கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2021
நூற்புழுக்கள் தாவரங்களை அண்டி வாழும் ஒட்டுண்ணிகளாகும். இவை பெரும்பாலும் மண்ணில் இருந்து கொண்டு பயிர்களின் வேர்ப்பகுதியைத் தாக்கி, அதிலுள்ள சாற்றை உறிஞ்சி வாழும். இவற்றின் வாய்ப் பகுதியில் இருக்கும் ஈட்டி போன்ற அலகால், வேர்ப்பகுதியைத் துளைத்துச் சாற்றை உறிஞ்சும். இந்த நூற்புழுக்கள் மிகச் சிறிய வடிவில் இருக்கும். தாவர நூற்புழுக்களைப் புற ஒட்டுண்ணிகள், அக ஒட்டுண்ணிகள் என வகைப்படுத்தலாம்.
அக ஒட்டுண்ணிகள், தாவரங்களின் திசுக்களை ஊடுருவிச் சென்று சேதத்தை ஏற்படுத்தும். வேர்ப்பகுதியில் முடிச்சுகளை உண்டாக்கும் வேர் முடிச்சு நூற்புழுக்களும், வேரழுகல் நூற்புழுக்களும், ஈட்டி நூற்புழுக்களும் இவ்வகையில் அடங்கும். மற்ற பயிர்களைப் போலவே, கரும்பும் பல நூற்புழுக்களால் தாக்கப்படும். சுமார் 24 வகையான நூற்புழுக்கள் கரும்பின் வேர்ப்பகுதியில் ஒட்டுண்ணிகளாக வாழ்கின்றன. கரும்பில் 8-11% மகசூல் இழப்புக்கு நூற்புழுக்களே காரணமாக இருக்கின்றன.
கரும்பைத் தாக்கும் நூற்புழுக்கள்
வேர்முடிச்சு நூற்புழுக்கள்: இவை, கரும்பை மட்டுமின்றி, மேலும் பல பயிர்களையும் தாக்கும். இளம் நூற்புழுக்கள் வேரை துளைத்துச் சென்று திசுக்களில் தங்கிச் சாற்றை உறிஞ்சி வாழும். இவ்விதம் வேருக்குள் செல்லும் நூற்புழுக்கள், வளரத் தொடங்கிய பிறகு நகருவதில்லை. பெண் புழுக்கள் வளர்ந்து பேரிக்காயைப் போன்ற வடிவத்தை அடையும்.
இந்த நூற்புழுக்கள் தாக்கிய வேர்களில் முடிச்சுகள் அல்லது வீக்கங்கள் தோன்றும். நூற்புழுக்கள் 24-27 நாட்களில் வளர்ந்து முட்டையிடத் தொடங்கும். ஜெல்லி போன்ற முட்டைக்கூடு ஒவ்வொன்றிலும் 60 முதல் 250 வரை முட்டைகள் இருக்கும். இவற்றிலிருந்து 7-9 நாட்களில் இரண்டாம் பருவ இளம் ஒட்டுண்ணிப் புழுக்கள் வெளிவரும்.
மெலாய்டோகைன் இன்காக்னிட்டா, மெ.ஜவானிகா, மெ.அரினேரியா, மெ.ஹேப்லா ஆகிய நான்கு வகை வேர் முடிச்சு நூற்புழுக்கள் கரும்பைத் தாக்கும். இவற்றில் முதல் இரண்டும் தமிழகத்தில் கரும்பு விளையும் பெரும்பாலான இடங்களில் உள்ளன. இவை, பயிர்களில் நோயை உண்டாக்கும் பூசணங்களுடன் சேர்ந்து அதிகளவில் சேதத்தை ஏற்படுத்தும்.
வேரழுகல் நூற்புழுக்கள்: இவை நகரும் அக ஒட்டுண்ணி வகையாகும். வேரைத் துளைத்துச் சென்று வேர் கார்டெக்ஸில் உள்ள செல்களை அழித்துப் பள்ளங்களை உண்டாக்கும். இதனால், செல்கள் பழுப்படைந்து அழுகி விடும். வேர்களின் மேற்பகுதியில் பழுப்பு அல்லது கரும் பழுப்பு நிறத்தில், வட்டப் புள்ளிகள் அல்லது நீண்ட கண் வடிவப் புள்ளிகள் தோன்றும். தாக்கப்பட்ட வேர்களின் கார்டெக்ஸ் முழுவதும் தகர்ந்து உரிந்து விடும். இவ்விதம் பாதிக்கப்பட்ட வேர்களின் மைய உணவுக்குழல் அமைப்பான தண்டு மட்டுமே இருக்கும்.
பிராடிலின்கஸ் ஜியே, பி.டிலாட்டரி, பி.பிராக்கியூரான், பி.காபியே போன்ற நூற்புழுக்கள் கரும்பைத் தாக்கும். தமிழகம் முழுவதும் பி.டிலாட்டரி நூற்புழுக்கள் உள்ளன. இவை, 250 மி.கி. மண்ணுக்கு 500 அல்லது 1 கிராம் வேருக்கு 250 என இருந்தால், பயிர்களில் சேதம் ஏற்படும். இந்த நூற்புழுக்களும் பூசண நோய்களை ஏற்படுத்தும்.
மொச்சை வடிவ நூற்புழுக்கள்: பெயருக்கு ஏற்றபடி மொச்சை வடிவத்தில் இருக்கும். இவற்றின் தலைப்பகுதி வேருக்குள் புதைந்தும், உடற்பகுதி வெளியேயும் இருக்கும். இளம் பெண் புழுக்கள் மட்டுமே ஒட்டுண்ணிகளாக இருக்கும். ஆண் புழுக்கள் இனப் பெருக்கத்துக்கு மட்டுமே உதவும்.
ஈட்டி நூற்புழுக்கள்: இவை, வேரழுகல் நூற்புழுக்களைப் போலவே சேதத்தை உண்டாக்கும். ஆனால், இவற்றால் தாக்கப்பட்ட வேர்களில் கண் வடிவக் காயங்கள் தென்படாது. ஹோப்ளோலெய்ம்ஸ் செயின்ஹார்ஸ்டி மற்றும் ஹோ. இன்டிகஸ் என்னும் நூற்புழுக்கள் கரும்பை அதிகமாகத் தாக்கும். இவற்றால், வேர்ப்பிடிப்பற்ற கரும்பு நாற்றுகள் உருவாகும். இளம் கரும்பின் வளர்ச்சியும் வெகுவாகப் பாதிக்கப்படும்.
சுருள் நூற்புழுக்கள்: இவை, ஹெலிக்கோடைலங்கஸ் என அழைக்கப்படும். அசைவற்ற நிலையில் கடிகாரச் சுருளைப் போலச் சுருண்டிருக்கும். ஹெ.டைஹிஸ்டிரா, ஹெ.ரிசோப், ஹெ.நானஸ், ஹெ.எரித்ரினே போன்றவை கரும்பை அதிகளவில் தாக்கும். இவற்றுள் முதல் நூற்புழு நமது மண்ணில் மிக மிக அதிகமாக உள்ளன. இவற்றால் பயிரின் வளர்ச்சிப் பாதிக்கப்படும்.
ஸ்டைலட் நூற்புழுக்கள்: இவை டைலங்கோரிங்கஸ் எனப்படும். தமிழகத்தில் உள்ள கரும்பில் இந்த நூற்புழுக்கள் அதிகமாக உள்ளன. டைலங்கோரிங்கஸ் மார்டினி, டை.காவஸ், டை.மீர்ஜை மற்றும் டை.சிராலிகார்டேடஸ் ஆகியன, கரும்பு வேரின் மேற்பகுதியைத் துளைத்து, வேரின் வளர்ச்சியை வெகுவாகப் பாதிக்கச் செய்யும்.
குட்டை வேர் நூற்புழுக்கள்: டிரிக்கோடோரஸ் எனப்படும் இப்புழுக்கள், வேரின் நுனியைத் தாக்கி அழிக்கும். ஆகவே, வேர்கள் வளராமல் குட்டையாக இருக்கும். சல்லிவேர்கள் சிறுத்தும், வளராமலும், நெருக்கமாகக் கூடையைப் போலவும் இருக்கும். வேர்ப்பிடிப்பு இன்மையால் பயிரின் வளர்ச்சிக் குன்றும். மேலும், பயிர்கள் சாய்ந்திருக்கும்.
தமிழகத்தில் வேர்முடிச்சு நூற்புழுக்களுக்கு அடுத்து, கரும்பில் அதிகளவில் சேதத்தை இந்த நூற்புழுக்கள் ஏற்படுத்தும். டி.பார்க்கிடெர்மிஸ் மற்றும் டி.மைனா நூற்புழுக்கள் கரும்பில் மிக அதிகமாக உள்ளன. இவற்றைத் தவிர, பிச்சுவா நூற்புழு, ஊசி நூற்புழு, மோதிர நூற்புழு, குண்டூசி நூற்புழு போன்றவையும் கரும்பில் அதிகமாகக் காணப்படுகின்றன.
நூற்புழுத் தாக்கத்தால் ஏற்படும் சேதம்
கரும்பைப் பொறுத்த வரையில், நூற்புழுக்களின் சேதத்தை, நேரடிச் சேதம் மற்றும் மறைமுகச் சேதம் எனப் பிரிக்கலாம். நேரடிச் சேதத்தில், நூற்புழுக்கள் பயிரின் சாற்றை உறிஞ்சி, பயிரின் வளர்ச்சியைக் குன்றச் செய்வதால் மகசூல் குறையும். மறைமுகச் சேதத்தில், நூற்புழுக்களால் உண்டாகும் காயங்கள் மூலம் உள்ளே செல்லும், பூசணம், பாக்டீரியா, வைரஸ் போன்றவை நோய்களை ஏற்படுத்தும்.
மேலும், பிச்சுவா நூற்புழு, ஊசி நூற்புழு மற்றும் குட்டை வேர் நூற்புழுக்களால் வைரஸ் நோய்கள் அதிகமாகும். நூற்புழுக்களால் கரும்பில் ஏற்படும் சேதம் கண்கூடாகத் தெரிவதில்லை. மண்ணில் உள்ள நூற்புழுக்களின் இருப்பைப் பொறுத்துக் கரும்பின் வளர்ச்சிப் பாதிக்கப்படும். நூற்புழுக்கள் அதிகமாக இருந்தால், கரும்பின் உயரம் குறையும். அவற்றின் எண்ணிக்கை குறையக் குறைய, கரும்பு உயரமாக வளரும்.
நூற்புழுக்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கரும்பில் நடத்திய ஆய்வில், நூற்புழுக்களின் இருப்பைப் பொறுத்து, கரும்பின் உயரம், எடை, கணுக்கள் எண்ணிக்கை பாதிக்கப்படுவது தெரிந்தது. இதிலிருந்து, கரும்பு நன்கு வளர்ந்து எவ்வித நோய் அறிகுறியும் தெரியாமல் இருந்தாலும், நூற் புழுக்களால் வெவ்வேறு அளவுகளில் சேதம் ஏற்படுவதை அறிய முடியும்.
கரும்பில் நூற்புழுத் தாக்க அறிகுறிகள்
பயிர் வெளுத்தும் வளராமலும் இருக்கும். இந்த அறிகுறி ஆங்காங்கே திட்டுத் திட்டாக இருக்கும். தோகை, மஞ்சள் கலந்த வெளிர் பச்சை நிறத்தில் இருக்கும். இளம் தோகைகளில் நரம்புகள் இடைவெளியில் வெளுத்துக் காணப்படும். சில இடங்களில் வேர்முடிச்சு நூற்புழுக்கள், தோகைகளில் மஞ்சள் நிறப் பட்டைகளை ஏற்படுத்தும்.
தோகை வெளுப்பு இளம் பயிரில் அதிகமாக இருக்கும். இந்நிறம் 60-65 நாட்களில் பெரும்பாலும் மறைந்து விடும். தோகைகளின் நுனி முறுக்கிக் கொண்டு இருக்கும். களிமண் நிலத்தில் வெளிர் நோய் ஏற்படும். இதனால், தோகைகள் அனைத்தும் வெளுத்துக் காணப்படும்.
கரும்பு வேரில் தெரியும் அறிகுறிகள்
வேர் முடிச்சுகள்: கரும்பில் இந்த வேர் முடிச்சுகள் சிறியதாகவே இருக்கும். வேரின் நுனி மட்டும் பெரிதாக இருக்கும். நடுப்பகுதி நூற்புழுத் தாக்குதலுக்கு உட்பட்டிருந்தால் பருத்தும், பட்டையாகவும், முறுக்கிக் கொண்டும் இருக்கும். இத்தகையை வேர்கள், பழுப்பு அல்லது கறுப்பு நிறத்தில் இருக்கும். இந்த மாற்றம் வேர்முடிச்சு நூற்புழுக்களால் ஏற்படும்.
மேற்பரப்பில் சிறிய காயங்கள்: புற ஒட்டுண்ணி நூற்புழுக்கள் தாக்குவதால் வேரின் மேற்பகுதியில் ஊசியால் குத்தப்பட்டதைப் போன்ற, சிறிய காயங்கள் ஏற்படும். இவற்றின் மூலம் மற்ற நோய்க்கிருமிகள் உள்ளே நுழைவதால் வேரின் மேற்பாகம் உரிந்து, நடுத்தண்டு மட்டும் இருக்கும். சேதம் அதிகமாக இருந்தால், வேர் அழுகத் தொடங்கும்.
கண் வடிவக் காயங்கள்: இவை வேரழுகல் நூற்புழுக்களால் ஏற்படும். வட்டமான அல்லது கண் வடிவக் காயங்கள், பழுப்பு அல்லது கரும் பழுப்பு நிறத்தில் இருக்கும். இக்காயங்கள் நிறைய இருந்தால், வேர்கள் வெளுத்தும் பருத்தும் இருக்கும். சேதம் மிகும்போது வேர்கள் அழுகி விடும்.
குட்டை வேர்: இது, குட்டை வேர் நூற்புழுத் தாக்கத்தால் ஏற்படும். இந்தப் புழுக்கள், வேர் வளர்ச்சித் திசுக்களைச் சேதப்படுத்துவதால், வேர்கள் மேலும் வளராமல் நின்று விடும். பக்க வேர்கள் வளராமல் அல்லது மிகவும் குட்டையாக, நெருக்கமாக, சடை முடியைப் போல இருக்கும்.
நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தும் முறைகள்
ஆழ உழுதல்: கோடையில் வாரம் ஒருமுறை என, 3-4 தடவை, நிலத்தை ஆழமாக உழுதால், பெருமளவிலான நூற்புழுக்கள் வெய்யில் வெப்பத்தைத் தாங்க முடியாமல் அழிந்து போகும். இம்முறையில் மகசூலும் கூடும்.
நூற்புழுக்களை அழிக்கும் பயிர்களை வளர்த்தல்: துலுக்க சாமந்தி, சணப்பை போன்றவை நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தும் திறன் மிக்கவை. எனவே, கரும்பைப் பயிரிடுவதற்கு முன், இந்தப் பயிர்களை வளர்த்தால், நூற்புழுக்கள் குறைந்து மகசூல் கூடும்.
பசுந்தாள் உரங்கள்: பசுந்தாள் உரப் பயிர்களான சணப்பை, தக்கைப்பூண்டு போன்றவற்றைக் கரும்பு நிலத்தில் பயிரிட்டால், நூற்புழுக்கள் பெருமளவில் குறையும். இந்தப் பயிர்களைக் கரும்பு நடவுக்கு முன் பயிரிட்டு, பின் நிலத்தில் மடக்கி உழுது விட வேண்டும். அல்லது, கரும்பு நடவின் போது பார்களின் ஒரு ஓரத்தில் பயிரிட்டு வளர்த்து, 45 நாட்களில் வெட்டி நிலத்தில் கலந்து விடலாம். இதனால், மண்ணின் கரிமத்தன்மை கூடும். மேலும், கரும்பு நிலத்தில் நூற்புழுக்களுக்கு எதிரான உயிரிகள் விரைவாக பல்கிப் பெருகும்.
இம்முறையைக் கையாள்வதால் நூற்புழுக்கள் கட்டுக்குள் இருப்பதுடன், மண்ணின் அமைப்பும், சத்துகளும் மேம்படும். நூற்புழுக்களை எளிதில் கவர்ந்தழிக்கும் எளிமையான சணப்பையைப் போன்ற பசுந்தாள் உரப் பயிர்களைப் பயன்படுத்தி, வேர் முடிச்சு மற்றும் லீசைன் நூற்புழுக்களை எளிதில் கட்டுப்படுத்தலாம்.
ஆலைக்கழிவு அல்லது தொழுவுரம் இடுதல்: எக்டருக்கு 25 டன் வீதம் தரமான ஆலைக்கழிவு அல்லது தொழுவுரத்தை அடியுரமாக இட்டால், நூற்புழுக்கள் கணிசமாகக் குறையும். ஆலைக்கழிவில் உள்ள சத்துகளும், கரிமப் பொருள்களும்; மண்ணில் நூற்புழுக்களுக்கு எதிரான பூசணங்கள் மற்றும் பாக்டீரியாக்கள் பெருகத் துணை செய்யும். மேலும், ஆலைக்கழிவில் உள்ள மட்கும் பொருள்களால் உண்டாகும் கரிமத் திரவங்கள், நூற்புழுக்களைக் கொன்று விடும்.
தோகையைப் பரப்புதல்: கரும்புப் பார்களில் மண்ணை அணைக்கும் போது, எக்டருக்கு 5 டன் கரும்புத் தோகை வீதம் பரப்பினால், நூற்புழுக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும். மேலும், இந்தத் தோகைகள், நூற்புழுக்களுக்கு எதிரான கிருமிகள் மண்ணில் அதிகளவில் பல்கிப் பெருக உதவும். தோகைகள் மட்கும் போது வெளியேறும் சில இரசாயனப் பொருள்கள், நூற்புழுக்களைக் கொல்லும். மேலும், தோகைகளைப் பரப்புவதால், மண்ணின் ஈரப்பதத்தைக் காக்கலாம். களைகள் வளர்வது குறையும்.
புண்ணாக்கு இடுதல்: எக்டருக்கு 2 டன் வீதம் வேம்பு அல்லது ஆமணக்குப் புண்ணாக்கை இட்டால், மண்ணில் உள்ள நூற்புழுக்களைப் பெருமளவில் குறைத்து மகசூலைக் கூட்டலாம். நூற்புழுக்களுக்கு எதிரான பூசணங்கள், பாக்டீரியாக்கள் மண்ணில் பெருகவும் இந்தப் புண்ணாக்கு வகைகள் உதவும். இவற்றிலுள்ள காரத்தன்மை, நூற்புழுக்களுக்கு எமனாக அமையும்.
பயிர்ச்சுழற்சி மற்றும் ஊடுபயிர்: கரும்பு நடவு நிலத்தில், நெல், கடுகு, செண்டுமல்லி, சூரியகாந்தி, செவ்வந்தி போன்றவற்றைப் பயிரிட்டால், வேரழுகல், வேர் முடிச்சு நூற்புழுக்கள் கணிசமாகக் குறையும். பயிர்ச் சுழற்சி முறையைக் கையாள்வதால், நூற்புழுக்கள் பல்கிப் பெருகத் தேவையான உணவுப் பொருள்கள் மிகவும் குறையும்.
குறைந்த காலத்தில் விளையும் சோயா, பச்சைப்பயறு போன்றவற்றைக் கரும்பில் ஊடுபயிராக இட்டால், அறுவடைக்குப் பின்னும் அவற்றின் கழிவுகள், மண்ணில் நூற்புழுக்களைக் குறைக்கத் துணை செய்யும். இந்தப் பயிர்க் கழிவுகள் மட்கும் போது வெளியாகும் வேதிப்பொருள்கள் நூற்புழுக்களைக் குறைக்கும். மேலும், ஊடுபயிரால் வருவாயும் கிடைக்கும்.
உயிரியல் முறை: கரும்புச் சாற்றுக் கழிவுநீர் மற்றும் ஆலைக்கழிவு மூலம் தயாரிக்கப்படும் பெசிலோமைசிஸ் லில்லேசினஸ் அல்லது டிரைக்கோடெர்மா விரிடி போன்ற பூசணத்தை, எக்டருக்கு 10 கிலோ வீதம் மண்ணில் இடலாம். இப்பூசணங்கள் மண்ணில் மட்கும் போது, நிலத்தில் கரிமப் பொருள்கள், தாதுப் பொருள்கள் பெருகும்.
நூற்புழுக் கொல்லிகளை இடுதல்: நூற்புழுக்களின் கடும் தாக்குதலைச் சமாளிக்கவும், காலத் தாமதத்தைக் கருத்தில் கொண்டும், மேற்கூறிய முறைகளைக் கடைப்பிடிக்க முடியாமல் போகும் போதும், எக்டருக்கு 33 கிலோ வீதம் கார்போபியூரான் அல்லது ஃபோரேட்டை இட்டு, நூற்புழுக்களைக் குறைக்கலாம்.
முனைவர் ஜெ.ஜெயக்குமார்,
அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி, திருச்சி. முனைவர் மு.சண்முகநாதன்,
முனைவர் வே.இரவிச்சந்திரன், கரும்பு ஆராய்ச்சி நிலையம், கடலூர்.
சந்தேகமா? கேளுங்கள்!