விவசாயிகள் முதலில் செய்ய வேண்டிய வேலை மண் பரிசோதனை!

விவசாயி iStock 876143730 2

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2020

ண்வளம் என்பது பயிர் வளர்ச்சிக்குத் தேவையான சத்துகள் போதுமான அளவில், பயிர்கள் எடுத்துக்கொள்ளும் நிலையில் இருப்பதாகும். வளமான மண்ணே வாழ்வின் ஆதாரம் என்பதால், மண்வளத்தைப் பாதுகாப்பது மனித இனத்தின் முக்கியக் கடமையாகும்.

நமது நாட்டின் விளைநிலப் பரப்பும், அதில் சத்துகளின் அளவும் குறைந்து கொண்டே வருகின்றன. ஆனாலும், பெருகி வரும் மக்கள் அனைவருக்கும் உணவளிக்கும் பொருட்டு, மண்வளம் குறையாது மகசூலைப் பெருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

விவசாயிகள் மகசூலைப் பெருக்கும் நோக்கில், பொது உரப் பரிந்துரையைப் பின்பற்றிப் பயிர்களின் தேவைக்கு அதிகமாக இடுவதால் உர விரயமும், பயிர்களின் தேவையைக் கருத்தில் கொள்ளாமல் குறைவாக இடுவதால் மகசூல் இழப்பும் ஏற்படுவதுடன், மண்வளமும் பாதிக்கப்படுகிறது. இந்த நிலையைத் தவிர்க்க, மண்ணைச் சோதித்து அதிலுள்ள சத்துகளின் அளவை அறிந்து, பயிர்களின் தேவைக்கேற்ப, சமச்சீராக உரமிட வேண்டும்.

தமிழ்நாட்டு மண்வளம்

நம் நாட்டில் ஆண்டுக்கு 8-10 மில்லியன் டன் தழை, மணி, சாம்பல் சத்துகள் நிலத்திலிருந்து எடுக்கப்படுகின்றன. இவற்றைப் பயிர்கள் எடுத்துக் கொள்ளும் அளவில் மீண்டும் நிலத்தில் இட்டால் தான், அந்த நிலம் வளமாகவும், அதிக மகசூலைத் தருவதாகவும் இருக்கும். மேலும், அங்ககக் கரிமப் பொருள்கள் நிலத்தில் அதிகமாக இருந்தால் தான், பயிர்களுக்கு இடும் சத்துகளின் பயனைக் கூட்ட முடியும்.

மண்வளம், இடத்துக்கு இடம் மாறுபடும். தமிழக நிலங்களில் கரிமச்சத்துக் குறை <0.5% எனவும், பயிருக்குக் கிடைக்கும் தழைச்சத்துக் குறை எக்டருக்கு 280 கிலோவுக்குக் கீழும், மணிச்சத்துக் குறை எக்டருக்கு 11 கிலோவுக்குக் கீழும், 22 கிலோவுக்கு மேலும், சாம்பல் சத்துக்குறை எக்டருக்கு 118 கிலோவுக்குக் கீழும், 280 கிலோவுக்கு மேலும் உள்ளன.

பயிருக்குக் கிடைக்கும் கந்தகம், துத்தநாகம், போரான், இரும்பு, மாங்கனீசு, தாமிரம் ஆகியவற்றின் பற்றாக்குறை முறையே, 10, 63, 19, 12, 7, 32% என உள்ளன. தீவிர சாகுபடி நடக்கும் இடங்களில், இப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட சத்துகள் பற்றாக்குறை தோன்றத் தொடங்கி உள்ளன. 

திட்டமிட்ட மகசூலுக்குச் சமச்சீர் உரமிடல் என்னும் சத்து மேலாண்மை குறித்த விழிப்புணர்வை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் விவசாயிகளிடம் ஏற்படுத்தி வருகிறது. இதன் மூலம் வளமான நிலங்களில் உர விரயத்தைக் குறைத்து அல்லது வளம் குன்றிய நிலங்களில் உரங்களை நிறைய இட்டு மண்வளத்தைக் காத்து அதிக மகசூலைப் பெற முடியும்.

மண்ணாய்வின் அவசியம்

மண்ணாய்வுக்கான மண் மாதிரிகளைச் சேகரித்தல் முக்கியச் செயலாகும். எனவே, அதற்கான முறையில் மண்ணைச் சேகரித்துக் கொடுத்தால் சோதனை முடிவுகள் துல்லியமாக இருக்கும். இந்த ஆய்வில், மண்ணின் கார அமிலநிலை, மின் கடத்தும் திறன், அங்ககக் கரிமம் போன்றவற்றைச் சோதித்து மண்வகையை அறியலாம்.

பேரூட்டங்களான தழை, மணி, சாம்பல் சத்துகள், நுண்ணூட்டங்களான இரும்பு, மாங்கனீசு, துத்தநாகம், தாமிரம், போரான் போன்றவற்றைச் சோதித்து அவற்றின் அளவுகள் தரப்படுகின்றன. இந்த அளவுகளின் அடிப்படையில் அடுத்த பயிருக்கான உரங்கள் பரிந்துரை செய்யப்படுகின்றன. 

சிக்கலான மண் வகைகளை அறிதல்

மண்ணின் கார அமிலத் தன்மையைச் சோதித்து, அம்மண் அமில வகையைச் சார்ந்ததா அல்லது காரவகையைச் சார்ந்ததா என அறியலாம்.  மண்ணின் மின் கடத்தும் திறனைச் சோதித்து, உவர் மண்ணா அல்லது களர் மண்ணா என அறியலாம். மண்ணிலுள்ள சிக்கல்களுக்கு ஏற்ப, சத்துகளை இடலாம். 

மண்ணாய்வு மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை மையம்

தமிழகத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகக் கல்லூரிகள் மற்றும் வேளாண்மை அறிவியல் நிலையங்களில் மண்ணாய்வு செய்யப்படுகிறது. இவ்வகையில், தேனி மாவட்டம் பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரியில் மண்ணாய்வு மற்றும் தொழில் நுட்ப ஆலோசனை மையம் இயங்கி வருகிறது. இங்கே விவசாயிகளின் நிலங்களுக்கான மண்ணாய்வு, கட்டண அடிப்படையில் செய்து தரப்படுகிறது.

இந்த ஆய்வில் பயிர்களுக்கான உர அளவுகள் கூறப்படுகின்றன. எனவே, விவசாயிகள் அனைவரும் மண்ணாய்வைச் செய்து அதிலுள்ள சத்துகளின் அளவையறிந்து, சமச்சீர் உரமிடல் என்னும் சிறந்த சத்து மேலாண்மையைப் பின்பற்றினால், உர விரயத்தைக் குறைத்து, மண்வளத்தைக் காத்து விளைச்சலைப் பெருக்கலாம்.


விவசாயி K.M.SELLAMUTHU.1 e1612562042566

முனைவர் கு..செல்லமுத்து,

முனைவர் ப.மாலதி, முனைவர் மொ.ப.கவிதா, முனைவர் மு.உமாமகேஸ்வரி, 

இயற்கை வேளாண்மைத் துறை, தோட்டக்கலைக் கல்லூரி, பெரியகுளம்-625604.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading