கட்டுரை வெளியான இதழ்: மே 2019
நவீன மருத்துவத்தின் வளர்ச்சியால் நமக்கு அருகிலேயே இருக்கும் செடி கொடிகளின் மருத்துவப் பயன்களை அறியாமல் இருக்கிறோம். பெரும்பாலான கிராம மக்களுக்குச் சில மூலிகைகளின் பெயர்களும் அவற்றின் பயன்களும் தெரியாமல் இருப்பது வேதனையைத் தருகிறது. பக்க விளைவுகளைத் தரும் ஆங்கில மருந்துகளை உண்டு, கல்லீரல் செயலிழப்பு, சிறுநீரகச் சிக்கல், உயர் இரத்தழுத்தம் என, இளைய தலைமுறையினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மூக்கிரட்டை இலை, வேர், சமூலம் என, அனைத்தும் மருத்துவக் குணம் வாய்ந்தவை.
மருத்துவப் பயன்கள்
வேர்: இதைக் காயவைத்துப் பொடியாக்கித் தேனில் கலந்து காலை மாலையில் உண்டு வந்தால் பார்வைக்குறை நீங்கும். நீரிலிட்டுக் கொதிக்க வைத்துப் பருகி வந்தால் இரத்தச்சோகை, சளித்தொல்லை நீங்கும். மூக்கிரட்டை வேரை இடித்து, விளக்கெண்ணெய்யில் இட்டுக் காய்ச்சி, காலையில் வெறும் வயிற்றில் பேதி மருந்தாகச் சாப்பிடலாம். இதனால், உடலில் சேர்ந்திருக்கும் நச்சுநீர், நச்சுக் கிருமிகள் யாவும் மலத்துடன் வெளியேறி விடும். இந்த நச்சுகளால் உடலில் ஏற்பட்டிருந்த சரும நோய்கள், அரிப்பு மற்றும் வாதம் சார்ந்த நோய்கள் குணமாகி விடும்.
மூக்கிரட்டை வேர் மற்றும் சோம்பை நீரிலிட்டுக் காய்ச்சி, தினமும் பருகி வந்தால், சிறுநீரகக் கற்கள் கரைந்து அடைப்பு நீங்கும். மூக்கிரட்டை வேருடன், அறுகம்புல் மற்றும் பத்து மிளகைச் சேர்த்துப் பொடியாக்கி நீரிலிட்டு, பாதிநீர் சுண்டக் காய்ச்சி வடிகட்டி, தினமும் மூன்று வேளை சாப்பிட்டால், இருமல், ஆஸ்துமா, மூச்சுத்திணறல் குணமாகும்.
கீரை: சிறுநீரகக் குழாயில் ஏற்படும் சிக்கல்களைப் போக்கும் அருமருந்தாகும். சுவாசப் பாதிப்புகள் குணமாகும். மூக்கிரட்டை, பொன்னாங்கண்ணி மற்றும் கீழாநெல்லியைச் சமமாக எடுத்து, நன்கு அரைத்து மோரில் கலந்து சாப்பிட்டு வந்தால், வெள்ளெழுத்துக் குறை குணமாகும். இந்த இலையை விளக்கெண்ணெய்யில் வதக்கி ஒத்தடம் கொடுத்து வந்தால் மூட்டுவலி குணமாகும்.
இந்தக் கீரையை வாரம் 2-3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இரத்தச்சோகை, மலச்சிக்கல் தீரும். உடல் பொலிவடையும். இக்கீரையை அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து, அரிசி மாவில் கலந்து அடையாகச் செய்து சாப்பிட்டு வந்தால், அனைத்து வகை மூலமும் குணமாகும்.
பயன்கள்: இக்கீரையைப் பொடியாக நறுக்கி நெய்யில் வதக்கிச் சாப்பிட்டால் கண் நோய்கள் நீங்கும். முழுச் செடியையும் உலர்த்தி, தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கி இளமைப் பொலிவடன் இருக்கலாம். மூக்கிரட்டை கீரை இதயத்துக்கு பலமும் நலமும் தந்து சிறப்பாக இயங்கச் செய்யும்.
முக்கிரட்டைக் குடிநீர்
இதன் இலை, வேர், தண்டைச் சிறிதளவு எடுத்து நீரில் கொதிக்க வைத்துக் குடித்து வந்தால் காய்ச்சல் குணமாகும். சிறுநீர்த் தாரை எரிச்சலைப் போக்கும். கண்களுக்கு ஒளியைத் தரும். இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். சிறுநீரில் யூரியா அளவைக் கட்டுப்படுத்தும். கால் கோப்பை மூக்கிரட்டைக் கீரை, துத்தி வேர் 10 கிராம், கருஞ்சீரகம் ஒரு தேக்கரண்டி ஆகியவற்றை நீரில் கொதிக்க வைத்துப் பருகி வந்தால் யூரியாவின் அளவு கட்டுப்படும்.
மூக்கிரட்டைக் கீரை கல்லீரல், சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகளில் உள்ள கழிவுகளை வெளியேற்றி உடல் நலம் காக்கும். வாத நோய்களை நீக்கும். தொற்று நோய்களைச் சரி செய்து, உடலின் முதுமையைத் தடுத்து இளமையைத் தரும். மூளைக்கு ஆற்றலையும், உடலுக்குச் சுறுசுறுப்பையும், மனதுக்கு மகிழ்ச்சியையும் தரும்.
மு.சித்ரா,
ப.இராசகணபதி, வேளாண்மைக் கல்லூரி,
ஈச்சங்கோட்டை, தஞ்சாவூர்-614902.
சந்தேகமா? கேளுங்கள்!