குளிர் பிரதேசக் காய்கறிப் பயிர்களில் சத்து நிர்வாகம்!

பயிர் vegetables to grow scaled

மது நாட்டில் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப உணவு உற்பத்தியைக் கூட்டும் நோக்கில், உயர் விளைச்சல் இரகம், வீரிய ஒட்டு இரகம், நீர்வளம் மற்றும் விளைநிலப் பெருக்கம், ஆண்டுக்கு 2-3 தொடர் சாகுபடி போன்றவை மூலம் விளைச்சல் எடுக்கப்பட்டது.

அதனால், நிலத்திலிருந்த சத்துகள் பெருமளவில் எடுக்கப்பட்டு விட்டன. மகசூலைப் பெருக்க முயற்சி செய்த விவசாயிகள், பயிர்களுக்குத் தேவையான சத்துகளை நிலத்தில் இடாததால், சத்துக் குறைகள் ஏற்பட்டு விட்டன.

நவீன விவசாயத்தில், பயிர்க்கழிவு, தொழுவுரம், பசுந்தழைகள் போன்ற இயற்கை உரங்களை இடாமல், இரசாயன உரங்களை மட்டுமே இட்டதால், நிலத்தில் நுண்ணூட்டக் குறைகள் கூடி விட்டன.

புதிய பாசனத் திட்டங்களின் விளைவு, பயிர்ச்சுழற்சி இல்லாமை, மண்ணரிப்பு, நிலத்தைச் சமப்படுத்தும் போது சில சத்துகள் மிகுந்து சில சத்துகள் குறைதல், காலநிலை மற்றும் பயிர் வளர்ச்சிப் பருவ மாற்றம் போன்றவற்றால் பயிர்களுக்குத் தேவையான சத்துகள் கிடைப்பதில்லை.

இதனால், பயிர்களின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படுகிறது. ஆகவே, ஒவ்வொரு சத்தின் பயனையும், தேவையையும், மகசூல் குறைவதற்கான காரணத்தையும் தெரிந்து, அவற்றைச் சரி செய்தால், நல்ல மகசூலைப் பெற முடியும்.

அவசியமான சத்துகள்

பயிர்களின் வளர்ச்சிக்கு 16 வகையான சத்துகள் அவசியம். இவற்றில் சில சத்துகள் பயிர்களின் வளர்ச்சிக்கு அதிகமாகத் தேவைப்படும். இவை முக்கியச் சத்துகள் எனப்படும். சில சத்துக்கள் பயிர்களின் வளர்ச்சிக்கு மிகக் குறைவாகத் தேவைப்படும். இவை நுண்சத்துகள் எனப்படும்.

முக்கியச் சத்துகள்

தழைச்சத்தைத் தரும் நைட்ரஜன், மணிச்சத்தைத் தரும் பாஸ்பரஸ், சாம்பல் சத்தைத் தரும் பொட்டாசியம், சுண்ணாம்புச் சத்தைத் தரும் கால்சியம், கந்தகச் சத்தைத் தரும் சல்பர் மற்றும் மெக்னீசியம் சத்து முதலியன பயிருக்கு அதிகமாகத் தேவைப்படுவதால் இவை முக்கியச் சத்துகள் எனப்படுகின்றன.

நுண் சத்துகள்

இரும்பு, துத்தநாகம், மாங்கனீசு, மாலிப்டினம், தாமிரம், போரான் போன்ற சத்துகள் பயிர்களுக்கு மிகக் குறைவாகத் தேவைப்படுவதால் இவை நுண் சத்துகள் எனப்படுகின்றன. மேலும், சிலவகைப் பயிர்களுக்கு, குளோரின், சோடியம், அலுமினியம், சிலிகான் போன்ற சத்துகள் மிக மிகக் குறைவாகத் தேவைப்படுகின்றன.

சத்துக் குறைகளை அறிதல்

வளமான நிலத்தில் பயிர் வளர்ச்சிக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் கிடைக்கும். இவை, பயிர்களில் குறிப்பிட்ட சில செயல்களைச் செய்யும். இச்செயல்கள் சரியாக நடந்தால், வளர்ச்சியும் மகசூலும் நன்றாக இருக்கும்.

இதில் ஏதாவது ஒரு சத்தின் அளவு குறைந்தாலும், கூடினாலும் விளைச்சல் பாதிக்கப்படும்.

நிலத்தில் சத்துக்குறை ஏற்பட்டால், இலை நுனி அல்லது அடிப்பகுதி மஞ்சள் நிறமாதல், இலைகளில் புள்ளிகள் தோன்றுதல், நரம்புகள் நிறம் மாறுதல், இலைகள் சிறுத்தல் மற்றும் வடிவம் மாறுதல், பயிர்களின் இயல்பான வளர்ச்சி பாதித்தல், தண்டின் நுனி கருகுதல், பூக்கள் சிறுத்தல் மற்றும் உருமாறுதல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

சத்துகள் குறைவாகக் கிடைக்கும் போது தான் பயிர்கள் இந்த அறிகுறிகளை வெளிப்படுத்தும். அதுவரை அறிகுறிகள் வெளிப்படாமல், பயிர் வளர்ச்சியிலும் மகசூலிலும் பாதிப்பு நிகழ்ந்து கொண்டிருக்கும். இது, மறைவுப்பசி எனப்படும்.

இந்தப் பசி, நம் நிலம் அமைந்துள்ள பகுதியிலும் இருந்தால், நம் பயிரின் மகசூல் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து, தேவையான சத்துகளை நிலத்தில் இட்டுச் சரி செய்ய வேண்டும்.

சத்துகளைப் பயிர்கள் ஏற்கும் விதம்

சத்துகளை எடுத்துக் கொள்ளும் அளவு, பயிருக்குப் பயிர் மாறுபடும். ஒரு பயிர் அதிகமாகப் பயன்படுத்தும் சத்தை, இன்னொரு பயிர் குறைவாகப் பயன்படுத்தும். கிழங்கு வகைகள், பழமரங்கள், கரும்பு போன்றவை, சாம்பல் சத்தை அதிகமாகப் பயன்படுத்தும்.

தீவனப் பயிர்கள், கீரை வகைகள், மணிச்சத்தை நிறைய எடுக்கும். பருத்தி, நிலக்கடலை, தக்காளி ஆகியன சுண்ணாம்புச் சத்தை விரும்பும். எண்ணெய்ப் பயிர்கள் மாங்கனீசை விரும்பும்.

முட்டைக்கோசு, காலிப்ளவர்

முட்டைக்கோசும் காலிப்ளவர் எனப்படும் பூக்கோசும் மலைகளில் விளைவன. தமிழ்நாட்டில் கொடைக்கானல். நீலகிரி மற்றும் ஏற்காடு மலையிலும், குளிர் காலத்தில் சில சமவெளி நிலங்களிலும் விளைகின்றன. இவை விளையும் இடங்களில், துத்தநாகம். போரான் மற்றும் மாலிப்டினம் குறைபாடு பரவலாக உள்ளது. மேலும், பிற நுண் சத்துகளும் தேவைப்படுகின்றன.

சுண்ணாம்பு: இவ்விரு பயிர்கள் விளையும் நிலத்தில், வறட்சிக் காலத்திலும், தழைச்சத்து உரமாக அம்மோனியா சல்பேட்டை இடும்போதும், சுண்ணாம்புச் சத்துக்குறை ஏற்படும். இதனால், இலைகளின் நுனிகள் கருகும்; இலைகளில் பசுமை குறையும்; முட்டைகோசு வெடித்து விடும். எனவே, மண்ணாய்வு செய்து, தக்க அளவில் ஜிப்சத்தை இட வேண்டும்,

மக்னீசியம்: இவ்விரு பயிர்களுக்கும் மக்னீசியம் அவசியம் தேவை. இது குறைந்தால், முட்டைக்கோசு இலையின் நரம்பிடைப்பகுதி பச்சையம் குறைந்து மஞ்சளாக மாறும். காலிப்ளவரில் பூக்களைச் சுற்றியுள்ள சிறு சிறு இலைகள் மஞ்சளாக மாறும். வேர்கள் நன்கு வளராமல் போவதால், கோடையில் வறட்சியால் வாடியதைப் போலத் தெரியும்.

வைரஸ் பாதிப்பு இருந்தாலும் இப்படித் தெரியும். ஆங்காங்கே செடிகள் மஞ்சளாக மாறும், இந்தக் குறை, மக்னீசியக் குறைவால் ஏற்படுவதை விட, சாம்பல் சத்தை அதிகமாக இடுவதால் ஏற்படுகிறது.

மாங்கனீசு: இது குறைந்தால், இவ்விரு பயிர்களின் இலை நரம்பிடைப் பகுதி மஞ்சளாகி, இலையோரம் வரை பரவியிருக்கும். நரம்புகள் மட்டும் கரும் பச்சையாக இருக்கும். இந்தக் குறையைப் போக்க, 0.5% மாங்கனீசு சல்பேட் கரைசலை இருமுறை தெளிக்க வேண்டும். இதன் அளவு கூடினால் எளிதில் நச்சுத் தன்மையை உருவாக்கும்.

தாமிரம்: அமிலத் தன்மை மிகுந்த மற்றும் அங்ககச் சத்து மிகுந்த நிலத்தில், தாமிரப் பற்றாக்குறை தோன்றும். செடிகள் வாடியதைப் போலத் தெரியும். இளம் இலைகள் மஞ்சளாக மாறும். இதைச் சரி செய்ய, எக்டருக்கு 20 கிலோ தாமிர சல்பேட்டை இடலாம். இதனால், பல ஆண்டுகள் வரையில் இக்குறை ஏற்படாது.

துத்தநாகம்: மணற்சாரி நிலத்திலும், காரத்தன்மை மிகுந்த நிலத்திலும், காலிப்ளவர் மற்றும் முட்டைக்கோசில் துத்தநாகப் பற்றாக்குறை தென்படும். இலைகள் சிறுத்தும், பழுப்பு நிறமாகவும் இருக்கும். இக்குறையைப் போக்க, எக்டருக்கு 25 கிலோ துத்தநாக சல்பேட்டை அடியுரமாக இட வேண்டும்.

போரான்: நிலத்தில் போரானின் அளவு 10 பி.பி.எம். அளவுக்குக் கீழே குறைந்தால் முட்டைக்கோசில் இதன் பற்றாக்குறை தெரியும். இதனால், இலையோரம் கருகி, மேல் இலைகள் முட்டைக்கோசை விட்டுக் கீழ்நோக்கித் தொங்கும். இதைச் சரி செய்ய, எக்டருக்கு 37.5 கிலோ போராக்சை இட வேண்டும்.

முட்டைக்கோசைக் காட்டிலும் காலிப்ளவருக்கு போரான் மிகவும் முக்கியம். இது குறைந்தால் செடிகள் சீராக வளராது. பெரிதும் சிறிதுமாக இருக்கும். கோடையில் பரவலாக இதன் பற்றாக்குறை தென்படும். பூக்கள் அடர்த்தியாக இருக்காது.

செடிகள் வாடியதைப் போலத் தெரியும். நீரில் ஊறியதைப் போன்ற புள்ளிகள் பூக்களில் தோன்றும். தண்டில் வெற்றிடம் தோன்றி, இதைச் சுற்றியுள்ள திசுக்கள் நீரில் ஊறியதைப் போலிருக்கும்.

பிறகு இவை பூக்கள் முழுவதும் பரவி, பழுப்பு நிறமாக மாறி விடும். இது பழுப்பழுகல் அல்லது சிவப்பழுகல் எனப்படும். இப்பூவைச் சுவைத்தால் கசப்பாக இருக்கும், இதைச் சரி செய்ய, எக்டருக்கு 20 கிலோ போராக்சை அடியுரமாக இட வேண்டும். செடிகளில் தெரிந்தால் .025% போரிக் அமிலக் கரைசலைத் தெளிக்கலாம்.

மாலிப்டினம்: இந்தச் சத்துக் குறையுள்ள நிலத்தில் முட்டைக்கோசைப் பயிரிட்டால், வாடல், கருகல், நடு மற்றும் அடியிலைகள் கிண்ணம் போல வளைதல் போன்ற அறிகுறிகள் தெரியும். இதைப் போக்க, ,001% அம்மோனிய மாலிப்டேட் கரைசலில், விதைகளைப் பத்து மணி நேரம் ஊற வைத்து விதைக்க வேண்டும்.

இளம் காலிப்ளவர் செடிகளில் இலைகள் மஞ்சளாக மாறும். இலையோரம் வெளுத்து விடும். இலைகள் கிண்ணம் போல வளைந்தும், குறுகியும் இருக்கும். இலையின் மைய நரம்பு மட்டும் வளர்ந்து சாட்டையின் நுனியைப் போலத் தெரியும். எனவே, இது சாட்டைவால் குறை எனப்படும்.

இதன் குறையால் பாதிக்கப்பட்ட செடிகளின் இலைகளில் மாலிப்டின அளவு 002-.008 பிபிஎம் ஆகவும், நல்ல இலைகளில் 01.0-3.00 பிபிஎம் ஆகவும் இருந்தன. இதைச் சரி செய்ய, எக்டருக்கு 1.5  கிலோ சோடியம் மாலிப்டேட்டை 5 கிலோ மணலில் கலந்து அடியுரமாக இடலாம். அல்லது எக்டருக்கு 100 கிராம் சோடியம் மாலிப்டேட் வீதம் எடுத்து 160 லிட்டர் நீரில் கலந்து, செடிகளை நடவு செய்த 30 நாளில் தெளிக்கலாம்.

உருளைக் கிழங்கு

இது குளிர்ச்சிப் பகுதியில் விளைவது. மணற்பாங்கான, வடிகால் வசதியுள்ள, கார அமில நிலை 5.8-8.0 உள்ள நிலத்தில் நன்கு வளரும், நுண் சத்துகளை இட்டால், விளைச்சல் கணிசமாகக் கூடும்.

சுண்ணாம்பு: இது குறைந்தால். இளம் இலைகள் மேல் நோக்கிச் சுருளும்; மஞ்சளாக மாறும்; செடியின் நுனி காய்ந்து விடுவதால். நடுத்தண்டின் வளர்ச்சி பாதிக்கப்படும். இதைச் சரி செய்ய, கார அமில நிலைக்குத் தகுந்து, டாலமைட் அல்லது சுண்ணாம்பை இட வேண்டும்.

மக்னீசியம்: இது குறைந்தால், அடியிலைகளில் பச்சை குறைந்து வெளிர் பச்சையாகவும், பின்பு மஞ்சளாகவும் மாறி விடும். நரம்புகள் மட்டும் பச்சையாக இருக்கும், இதைச் சரி செய்ய, 0.5% மக்னீசிய சல்பேட் கரைசலைத் தெளிக்கலாம். அல்லது கார அமில நிலையைச் சரி செய்ய, டாலமைட்டை இடலாம்.

துத்தநாகம்: இது குறைந்தால், இலைகள் தடிப்பாகவும். எளிதில் ஒடியும் தன்மையிலும் இருக்கும். அடியிலைகள் மஞ்சளாக மாறும். இலையோரமும் நுனியும் காய்ந்து விடும். இதைச் சரி செய்ய, எக்டருக்குப் பத்து கிலோ துத்தநாக சல்பேட்டை அடியுரமாக இடலாம்,

போரான்: இது குறைந்தால் உருளைக் கிழங்கின் இளம் இலைகள் வெளிர் பச்சையாகவும், தடிப்பாகவும், மேல்நோக்கிச் சுருண்டும் இருக்கும். தண்டின் நுனி காய்ந்து விடும். இதைச் சரி செய்ய,  எக்டருக்கு 15-20 கிலோ போராக்சை நிலத்தில் இட வேண்டும்.

பீன்ஸ்

பீன்ஸ் சாகுபடி நிலத்தில் துத்தநாகமும் இரும்பும் போதுமான அளவில் இருக்க வேண்டும். 2.0 பி.பி.எம். அளவில் துத்தநாகம் குறையும் போது பீன்ஸ் செடியில் இதன் பற்றாக்குறை வெளியே தெரியும். மலைகளில் உள்ள அமிலத் தன்மை நிலங்களில் இதன் பற்றாக்குறை அதிகமாக உள்ளது.

இதனால், இலைகள், பூமொக்குகள் கீழ்நோக்கித் தொங்கும். இலைகளின் நரம்பிடைப் பகுதி மஞ்சளாக இருக்கும். இக்குறையைப் போக்க, 0.5%  துத்தநாக சல்பேட் கரைசலை இருமுறை தெளிக்கலாம்.

பீன்ஸ் செடிகளின் இலைகள் வளர, இரும்புச்சத்து மிகவும் அவசியம். இது குறைந்தால், இலைகள் வெளிர் மஞ்சளாக மாறும், இலை நுனி காய்ந்து விடும். பற்றாக்குறை மிகுந்தால் அறிகுறிகள் தோன்றிய இலை முழுவதும் காய்ந்து விடும்.

இதைச் சரி செய்ய, 110 கிலோ பெர்ரஸ் சல்பேட்டைத் தொழுவுரத்தில் கலந்து இடலாம். அல்லது விதைத்த ஒரு மாதம் கழித்து, ,05% பெர்ரஸ் சல்பேட் கரைசலை இருமுறை தெளிக்கலாம்.


BALAKUMBAHAN

முனைவர் இரா.பாலகும்பகன்,

உதவிப் பேராசிரியர், தோட்டக்கலைக் கல்லூரி, பெரியகுளம்-625604.

முனைவர் வெ.சிவக்குமார், உதவிப் பேராசிரியர்,

தென்னை ஆராய்ச்சி நிலையம், ஆழியார்-625 604.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading