My page - topic 1, topic 2, topic 3

துவரை சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2015

யறு வகைகள் புரதம் நிறைந்த உணவுப் பொருளாகும். இவற்றில் துவரைக்கு மிக முக்கிய இடமுண்டு. இதில், 22% புரதச்சத்து உள்ளது. இதில், தானியங்களில் உள்ளதை விட மூன்று மடங்கு அளவுக்குப் புரதம் அதிகமாக இருக்கிறது. இந்தியாவில் சைவ உணவை உண்ணுவோர்க்குத் தேவையான புரதம் துவரையில் இருந்து தான் கிடைக்கிறது.

தமிழகத்தில், துவரை சாகுபடி ஆடி, புரட்டாசிப் பட்டங்கள் மற்றும் கோடையில் நடைபெற்றாலும், ஆடிப்பட்டத்தில் தான் அதிகப் பரப்பில் பயிரிடப்படுகிறது. துவரையின் சராசரி விளைச்சல் ஒரு எக்டருக்கு 763 கிலோவாகும். எனவே, துவரையில் அதிக விளைச்சலைப் பெறுவதற்குப் புதிய இரகங்கள் மற்றும் நவீனத் தொழில் நுட்பமான நடவுமுறையைக் கையாள வேண்டும்.

பருவம் மற்றும் இரகங்கள்

ஆடிப் பட்டத்தில், எஸ்.ஏ.1, கோ.5,6, கோ.பி.எச்.1,2, வம்பன்-1,2 ஆகிய இகரங்களையும், புரட்டாசிப் பட்டத்தில், கோ.5, கோ.பி.எச்.1,2, கோ.ஆர்.ஜி.7, ஏ.பி.கே.1 ஆகிய இரகங்களையும், கோடையில், கோ.4,5, கோ.பி.எச்.1,2, பி.எஸ்.ஆர்.1, வம்பன்1, எஸ்.ஏ.1 ஆகிய இரகங்களையும் சாகுபடி செய்ய வேண்டும்.

நடவு முறை

நடவு முறையில் துவரையைச் சாகுபடி செய்ய ஏக்கருக்கு ஒரு கிலோ விதைகள் போதும். இந்த விதைகளுடன் 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி என்னும் எதிர் உயிர் பூசணத்தைக் கலந்து 24 மணி நேரம் வைத்திருக்க வேண்டும். பிறகு, இந்த விதைகளை ஆறிய அரிசிக்கஞ்சி 100 மில்லி, 200 கிராம் ரைசோபியத்துடன் கலந்து 15 நிமிடங்கள் நிழலில் உலர்த்தி நட வேண்டும்.

200 மைக்ரான் அளவுள்ள 6க்கு4 அங்குல பாலிதின் பைகளில், மணல், மண், எரு ஆகியவற்றைச் சம அளவில் கலந்து நிரப்பி, பைக்கு ஒரு விதையை ஒரு செ.மீ. ஆழத்தில் நட்டு தினமும் நீரைத் தெளித்துவர வேண்டும். பைகளில் நீர் தேங்குவதைத் தவிர்க்க நான்கு துளைகளைப் போடலாம். இந்தப் பைகளை 25-30 நாட்கள் வரையில் நிழலில் வைத்துப் பாதுகாத்து நடவுக்குப் பயன்படுத்த வேண்டும். நடுவதற்குச் சில நாட்களுக்கு முன் இளம் வெய்யிலில் நாற்றுகளை வைத்துக் கடினப்படுத்தி நடுவது நல்லது.

வடிகால் வசதியுள்ள செம்மண் அல்லது வண்டல் மண் துவரை சாகுபடிக்கு மிகவும் ஏற்றது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் இரண்டு மூன்று முறை நிலத்தை நன்கு உழ வேண்டும். பிறகு, அடியுரமாக ஏக்கருக்கு 5 டன் தொழுவுரத்தை இட வேண்டும்.

இறவையில் துவரையைப் பயிரிட, 5 அடி வரிசையில் 3 அடி இடைவெளியிலும், மானாவாரியில் பயிரிட, 6 அடி வரிசையில் 3 அடி இடைவெளியிலும் 15 சதுர செ.மீ. அளவில் குழிகளை எடுக்க வேண்டும். நாற்றுகளை நடுவதற்கு 15 நாட்களுக்கு முன்பே குழிகளில் மண்ணையும் எருவையும் கலந்து நிரப்பி வைக்க வேண்டும்.

பிறகு, குழிக்கு ஒரு செடி வீதம் நட வேண்டும். ஊடுபயிர் செய்யும் இடங்களில் நடவுக்கு முன், உளுந்து, பாசிப்பயறு, சோயாமொச்சை போன்ற பயிர்களை விதைத்து விட வேண்டும். செடிகளை நட்டதும் பாசனம் செய்ய வேண்டும். பிறகு, மண்ணின் ஈரப்பதத்துக்குத் தக்கபடி 3,4 முறை பாசனம் செய்ய வேண்டும். நடவுக்குப் பின் 30,40 நாட்கள் வரையில் களையின்றிப் பராமரிக்க வேண்டும். மேலும், நடவுச் செடிகளில் கிளைகள் அதிகமாகத் தோன்றுவதால், செடிகள் சாயாமல் இருக்கச் செடிகளைச் சுற்றி மண்ணை அணைக்க வேண்டும்.

உர நிர்வாகம்

செடிகளை நட்டு 20,30 நாட்கள் கழித்து மண்ணை அணைப்பதற்கு முன், மானாவாரி என்றால், ஒரு எக்டருக்கு 27.5 கிலோ யூரியா, 156 கிலோ சூப்பர், 21 கிலோ பொட்டாஷ் என்னும் அளவிலும், இறவையெனில் 55 கிலோ யூரியா, 312 கிலோ சூப்பர், 42 கிலோ பொட்டாஷ் என்னும் அளவிலும் உரங்களை இட வேண்டும்.

மேலும், துத்தநாகம், கந்தகச் சத்தை அளிக்கும் 10 கிலோ துத்தநாக சல்பேட்டைச் செடிகளைச் சுற்றி இட்டால் அதிக மகசூல் கிடைக்கும். நடவு செய்த 20,30 நாள்களில் நுனிக்குருத்துகளைக் கிள்ளி விட்டால், பக்கக் கிளைகள் அதிகமாகி விளைச்சல் கூடும்.

பூக்கள் உதிர்தல்

பூக்கள் உதிர்வதால் 10 முதல் 20 விழுக்காடு அளவுக்கு மகசூல் இழப்பு ஏற்படும். எனவே, பூக்கள் உதிர்வதைத் தடுக்க நாப்தலின் அசிடிக் ஆசிட் என்னும் பயிர் ஊக்கியை 40 பிபிஎம் என்னுமளவில், பூக்கள் பூக்கும்போது ஒருமுறையும், அடுத்து 15 நாட்கள் கழித்து மறுமுறையும் தெளிக்க வேண்டும். இதைப் பூச்சி, பூசண மருந்துகளுடன் கலந்தோ, உப்புநீரில் கலந்தோ தெளிக்கக் கூடாது. கைத்தெளிப்பானால் செடிகள் நன்கு நனையுமாறு, அதிகாலை அல்லது மாலையில் தெளிக்க வேண்டும்.

பூக்கள் உதிர்வதைக் குறைக்கவும், காய்கள் அதிகமாகப் பிடிக்கவும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தால் வெளியிடப் பட்டுள்ள 2.25 கிலோ பயறு ஒண்டரை 200 லிட்டர் நீரில் கரைத்துச் செடிகள் பூக்கும்போதும், அடுத்து 15 நாட்கள் கழித்தும் தெளிக்க வேண்டும். இப்படிச் செய்தால், மானாவாரியில் 10-15 விழுக்காடு அளவுக்கு மகசூலை அதிகரிக்கலாம்.

பயிர்ப் பாதுகாப்பு

வம்பன்-1, 2 அல்லது ஏபிகே-1 அல்லது கோ(ஆர்ஜி7)இரகங்களைப் பயிரிட வேண்டும். எக்டருக்கு 12 ஹெலிக்கோ வெர்ப்பா இனக்கவர்ச்சிப் பொறிகளை அமைத்துப் பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க வேண்டும். எக்டருக்கு 50 பறவைத் தாங்கிகளை அமைத்து இரை விழுங்கிகளை ஊக்கப்படுத்த வேண்டும். முடிந்த வரையில் காய்ப்புழுக்கள் மற்றும் வண்டுகளைச் சேகரித்து அழிக்க வேண்டும். பச்சைக்காய்ப் புழுக்களின் சேதம் இருந்தால், எக்டருக்கு 1.5 லிட்டர் என்னுமளவில் ஹெலிக்கோ வெர்ப்பா என்விபி கரைசலைத் தெளிக்க வேண்டும்.

காய்ப்புழுக்களின் தாக்கம் பொருளாதாரச் சேதநிலையை விட அதிகமிருப்பின், 5 சத வேப்பங்கொட்டைச் சாறு அல்லது புரோபனோபாஸ் மருந்தை ஒரு லிட்டர் நீருக்கு 2.5 மில்லி வீதம் கலந்து தெளிக்க வேண்டும். சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, இமிடா குளோபிரைடு மருந்தை ஒரு லிட்டர் நீருக்கு 0.4 மில்லி வீதம் கலந்து தெளிக்க வேண்டும். வாடல்நோய், வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்த, 10 லிட்டர் நீரில் 25 கிராம் கார்பெண்டாசிம் மருந்தைக் கரைத்துச் செடிகளின் வேர்ப்பாகம் நனையுமாறு ஊற்ற வேண்டும்.

அறுவடை

விதைத்த 150-180 நாட்களில் பச்சைக் காய்கள் முதல் அறுவடைக்கு வரும். அடுத்து 55,60 நாட்கள் கழித்து மறுமுறை அறுவடை செய்யலாம். 210 நாள்களில் காய்ந்த நெற்றுகளை முதல் முறையும், 30 நாள்கள் கழித்து மறுமுறையும் அறுவடை செய்யலாம். அறுவடை செய்து பிரித்தெடுத்த விதைகளை 10 சத ஈரப்பதத்துக்குக் காய வைக்க வேண்டும். வண்டுகள் தாக்காமல் இருக்க 100 கிலோ விதைகளுக்கு ஒரு கிலோ ஊக்குவிக்கப்பட்ட களிமண்ணைக் கலந்து வைக்க வேண்டும்.

மகசூல்

பச்சைக் காய்கள் என்றால் ஒரு செடிக்கு 1-3 கிலோவும், விதைகள் என்றால் எக்டருக்கு 2,000 கிலோவும் மகசூலாகக் கிடைக்கும். எனவே, இந்த நவீன நுட்பங்களைப் பின்பற்றி நடவுமுறையில் துவரையைப் பயிரிட்டால் அதிக விளைச்சலையும் அதன் மூலம் கூடுதலான வருமானத்தையும் அடையலாம்.


முனைவர் பெ.முருகன்,

வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம்-603203

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks