 சதம் மாட்டுச்சாணம், 25 சதம் மணல் கலவையுள்ள தொட்டியில், 42 நாட்களில் 7.5 மி.கி. வளர்ந்து விடும். தொட்டியில் தொடர் நீரோட்டமும், 3 பி.பி.எம்-க்கும் குறையாமல் மூச்சுக் காற்றும் இருக்க வேண்டும்.
சதுர மீட்டருக்கு 250 மில்லி கிராம் வீதம் பசுஞ் சாணத்தை 4 நாட்களுக்கு ஒருமுறை தொட்டியில் இட வேண்டும். காகிதம், நனைக்கப்பட்ட காகித அட்டை மற்றும் மீன் உணவுகளை உணவாகக் கொடுக்கலாம்.
அறுவடை: டுயுபிபெக்ஸ் புழுக்கள், ஒளி வெறுப்புக் கொண்டவை என்பதால், விடிகாலை அல்லது அந்தி மாலையில் அறுவடை செய்யலாம்.
இன்ஃபுசோரியா வளர்ப்பு
விலங்கு நுண்மிதவை உயிரிகள், எல்லா மீன் இலார்வாக்களுக்கும் ஏற்ற இயற்கை உணவாகும். சிறந்த வண்ண மீன் குஞ்சுகள் உற்பத்திக்கு, சரியான நேரத்தில் உயிருணவை வழங்க வேண்டும். பொதுவாக, மீன் இலார்வாக்கள் செயற்கை உணவை உண்பதில்லை. ஆனால், உயிருணவைக் கொடுத்தால் சுறுசுறுப்பாக இயங்கும்.
இங்கே தான் ஊட்டத்தின் உயிர் மருந்து எனப் போற்றப்படும் இன்ஃபுசோரியா சிறப்புத் தகுதியைப் பெறுகிறது. இது, மிகவும் சிறிய, ஊட்டமுள்ள உயிரினம். பப்பாளித் தோல், முட்டைக்கோசு, அழுகிய கேரட், பீன்ஸ் மற்றும் பிற காய்கறிக் கழிவுகளில் இன்ஃபுசோரியா நன்கு வளரும்.
வளர்ப்பு முறை: 2-5 லிட்டர் அளவுள்ள ஜாடி அல்லது கண்ணாடித் தொட்டியில், காய்கறிக் கழிவுகளை வைக்க வேண்டும். இதில், மீன் தொட்டி நீரைச் சேர்க்க வேண்டும். இந்த நீர், உயிரிகள் வேகமாக வளர உதவும்.
இன்ஃபுசோரியாக்களை, கொசு அல்லது ஈ இலார்வாக்கள் உண்ணும். அதனால், வளர்ப்பு ஜாடிகளை, கொசுக்கள், ஈக்கள் நுழையா வகையில், வலையால் மூடி வைக்க வேண்டும்.
மேலும், இயற்கைக் காற்றுக் கிடைக்கும் குளிர்ந்த இடத்தில் ஜாடிகளை வைக்க வேண்டும். 1-2 நாட்களில் நீர் சற்றுக் கலங்கிய நிலைக்கு மாறி, துர்நாற்றம் வெளிப்படும். இது, காய்கறிக் கழிவுகளைச் சிதைக்கும் பாக்டீரிய பெருக்கம் காரணமாக ஏற்படுவது.
அடுத்து, நீரின் மேல் வழவழப்பான படலம் உருவாகும். சுமார் 4-5 நாட்களில் நீர் வெளிர் மஞ்சள் நிறத்துடன் தெளிவாகி விடும். இந்நிலை, பாக்டீரியாக்களை இன்ஃபுசோரியா உண்பதைக் காட்டுகிறது. இதையடுத்து, நீரின் மேல் உருவான படலம் உடைந்து சிதையும்.
இப்போதுள்ள இன்ஃபுசோரியா, மீன் வளர்ப்பின் தொடக்க உணவாகும். நன்கு வளர்ந்த பின்பு இவற்றை அறுவடை செய்ய வேண்டும். சரியாக அறுவடை செய்யவில்லை என்றால், சுவாசிக்க முடியாமல் அனைத்தும் இறக்க நேரிடலாம். ஒரு சில சொட்டுகள் பாலைச் சேர்த்து, இன்ஃபுசோரியா வளர்ப்பை 2-3 வாரங்கள் வரை பராமரிக்கலாம்.
இவற்றை அறுவடை செய்வதற்கு, ஊசி அல்லது சொட்டியைக் (Dropper) கொண்டு, ஜாடிகளின் மேலேயுள்ள இரண்டு அங்குல நீரை எடுக்க வேண்டும். பிறகு, ஒரு துணியில் வடிகட்டி, தேவையற்றதை அகற்ற வேண்டும். இப்படிச் சேகரித்த இன்ஃபுசோரியாக்களை, புதிதாகப் பிறந்த மீன் குஞ்சுகளுக்கு உணவாக இடலாம்.
மைக்ரோவோம்ஸ் வளர்ப்பு
மைக்ரோவோம்ஸ் என்னும் பனஜிரெல்லஸ் வகை நூற்புழுக்களை எளிதாக வளர்க்கலாம். இந்தப் புழு 1.6 மி.மீ நீளத்தில், வெள்ளையாக, நகர்ந்து கொண்டே இருக்கும்.
இது, நன்னீரில் 12 மணி நேரத்துக்கும் மேல் உயிருடன் இருக்கும். 20-25 நாட்கள் வரை வாழும். 1-1.5 நாளில் 10-40 குட்டிகளை ஈனும். ஆண்டுதோறும் சுமார் 300 குட்டிகளை உற்பத்தி செய்யும்.
மூன்று நாட்களில் புழுக்கள் முதிர்ச்சியடையும். அடுத்த மூன்று நாட்களில் 5-6 மடங்கு பெருக்கும். உயிருடன் இருக்கும் இப்புழுவின் உடலில் 76 சதம் நீரும் 24 சதம் உலர் பொருளும் இருக்கும். இந்தப் பொருளில் 40 சதம் புரதம், 20 சதம் கொழுப்பு இருக்கும். எனவே, இளம் மீன்களுக்கு நம்பகமான உயிருணவாக அமைகிறது.
வளர்ப்பு முறை: இந்தப் புழுக்களை 10×10 அல்லது 8×12 அங்குல நெகிழி டப்பாக்களில் வளர்க்கலாம். புழுக்களுக்குக் காற்றுக் கிடைக்க, டப்பா மூடியில் சிறியளவில் பத்துத் துளைகளைப் போட்டு வைக்க வேண்டும். இந்த வளர்ப்புக்கு, தானியம், ஈஸ்ட் மற்றும் நீரைப் பயன்படுத்தலாம்.
கூடுதல் உற்பத்திக்கு ஓட்சைப் பயன்படுத்தலாம். 8×12 அங்குல டப்பாவில் ஒரு பங்கு நீருக்கு 500-750 மி.கி. ஓட்சைச் சேர்த்து 5-7 நிமிடம் வரை, கொதிக்கும் நீரில் வேக வைத்துக் குளிர விட்டுப் பயன்படுத்த வேண்டும்.
ஓட்சை வேக வைக்கா விட்டால், 2/3 அளவு நீர் மட்டுமே தேவைப்படும். இருப்பினும், கொதிநீரில் வேகவிடா விட்டால், ஓட்சில் தோன்றும் பூச்சிகள் மற்றும் தொற்றுகள், புழுக்களின் வளர்ச்சியைப் பாதிக்கும். இந்த ஓட்ஸ் கலவை, அடர்த்தியான பதத்தில் இருக்க வேண்டும்.
வேக வைத்த ஓட்சை, புழு வளர்ப்பு டப்பாவில் 12.5-19 மி.மீ. கனத்துக்குப் பரப்ப வேண்டும். பிறகு, ஒரு தேக்கரண்டி ஈஸ்ட்டை அதன் மேல் தெளித்து, நூற்புழுக்களைச் சமமாகப் பரப்ப வேண்டும்.
டப்பாவைச் சுற்றி ஓட்ஸ் ஒட்டியிருந்தால், அதைத் துணியால் துடைக்க வேண்டும். இந்த டப்பாவை 20-26 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில், நல்ல ஒளியுள்ள இடத்தில் வைக்க வேண்டும்.
இதையடுத்து, ஓட்சில் வளரும் ஈஸ்ட் மற்றும் பாக்டீரியாக்களை நூற்புழுக்கள் உண்ணும். 3-7 நாட்களுக்குப் பிறகு, ஓட்சின் மேற்பரப்பில் புழுக்கள் தோன்றும். வளர்ந்த புழுக்களைச் சிறு குச்சியால் டப்பாவின் ஓரத்தில் அல்லது ஓட்சின் மேலிருந்து எடுக்கலாம்.
பராமரித்தல்: உற்பத்தியைப் பராமரிக்க, வாரம் ஒருமுறை ஓட்சைக் கலக்கிவிட வேண்டும். ஈஸ்ட், ஓட்சைப் பயன்படுத்துவதால், கலவை நீர்த்து விடும். எனினும், புழுக்களின் உற்பத்திச் சீராக இருக்கும். நீர் மிகுதியாக இருப்பது மற்ற பாக்டீரியாக்களை வளரவிடும் என்பதால், ஒரு துண்டுப் பஞ்சை வைத்து ஈரப்பதத்தைக் குறைக்கலாம்.
இந்த நூற்புழுக்களை உண்ணும் மீன் குஞ்சுகளின் வளர்ச்சியும் பிழைப்புத் திறனும் ஆர்டிமியா பயன்பாட்டுக்குச் சமமாக இருக்கும். மேலும், ஆர்டிமியா நாப்லியாவை உண்ண முடியாத மீன் குஞ்சுகளுக்கு, இந்த நூற்புழுக்கள் சிறந்த உயிருணவாகும்.
டாஃப்னியா வளர்ப்பு
டாஃப்னியா நீர்வாழி எனப்படும். இது, கிளாடோசீரோன்ஸ் குடும்பத்தைச் சார்ந்தது. இயற்கையில் டாஃப்னியா, நன்னீர்க் குளங்கள் மற்றும் தொட்டிகளில் வாழும். முதிர்ந்த டாப்னியாவின் நீளம் 0.2-3 மி.மீ. இருக்கும். இது பாசி, பாக்டீரியா, பூஞ்சை மற்றும் கரிமக் குப்பையை உண்ணும்.
இயற்கையான பகுதிகளில் சேகரித்தல்: குளங்கள், சகதி மற்றும் தேங்கி நிற்கும் நீரிலிருந்து டாஃப்னியாக்களைச் சேகரிக்கலாம். சூரியன் உதிப்பதற்கு முன் நீரின் மேல் நீந்திக் கொண்டிருக்கும் இவை, சூரியன் வந்ததும் கீழே சென்று விடும். எனவே, அதிகாலையில் 100-200 மைக்ரான் வலையால் இவற்றைச் சேகரிக்க வேண்டும்.
இருப்பும் வளர்ப்பும்: டாஃப்னியாவை அதிகளவில் எளிதாக வளர்க்கலாம். முதலில் டாஃப்னியாக்களை இயற்கையான குளங்களில் இருந்து சேகரித்துக் கண்ணாடிக் குவளைகளில் வளர்க்க வேண்டும். பிறகு, சொட்டியின் உதவியுடன் அவற்றைப் பிரித்து, நன்னீருள்ள 10 மில்லி சோதனைக் குழாயில் வைக்க வேண்டும்.
தினசரி அவற்றுக்கு உணவாக 200 பி.பி.எம். ஈஸ்ட் அல்லது புண்ணாக்கை இட வேண்டும். இந்தச் சோதனைக் குழாய் வளர்ப்பை, ஒரு லிட்டர் ஜாடிக்கு மாற்ற வேண்டும். அடுத்த 5-6 நாட்களில், கூடுதல் உற்பத்திக்காகப் பெரிய தொட்டிகளுக்கு மாற்றலாம்.
திறந்தவெளி வளர்ப்பு: தேவையைப் பொறுத்து, 500 முதல் 20,000 லிட்டர் அளவுள்ள சிமெண்ட் அல்லது நெகிழித் தொட்டிகளில் டாஃப்னியாக்களை வளர்க்கலாம். வளர்ப்பைத் தொடங்கு முன், தொட்டிகளை நல்ல நீரால் சுத்தம் செய்ய வேண்டும்.
வளர்ப்புத் தொட்டியைத் தயார் செய்தல்: 10 கிலோ கோழியெச்சம், 5 கிலோ கடலைப் புண்ணாக்கு, 250 கிலோ சூப்பர் பாஸ்பேட்டை, 250 லிட்டர் நன்னீரில் சேர்த்துக் கூழைப் போலத் தயாரிக்க வேண்டும்.
துர்நாற்றம் தரும் வாயுக்களை வெளியேற்ற, மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து காற்றைச் செலுத்த வேண்டும். பிறகு, ஒரு லிட்டர் நீருக்கு 3-4 மில்லி வீதம் இந்தக் கூழை 3-4 நாட்களுக்குத் தொடர்ந்து டாஃப்னியா தொட்டிகளில் சேர்க்க வேண்டும்.
நான்காம் நாளில், ஒரு லிட்டர் நீருக்கு 50 டாப்னியா வீதம் இருப்பு வைக்க வைக்க வேண்டும். சுமார் 7 நாட்களில், டாஃப்னியா வளர்ந்து இனவிருத்தியில் உள்ளபோது இதன் அடர்த்தி, 10,000 முதல் 25,000 வரை ஆகிவிடும். இவற்றை, 100-200 மைக்ரான் வலையால் காலை அல்லது மாலையில் அறுவடை செய்யலாம்.
