கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019
காய்கறிப் பயிர்களான தக்காளி, வெண்டை, கத்தரி, மிளகாய், காலி்பிளவர், முட்டைக்கோசு ஆகிய பயிர்களைத் தாக்கும் நூற்புழுக்களில் மிகுந்த சேதத்தை ஏற்படுத்துவது வேர்முடிச்சு நூற்புழு. தமிழகம் முழுவதும் பரவலாக உள்ள இப்புழுக்களால், 30-60% மகசூல் இழப்பு உண்டாகிறது. மேலும், பூசணி வகையைச் சார்ந்த புடலை, பாகல், பீர்க்கன், பரங்கி, தர்பூசணி போன்ற பயிர்களிலும் இவற்றின் தாக்கம் அதிகம். இதனால் பயிர்கள் முழு மகசூலைத் தருவதற்கு முன்பே காய்ந்து விடும்.
உருளைக் கிழங்கு
உருளைக் கிழங்கைத் தாக்கும் முட்டைக்கூடு நூற்புழுகள், நீலகிரி மற்றும் கொடைக்கானலில் பல்லாயிரம் ஏக்கரில் உள்ளன. இப்புழுவின் முட்டைக் கூடுகள் 30 ஆண்டுகள் வரை உயிருடன் இருக்கும். இந்தப் புழுக்களால் 40% வரை மகசூல் குறைகிறது. மேலும் உருளைக் கிழங்குகளின் கனமும் குறைவதால், அவற்றின் சந்தை மதிப்பும் வெகுவாகக் குறைகிறது.
வாழை
வேரைத் துளைக்கும் நூற்புழு, வேரழுகல் நூற்புழு, சுருள் நூற்புழு, வேர்முடிச்சு நூற்புழு ஆகியன வாழையில் சேதத்தை ஏற்படுத்தும். கோவை மாவட்டத்தில் மிகுந்துள்ள குடையும் நூற்புழுக்களால் பெருத்த சேதம் ஏற்படுகிறது. சுருள் வடிவ நூற்புழு, வேரழுகல் நூற்புழு, வேர்முடிச்சு நூற்புழு ஆகியன, திருச்சி, தூத்துக்குடி, நெல்லை, கருர், சேலம், ஈரோடு மாவட்டங்களில் அதிகப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
ஆரஞ்சு, எலுமிச்சை, நாரத்தை
இந்தப் பயிர்களைத் தாக்கும் எலுமிச்சை நூற்புழுக்கள், நீலகிரி, பழநி, சேலம், திருநெல்வேலி, திருச்சி, கோவை மாவட்டங்களில் உள்ளன. இதனால், 90% வரையும் கூட மகசூல் இழப்பு ஏற்படும். திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள எலுமிச்சையில் இந்தப் புழுக்கள் மிகுந்த சேதத்தை ஏற்படுத்துகின்றன. இதனால், 20 ஆண்டுகள் பலன் தரவேண்டிய எலுமிச்சை மரம், 5-10 ஆண்டுகளில் காய்ந்து விடுகிறது.
திராட்சை
கோவை, திண்டுக்கல், மதுரை, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் ஏராளமான திராட்சைத் தோட்டங்கள் வேர்முடிச்சு நூற்புழுவால் பாதிக்கப்படுகின்றன. வேரில் காணப்படும் இப்புழு, 10-15% மகசூல் இழப்பை ஏற்படுத்தும். மேலும் இந்த நூற்புழுக்கள், திராட்சையைத் தாக்கும் நோய்கள் பரவவும் காரணமாக உள்ளன.
மலர்ப் பயிர்கள்
கனகாம்பரம், மல்லிகை, ரோஜா, சம்பங்கி போன்றவற்றை, வேர்க்கருகல், மொச்சை வடிவ மற்றும் வேர்முடிச்சு நூற்புழுக்கள் தாக்குகின்றன. இப்புழுக்கள் தமிழகம் முழுதும் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
நூற்புழுக்களை முற்றிலுமாக அழிக்க முடியாது. பயிர்கள் நிலத்தில் இல்லாத போதும்கூட, வெகுகாலம் மண்ணில் உயிருடன் இருக்கும். எனவே, நூற்புழுக்களின் தாக்கத்தைத் தொடக்கத்திலேயே கண்டறிந்து கட்டுப்படுத்துவது அவசியம். இவற்றின் தாக்குதலை, மண், வேர்களைச் சோதித்து அறியலாம்.
கட்டுப்படுத்துதல்
ஒரு சதுர மீட்டர் நாற்றங்காலுக்கு 10 கிராம் கார்போபியூரான் 3wp மருந்து வீதம், விதைத்த ஒரு வாரத்தில் இடலாம். அல்லது சதுர மீட்டருக்கு ஒரு கிலோ வீதம் வேர் உட்பூசணத்தை இடலாம். அல்லது சதுர மீட்டருக்கு 10 கிராம் வீதம் சூடோமோனாஸ் புளுரோசன்சை இடலாம். நடவு வயலில் எக்டருக்கு 2.5 கி.கி. சூடோமோனாஸ் புளுரோசன்சை இடலாம்.
மலர்ப் பயிர்களில் வேர்முடிச்சு நூற்புழு மற்றும் வேரழுகல் நூற்புழுவைக் கட்டுப்படுத்த, எக்டருக்கு 33 கிலோ கார்போபியூரான் 3wp மருந்து அல்லது அல்லது 10 கிலோ போரேட் 10wp வீதம் நட்ட 15 ஆம் நாள் இடலாம்.
வாழை வேர்முடிச்சு நூற்புழு மற்றும் வேரழுகல் நூற்புழுவைக் கட்டுப்படுத்த, கார்போபியூரான் 3wp மருந்தை, கன்றுக்கு 40 கிராம் வீதம் நடவுக் குழியில் இடலாம்.
அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 15 மில்லி வீதம் கலக்கப்பட்ட மோனாகுரோட்டோபாஸ் கரைசலில் வாழைக் கிழங்குகளை 10 நிமிடம் நனைத்து நடலாம். பிறகு, வேப்பம் புண்ணாக்குடன் கலந்த யூரியாவை, கன்றுக்கு 700 கிராம் வீதம் இடவேண்டும்.
திராட்சை வேர்முடிச்சு நூற்புழு மற்றும் வேரழுகல் நூற்புழுவைக் கட்டுப்படுத்த, கொடிக்கு 60 கிராம் வீதம் கார்போபியூரான் 3wp மருந்தை இடலாம். அல்லது கொடிக்கு 100 கிராம் வீதம், சூடோமோனாஸ் புளூரசன்சை இடலாம்.
எலுமிச்சை எலுமிச்சை நூற்புழுவைக் கட்டுப்படுத்த, மரம் ஒன்றுக்கு 100 கிராம் வீதம் 3wp கார்போபியூரான் மருந்தை இடலாம். நான்கு மாதங்களுக்கு ஒருமுறை மரத்துக்கு 20 கிராம் வீதம் சூடோமோனாசை மரங்களைச் சுற்றி இடலாம்.
பப்பாளி வேர் முடிச்சு, மொச்சை வடிவ நூற்புழுவைக் கட்டுப்படுத்த, குழி ஒன்றுக்கு 20 கிராம் வீதம் 3wp கார்போபியூரான் மருந்தை, நடவு மற்றும் பூக்கும்போது இட வேண்டும்.
முனைவர் த.செந்தில்குமார்,
முனைவர் இரா.சுவர்ணப்ரியா, தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், பேச்சிப்பாறை-629161, கன்னியாகுமரி மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!