கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2018
சிறந்த மூலிகையாக, மணமூட்டியாக, உணவுப் பொருளாக விளங்குவது புதினாக் கீரை. நல்ல வருவாயையும் தரக்கூடியது.
இரகங்கள்
ஜப்பான் புதினா எம்ஏஸ் 1, எம்ஏ 2, ஹபிரட் 77, சிவாலிக் ஈசி 41911, ஸ்பியர் எம்எஸ்எஸ் 1, 5, பஞ்சாப் ஸ்பியர்மின்ட் 1, பெர்கோ சிரன், மிளகு குக்ரைல்.
நிலம்
வடிகால் வசதியுள்ள செம்மண், மணல் கலந்த செம்மண் நிலங்களில் நன்றாக வளரும். நீர் தேங்கும் நிலம், களிமண் நிலத்தில் சாகுபடி செய்வதைத் தவிர்க்கலாம். இதற்குப் பட்டம் இல்லை. எப்போதும் பயிரிடலாம். ஒரு முறை பயிரிட்டு இரண்டு ஆண்டுகள் வரை பலன் எடுக்கலாம். முழுக்க வெய்யிலோ முழுக்க நிழலோ உள்ள இடத்தில் சரியாக வளராது. நிழலும் வெயிலும் கலந்த இடங்களில் மட்டுமே புதினாவைப் பயிரிட வேண்டும்.
25 சென்ட் நிலத்தில் இரண்டு டிராக்டர் தொழுவுரத்தைக் கொட்டி நிலத்தை நன்றாக உழ வேண்டும். பிறகு, நிலத்தைச் சமமாக்கிப் பாத்திகளைப் பிடிக்க வேண்டும். இடவசதி, பாசன வசதிக்கு ஏற்ப பாத்திகளின் அளவைத் தீர்மானிக்கலாம். பொதுவாக, பத்துக்குப் பத்தடியில் பாத்திகளை அமைக்கலாம். இந்தப் பாத்திகளில் நீரைப் பாய்ச்சி, புதினாத் தண்டுகளை நட வேண்டும். புதினா சாகுபடி விவசாயிகளிடம் தண்டுகள் கிடைக்கும். முற்றிய புதினாக் கீரையை வாங்கி, அந்தத் தண்டுகளையும் நடலாம். நான்கு விரல்கடை இடைவெளியில் நெருக்கமாக நட வேண்டும். பிறகு, ஈரத்தைக் காய விடாமல் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பாசனம் செய்ய வேண்டும்.
சத்து மேலாண்மை
எக்டருக்கு 30:60:10 கிலோ, தழை, மணி, சாம்பல் சத்தை அடியுரமாக இட வேண்டும். நடவு செய்த 60 மற்றும் 120 நாளில் எக்டருக்கு 30 கிலோ தழைச்சத்து உரத்தை இரண்டு முறை பிரித்து மேலுரமாக இட வேண்டும்.
களைக் கட்டுப்பாடு
15-20 நாட்களில் கைக்களை எடுத்து, 10 கிலோ கடலைப் புண்ணாக்கைத் தூளை விதைத்துப் பாசனம் செய்ய வேண்டும். 30 மற்றும் 40ஆம் நாளில் 20 கிலோ கடலைப் புண்ணாக்கைப் பாசன நீரில் கரைத்து விட வேண்டும். புதினாவைப் பெரும்பாலும் பூச்சி, நோய் தாக்குவதில்லை. ஏதேனும் பூச்சித் தாக்குதல் இருந்தால், மூலிகைப் பூச்சிவிரட்டியைத் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
அறுவடை
ஐம்பதாம் நாளில் இருந்து கீரையை அறுக்கலாம். தரையில் இருந்து இரண்டு விரல்கடை விட்டு விட்டு அறுக்க வேண்டும். பிறகு, காம்புகளை மட்டமாக அறுத்து விட்டு, களையெடுத்து நீரைப் பாய்ச்சி, மீண்டும் கடலைப் புண்ணாக்கை இட வேண்டும். இப்படிச் செய்தால் மறுபடியும் புதினா தழைக்கும். சரியாகப் பராமரித்தால் நான்கு ஆண்டுகள் வரை நல்ல மகசூலை எடுக்கலாம். ஓராண்டில் ஒரு எக்டரிலிருந்து 15-20 டன் கீரை கிடைக்கும். அதைப்போல, 100-150 கிலோ எண்ணெய் கிடைக்கும்.
மருத்துவப் பயன்கள்
மென்தா ஆர்வென்சிஸ் என்பது புதினாவின் தாவரவியல் பெயர். புதினாத் தழையைக் கைப்பிடி எடுத்து அத்துடன் 3 மிளகைச் சேர்த்து விழுதாக அரைத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சளி, இருமல், நுரையீரல் சிக்கல்கள் சரியாகும். புதினாவில், நீர் 84.5%, புரதம் 4.9%, கொழுப்பு 0.7% தாதுப்பொருள் 0.2% நார்ச்சத்து 0.2%, மாவுச்சத்து 5.9% உள்ளன. மேலும் விவரங்களுக்கு 98408 60957.
முனைவர் செ.தமிழ்ச்செல்வி,
முனைவர் இரா.மணிமேகலை, முனைவர் கோ.சதீஷ், முனைவர் வி.அ.விஜயசாந்தி,
முனைவர் பி.யோகமீனாட்சி, வேளாண்மை அறிவியல் நிலையம்,
திரூர்-602025, திருவள்ளூர் மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!