ரோட்டிஃபெர் வளர்ப்பு
ரோட்டிஃபெர் மீன் குஞ்சுகளின் மதிப்புமிக்க உணவாகும். இது, மிகவும் சிறிதாக 0.1-0.5 மி.மீ. நீளத்தில் இருக்கும். உலகெங்கிலும் உள்ள நன்னீர், உப்புநீர், கடல் நீரில் 2,500 வகை ரோட்டிஃபெர்கள் உள்ளன.
இந்த இனத்தைச் சேர்ந்த பிராக்கியோனஸ் பிலிகாடிலிஸ், உலகிலுள்ள அனைத்து நீர் நிலைகளிலும் மீன் குஞ்சுகளின் உணவாகப் பயன்படுகிறது. பிராக்கியோனஸ் காளிசிப்லோருஸ் என்பது, நன்னீரில் வளரும் ரோட்டிஃபெர் இனமாகும்.
வளர்ப்பு முறை: சுத்தமான முறையில் ரோட்டிஃபெர்களை வளர்க்க, முதலில் இவற்றைச் சிறியளவில் தனியாக வளர்க்க வேண்டும். தேங்கியுள்ள நீர் மற்றும் தாவரங்கள் நிறைந்த நீர் நிலைகளில் இருந்து 50-100 மைக்ரான் வலையால் இவற்றைச் சேகரிக்க வேண்டும்.
மைக்ரோஃபில் நீர் மாதிரிகளைச் சோதித்துப் பார்த்து, ரோட்டிஃபெர்களை எடுத்து 10 மில்லி நீரிலுள்ள சோதனைக் குழாயில் விட வேண்டும். இதில் அவற்றுக்கு உணவாக ஈஸ்ட்டைச் சேர்க்க வேண்டும். பிறகு, ஒரு மில்லிக்கு 100-150 ரோட்டிஃபெர்கள் இருக்கும் வகையில், 1-2 லிட்டர் கண்ணாடிக் குடுவையில் வளர்க்க வேண்டும்.
திறந்தவெளி வளர்ப்பு முறைகள்
தினமும் தொட்டியை மாற்றுதல்: 200-500 லிட்டர் நீரில், குளோரெல்லா ஒரு மில்லியில் 10-20×106 செல்கள் இருக்கும்படி இருப்பு வைக்க வேண்டும். இந்தத் தொட்டியில் ஒரு மில்லியில் 25-50 ரோட்டிஃபெர்கள் வீதம் விட வேண்டும்.
இவை ஒரு மில்லியில் 100-150 எனப் பெருகியதும், இவற்றில் பாதியைச் சேகரித்து மீன்களுக்கு உணவாக இடலாம். மீதமுள்ள பாதியை குளோரெல்லா இருக்கும் தொட்டியில், வளர்ப்புக்காக இருப்பு வைக்க வேண்டும். இப்படிச் செய்தால், தினமும் ரோட்டிஃபெர்களை அறுவடை செய்யலாம்.
தொடர் வளர்ப்பு: இம்முறையில் ரோட்டிஃபெர்களைச் சுமார் ஒரு மாதம் வரை பராமரிக்கலாம். முதலில் குளோரெல்லாவை யாசீமா மூலக்கூறைப் பயன்படுத்தி, பின்வரும் முறையில் வளர்க்க வேண்டும்.
ஒரு டன் எருவுக்கு அம்மோனியம் சல்பேட் 100 கிராம், ஒற்றை சூப்பர் பாஸ்பேட் 10 கிராம், யூரியா 10 கிராம் வீதம் கலந்து குளோரெல்லாவை வளர்க்கலாம். குளோரெல்லா வளர்ப்பு உச்ச அடர்த்தியை அடைந்ததும் ஒரு மில்லியன் ரோட்டிஃபெர்களுக்கு ஒரு கிராம் வீதம் ஈஸ்ட்டைச் சேர்க்க வேண்டும்.
இது, 100-150 மில்லியை எட்டியதும், இதில் கால்வாசியைச் சேகரித்து அடுத்த தொட்டிக்கு மாற்ற வேண்டும். இப்படித் தொடர்ச்சியாக வளர்த்து அலங்கார மீன்களுக்கு உணவாக இடலாம்.
சா.ஆனந்த், ச.இராஜேஸ்வரி, அ.சுரேஷ், வளங்குன்றா மீன்வளர்ப்பு நிலையம், பவானிசாகர், சு.பாரதி, டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி, பொன்னேரி.
சந்தேகமா? கேளுங்கள்!