கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019
பயிர்களைத் தாக்கும் பூச்சிகள் நாடு விட்டு நாடு தாவிச் சேதம் விளைவிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. காற்று, விதை, தானியம், கன்றுகள் மூலம் இவை மற்ற இடங்களுக்குப் பரவுகின்றன. அவ்வகையில், தற்போது இந்தியளவில் விளைச்சலைக் கடுமையாகப் பாதிக்கச் செய்கிறது, பால் ஆர்மிவார்ம் எனப்படும் படைப்புழு. புதிய இடங்களில் இதை அழிக்கும் உயிரினம் இல்லாமல் போவதும், தட்பவெப்ப நிலை சாதகமாக அமைவதும், இப்புழுவினம் பெருக ஏதுவாக உள்ளன.
படைப்புழுவின் தாயகம்
இதன் தாயகம் அமெரிக்கா. இங்கிருந்து முதன் முதலாக நைஜீரியாவில் 2016 ஜனவரியில் மக்காச்சோளத்தைத் தாக்கியது. இவ்வகையில், 44 ஆப்பிரிக்க நாடுகளில் பரவி, அந்நாடுகளின் முக்கிய உணவுப் பயிரான மக்காச்சோளத்தில் மிகுந்த இழப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவில் தாக்குதல்
இந்தியாவில் இப்புழுவின் தாக்குதல், முதன் முதலாகக் கர்நாடக மாநிலம் சிவமோகா பகுதி மக்காச்சோளத்தில் 2018 மே மாதம் 18ஆம் தேதி காணப்பட்டது. தற்போது தமிழ்நாடு, ஆந்திரம், தெலுங்கானா போன்ற மாநிலங்களிலும் இது பரவியுள்ளது.
தாக்கும் பயிர்கள்
மக்காச்சோளம், சோளம், நெல், கரும்பு, பருத்தி, சோயா, கடலை, கோதுமை, வெங்காயம், முட்டைக்கோசு, உருளைக்கிழங்கு, தக்காளி, சிறுதானியப் பயிர்கள் என, 80 வகைப் பயிர்களைத் தாக்குகின்றன.
முட்டை
பெண் அந்துப்பூச்சிகள் இரவு நேரத்தில் முட்டைகளைக் குவியலாக இலைகளின் அடியில் இடும். ஒரு குவியலில் 100-200 முட்டைகள் இருக்கும். இந்த முட்டைகளை ரோமங்களால் மூடிப் பாதுகாக்கும். ஒரு பெண் அந்துப்பூச்சி தன் வாழ்நாளில் 1,500-2,000 முட்டைகளை இடும். முட்டைப் பருவம் 2-3 நாட்களாகும்.
படைப்புழு
புழுப்பருவம் ஆறு நிலைகளைக் கொண்டது. இளம்புழு, பச்சையாக, கறுப்புத் தலையுடன் இருக்கும். வளர்ந்த புழுவின் தலை, பழுப்புக் கலந்த சிவப்பு நிறத்தில் இருக்கும். மேலும் முகத்தில் மஞ்சள் நிறத்தில் ஆங்கில எழுத்து ஒய்-யைத் திருப்பிப் போட்டதைப் போன்ற அடையாளம் இருக்கும். வாலில் நான்கு புள்ளிகள் சதுரமாக இருக்கும். முதிர்ந்த புழு 3-4 செ.மீ. நீளத்தில் இருக்கும்.
கூட்டுப்புழு
படைப்புழுவானது கூட்டுப்புழுவாக மாறி மண்ணில் 2-8 செ.மீ. ஆழத்தில் இருக்கும். சிவப்பாக இருக்கும் கூட்டுப்புழு, 14-18 மி.மீ. நீளம், 4.5 மி.மீ. அகலத்தில் இருக்கும். ஆண் கூட்டுப்புழு 14-15 மி.மீ. நீளத்திலும், பெண் கூட்டுப்புழு 16-17 மி.மீ. நீளத்திலும் இருக்கும். கோடையில் கூட்டுப்புழுப் பருவம் 8-9 நாட்களும், குளிர் காலத்தில் 20-30 நாட்களும் இருக்கும். மணல் கலந்த களிமண்ணுள் எளிதில் சென்று கூட்டுப்புழுவாக மாறும். கடின மண்ணில் இலைச் சருகுகளை ஒன்றாக்கி, அதற்குள் கூட்டுப்புழுவாக மாறும்.
அந்துப்பூச்சி
கூட்டுப்புழுவிலிருந்து வெளிவரும் அந்துப்பூச்சி, இரவில் சுறுசுறுப்பாக இயங்கும். இது 16 மி.மீ. நீளத்தில் இருக்கும். இறக்கைகள் 32-40 மி.மீ. நீளமிருக்கும். முன் இறக்கைகள் சாம்பல் கலந்த பழுப்பாகவும், இறக்கையின் நுனி மற்றும் மையப் பகுதியில் வெள்ளை நிற முக்கோண அமைப்பும் இருக்கும். அந்துப்பூச்சியின் வாழ்நாள் 10 நாட்கள். தட்பவெப்ப நிலைக்கேற்ப 7-21 நாட்களும் இருக்கும். இது 500-1,000 கிலோ மீட்டர் தொலைவை 15 நாட்களில் கடக்கும்.
மொத்த வாழ்நாள்
இந்தப் படைப்புழு 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில், 30-40 நாட்கள் வாழும். குளிர் காலத்தில் 60-90 நாட்கள் வாழும்.
பாதிப்பின் அறிகுறிகள்
இளம் புழுக்கள் இலைகளின் அடிப்பகுதியைச் சுரண்டித் தின்னும். இதனால் இலைகள் பச்சையத்தை இழந்து வெண்மையாக இருக்கும். மூன்று முதல் ஆறாம் நிலைப் புழுக்கள் இலையுறைக்குள் சென்று கடித்துண்டுப் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் இலைகள் விரியும் போது வரிசையாகச் சிறு துளைகள் இருக்கும். புழுவின் கழிவும் இருக்கும். 20-40 நாள் இளம் பயிரையே அதிகமாகத் தாக்கும். இளம் பயிரில் சேதம் அதிகமாக இருந்தால், பயிரின் வளர்ச்சிப் பகுதி பாதித்து, நடுக்குருத்து காய்ந்து விடும். பிறகு கதிர்களிலும் சேதத்தை விளைவிக்கும்.
காட்டுப்புல் இருந்தால் தொடர்ந்து அங்கேயே இருந்து பாதிப்பை ஏற்படுத்தும். உணவுப் பயிர்கள் இல்லையெனில், கூட்டங் கூட்டமாக மற்ற இடங்களுக்குப் பல கிலோ மீட்டர் தூரம் செல்லும்.
மேலாண்மை
உழவியல் முறை: ஆழமாக உழுது, கூட்டுப் புழுக்களை மண்ணிலிருந்து வெளியேற்றி அழிக்கலாம். அடியுரமாக ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கை இட்டு, கூட்டுப் புழுவிலிருந்து அந்துப்பூச்சி வெளிவருவதைக் கட்டுப்படுத்தலாம். நிலத்தில் களைகள் இருக்கக் கூடாது. ஒரே நேரத்தில் விதைக்க வேண்டும். தொடர்ந்து மக்காச்சோளத்தைப் பயிரிடக் கூடாது.
விதை நேர்த்தி: ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் தயாமீத்தாக்சாம் 30 எப்.எஸ். அல்லது 10 கிராம் பிவேரியா பேசியானா அல்லது சயன்ட்ரான்லிபுரோல் 19.8% + தயாமீத்தாக்சாம் 19.8% 4 கிராம் அளவில் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். நோய்க்கொல்லி மருந்தால் விதை நேர்த்தியைச் செய்திருந்தாலும் இவற்றில் ஏதாவது ஒரு பூச்சிக்கொல்லி மருந்துடன் விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
இடைவெளி: இறவையில் 60×25 செ.மீ. இடைவெளியிலும், மானாவாரியில் 45×20 செ.மீ. இடைவெளியிலும் விதைக்க வேண்டும். பத்து வரிசைக்கு ஒரு வரிசை 75 செ.மீ. இடைவெளியில் இருக்க வேண்டும்.
ஓரப்பயிர்: இறவையில் மக்காச்சோளத்தை விதைப்பதற்கு 10-15 நாட்களுக்கு முன், நிலத்தைச் சுற்றி 2-4 வரிசைகளில் கம்பு நேப்பியரையும், மானாவாரியில் சோளத்தையும் விதைத்துப் படைப்புழுக்களைக் கவர்ந்திழுக்க வேண்டும். மேலும், நிலத்தைச் சுற்றித் தட்டைப்பயறு, சூரியகாந்தி, சாமந்தி போன்ற பூக்கும் பயிர்களை வளர்த்து நன்மை செய்யும் பூச்சிகளைப் பெருக்கி, படைப்புழுக்களின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம். மக்காச்சோளத்தில் ஊடுபயிராக, உளுந்து, பச்சைப்பயறு அல்லது தட்டைப் பயற்றைப் பயிரிடலாம். முட்டைகளைக் கையால் பொறுக்கி அழிக்கலாம்.
கண்காணிப்பு
மக்காச்சோளத்தை விதைத்து 10-15 நாட்களில் ஏக்கருக்கு 5 இனக்கவர்ச்சிப் பொறிகளை வைத்து அந்துப்பூச்சிகளின் நடமாட்டத்தைக் கவனிக்க வேண்டும். ஏக்கருக்கு 20 இனக்கவர்ச்சிப் பொறிகளைப் பயன்படுத்தினால், அதிகளவில் அந்துப்பூச்சிகளை அழிக்கலாம். இவற்றில் பயன்படும் மருந்தை 20 நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.
இரசாயன முறையில் மேலாண்மை
மக்காச்சோளத்தை விதைத்த 15-20 நாட்களில், அசடிராக்டின் 1 ஈசி மருந்தை பத்து லிட்டர் நீருக்கு 20 மில்லி அல்லது இமாமெக்டின் பென்சோயேட் 5 எஸ்.ஜி 4 கிராம் அல்லது நொவலூரான் 10 ஈ.சி. 15 மில்லி வீதம் கலந்து கைத்தெளிப்பான் மூலம் அல்லது பேட்டரியில் இயங்கும் நாப்சாக் தெளிப்பானால் ஏக்கருக்கு 100 லிட்டர் நீரைப் பயன்படுத்தித் தெளிக்க வேண்டும்.
மக்காச்சோளத்தை விதைத்த 40-45 நாட்களில், பத்து லிட்டர் நீருக்கு தயோடிகார்ப் 75 டபிள்யூ.பி 20 கிராம் அல்லது ஸ்பினிட்டோராம் 12 எஸ்.சி. 5 மில்லி அல்லது மெட்டாரைசியம் அனிசோபிலியே 80 கிராம் வீதம் கலந்து கைத்தெளிப்பான் மூலம் அல்லது பேட்டரியில் இயங்கும் நாப்சாக் தெளிப்பானால் ஏக்கருக்கு 200 லிட்டர் நீரைப் பயன்படுத்தித் தெளிக்க வேண்டும்.
மக்காச்சோளத்தை விதைத்த 60-65 நாட்களில், பத்து லிட்டர் நீருக்கு ப்ளுபென்டியாமைட் 480 எஸ்.சி. 9 மில்லி அல்லது குளோரன்ட்ரான்லிபுரோல் 18.5 எஸ்.சி. 5 மில்லி வீதம் கலந்து, கைத்தெளிப்பான் அல்லது பேட்டரியில் இயங்கும் நாப்சாக் தெளிப்பானால் ஏக்கருக்கு 200 லிட்டர் நீரைப் பயன்படுத்தித் தெளிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள வேளாண்மை அறிவியல் நிலையம், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் அல்லது வேளாண்மைத் துறையைத் தொடர்பு கொள்ளலாம்.
முனைவர் இராஜா.ரமேஷ்,
முனைவர் மு.இராமசுப்பிரமணியன், வேளாண்மை அறிவியல் நிலையம்,
நீடாமங்கலம், திருவாரூர்-614404.
சந்தேகமா? கேளுங்கள்!