களைகளைக் கட்டுப்படுத்துவதில் கருவிகளின் பங்கு!

கருவி The role of tools in controlling weeds

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021

மது நாட்டின் வேளாண்மை உற்பத்தியில் களை, பூச்சிகள் மற்றும் தாவர நோய்களால் ஆண்டுக்கு 1,480 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இதில் களைகள் மூலம் ஏற்படும் இழப்பு 10-30% ஆகும். இப்போது விவசாய வேலைகளுக்குப் ஆட்கள் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் ஆட்கள் தேவையும் அவர்களுக்கான கூலியும் அதிகமாகும்.

இதைக் குறைப்பதற்குக் களைக்கொல்லி பயன்படுத்தலாம். ஆனால், மண்வளம் வெகுவாகப் பாதிக்கப்படும். இத்தகைய சிக்கல்கள் இல்லாமல் களைகளைக் கட்டுப்படுத்தக் கருவிகள் உதவும். களைக்கருவி, களைகளை நீக்குவதுடன், நிலத்தை இளக்கமாக்கி, நல்ல காற்றோட்டம் கிடைக்கச் செய்யும்.

எனவே, இனிவரும் காலங்களில் களைக்கருவிகளின் பயன்பாடு அதிகமாக இருக்கும். களைக்கருவியைப் பயன்படுத்தினால், 30-50% செலவு குறைவதுடன் நேரமும் மிச்சமாகும். விதவிதமான களைக்கருவிகள் இன்று புழக்கத்தில் உள்ளன. அவற்றில் சிலவற்றை மட்டும் பார்ப்போம்.

நீண்ட கைப்பிடியுள்ள களைக்கருவி

இதைப் பயன்படுத்தி வரிசைப் பயிர்களில் ஒருநாளில் 0.05 எக்டர் நிலத்தில் களை எடுக்கலாம். ஆட்கள் நின்று கொண்டே களையெடுக்க வசதியாக, இக்கருவியில் நீண்ட கைப்பிடி உள்ளது. களைகளை வெட்டும் கக்தி மற்றும் எளிதில் தள்ளிச் செல்வதற்கேற்ற உருளை, கைப்பிடியின் அடிப்பாகத்தில் உள்ளன. 

மண்ணின் தன்மைக்கு ஏற்ப நட்சத்திர வடிவ அல்லது முள் வடிவ உருளையைப் பொருத்தி இயக்க வேண்டும். கைப்பிடியை முன்னும் பின்னும் இயக்கும் போது மண்ணுக்குள் செல்லும் கத்தி, களைகளை வெட்டும். சோர்வு இல்லாமல், முதுகை வளைக்காமல் நடந்து கொண்டே களையெடுக்கலாம். ஒருநாளில் சாதாரண முறையை விட இரண்டு மடங்கு நிலத்தில் களையெடுக்கலாம்.

இயந்திரக் களைக்கருவி 1

இது, 2.7 குதிரைத் திறனுள்ள டீசல் இயந்திரம் மூலம் இயங்கும்.  இந்த இயந்திரத்தின் பின்புறம் முக்கோண வடிவில் மூன்று களைவெட்டித் தகடுகள் இருக்கும். இந்தத் தகடுகளுக்கு இடையிலான இடைவெளியை, பயிh;களின் வரிசைகளுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம். களையெடுக்கும் ஆழத்தையும் கூட்டியோ குறைத்தோ வைத்துக் கொள்ளலாம். ஒரே ஆழத்தில் களையெடுக்க ஏதுவாக, இயந்திரத்தின் பின்புறம் உருளை ஒன்று இருக்கும். இயந்திரத்தின் சுழற்சி வேகத்தை, கைப்பிடி மூலமே மாற்றிக் கொள்ளலாம்.

பருத்தி, மரவள்ளி, மக்காச்சோளம், உளுந்து, பச்சைப்பயறு போன்ற புன்செய் மற்றும் இறவைப் பயிர்களில் களையெடுக்க ஏற்றது. இதன் மூலம் ஒருநாளில் ஒரு எக்டர் வரிசைப் பயிர்களில் களையெடுக்க முடியும். இதற்கு ரூ.1,100 செலவாகும். ஆனால், ஆட்கள் மூலம் களையெடுக்க ரூ.3,750 செலவாகும். களையெடுப்பு வேலையில்லாத நேரத்தில் இந்த இயந்திரத்தை மற்ற பண்ணை வேலைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இயந்திரக் களைக்கருவி 2

இக்கருவி, 8.38 குதிரைத் திறனுள்ள டீசல் எந்திரத்தால் இயங்கும். களையெடுக்கும் அமைப்பு, சுழல் கலப்பையைப் போலவே இருக்கும். இந்தக் கலப்பையைப் பின்புறம் பொருத்தி, புன்செய் நிலங்களில் களையெடுக்கலாம். இந்தக் கலப்பையில் சுழலும் வகையில் இருக்கும் வளைந்த இரும்புக் கொலுக்கள், நிலத்திலுள்ள களைகள் மற்றும் புல் பூண்டுகளை நன்கு வெட்டி, மண்ணில் புதைப்பதால், நிலத்தின் உரத்தன்மையும் அதிகமாகும்.

மேலும் இக்கருவியில், களைவெட்டித் தகடு மற்றும் சால்களை அமைக்கும் அமைப்பையும் பொருத்திக் கொள்ளலாம். களைகளை வெட்டும் தகட்டின் பின்புறம் உள்ள சக்கரம் ஒரே ஆழத்தில் களைகளைச் சீராக எடுக்க உதவும். இதில், களையெடுக்கும் ஆழத்தைக் கூட்டவும் குறைக்கவும் முடியும்.

பருத்தி, மரவள்ளி, மக்காச்சோளம், தக்காளி, கரும்பு போன்ற வரிசைப் பயிர்களில் மற்றும் தென்னை, பாக்கு, பழத் தோட்டங்களில் களை எடுக்கலாம். ஒருநாளில் ஓர் எக்டர் நிலத்தில் களையெடுக்க முடியும்.

டிராக்டரால் இயங்கும் களைக்கருவி

நமது விவசாயிகள் பெரும்பாலும் ஒன்பது கொழுவுள்ள கொத்துக் கலப்பை மூலம் நிலத்தை உழுகின்றனர். இந்தக் கலப்பை இரண்டாம் நிலை உழவுக்கருவி ஆகும். பயிர்களின் இடைவெளிக்கு ஏற்ப, கொத்துக் கலப்பைக் கொலுக்களின் இடைவெளியை மாற்றி, மக்காச்சோளம், உளுந்து, பச்சைப்பயறு, சோளம், வேர்க்கடலை போன்ற பயிர்களில் களையெடுக்கலாம்.

இந்தக் கருவியை இயக்க ஒருவரும், செடிகளுக்கு இடையே களையெடுக்க ஆட்களும் தேவை. டிராக்டரின் பின்புற டயர்களை நீக்கி விட்டு அதற்குப் பதிலாக இரும்புச் சக்கரங்களைப் பொருத்தினால் பயிர்கள் சேதமாவது தவிர்க்கப்படும். 

பயிர் வரிசைகளுக்கு இடையேயான இடைவெளி குறைந்தது 300  மி.மீ. இருக்க வேண்டும். ஒருநாளில் இந்தக் கருவியின் மூலம் மூன்று எக்டரில் களையெடுக்க முடியும். இதற்கு, எக்டருக்கு ரூ.1,400 செலவாகும். ஆனால், ஆட்கள் மூலம் களையெடுக்க, எக்டருக்கு ரூ.3,750 செலவாகும்.

களை மற்றும் மண் அணைக்கும் கருவி

இக்கருவியை 35-45 குதிரைத் திறனுள்ள டிராக்டரால் இயக்கலாம். இதில், வரிசைப் பயிர்களில் களையெடுக்கும் அமைப்பும் மண்ணை அணைக்கும் அமைப்பும் இருக்கும். இந்தக் களைக் கருவியில் ஏ வடிவ சுவீப் அமைப்பானது, டிராக்டரில் இயங்கும் சால் அமைப்புக் கருவியின் முன்புறம் இருக்கும். இக்கருவியில் மூன்று சால்களை அமைக்கும் பகுதியின் முன்புறம், 45 செ.மீ. அகலம் 120 டிகிரி கோணம் மற்றும் 15 டிகிரி சாய்வுக் கோணத்தில் மூன்று சுவீப் அமைப்புகள் இருக்கும்.

இக்கருவியைப் பருத்தி போன்ற வரிசைப் பயிர்களுக்கு இடையே இயக்கும் போது, முன்புறமுள்ள சுவீப் கத்தியானது, மண்ணுக்குள் ஆழமாகச் சென்று களைகளை வேருடன் பிடுங்கிக் கொண்டு வரும். பின்னால் உள்ள சால் அமைக்கும் அமைப்பானது, கிளறிப் போட்ட மண்ணை, வரிசைப் பயிரின் இருபுறமும் அணைத்து விடும்.

ஒரே நேரத்தில் களையெடுக்க, மண்ணை அணைக்க உதவும். வரிசை இடைவெளிக்கு ஏற்ப, சுவீப் இடைவெளியை 60, 75, 90 செ.மீ. வரை மாற்றிக் கொள்ளலாம். ஒருநாளில் 1.6 எக்டர் நிலத்தில் களையெடுக்கலாம்.

நெற்பயிரில் களையெடுக்கும் உருளைக்கருவி

இதைப் பயன்படுத்தி வரிசை நெற்பயிரில் ஒருநாளில் 0.2 எக்டர் நிலத்தில் களை எடுக்கலாம். இதில், எளிதில் சுழலும் வகையில் 1-2 உருளைகள் இருக்கும். சேற்றில் எளிதாகத் தள்ளிச் செல்ல ஏதுவாக, மிதப்பான் போன்ற அமைப்பும், நடந்தபடியே தள்ளிச் செல்ல ஏதுவாக நீண்ட கைப்பிடியும் இருக்கும். இக்கருவியை இயக்க ஒருவரே போதும். ஓர் உருளையுள்ள கருவி மூலம் ஒருநாளில் 25 சென்ட் வரையிலும், இரண்டு உருளையுள்ள கருவி மூலம் 40 சென்ட் வரையிலும் களையெடுக்க முடியும்.

இரு வரிசை விரல் வடிவச் சுழல் களைக்கருவி

இது வரிசை நெற்பயிரில் களையெடுக்க ஏற்றது. வரிசை இடைவெளியை 20 செ.மீ. மற்றும் 25 செ.மீ. என மாற்றிக் கொள்ளலாம். இதை இயக்க ஒருவர் போதும். இதை முன்னும் பின்னும் இயக்குவதால், களைகள் சேற்றில் புதைவதுடன் மண்ணில் காற்றோட்டமும் கிடைக்கும். ஒருநாளில் 0.35 எக்டர் நிலத்தில் களை எடுக்கலாம். இக்கருவியைப் பயன்படுத்த 250 ரூபாய் செலவாகும்.

மின்கலத்தில் இயங்கும் களைக்கருவி

செம்மை நெல் சாகுபடி வயலில் களையெடுக்க மிகவும் ஏற்றது. உருளை வடிவக் களைக்கருவியை விட எளிதாக இயக்கலாம். மின்கலத்தால் இயங்குவதால் களைப்பின்றித் தொடர்ந்து இயக்கலாம். ஒருநாளில் 0.2-0.3 எக்டர் வரை களையெடுக்கலாம். ஓர் எக்டரில் களையெடுக்க 625 ரூபாய் செலவாகும்.


PB_Kamaraj

முனைவர் .காமராஜ்,

உதவிப் பேராசிரியர், பண்ணை இயந்திரவியல் மற்றும் சக்தித்துறை,

வேளாண்மைப் பொறியியல் கல்லூரி, குமுளூர், திருச்சி மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading