கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019
ஸ்பைருலினா என்பது நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப்பச்சை நீர்த்தாவரமாகும். இது இயற்கையிலேயே சத்துகள் முழுமையாக நிறைந்த சத்துணவாகும். இதிலுள்ள சத்துகள் எளிதில் செரிக்கும்.
நன்மைகள்
புரதம் 55-65% உள்ளது. உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. இதில் அனைத்துத் தாதுக்களும் அடங்கியுள்ளன. தாய்ப்பால் சுரப்பதற்குத் தேவையான மக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் ஆகிய தாதுப்புகள் நிறைந்துள்ளன. கண்பார்வை சீராக இருப்பதற்குத் தேவையான வைட்டமின் ஏ, இந்தப் பாசியில் அதிகளவில் உள்ளது.
கேரட்டில் உள்ளதைப் போலப் பத்து மடங்கு பீட்டா கரோட்டீன் இதில் உள்ளது. இதில் மிகுந்திருக்கும் வைட்டமின்கள் பி6, பி12, சர்க்கரை நோயாளிகளின் கணையம் சீராக இயங்கத் தேவையான இன்சுலினைச் சுரக்கச் செய்து, இரத்தத்தில் சர்க்கரை கட்டுக்குள் இருக்க உதவுகின்றன.
மற்ற உணவுப் பொருள்களில் இருப்பதைவிட, ஸ்பைருலினாவில் 15 மடங்கு இரும்புச்சத்து உள்ளது. இது இரத்தச் சோகை வராமல் தடுக்கிறது. இந்தப் பாசியிலிருந்து கார்போ ஹைட்ரேட் நேரடியாக நமக்குக் கிடைக்கிறது. ஸ்பைருலினாவிலிருந்து நேரடியாகக் கிடைக்கும் காமா லினோலினிக் அமிலம் உடலில் கொழுப்புச்சத்தைச் சீராக்கி உடல் பருமனைக் குறைக்கிறது.
காமலினோலினிக் அமிலம் இருப்பதால் தாய்ப்பாலுக்கு நிகரான உணவாக இந்தப் பாசி அமைகிறது. இச்சத்து நமது உடலில் குறைந்தால், கொழுப்புப் படிந்து இரத்தக் குழாய்கள் தடித்து, இரத்தழுத்தம் மிகும். ஸ்பைருலினா மூலம் இந்த அமிலம் நேரடியாகக் கிடைப்பதால் இரத்தழுத்தம் தடுக்கப்படும்.
சூப்பர் ஆக்ஸைடு டிஸ்மியூட்டேஸ், உடலில் இறந்த செல்களுக்குப் புத்துயிர் கொடுப்பது. இது இந்தப் பாசியில் இருப்பதால் புற்றுநோய், குடல்புண் போன்ற நோய்களைத் தீர்க்கும். ஸ்பைருலினாவை தொடர்ந்து உண்டு வந்தால் எச்.ஐ.வி. கிருமிகள் மேலும் பெருகாமல் தடுக்கப்படுவதாகவும், எய்ட்ஸ் நோயாளிகள் அதிக நாட்களுக்கு வாழ உதவுவதாகவும் ஆய்வொன்று தெரிவிக்கிறது.
ஊட்டநலத் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கும், வளரும் இளம் மகளிர்க்கும் தினமும் 2-4 கிராம் ஸ்பைருலினா எலுமிச்சைப்பழச் சாற்றுடன் கலந்து வழங்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இயங்கி வரும் இத்திட்டத்தின் வெளிப்பாடுகளை ஆராய்ந்து பார்த்ததில், ஸ்பைருலினாவை உட்கொண்ட பலரும் பல்வேறு வகையில் நன்மை அடைந்துள்ளனர்.
மருத்துவக் குணங்கள்
இதிலிருக்கும் சல்போலிப்பிட்ஸ் நம் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை வேகமாகச் செயல்படுத்தும். ஒவ்வாமைக்கு எதிரான சக்தி கிடைக்கும். இயற்கை இரும்பும் ஃபோலிக் அமிலமும் உள்ளதால் இரத்தச்சோகை உள்ளவர்களும் இதனைப் பயன்படுத்தலாம். ஸ்பைருலினாவை தினமும் 2-4 கிராம் எடுத்து நமக்குப் பிடித்த உணவுடன் சேர்த்து உண்ணலாம். இதை அதிகச் சூடான உணவுகளுடன் கலந்து உண்ணக் கூடாது. ஸ்பைருலினாவின் மகத்துவத்தை உணர்ந்து தினமும் பயன்படுத்தினால், சிறந்த உணவை உண்டதற்கான மனநிறைவை அடையலாம்.
முனைவர் மு.சுகந்தி,
முனைவர் அ.இளங்கோ, முனைவர் ச.த.செல்வன், கால்நடை அறிவியல்
முதுகலை ஆராய்ச்சி நிலையம், காட்டுப்பாக்கம்-603203, காஞ்சிபுரம் மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!